உள்ளடக்கத்துக்குச் செல்

நாடக மேடை நினைவுகள்/பதினைந்தாம் அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

பதினைந்தாம் அத்தியாயம்


தற்கப்புறம் 1902ஆம் வருஷத்தில் ‘நான் விரும்பிய விதமே’ என்னும் நாடகத்தை எழுதினேன். இது ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் ‘ஆஸ் யூ லைக் இட்’ (As you like it) என்னும் பெயர் வைத்து எழுதிய ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பாம்

இம் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களுள் சிலவற்றைத் தமிழில் அமைத்ததில் இது முதலானதாகையால், இதைப் பற்றிக் கொஞ்சம் விஸ்தாரமாய் எழுத விரும்புகிறேன்.

ஒரு பாஷையிலிருந்து மற்றொரு பாஷைக்கு யாதானு மொரு விஷயத்தை மொழி பெயர்ப்பதென்றால் எளிதல்ல; அதிலும் திராவிட பாஷைக்கும் ஆங்கிலத்திற்கும் கொஞ்ச மேனும் சம்பந்தம் கிடையாது; மேலும் ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு விதமான நடை அல்லது போக்கு (Idiom) உண்டு; அதை மற்றொரு பாஷையின் நடையல்லது போக்குக்குத் திருப்புவதென்றால் கடினமாம். சாதாரண ஆங்கிலேய வசனத்தைத் தமிழில் மொழி பெயர்ப்ப தென்றாலே இவ்வளவு கஷ்டமாயிருக்க, உலகமெங்கும் பிரசித்திபெற்ற மகா நாடகக் கவியாகிய ஷேக்ஸ்பியருடைய நாடகங்களைத் தமிழில் எழுதுவதென்றால் மிகவும் அசாத்திய மான காரியம் என்பதை அறிந்துள்ளேன். அப்படியிருக்க, இக்கஷ்டமான வேலையில் கையிட்டுக் கொண்டதற்குக் காரணம் அடியில் வருமாறு:-

ஒரு நாள் எனது பால்ய நண்பராகிய வாமன்பாய் என்ப வரும் நானும் ஏதோ நாடக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, “நாடக மேடையில் நீ எந்தப் பாத்திரம் நன்றாய் ஆடினாலும் ஆடலாம்; உன்னால் ஷேக்ஸ்பியரின் 


ஹாம்லெட் என்னும் பாத்திரம் ஆட முடியாது” என்று கூறினார். “அப்படியா? நம்மால் ஆகாத தொன்றுமிருக்கிறதா? அதை எப்படியாவது ஆடித்தான் பார்க்க வேண்டும்” என்று என் மனத்திற்குள் தீர்மானித்தேன். இதை நான் வெளிப் படையாக என் நண்பருக்குச் சொல்லவில்லை. வீட்டிற்குப் போனவுடன் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet) நாடகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க அதன்கஷ்டம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புலப்பட ஆரம்பித்தது. நாடகத்தை முற்றிலும் ஒரு முறை படித்தபின், என்னடா இது, இதை எப்படி நாம் மொழிபெயர்ப்பது? எப்படி நடிப்பது? என்ன அசாத்தியமான காரியத்தில் கையிட்டுக் கொண்டோம் எனும் பயம் பிறந்தது. ஆயினும் “என்னால் முடியாது, நீ சொன்னது சரிதான்” என்று எனது நண்பரிடம் ஒப்புக் கொள்வதா என்னும் ரோஷத்தினால், எப்படியாவது முயற்சி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். “தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்” எனும் தெய்வப்புலமை திருவள்ளுவர் குறள் ஞாபகம் வந்தது. ஆகவே ஒருவாறு என் மனத்தைத் திடம் செய்துகொண்டு அந்நாடகத்தை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். ஸ்ரீராம தூதனாகிய அனுமாருக்கு, அவருடைய சக்தியை அவருக்கு மற்றவர்கள் எடுத்துக் கூறினால்தான் அவரால் ஒரு காரியம் செய்து முடிக்க முடியும் என்று ஒரு பழங்கதை யுண்டு. அதுபோல் உன்னால் இது முடியாது என்று யாராவது கூறினால்தான், என்னால் முழுப்பிரயத்தனம் செய்ய முடியும்போலும். புத்தி, பராக்கிரமம் முதலிய மற்றெதிலும் இல்லாவிட்டாலும், பிடிவாதத்தில் ஹனுமாருடைய அம்சம், அணுவளவு என்னிடமிருக்கிறதென நினைக்கிறேன்.

