நாடக மேடை நினைவுகள்/பதினேழாம் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பதினேழாம் அத்தியாயம்


1904ஆம் வருஷம் எங்கள் சபையார் சாரங்கதரா நாடகத்தை மறுமுறை நடத்தி, அதில் வந்த வரும்படியில் செலவு போக சென்னைபுரி அன்னதான சமாஜத்தாருக்கு ரூபாய் 250 கொடுத்தார்கள். இந்த மூலதனத்தைக் கொண்டு வருஷா வருஷம் ஒரு தினம் அன்னதான சமாஜத்தார் நூறு ஏழைகளுக்குச் சபையின் பேரால் அன்னமளிக்கின்றார். இந்த விஷயம், எங்கள் சபை அங்கத்தினருக்கே அநேகம் பெயருக்குத் தெரியாதாகையால், இதை இங்கு எடுத்தெழுதலானேன்.

இந்த 1904ஆம் வருஷம் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் சபையார் மைலாப்பூர் கிளப் தோட்டத்தில், ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தை நடத்தியதேயாம். இது அனேக விதத்தில் ஒரு  முக்கியமான சம்பவமாகையால் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்நாடகம் இவ் வருஷம் டிசம்பர் மாசம் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் வரும்படியை மைலாப்பூரில் முன்பு கட்டியிருந்த ரானடே ஹால் (Ranade Hall) என்னும் கட்டடத்திற்காகக் கொடுத்தோம். இச்சமயம் ரானடே புஸ்தக சாலைக்குக் காரியதரிசியாக, வக்கீலாயிருந்து பிறகு சப் ஜட்ஜாகிய பாலசுப்பிரமணிய ஐயர் என்பவர் இருந்தார். இவர் அக்கட்டடத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் கொஞ்சம் போதாமையாயிருந்தபடியால், எங்கள் சபை அதற்காக ஒரு நாடகம் மைலாப்பூரில் நடத்தி, வரும்படியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அவர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். நாங்கள் தீர்மானித்த நாடகமாகிய “விரும்பிய விதமே” என்பதை ஒரு தோட்டத்தில் போட்டால் நன்றாயிருக்குமெனக் கூறினேன். இதற்கு முன்பாக “லார்ட் வென்லாக்” (Lord Wenlock) சென்னை கவர்னராக இருந்த பொழுது, ஒருமுறை, கவர்ன்மெண்ட் ஹவுஸ் தோட்டத்தில், ஆங்கிலத்தில் இந்நாடகம் நடிக்கப்பெற்றதை நான் பார்த்திருந்தேன். அது மிகவும் நன்றாயிருந்ததெனக் கண்டறிந்தவனாய் இந்நாடத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தோட்டத்தில் நடித்தால் நன்றாயிருக்குமென்றே இதைத்தமிழில் எழுதினேன்.