இப்படி க்ஷாத்திரத்தின் பேரில் நான் எழுத ஆரம்பித்த நாடகமானது, பூர்த்தியாக ஆறு வருஷங்களுக்குமேல் பிடித்தது. முதற்காட்சியை மொழி பெயர்ப்பதற்கே சில மாதங்கள் பிடித்தன. பிறகு இரண்டாம் காட்சியில் காலதேவன் (Cladius) என்னும் அரசனுடைய பெரிய வசனமொன்றை மொழிபெயர்ப்பதில், ஒரு கஷ்டமான கட்டத்திற்கு வந்து, என் மனத்திற்குத் திருப்தியாகும்படி அதை எழுத முடியாமல் திகைத்தவனாய் நின்று விட்டேன். என்னுடைய ஏற்பாடென்ன வென்றால், ஏதாவது நாடகத்தை எழுதிக்கொண்டு வரும் போது, என் மனத்திற்கே திருப்தியாயிருந்தால்தான் மேலே 

போவேன்; இல்லாவிட்டால் அவ்விடமே நின்றுவிடுவேன். பிறகு என் மனத்துக்குத் திருப்திகரமானபடி மேலே யோசனை போனால்தான், எழுத ஆரம்பிப்பேன். அப்படி நேரிடுவதற்கு, ஒரு நாளானாலும் சரி, ஒரு வாரமானாலும் சரி, ஒரு மாதமானாலும் சரி, ஒரு வருஷமானாலும் சரி எழுத ஆரம்பித்தது நிற்க வேண்டியதுதான். இப்படி ஷேக்ஸ்பியருடைய “ஹாம்லெட்” நாடகத்தை ஆரம்பித்து இரண்டாம் காட்சியில், நான் நின்றுவிட்ட விஷயத்தை எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு அறிந்து “இம்மாதிரி தடைப்பட்டால் இதை முற்றிலும் எழுதி முடிக்க எத்தனை யுகம் ஆகும்? வேறு ஏதாவது சுலபமான நாடகத்தை எடுத்துக் கொள்ளுகிறது தானே” என்று என்னைத் தூண்டினார். அவர் சொன்னது சரியென ஒப்புக்கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களில், ஏறக்குறைய சுலபமான நாடகமாகிய “ஆஸ் யூ லைக் இட்” (As you like it) என்பதை எடுத்துக்கொண்டு அதைத் தமிழில் எழுத ஆரம்பித்தேன். இதுதான் இந்நாடகத்தை நான் எழுத ஆரம்பித்த கதை.

இது ஹாம்லெட்டைவிட எவ்வளவோ சுலபமான நாடகமானபோதிலும், நான் எழுதி முடிப்பதற்குச் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்பட்டது. இதற்கு “விரும்பிய விதமே” எனத் தமிழ்ப் பெயர் கொடுத்தேன். இதைப் பிறகு நான் அச்சிட்டு வெளியிட்டபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய நாகடத்தின் மொழி பெயர்ப்பு என்று கூறாது தமிழ் அமைப்பு என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள: ஒன்று, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்கள் வேறெப் பாஷையிலும் சரியாக மொழி பெயர்ப்பது அசாத்தியமான காரியம் என்பது என் தீர்மானம்; இரண்டாவது, இதில் நாடகப் பாத்திரங்கள் பெயர்களையும், பட்டணங்கள், நதிகள் முதலியவைகளின் பெயர்களையும், தமிழ்ப் பெயர்களாக மாற்றி விட்டேன். இவ்வாறு நான் மாற்றியதற்கு நியாய மென்னவெனில், இதை நாடகமாக மேடையின் பேரில் நடிக்குங்கால், “ஓ ஆர்லாண் டோவே, ராசலிண்டே” என்று அழைத்தால், தமிழர்களுக்கு அர்த்தமாகாததுமன்றி அவ்வுச்சரிப்புகள் நகைப்புக்கிடமுண் டாக்கும் என்பதேயாம். அதற்காக முதலில் நாடகப் பாத்திரங்களின் பெயரையெல்லாம் தமிழ்ப் பெயர்களாகத் திருப்பினேன். கூடிய வரையில் அப் பெயர்களிலுள்ள மெய் 

எழுத்துகளைக் கொண்டே தமிழ்ப் பெயர்களாக மாற்றினேன்; பிரடெரிக் என்பதை பிரதாபதீரனெனவும், ஆலிவ் என்பதை ஹலவீரன் எனவும், சீலியா என்பதை சுசீலா எனவும் இம்மாதிரியாக மாற்றிக்கொண்டு போனேன்; அன்றியும் அர்த்தப் பொருத்தமுமிருக்குமாறு, ஆர்லாண்டோ எனும் கதாநாயகனுடைய பெயரை, அமரசிம்ஹன் எனவும், ராசலிண்ட் என்கிற பெயரை ராஜீவாட்சி எனவும் மாற்றினேன். மற்றப் பெயர்களின் பொருத்தத்தை, நான் அச்சிட்டிருக்கும் இந்நாடகத்தில் எனது நண்பர்கள் பார்த்துக் கொள்வார்களாக.

இந் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலின் அடமானத்தை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிற்காகச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையார் தீர்மானித்தபடியால், நாடக முழுவதையும் மொழி பெயர்க்காது, ஆடவேண்டிய பாகங்களை மாத்திரம் முதலில் மொழி பெயர்த்தேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து இதைப் புஸ்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்திய சமயத்தில்தான், நாடக முழுவதையும் தமிழில் அமைத்தேன்.

அன்றியும் ஹைமன் (Hymen) என்கிற பாத்திரமானது தமிழ் நாட்டிற்கு உரித்தாயிராதபடியாலும், மேல் நாட்டாரும் அநேகம் கற்றறிந்தவர்கள், அப்பாத்திரம் இந்நாடகத்தில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவியால் எழுதப்படாது பிறகு இந்நாடகத்தில் நுழைக்கப்பட்டதென்று அபிப்பிராயப்படுகிற படியாலும், அதை என் தமிழ் அமைப்பில் நீக்கினேன். மேலும் ஷேக்ஸ்பியர் காலத்தில் சாதாரணமாக வழங்கிய சில வார்த்தை கள், தற்கால நாகரிகப்படி அசங்கியமாயிருக்குமென அவை களையும் மொழி பெயர்க்காது விட்டேன். இந்நாடகத்தை நாங்கள் ஆடியதைப் பற்றி எழுது முன், என் தமிழ் அமைப்பைப்பற்றி ஒன்று என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்; அதாவது, ஆங்கிலத்திலுள்ள ஒரு சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதற்கு, “ஈயடித்தான் கணக்குப் பிள்ளை” செய்தது போல், ஒவ்வொரு பதத்திற்கும் தமிழ் அர்த்தத்தை எழுதிக்கொண்டு போனால், அது சரியாக அர்த்தமுமாகாது, கிரந்த கர்த்தாவின் அபிப்பிராயத்தையும் சரியாக வெளிப்படுத்துவதாகாது என்று நம்பினவனாய், அர்த்த பாவத்தையே முக்கியமாகச் சரியாகத் தெரிவிக்க வேண்டும் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இந்நாட கத்தைத் தமிழில் அப்பொழுது எழுதினேன். அதற்குப் பிறகு 

இதுவரையில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களுள் இன்னும் நான்கைந்து தமிழில் அமைத்திருக்கிறேன்; அவை களிலும் மேற்சொன்ன கோட்பாடுகளை யெல்லாம் கவனித்திருக்கிறேன்.

இனி இந்நாடகத்தை நாங்கள் 1902 மார்ச்சு மாதம் எட்டாம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடியதைப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் அன்றிரவு, ஐகோர்ட்டு ஜட்ஜாக யிருந்த பாடம் (Boddam) துரையவர்கள் ஆதரவில் நடத்தப் பட்டது. இந்நாடகத்திற்காகவென்று, புதிதாயின திரைக ளெல்லாம், ஒரு பாரசீக சித்திரக்காரரைக் கொண்டு எழுதி வைத்தோம்; சில நூதன உடைகளும் தயாரித்தோம். ஒத்திகைகள் எல்லாம் சரியாக நடந்து வந்தபடியால், நாடகமானது எல்லா விதத்திலும் மிகவும் நன்றாயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஜனங்களும் ஏராளமாய் வந்திருந்தனர். மொத்த வரும்படியினின்றும் எங்கள் செலவு போக ரூபாய் 200 விக்டோரியா பப்ளிக் ஹால் அடமான மீட்சி பண்டுக்குக் கொடுத்தோம்.

அன்றிரவு இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ வேஷங்களாகிய சுசீலா ராஜீவாட்சி என்பவை கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடி வேலுவினால் பூணப்பட்டன. இவர்கள் இருவரும் ஒன்றாய்ப் பாடி நடித்தது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது! அதற்கு முக்கியக் காரணம் அவர்களிருவரும் மேடையின்மீது மிகவும் அன்யோன்யமாய் ஒத்து உழைத்ததே; ஒருவருக் கொருவர் கொஞ்சமாவது மாச்சரியமின்றி, ஒருவருக்கொருவர் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து கொண்டு, சந்தோஷ மாய், நாடக மேடையின்மீது ஆடிய இவர்களைப் போன்ற இரண்டு ஸ்திரீ வேஷதாரிகளை நான் இதுவரையில் கண்டதே யில்லை. இந்நாடகம் நன்றாயிருந்ததற்கும், இன்னும் இவர்க ளிருவரும் பல தடவைகளில் ஒன்றாய் நடித்த நாடகங்கள் நன்குயிருந்ததற்கும், இவர்களிருவரும் ஒற்றுமை யுடையவர் களாய் நடித்ததே முக்கியக் காரணம் என்று நான் நம்புகிறேன். அக்காலத்தில் எங்கள் சபை மற்ற சபைகளைவிடப் பெரும் பெயர் பெற்றதற்கு, ரூபத்திலும், சங்கீதத்திலும், நடிப்பதிலும் ஏறக்குறைய சமமான தேர்ச்சியுடைய இவ்விரண்டு ஆக்டர்களுமே முக்கியக் காரணர்களாயிருந்தார்கள் என்று நான் தடையின்றிச் சொல்ல வேண்டும். அக் காலத்திலெல்லாம், ஏதாவது எங்கள் சபையில் நாடகம் போட்டால் கிருஷ்ண 