இக்கதையின் முதல் அங்கம் தவிர மற்ற நான்கு அங்கங்களும் ஒரு காட்டிலே நடந்தேறுகின்றன; முதல் அங்கத்தின் காட்சிகளையும் ஒரு தோட்டத்தில் நடத்திக் காட்டலாம். ஆகவே, பாலசுப்பிரமணிய ஐயர், மைலாப்பூர் கிளப்பின் பின்பக்கமிருக்கும் ஒரு சிறு தோட்டத்தில் இதற்காக இரண்டு பெரிய மரங்களின் மத்தியில் சிறு மேடை எழுப்பிதக்க ஏற்பாடு செய்தார். தென்புறத்தில் ஒரு குகையிலிருந்து ஒரு வழி வருவது போலும் ஏற்பாடு செய்தார். வேஷதாரிகள் வேஷம் பூண, அதற்குப் பின்புறமாகத் தென்னங்கீற்றுகளினால், ஒரு சிறு விடுதி ஏற்படுத்தினார். பனிக்காலமாகையால் நாடகம் பார்க்க வரும் ஜனங்களின் சௌகர்யத்திற்காக எதிரில் ஒரு பெரிய. பந்தலைப் போட்டு வைத்தார். இவ்வாறு நாடகம் நடத்துவதற்காக எல்லா சௌகர்யங்களையும் செய்து விட்டு, நாடகத்திற்காக ஒரு தினம் குறித்து டிக்கட்டுகளையும் ஏராளமாகத் தனக்குத் தெரிந்தவர்களுக்குள் விற்றனர். எல்லாம் சித்தமான பிறகு, தெய்வானுகூலமில்லாமற் போயிற்று! இந்நாடகத்தில் ஒரு முக்கிய ஸ்திரீவேஷம் தரிக்க வேண்டிய சி. ரங்கவடிவேலுவின் தாயார், இதற்கு முன் கொஞ்ச காலமாகப் பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்; மரணகாலம் கிட்டியது. வைத்தியர்கள் அவர்களது நிர்யணகாலம் இன்றோ நாளையோ என்று கைவிட்டனர். எப்படியாவது நாடகத்தினம் தள்ளிவிடுமென்று கோரி ஆக்டர்களெல்லாம் சித்தமாயிருந்தோம். எனதாருயிர் நண்பர் தன் மனோவருத்தத்தையும் பாராமல், சபையின் பெயருக்காகத் தான் ராஜீவாட்சியின் (Rosalind) பாகத்தை ஆட ஒப்புக்கொண்டார். நாடக மேடையில் விளக்குகளும் ஏற்றி ஆக்டர்களெல்லாம் வேஷம் போட்டுக் கொள்ளுமுன், ராத்திரி நாடகமாகையால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேஷம் தரிக்க வேண்டுமென்று சித்தம் செய்து கொண்டிருக்கும் தருவாயில், ரங்கவடிவேலுவின் தாயார் மரணமடைந்ததாகச் செய்தி வந்தது! அப்பொழுது எங்கள் மனநிலைமை எப்படியிருந்திருக்க வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தாங்களே ஊகித்துக் கொள்வார்களாக! அரங்கத்திற்காக ஏற்றிய விளக்குகளை யெல்லாம் மெல்ல அணைத்துவிடச் சொல்லி விட்டு சித்தம் செய்திருந்த உணவையும் உட்கொள்ளாது, தலை சாய்த்தவண்ணம் மௌனமாய் எங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுவரையில் எங்கள் சபையில் இம்மாதிரியாக ஏற்படுத்திய நாடகமானது நடவாமற் போனதில்லை . இதற்குப் பிறகு இரண்டொரு முறை நாடகத் தேதியானது சில அசந்தர்ப்பங்களால் மாற்றி வைக்கப்பட்ட போதிலும், எல்லாம் சித்தம் செய்த பிறகு, க்ஷவரம் செய்து கொண்டு வேஷம் தரிக்க சித்தமாயிருந்தவர்கள், இப்படிப்பட்ட காரணத்தினால் நாடக மாடாது கலைந்ததில்லை. எங்கள் சபையிலும் மற்றெந்தச் சபையிலும் இப்படிப்பட்ட துக்ககரமான காரணத்தினால் எப்பொழுதும் எந்த நாடகமும் தள்ளி வைக்கப்படாமல் இருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளின் கருணையைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு முக்கியமாக, எனது நண்பரின் தாயார் இறந்ததுகூட அத்தனை வருத்தத்தைத் தரவில்லை; அன்று அந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று எதிர் பார்த்திருந்த ஸ்திரீ புருஷர்களுக்கு இன்று நாடகம் இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்று எந்த முகத்துடன் சொல்வது? என்றே அதிகத் துக்கப்பட்டேன். எனது நண்பராகிய பாலசுப்பிரமணிய ஐயரும், “நாடகம் இன்று இல்லாமற் 


போனாற்போகிறது. இன்னொரு நாளைக்குப் பிறகு வைத்துக் கொள்வோம். வரும் ஜனங்களுக்கெல்லாம் இன்று நாடகம் கிடையாது; என்று எப்படிச் சொல்லியனுப்பப் போகிறேன்” என்றே துயரப்பட்டார். ஆங்கிலத்தில் “மனிதன் ஒருவிதமாக ஆரம்பிக்கிறான், தெய்வம் ஒருவிதமாக முடித்து வைக்கிறது” என்று ஒரு பழமொழி உண்டு. அதை நினைத்து ஒரு விதமாக என் மனத்தைத் தேற்றிக்கொண்டு, கரைந்த மனத்தினனாய், மைலாப்பூரை விட்டு, சிந்தாதரிப்பேட்டைக்கு என் நண் பருக்குத் தேறுதல் சொல்ல அன்றிரவு சென்றேன்.

பிறகு அவரது தாயாருக்குச் சடங்குகளெல்லாம் கழிந்த பின், சில தினங்கள் பொறுத்து, அவரது மனத்தைத் தேற்றின வனாய், மெல்ல அவரிடம், நாம் ஒப்புக்கொண்ட நாடகத்தை எப்படியாவது ஆடித்தான் தீர வேண்டுமென்று சொல்ல, அவரும் அதற்கிசைய, இரண்டாம் முறை ஒரு நாள் குறித்துக்கொண்டு, இம்முறை தெய்வச கடாட்சத்தினால் நிர்விக்கினமாய் இந்நாடகத்தை நடத்தி முடித்தோம்.

அன்று நடந்த நாடகம் நன்றாயிருந்ததா இல்லையா வென்பதற்குக் கீழக்கண்ட சமாச்சாரத்தை எடுத்துக் கூறுகிறேன். அதைக் கொண்டே இதை வாசிக்கும் எனது நண்பர்கள் ஊகித்தறியலாம்.

இச்சமயம் ஹைகோர்ட்டில் பிரபலமான வக்கீலாயிருந்தவர்களுள், ஏறக்குறைய முதலாயிருந்தவர் என்று வி. கிருஷ்ணசாமி ஐயரைச் சொல்லலாம். இவர், வக்கீல்கள் சபையில் சில இளைய வக்கீல்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, பாலசுப்பிரமணிய ஐயர் எங்கள் சபையார் ரானடே புஸ்தக சாலைக்காக ஒரு நாடகம் நடத்தப் போகிறதாகத் தெரிவித்து, அதற்காக ஒரு டிக்கட்டு வாங்கும்படியாக வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கேட்டனராம். நல்ல விஷயமாக இருக்கிறதேயென்று கிருஷ்ணசாமி ஐயர் ஒப்புக்கொண்டு ஒரு டிக்கட்டையோ இரண்டு டிக்கட்டையோ வாங்கிக்கொண்டு என்ன நாடகம் நடக்கப் போகிறதெனக் கேட்க, ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதிய “ஆஸ் யூ லைக் இட்” என்னும் நாடகத்தைத் தமிழில் நடத்தப் போகிறார்கள் என்று இவர் பதில் உரைக்க, “ஷேக்ஸ்பியர்நாடகத்தைத் தமிழில் நடத்துவதாவது! வாட் நான்சென்ஸ்! (What nonsense!) ஷேக்ஸ்பியரைக் கொல்வதை நான் பார்க்க இஷ்டமில்லை” என்று மிகவும் கோபத்துடன் மொழிந்தனராம். 

அதன்மீது பாலசுப்பிரமணிய ஐயர், அவரைச் சாந்தப்படுத்தி, “அப்படி ஒன்றும் ஆபாசமாயிராது. கொஞ்சம் நேரமாவது வந்து பாருங்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்தால் இருங்கள், இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிற்குப் போய் விடுங்கள். மைலாப்பூரில் ரானடே புஸ்தக சாலைக்காக, இச்சபையார், உதவி செய்ய முன் வந்திருக்கும்பொழுது, நாம் அவ்வளவாவது அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று வற்புறுத்தவே, மனமில்லாமலிருந்தும் அவரது வேண்டுகோளுக்கிசைந்து, கொஞ்ச நேரந்தானிருக்கக் கூடும் என்று விடை பகர்ந்தனராம். பிறகு அவருடனிருந்த இளைய வக்கீல்களும், அவர் எண்ணியது போல எண்ணிய வர்களாய், நாமும் போய்ப் பார்ப்போம் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். அப்படித்தீர்மானித்துக் கொண்டவர்களுள் ஒருவர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் என்பவர்; இப்பொழுது இவர் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக வேலை பார்க்கிறார்; இவர்தான் இங்கு வக்கீல் அசோசியேஷனில்மேல் நடந்த விருத்தாந்தத்தைத் தஞ்சாவூரில் “தென் இந்திய - நாடக மேடை”யைப்பற்றி நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு உபன்யாசம் செய்தபொழுது, அக்கிராசனாதிபதியா யிருந்து, இதையெல்லாம் விவரமாய்ப் பலர் அறிய எடுத்துரைத்தார்; இவர் மூலமாகத்தான் நான் இதை அறிந்தேன்.

இவர்களெல்லாம் தங்கள் தீர்மானப்படி, ம-ள-ள-ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயருடன், நாடகம் ஆரம்பமாகும் சமயத்தில் வந்திருந்து முதலில் உட்கார்ந்திருந்தனர். நாடகம் நடக்க நடக்க, அதை வெறுப்பதைவிட்டு, “விரும்பிய விதமே” என்று நான் அதற்குப் பெயர் வைத்ததற்கிசைய, விரும்பத் தொடங்கினார் களாம். நாடகமானது ஏறக்குறைய நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்தபோதிலும் உட்கார்ந்த இடம் விட்டுப் பெயராது கடைசிவரையில் இருந்தனர். ஆங்கிலத்தில், “பரிகசிக்கக் கோயிலுக்கு போய், பரமனைத் தொழ நின்றார்கள்” என்று பொருள்படும்படியான ஒரு பழமொழியுண்டு. அதுபோல, இவர்கள் “புரை (குற்றம்) கூற வந்தவர்கள், புகழ நின்றார்கள்” என்று கூறலாம்; இவர்களுள் ஒருவர் எனக்கு நேராகக் கூறிய வார்த்தைகளையே இங்கு எழுதியுள்ளேன். இனி கொஞ்சம் நிமிஷம்தான் இருப்பேன் என்று கூறிய வி. கிருஷ்ணசாமி ஐயர் செய்ததைக் கூறுகிறேன். இவர் நான்கு மணிக்குமேல் இடம் 