சாமியும் ரங்கவடிவேலுவும் வருகிறார்களா என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட கியாதியை இவர்களிரு வரும் பெற்றிருந்தனர். தற்காலத்திய ஆக்டர்களும் இவர் களைப்போல், ஒத்து உழைத்து சுயநன்மையைப் பாராமல் சபையின் பெயருக்காகக் கஷ்டப்பட்டு, எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றுவார்களாக என்று எல்லாம் வல்ல கடவுளின் கிருபையைப் பிரார்த்திக்கின்றேன்!

பிறகு எங்கள் சபையில் பத்மாவதி வேடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற எஸ். பத்மனாபராவ் பத்மினியாக நன்றாய் நடித்தார். ஆண் வேடங்களில், ஹலவீரனாக எம். சுந்தரேச ஐயர் நடித்தார். இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாகம் (மிகவும் கஷ்டமான பாகம் என்றே நான் சொல்ல வேண்டும்) ஐகந்நாதன் என்பது. இதை ரங்கவடிவேலுவின் மைத்துன ராகிய தரமோதர முதலியாருக்குக் கொடுத்திருந்தேன். இதுதான் அவர் எங்கள் சபையில், முதல் முதல் ஒரு முக்கியமான வேடம் பூண்டது. இதற்கப்புறம் அநேகம் முக்கியப் பாத்திரங்களைப் பூண்டிருக்கின்றனர். இவருடைய சில அரிய குணங்களைப் பற்றி இங்கு நான் எழுத வேண்டியது என்கடமையாகும். இவர் கலாசாலைப் பரீட்சைகளில் தேறாதவராயினும் மிகுந்த புத்திக் கூர்மை வாய்ந்தவர்; அன்றியும் விடா முயற்சியுடையவர். ஏதாவது ஒரு காரியத்தை மேற்பூண்டால் தன்னாலியன்ற அளவு முயன்று அதை எப்படியாவது சாதிப்பார்; நாடக விஷயங்களிலும் அப்படியே. மற்றச் சபை விஷயங்களிலும் அப்படியே. ஏதாவது நாடகப் பாத்திரத்தை நான் அவருக்குக் கொடுத்தேனாயின், அதைப்பற்றி என்னிடமிருந்தாவது இதரர் களிடமிருந்தாவது தான் எவ்வளவு அறியக்கூடுமோ அவ்வளவு அறிந்து கொள்வார். எடுத்துக்கொண்ட நாடகப் பாத்திரத்திற் கேற்றபடி உடை தரிப்பதிலும், வேஷம் போட்டுக் கொள்வ திலும் இவருக்கு மேலானவர்கள் எங்கள் சபையில் இல்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த ஜகந்நாதன் பாகத்தில் இவர் எனக்குக் கொடுத்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட கஷ்டம் கொடுப்பார் இப்பொழுது இல்லையே என்பதுதான் என் வருத்தம்! ஏதாவது ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லுவேனாயின், அது தன் மனத்தில் நன்றாய்ப் படுகிறவரையில் என்னைத் திருப்பித் திருப்பி அதை நடித்துக்காட்டச் சொல்வார். அதனுடன்விடாது, பிறகு தான் அதை ஒத்திகை செய்து, தனக்கு நான் சொன்னபடி 

வந்தது என்று திருப்தியாகிற வரையில், என்னை விடமாட்டார் அவர்; ஒத்திகை பார்ப்பதற்கு நான் சளைவேனே யொழிய, தான் ஒத்திகை செய்வதற்குச் சளையமாட்டார். இந்த “சோகை பிடித்த ஜகந்நாதன்” இந் நாடகத்தில் ஒருவிதமான நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வேண்டியிருக்கின்றது; அதை நான் பன்முறை கஷ்டப்பட்டே கற்றேன்; இதை நான் இவருக்குச் சொல்லிக் கொடுத்தேன்; இதைப் பன்முறை நாங்கள் ஒத்திகை செய்திருந்தோம்; இருந்தும் மனத்தில் திருப்தி யடையாதவராய் அக்காட்சியில் தான் வருவதற்கு முன் பக்கப் படுதா அருகில் நின்று கொண்டு “வாத்தியார், வாத்தியார், இன்னொரு தரம் அந்தச் சிரிப்பைக் காட்டுங்கள்” என்று கேட்டது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கின்றது. இதை எனக்குப் பெருமையாக இங்கு நான் எழுதவில்லை. எனது நண்பரது இடைவிடா ஊக்கத்திற்கு ஓர் உதாரணமாகக் கூறுகின்றேனே ஒழிய வேறொன்றில்லை. சாதாரணமாக சபைகளில் ஒரு முறை ஏதாவது சொல்லிக் கொடுக்குமுன், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று கூறுகிற ஆக்டர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. இவர் ஜகந்நாதனாக நடித்து அன்றைத் தினம் பெரும் பெயர் பெற்றபிறகு இப் பாத்திரத்தருகில் யாரும் அண்டாததே, இவர் பெருமையை நிரூபிப்பதாகும்.

எங்கள் சபையில் இதற்குக் கொஞ்ச நாளுக்கு முன்புதான் சேர்ந்த தெலுங்கு ஆக்டராகிய வெங்டாசல ஐயர் அச்சுதன் வேடம் பூண்டார். இதுதான் இவர் முதல் முதல் எங்கள் சபையில் தமிழ் நாடகத்தில் வேஷம் பூண்டது. இவர் தன் மரணபர்யந்தம், எங்கள் சபையில் தமிழ் தெலுங்கு பாஷைகளில் நடித்ததுமன்றி, நாடகப் பாத்திரங்களுக்கு வேஷம் தரிப்பதில் மிகவும் உதவி புரிந்தவர்; முக்கியமாக இவ்வருஷ முதல் தன் ஆயுள் காலம் வரையில் எனக்கு வேஷம் தரித்தவர். ஆகையால் இவரைப்பற்றிக் கொஞ்சம் எழுதி, இவருக்கு நான் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்க்க முயலுகிறேன்.

இவரது முழுப்பெயர் வேதம் வெங்கடாசல ஐயர்; மஹா மஹோபாத்தியாயர் வேதம் வெங்கடராயலு சாஸ்திரியாருக்கு நெருங்கிய பந்து; தெலுங்கு பாஷையில் மிக்க பாண்டித்ய முடையவர். இவர் எங்கள் சபையைச் சேருமுன், ஜி.சி.வி. ஸ்ரீனிவாசாச்சாரியர் ஏற்படுத்திய மதராஸ் ஓரியண்டல் டிராமாடிக் சொசைடியில் சேர்ந்து, அதற்காக மிகவும் 

உழைத்தவர். இரண்டொரு முறை அச்சபையார் நாடகங்களை நான் பார்க்கப் போனபொழுது; அங்கு நான் கண்ட நாடகப் பாத்திரங்களுக்கு முகத்தில் வர்ணம் தீட்டியிருந்தது மிகவும் நன்றாயிருந்ததென வியந்தவனாய், இது யார் செய்தது என்று விசாரிக்க, வெங்கடாசல ஐயர், இந்தச் சபையில் சேர்ந்தவர், இவர்தான் இச்சபையின் ஆக்டர்களுக்கெல்லாம் வேஷம் போடுவது என்பதை அறிந்தேன். எங்கள் சபையில் அப்பு போடும் வேஷத்தைவிட இது மிகவும் நன்றாயிருந்தமையால், எப்படியாவது இவரை எங்கள் சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் மூலமாக இவருடன் பரிச்சயம் செய்துகொண்டு, மெல்ல, எங்கள் சபையில் சேருகிறது தானே என்று பிரஸ்தாபித்தேன். இச்சமயத்தில் அவர்களுடைய சபையானது யாது காரணத்தினாலோ, க்ஷணதசையிலிருந்தது; அது பாதி, நான் கேட்டது பாதியாக இவர் எங்கள் சபையைச் சேர இசைந்தார்; வருபவர்சும்மா வராமல் அச்சபையில் முக்கிய ஆக்டர்களாயிருந்த ராமமூர்த்தி பந்துலு, எஸ். வெங்கடாசல சாஸ்திரி இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தார். அந்தச் சபையில் ஒரே பெயர் கொண்ட இவர்கள் இருவரும் ஆக்டர்களாயிருந்தபடியால் இவர்களைத் தனித் தனியாகக் குறிப்பிட, கறுப்பு நிறமுடைய இவருக்கு ‘நல் லையா’ என்றும்; சிவப்பு நிறமுடைய மற்றவருக்கு ‘எர்ரையா’ என்றும் பெயர் வழங்கியிருந்தது; எங்கள் சபைக்கு வந்த பிறகும் இவ்விருவருக்கும் அதே பெயர்கள் வழங்கலாயின. இவருடைய முக்கியமான பெருமை என்னவென்றால், எந்த வேஷம் வேண்டுமென்றாலும் தரிப்பார். முக்கியமாக ஹாஸ்ய பாகங்களிலேயே இவர் பெயர் பெற்ற போதிலும், சமயம் நேரிட்டால் அரசன் முதல் அனுமார்வரை எந்த வேடம் வேண்டுமென்றாலும் பூணுவார். அப்படிப் பூணுவதிலும், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடி நடையுடை பாவனைகளை மேற்கொள்வதில் மிகவும் சமர்த்தர். ஒன்றுக்கொன்று வெகு தூரத்திலுள்ள அரசனாகவும், தோட்டியாகவும், பீமசேன னாகவும், விதூஷகனாகவும், வேசியாகவும், தாய்க் கிழவியாக வும், குறவனாகவும், கோபிகா ஸ்திரீயாகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் தோன்றியிருக்கிறார் எங்கள் சபையில். இத்தகைய வேடங்கள் பூணுவதன்றி, மிகவும் துரிதமாக ஒரு வேடத்தினின்றும் மற்றொரு வேடத்திற்கு 