பெயராது நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து, நாடகம் முடிந்தவுடன், நாங்கள் வேஷங்களைக் கலைத்துக் கொண்டிருக்குமிடத்திற்கு வந்து, இந்நாடகத்தை எழுதியது யார் என்று விசாரித்த பாலசுப்பிரமணிய ஐயர், என்னை , “இவர்தான் சம்பந்தம்” என்று தெரிவிக்க, என்னை அதிகமாகப் புகழ்ந்து பேசினார். அன்றியும் அன்று நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களையெல்லாம் இன்னார் இன்னாரென்று தெரிந்துகொண்டு, அவர்களாடியது மிகவும் நன்றாய் இருந்ததெனக் கொண்டாடினார். இதனுடன் நிற்காமல், “என்ன மிஸ்டர் சம்பந்தம், மழை வரும் போலிருக் கிறதே, இந்த மழையில் நீங்கள் எல்லாம் எப்படி வீடு போய்ச் சேருவது? என் வீட்டில் இன்றிரவு தங்கி நாளைக் காலை போகலாம்” என்று சொல்லி, நாங்கள் எல்லாம் வேஷம் கலைத்த பிறகு, எங்கள் எல்லோரையும் மைலாப்பூர்கிளப்புக்கு எதிரிலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், எங்களுக் கெல்லாம் பால் சோடா முதலியன தாகத்திற்குக் கொடுத்து அனைவருக்கும் படுக்கைகள் ஏற்படுத்தி உறங்கச் செய்து விட்டு, மறுநாள் காலை எங்களை யெல்லாம் தந்தசுத்தி செய்துகொள்ளச் செய்து அனைவருக்கும் காபி கொடுத்து, வண்டியில்லாத சில ஆக்டர்களுக்குத் தன் வண்டியையும் கொடுத்து, எங்களை வீட்டிற்கனுப்பினார். அன்று முதல் வயதிலும், செல்வத்திலும், புத்தியிலும் எல்லாவிதத்திலும் என்னைவிட மேம்பட்டவராயிருந்தபோதிலும், தன் மரணபர்யந்தம் வரை என்னைத் தன் நண்பனாகவே பாவித்து வந்தார். “முகநக நட்பது நட்பு அன்று நெஞ்சத்தக நட்பது நட்பு” என்று தெய்வப்புலமை திருவள்ளுவர் கூறிய உண்மையை இவர்பால் நன்கு அறிந்தேன். இதனுடன் நிற்காமல், சீக்கிரம் எங்கள் சபையின், அங்கத்தினராகி சீக்கிரத்தில் எங்கள் சபையின் பிரசிடென்ட் (President) ஆகவும் ஒப்புக்கொண்டு, தன் மரணபர்யந்தம் எங்கள் சபைக்குப் பலவிதங்களிலும் உதவிபுரிந்துள்ளார். அதன் விவரங்கள் ஆங்காங்கு இனி எடுத்துரைப்பேன். ஆயினும் இங்கு ஒரு விஷயம் மாத்திரம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இவர் நமது தேசமும் எங்கள் சபையும் செய்த தௌர்ப்பாக்கியத்தால், சில வருஷங்களுக்குள் காலகதியடைந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அக்காலம் வரையில் எப்பொழுது எங்கள் சபையைப்பற்றிப் பேசும்படி நேரிட்டாலும், “எங்கள் சபை” “நம்முடைய சபை” என்று கூறியது தவிர “உங்கள் சபை” என்று அவர் வாயால் கூறியதை நான் ஒருக்காலும் கேட்டதில்லை, இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவிக்கெல்லாம். எங்கள் சபையார். இவர் தேக வியோகமானபின், இவரது ஞாபகச் சின்னமாக இவரது சிலை உருவை ஸ்தாபிக்க வேண்டுமென்று பாங்க்வேட்டிங் ஹாலில் பொதுஜனக் கூட்டம் சேர்ந்த பொழுது அன்று இதன் பொருட்டு 1000 ரூபாய் எங்கள் சபையார் கொடுக்க இசைந்து, உடனே கொடுத்துத் தங்கள் கடனை ஒருவாறு கழித்துக் கொண்டனர் என்று கூறலாம்! ஆயினும் இச்சீமான் எனக்குச் “செய்யாமற் செய்த” உதவிக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? தெய்வப் புலமை நாயனார், “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் மாற்றலரிது” என்று கூறியதை நினைத்துக் கடனைத் தீர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்று ஒப்புக் கொள்வதன்றி வேறு ஒன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

மேற்சொன்னபடி இவருக்கும் இன்னும் இதரமைலாப்பூர் வக்கீல்களுக்கும் அவ்வளவு சந்தோஷத்தை உண்டுபண்ணின ஆக்டர்களைப்பற்றி இனிக் கொஞ்சம் வரைகிறேன்.