மாற்றிக்கொள்வார். இவ்விஷயத்தில் இவரைவிட மேம்பட்ட வர்களை நான் தென் இந்தியாவில் கண்டதில்லை. சகுந்தலை நாகடத்தில் ஒரு முறை, தான் ஒரே இரவில் பதினொரு நாடகப் பாத்திரங்களாக மேடையில் தோன்றியதாக என்னிடம் ஒருமுறை கூறியுள்ளார். தான் ஒரு வேஷம் போட்டுக் கொண்டாலும் சரி, மற்றவர்களுக்கு ஒரு வேஷம் போடுவ தென்றாலும் சரி, அது இப்படியிருக்க வேண்டுமென்று நாடக தினத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாகவே யோசித்து, அதற்கு வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் சேர்த்துக்கொண்டு, ஒரு சிறு விஷயமும் விடாது, மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அதற்குத் தக்கப்படி வேஷம் போடுவார். ஒருமுறை யானைக் காலையுடைய ஒரு பறையனாக வேஷம் போடவேண்டி, அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமம் எனக்குத் தெரியும். மற்றொரு முறை நந்தனார் சரித்திரமாடிய பொழுது, அதில் வந்த பத்துப் பன்னிரண்டு பறையர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பற வேஷம் போட்டனுப் பினார்! விசித்திரமான வேஷங்கள் போடுவதில் இவருக்கு மிகவும் பிரியம். குருடன், முடவன், குஷ்டரோகி, நோயாளி, கிழவன், கிழவி முதலிய வேடங்கள் புனைவதில் இவருக்கு நிகரானவர்களை நான் என் ஆயுளில் இதுவரையில் கண்ட தில்லை; இனியும் காணப்போகிறதில்லை என்பது என் துணிபு.

இவர்தான் முதல் முதல், எங்கள் சபையில், நான் முன்னே உரைத்தபடி அப்பு உபயோகித்த அரிதாரம், செந்தூரம், முதலிய பூர்விக வர்ணங்களை ஒழித்து, கிரீஸ் பெயின்ட் (Grease Paint), பேர்ல் கிரீம் (Pearl Cream), லிப்சால்வ் (Lipsalve), ஐபுரோ பென்சில் (Eyebrow Pencil) முதலிய நவநாகரிகமானவைகளை உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர். எங்கள் சபையிலும் இன்னும் இதர சபைகளிலும் கிரீன்ரூம் டைரக்டர்களாக வந்தவர்களெல்லாம், இவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்களே என்று சொல்வது கொஞ்சமேனும் அதிகரித்துக் கூறுவதாகாது. வர்ணம் தீட்டுவதிலும், வேஷம் போடுவதிலும் புதிது புதிதாய் ஏதாவது யுக்தி செய்துகொண்டே இருப்பார்; இவரது வாழ்நாட்களில் பெரும்பாகம் இச் சபைக்கே செலவிட்டனர் என்று கூறுவது மிகையாகாது. இவரிடமிருந்து ஒரு முக்கிய மான-சாதாரணமாகக் கிடைத்தற்கரிய குணம், என்னவென்றால், தான் கற்றதைத் தன்னிடம் அன்புள்ள தன் சிஷ்யர் களுக்குக் கள்ளம் கபடின்றிக் கற்பித்ததேயாம். இவருக்கு நான் முக்கியமான நன்றியறிதல் பாராட்ட வேண்டியவனாயிருக்கிறேன். என்ன காரணம் என்றால், என் இளமை நீங்கி, எனக்கு வயதாக ஆக, நரைதிரைகளை மறைத்து வர்ணம் எழுதி, நாடக மேடையின் பேரில் என்னை இள வயதுடையவனைப்போல் நடிக்கச் செய்தது இவரே. சாதாரண வேடங்களில் வருவதற்கே இவர் எனக்காக ஒரு மணி சாவகாசத்திற்குக் குறையாமல் கஷ்டம் எடுத்துக்கொள்வார். “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் சுப்பிரமணியராக நான் ஆட வேண்டியிருந்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் என் ஒருத்தனுக்காகச் செலவழிப்பார்!


இவர் தமிழ்-தெலுங்கு நாடகங்களில் நடித்ததுமன்றி, மேற்சொன்னபடி ஆக்டர்களுக்கு வேஷம் போடுவதில் உதவியதுமன்றி, மற்றொருவிதத்திலும் எங்கள் சபைக்கு இவர் செய்த உதவிக்காக நாங்கள் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அதாவது, இவர் தெலுங்கு பாஷையில் எங்கள் சபைக்காக இயற்றிய நாடகங்களே; அவை “நந்தனார்”, “விதிலேக வயித்தியுடு”, “ராணிசம்யுக்தா”, “பாரிஜாத புஷ்பஹரணம்”, “மாம்ஜித்சிங்” முதலியனவாம். இவற்று ளெல்லாம் மிகச் சிறந்தது தெலுங்கு நந்தனாரே. கோபால கிருஷ்ண பாரதியார் தமிழில் மிக அழகாய் எழுதிய பாட்டுகளையெல்லாம் அப்படியே தெலுங்கில் மொழி பெயர்த்திருப்பது மிகவும் மெச்சத் தக்கதாம். இவ்வாறு பல வகையிலும் எங்கள் சபைக்கு உதவி புரிந்த இவரது படம் ஒன்றை இவர் காலகதியடைந்த பிறகு, எங்கள் சபையில் இவர் ஞாபகார்த்த மாக வைத்திருக்கிறோம். இத்தகைய குணம் வாய்ந்தவர் இந் நாடகத்தில் அச்சுதனாகிய விதூஷகனாக மிகவும் விமரிசையாக நடித்தது ஓர் ஆச்சரியமன்று.


இந்நாடகத்தில் என் பழைய சிநேகிதர் ராஜகணபதி முதலியார் லாவண்யன், நந்தக்கோனான், வில்லியன் எனும் மூன்று வேடங்கள் பூண்டனர். பி. கோபாலசாமி சாரளனாகவும், செல்வக்கோனானாகவும் நடித்தார். இந் நாடகத்தில் ஒரு முக்கியமான சிறப்பென்னவென்றால், ஒவ்வொரு ஆக்டரும் தான் மேற்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்துப் பெயர் பெற்றதேயாம். இந் நாடகம் ஜனங்களுக்குத் திருப்தியைத் தந்து, இது சில வருடங்களுக்குள் பன்முறை நடிக்கப்பட்டதற்குக் காரணம், இவ்வாறு எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்ததேயெனக் கருதுகிறேன். சில நாடகங்களில் முக்கிய ஆக்டர்கள் மாத்திரம் நன்றாய் நடிப்பார்கள்; மற்ற ஆக்டர்களெல்லாம் ஒரு மாதிரியாயிருக்கும்; அப்படியல்லாது அயன் (Chief) பாத்திரங்கள் முதல் கடைசி ஆக்டர்கள் வரையில் எல்லோரும் நன்றாய் நடித்தால்தான் நாடகம் நன்றாய்ச் சோபிக்கும் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனித்து, ஒருக்கால் தாங்கள் ஏதாவது சிறிய வேடங்களும் பூண வேண்டி வரினும், அவைகளிலும் ஜாக்கிரதையாக நடிப்பார்களாக. ஒரு சித்திரம் வரைபவன், ஒரு படத்தில் முக்கியமான உருவங்களை மாத்திரம் சரியாக வர்ணித்து, பக்கத்திலிருக்கும் மற்ற உருவங்களைச் சரியாக வர்ணிக்காவிட்டால் சித்திரம் மொத்தத்தில் அழகாயிருக்குமோ?