முக்கியமாக சுசீலா வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், ராஜீவாட்சி வேடம் தரித்த எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும்தான் இவர்கள் மனத்தை மிகவும் திருப்தி செய்தனர் என்று நான் கூற வேண்டும். இவர்களிருவருடைய நடையுடை பாவனைகளும் வசனமும் சங்கீதமும் மிகவும் நன்றாயிருந்ததென இவர்கள் எல்லோரும் புகழ என் காதாறக் கேட்டேன். நாடக மேடை மீது பொறாமையின்றி ஒத்து நடித்த இவர்களைப் போன்று இரண்டு ஆக்டர்களை இன்னும் நான் காணப் போகிறேன். இவர்கள் பாடிய பாடல்களில் “ராஜராஜ” என்கிற ஒரு பாட்டு இன்னும் என் செவியில் தொனிக்கிறது. இவர்களிருவரும் இப்பாட்டை மேடையின்மீது பாடும் பொழு தெல்லாம், இதை மறுபடியும் பாடும்படி கேளாத சபைக் கூட்டத்தை நான் கண்டதில்லை. இதை ஒரு முறை எனது நண்பர் சி.பி. ராசாமி அய்யர் கிராமபோனில் எடுக்க முயன்றார். யாது காரணத்தினாலோ அது கைகூடாமற் போயிற்று. அது சங்கீதப் பிரியர்களின் துரதிர்ஷ்டமென்றே நான் கூற வேண்டும். 

இந்நாடத்தின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் நடித்த முக்கியமான வேஷதாரிகள் மட்டுமன்றி, எல்லா ஆக்டர்களும் தங்களுடைய பாகம் எவ்வளவு சிறிதாயிருந்த போதிலும், மிகவும் நன்றாய் நடித்ததேயாம். இதுவே இந்நாடகத்தின் பெரும் பெருமையாம். இம்மாதிரியாக எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்த நாடகங்கள் எங்கள் சபையில் சிலவேயென்றுதான் நான் கூற வேண்டும். எனது பழைய நண்பரான அ. வாமன்பாய் என்பவர் மறு நாள் எனக்குக் கூறியபடி, அன்றிரவு தோட்டத்தில் நடத்திய நாடகமாதலால் காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் காலம் போக்காமல் காட்சியின்மேற் காட்சியாய், மிகவும் அழகாய் நடந்ததென எல்லோரும் கூறனார்கள். ஆங்கிலத்தில் “The proof of the pudding is in the eating” என்று ஒரு பழமொழியுண்டு . அதைத் தமிழில் “அப்பம் நன்றாயிருக்கிற தென்பது அதைத் தின்பதனால் தெரியும்” என்று ஒருவாறு மொழிபெயர்க்கலாம். அதன்படி, இந்நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சி யாக, அதுவரையில் எங்கள் சபையில் சேராதிருந்த அநேக மைலாப்பூர் வக்கீல்கள், உத்யோகஸ்தர்கள் முதலியோர் எங்கள் சபையைச் சேர்ந்ததைத்தான் கூற வேண்டும்.

இனி 1905ஆம் வருஷம் எங்கள் சபையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம்தான் நாங்கள் முதல் முதல் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினோம். உலகெங்கும் பிரசித்திபெற்ற இந்த நாடகக் க்வியின் பிறந்த தினத்தை இங்கிலாந்து தேசத்தில், அவர் பிறந்த இடமாகிய ஸ்டிராட்போர்டு ஆன் ஆவன் (Stratford on Avon) என்கிற இடத்தில் கொண்டாடுவதை அறிந்தவர்களாய், அதை நாடகம் விருத்தியைக் கருதிய நாமும் கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வாரத்தில் ஒரு நாள், அவர் எழுதிய ஒரு நாடகத்தின் தமிழமைப்பாகிய “வாணீபுரவணிகன்” என்பதைத் தமிழிலும், மற்றொரு நாள் “ஒதெல்லோ” எனும் சிறந்த நாடகத்தை அவர் எழுதியபடியே ஆங்கிலத்திலும், இன்னொரு நாள் “ஆல்ஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்” (All is well that ends well) என்னும் அவர் எழுதிய நாகடத்தைத் தெலுங்கிலும் நடத்தினோம்; 

அன்றியும் இவ்வாரத்தின் கடைசி நாளின் கிராண்ட் ஷேக்ஸ் பியர் கார்னிவல் என்று ஒன்று ஏற்பாடு செய்தோம். இதற்குத் தமிழில் ‘ஷேக்ஸ்பியர் கொண்டாட்டப் பண்டிகை’ என்று ஒருவாறு கூறலாம். இதில் எங்கள் சபை ஆக்டர்களில் அநேகர் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலுள்ள பாத்திரங்களின் வேடங்கள் தரித்து வந்தனர். சற்றேறக்குறைய அச்சமயத்தில் தான் எங்கள் சபையைச் சேர்ந்த ஸர். சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள், இச்சமயம் போர்ஷியாவாக வேடம் தரித்தது எனக்கு நன்றாக ஞாபாமிருக்கிறது; கொஞ்சநேரம் ஹாலில் இருந்து விட்டுப் பிறகு வேஷத்தைக் கலைத்துவிட்டனர்; இந்த ஒரு முறைதான் இப்பொழுது எங்கள் சபையின் அத்யட்சராயிருக்கும் இவர் எங்கள் சபையில் வேஷம் பூண்டது. நான் ஒதெல்லோ என்னும் நாடகத்தில் வரும் ஒரு பாத்திரமாகிய “இயாகோ” (lago) வேடம் தரித்தேன். எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார், “இந்திய நாடக மாது” எனும் ஸ்திரீ வேஷம் தரித்தார். அவரது கையில் ஷேக்ஸ்பியர், காளிதாசன், சம்பந்தம் என்னும் மூன்று பெயர்களும் வரைந்த ஒரு கேடயத்தைப் பிடித்திருந்தார். அவ்விரண்டு மகா நாடகக் கவிகளுக்கும், சிற்றறிவுடைய எனக்கும் அஜகஜாந்தரமாக வித்தியாசமிருந்தபோதிலும், நம்முடைய பெயரையும், அம் மாகான்களின் பெயருடன் சேர்த்துக் கூறும்படியான பாக்கி யத்தைப் பெற்றோமே என்று சந்தோஷித்தேன். என்னுடைய தமயனார் ஆறுமுக முதலியார், யாரும் பூண இச்சைப்படாத, அசங்கியமான காட்டு மனிதன் உருவையுடைய காலிபன் (Caliban) வேடம் பூண்டது வெகு விந்தையாயிருந்தது. இம்மாதிரியாக, ஏறக்குறைய நாற்பது ஐம்பது பெயர்கள் வேடம் பூண்டு வந்தனர். அன்றைத் தினக் கொண்டாட்டம் மிகவும் ‘விமரிசையாக இருந்ததென வந்திருந்தவர்கள் புகழ்ந்தனர். இம்மாதிரியாக இந்த வருஷம் வெகு சம்பிரமத் துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷேக்ஸ்பியர் கொண்டாட்ட மானது, இந்த இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வருகிறது. மூன்று நாள் நாடகங்கள் ஆடா விட்டாலும், ஷேக்ஸ்பியர் மகாகவியின் ஒரு நாடகமாவது ஆடி வருகிறோம். அன்றியும் வருடா வருடம், ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களைப் பற்றியோ, அவரைப்பற்றியோ யாராவது ஓர் அங்கத்தினர், ஒரு உபன்யாசம் செய்து வருகிறார். 1931ஆம் வருடம் மாத்திரம் இக் கொண்டாட்டம் நடவாமல் போயிற்று என்று சொல்ல நான் 

மிகவும் துக்கப்படுகிறேன். இனிமேலாவது எங்கள் சபையார் இதை ஒரு வருடமும் விடாது நடத்துவார்களெனப் பிரார்த்திக்கிறேன்.

சபையில் கௌரவம் வஹிக்க விரும்பும் இளைஞர்களான அங்கத்தினர் அதன் கஷ்டத்தையும் கொஞ்சம் மேற்கொள்ள இசைவார்களென நம்புகிறேன். கஷ்டப்படாமல் ஒரு காரியத்தையும் சாதிக்கமுடியாது என்பதை அவர்களுக்கு இதன் மூலமாக நினைப்பூட்டுகிறேன்.

இவ்வருஷம்தான் எங்கள் சபைக்குச் சொந்தமான ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட வேண்டுமென்னும் யோசனை பிறந்ததெனக் கூற வேண்டும். இதற்கு முக்கியமான காரணம், அக்காலம் எங்கள் இருப்பிடமாகிய விக்டோரியா ஹாலின் மேற்குப் பக்கம், தற்காலம் சிற்றுண்டி தயாரிக்கும் அறையானது, எங்கள் ஒத்திகைகளுக்குப் போதுமான வசதியாயில்லாமையே. அன்றியும் இவ்வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர் அதிகரித்து 278 பெயர்களாகி விட்டனர். எங்கள் சபை 1891ஆம் வருஷம் ஆரம்பித்த பொழுது, ஏழு பெயர்கள்தான் அங்கத்தினராயிருந்த விஷயம் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஆறு வருஷம் பொறுத்து நூறு அங்கத்தினர்களானார்கள். அந்த நூறாவது மெம்பராகிய வி. தாத தேசிகாச்சாரியார், பி.ஏ. பி. எல்., எங்கள் சபை தம்பு செட்டித் தெருவிலிருக்கும் பொழுது, தான் நூறாவது மெம்பரானதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். அதன் பிறகு, எட்டு வருடம் பொறுத்து, இவ்வருஷம் (1905) ஆரம்பத்தில் இருநூறு மெம்பர்களானோம். இவ்வாறு இருநூறாவது மெம்பராகிய வி.வி. முத்துக்கிருஷ்ண ஐயர் பி.ஏ.பி.எல். இதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். இவ் வருஷத்திய, நாங்கள் முதல் முதல் அச்சிட்ட விளம்பரத்தில் (Report) கூறியபடி, இவ்வருஷ முடிவுக்குள்ளாக 300ஆவது எண் கிட்டிவிடும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. இக்காலத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த ஊக்கத்துடன் உழைத்தபடியாலும், நல்ல நாடகங்கள் தமிழிலும் தெலுங்கிலும் அடிக்கடி கொடுத்துக் கொண்டு வந்தபடியாலும் எங்கள் சபை அதிவிரைவாக விருத்தியடைந்த தென்பதற்குச் சந்தேகமில்லை.. இவ்வாறு அங்கத்தினர் அதிகமாகவே, ஏதாவது விசேஷ காலங்களில் இத்தனை பெயரும், 50 பெயர்கூட உட்காருவதற்கிடமில்லாத ஒரு சிறு

அறையில் அடைபடுவதென்றால் மிகவும் கஷ்டமாயிருந்தது. அன்றியும், சென்னைக்குப் பாரசீகக் கம்பெனியார் வந்த பிறகு, அவர்களைப்போல் நாமும் நாடகக் காட்சிகளைக் காட்ட வேண்டுமென்று விரும்பிப் படுதாக்கள் முதலியன தயார் செய்த நாங்கள், விக்டோரியா பப்ளிக் ஹாலின் மெத்தையின் மீதுள்ள நாடக மேடையில் அவர்களைப்போல் காட்சிகளைக் காட்டுவது அசாத்தியமெனக் கண்டறிந்தோம். அவர்கள் ஆடிய அரங்க மேடையானது விக்டோரியா மேடையைவிடக் குறைந்தபட்சம் ஆறு பங்காவது அதிகமானதாயிருக்கும். இவ்விரண்டு முக்கியக் காரணங்களால், எப்படியாவது நமது சபைக்கென்று விசாலமான நாடக மேடையும் இருப்பிடமும் இருக்க வேண்டுமெனக் கோரத் தலைப்பட்டோம். ஆகவே இதற்கென்று நாம் பொருள் சேகரிக்க வேண்டுமென்று தீர்மானித்து, இவ் வருஷம் முதல் எங்கள் வருஷாந்திர வரும்படியில் செலவு போக மிச்ச ரூபாயை ஒரு பண்டாகச் சேர்த்து வைக்கத் தலைப்பட்டோம். இதுதான் தற்காலம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டிருக்கும் கட்டட பண்டின் (Building Fund) அங்குரார்பணமாகும். இதைப்பற்றி நான் பிறகு அதிகமாய் எழுத வேண்டி வரும்.

இவைகளெல்லாம் அன்றி, இவ் வருஷம்தான் எங்கள் சபையார் முதன் முதல் தசரா அல்லது நவராத்திரிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தது. அன்று முதல் இந்த இருபத்தெட்டு வருடங்களாக நாங்கள் நடத்திவரும் இந்தசராக் கொண்டாட்டம் ஆரம்பமான விதம் கொஞ்சம் வேடிக்கையா யிருக்குமாதலால் , அதைச் சற்று விவரமாய் இங்கு எழுத இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்கிறேன்.

சில வருஷங்களாக சரஸ்வதி பூஜையை எங்கள் சபையில் கொண்டாடி வந்தோம். இவ்வருஷம் விநாயக சதுர்த்தி வர, என் தமயனார் மண்ணாற் சமைத்த ஒரு பெரிய பிள்ளையாரை வாங்கி வந்து, அதற்குப் பொன்மயமான கில்டு ரேக்குகளை யெல்லாம் ஒட்டி, பூஜைக்காக சபையில் வைத்தார். சாயங்காலம் ஆக்டர்களெல்லாம் ஒருங்கு கூடி அதற்குப் பூசை செய்தோம். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து அவர் பெயரைச் சொல்லி நாங்கள் எல்லாம் அவல் கடலை சுண்டல் முதலியவற்றை யெல்லாம் புசித்தோம். மறுநாள் அதற்குப் புனர்பூசை செய்தபொழுது, ‘பிள்ளையார் அழகாயிருக்கிறதே, இதை சமுத்திரத்திற்குக் கொண்டு போய்த் தண்ணீரில் போட்டு 

விடுவானேன்? இங்கேயே வைத்து வைக்கலாகாதா’ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு சபையிலேயே ஒரு மூலையில் வைத்தோம். வெள்ளிக்கிழமைகளில் அதற்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தி, கற்பூரம் கொளுத்தி வந்தோம். இப்படியிருக்க சீக்கிரத்தில் நவராத்திரி வர, சென்னையில் குஜராத்திப்பேட்டையிலும், இன்னும் சில வீடுகளிலும் கொலு வைக்கிறார்களே அம்மாதிரி நாமும் ஏன் இங்கு வைக்கக்கூடாது என்று யோசித்து, அப்படியே செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, நவராத்திரிக் கொலுவுக்காக ஏற்பாடு செய்தோம். அக்காலம் நாங்கள் ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென்று தீர்மானித்தால் ஆரம்பித்த காரியத்திற்குக் குறையினைக் கூறாது எல்லோரும் குதூஹலத்துடன் கைகொடுத்து உதவும் காலமா யிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிலிருந்த அழகிய பொம்மைகள் முதலியவற்றைக் கொண்டுவந்து கொலுவுக்காகக் கொடுத்தனர். இவ்வாறு வேடிக்கையாக ஆரம்பித்த கொலுவானது வெகு மும்முரமாகிவிட்டது. ஓர் அம்மன் விக்ரஹத்தை நடுவில் ஸ்தாபித்து அதற்குப் பத்து நாட்களும் பூசை இயற்றினோம். இதற்கு ஆர். ஸ்ரீனிவாசராவ் என்னும் எங்கள் சபையைச் சார்ந்த ஒரு மகாராஷ்டிர பிராம் மணனை குருக்களாக ஏற்படுத்தினோம். தினம் அம்மனுக்கு ஒவ்வொரு வாகனமாக வைத்து திருவிழா கொண்டாடினோம். அதற்காக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு உபயகாரரை ஏற்படுத்தினோம். ஒவ்வொரு உபயகாரரும் அன்றைத் தினம் பூஜைக்கு வேண்டிய புஷ்பம், நைவேத்யம் முதலிய செலவுக்காக ஒன்றிரண்டு ரூபாய் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கோயில் உற்சவங்களில் உபயகாரர் போட்டி போட்டுக் கொண்டு செலவழிப்பதுபோல் நாங்களும் போட்டி போட்டுக் கொண்டு செலவழிக்க ஆரம்பித்தோம்! இவ்வாறு தசராக் கொண்டாட்டம் மும்முரமாய் நடக்கவே, முதல் நாள் பத்துப் பதினைந்து ஆக்டர்கள் மாத்திரம் கூடியிருக்க, வரவர எல்லா மெம்பர்களும் சாயங்காலங்களில் சேரத் தொடங்கிவிட, இடம் போதாமல், விக்டோரியா ஹாலின் தென்புறமிருந்த மைதானத்தில் ஒரு கூடாரம் அடித்து, அங்கே சிற்றுண்டி முதலியன அருந்த ஆரம்பித்தோம்! தசராவின் கடைசி நாட்களில் இந்தக் கூடாரமும் எங்களுக்குப் போதுமானதா யில்லாமற் போயிற்று. இவ்வருஷத்திய அறிக்கையில் எங்கள் சபைக்காரியதரிசிகளில் ஒருவராகியிருந்த எனது பால்ய நண்பர் 

வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் குறப்பிட்டபடி, இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட்டமானது வர வர வளர்ந்தோங்கி, சென்ற இருபத்தெட்டு வருடங்களாகச் சபையின் கொண்டாட்டங்களில் ஒரு முக்கியமானதாகி விட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த கதையை இனி எழுதுகிறேன். மறுவருஷம் கூடாரம் போதாதென்று ஒரு பெருங்கொட்டகை போட்டோம். இரண்டொரு வருஷங்களுக்குப் பிறகு இதுவும் போதாதபடி இருந்தமையால், விக்டோரியா பப்ளிக் ஹாலில் மேல் மாடியைப் பத்து நாளைக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பிறகு எங்கள் சபை ஹாலின் கீழ்ப் பாகத்தைக் குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டபொழுது, விக்டோரியா பப்ளிக் ஹாலின்மேல் மாடியையும் கீழ்ப் பாகத்தையும் உயோகிக்கலானோம்! இவ்வாறாக ஆரம்பத்தில் பத்துப் பதினைந்து பெயர்களுடன் ஆரம்பித்த கொண்டாட்டத்தில் பிறகு நாநூறு ஐந்நூறு பெயர்கள் சேர நேர்ந்தது.

இரண்டாம் பாகம் முற்றிற்று