நான் இந் நாடகத்தில் அமரசிம்மனாக நடித்தேன். அவ்வாறு நடித்ததில் ஒரு சமாச்சாரம் இன்னும் எனக்கு முக்கியமாக நினைவிலிருக்கிறது. இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் சாரளனுடன் அமரசிம்மன் குஸ்தி பிடிக்க வேண்டியிருக்கிறது; இக் காட்சி நடந்த பிறகு, எனது சில நண்பர்கள் மேடைக்குள் வந்து, “சம்பந்தம்! குஸ்தி பிடிக்க எப்பொழுது கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டார்கள். என் சிறு பிராயத்தில், எனக்கும் என் அண்ணன்மார்களுக்கும் தேகப்பயிற்சிக்காக, எங்கள் தந்தை நன்னு மியாசாயபு என்கிற ஒரு மகம்மதிய வஸ்தாதைக் கொண்டு (வஸ்தாத் என்றால் உபாத்தியாயர் எனப் பொருள்படும்), தண்டால், பஸ்கி முதலியவைகளையும், கோல் வித்தை செய்யவும், குஸ்தி பிடிக்கவும் கற்பித்திருந்தார். அப்பொழுது எனக்கு மிகவும் சிறுவயதாயிருந்த போதிலும், என் அண்ணன்மார்களுடன் நானும் இவைகளை யெல்லாம் கற்று வந்தேன். அன்றியும் 1881ஆம் வருஷம் முதல் 1887 வரையில் பீபில்ஸ் பார்க்கில் நடந்த பார்க் பேர் (Park Fair) வேடிக்கைக்கு என் தகப்பனார் ஒரு காரியதரிசியாயிருந்தார்; அவருடன் இந்த வேடிக்கையில் குஸ்தி நடக்கும்தோறும், நான் போய்ப் பயில்வான்கள் குஸ்தி பிடிப்பதைக் கவனித்து வந்தேன். இதனால் குஸ்தி பிடிப்பதன் சூட்சுமங்களையெல்லாம் நன்றாயறிந்தவனானேன். இவ்வாறு நான் சிறுவயதில் கற்ற சிலம்ப வித்தையானது, எனக்கு 20 வருடத்திற்கப்புறம் பிரயோஜனப்பட்டது! இதை இங்கு நான் கூற வந்த காரணம் என்னவென்றால், நாடக மேடைமீது ஆட விரும்பும் ஒருவனுக்கு, எந்த வித்தையும் ஏதாவது ஒரு சமயம் பிரயோஜனப்படாமற் போகாதென்பதேயாம். “களவுங்கற்று மற என்னும் ஔவையின் வாக்கியம் ஆக்டர்களுக்கு மிகவும் உபயோகப்படும்.


இந் நாடகத்தை விட்டு அகலுமுன், இதை அன்று ஆடிய பொழுது, நான் புதிதாய் அறிந்த ஒன்று இங்கெடுத்தெழுதுகிறேன். இந்நாடகத்தில் ஐந்தாம் அங்கம் இரண்டாவது காட்சியில், ராஜீவாட்சி காதலைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறி வரும்போது மற்றவர்களெல்லாம் ஒவ்வொருவராக, “நானும் அப்படித் தானிருக்கிறேன்! நானும் அப்படித்தான் இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். இந்தக் காட்சியை நான் மொழி பெயர்த்த பொழுது, “இக்காட்சியில் என்ன இருக்கிறது? இதையொரு காட்சியாக ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதினாரே!” என்று எண்ணினேன். பிறகு அன்றிரவு நாடக மேடையின்பேரில் அக்காட்சி ஆடப்பட்ட பொழுது, சபையோரெல்லாம் அதைப் பார்த்து சந்தோஷித்த பிறகே, அக் காட்சியின் அழகும் மகிமையும் தெரிந்தது. இந்த நாடகம் பன்முறை ஆடப்பட்ட பொழுதெல்லாம், இக் காட்சியானது ஜனங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடாமற் போனதில்லை. இதனால் நான் அறிந்தது, ஒரு நாடகத்தின் அழகும் பெருமையும் அதைப் படிக்கும்பொழுது முற்றிலும் தெரியாது; அதை மொழி பெயர்க்கும் போதுகூடத் தெரியாது; மேடையின்மீது அதை நடிக்கும்போதுதான் தெரியும், என்பதே.


இந் நாடகமானது எங்கள் சபையில் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு ஜீவதிசையிலிருந்தபொழுது பன்முறை ஆடப்பட்ட போதிலும் அதற்கப்புறம் ஆடப்படவில்லை; அன்றியும் இதர சபைகளால் சில தடவைகளில்தான் ஆடப்பட்டது. இந்நாடகத்தின் ஒரு முக்கிய அம்சம் என்ன வென்றால், இது விக்டோரியா பப்ளிக் ஹால் முதலிய நாடகக் கட்டடங்களில் ஆடுவதைவிட, தோட்டங்களில் ஆடுவது மிகவும் சிலாக்கியமாம்; அவ்வாறு ஒரு முறை இதை நாங்கள் மயிலாப்பூர்கிளப்பின் தோட்டத்தில் ஆடியதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்.


இவ்வருஷம் எங்கள் சபையில் இன்னொன்று புதிதாய் ஆரம்பித்தோம். அதாவது பான்சி டிரஸ் என்டர்டெயின் மென்ட்! (Fancy Dress Entertainment). இதற்குச் சரியாகத் தமிழ் மொழி பெயர்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை; ஒரு விதத்தில் “ஒவ்வொருவரும் மனம்போல வேஷம் தரித்து வேடிக்கையாய்க்காலம் கழிப்பது” என்று இதன் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.


இதை நான் ஆரம்பித்ததற்குக் காரணம், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரே. நாங்கள் இருவரும் ஒருநாள் எங்கள் வழக்கம் போல் சபையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது “என்ன சம்பந்தம்! ‘ஜஷ்டை’ சும்மா இருக்கின்றாயே! ஏதாவது புதியதாய்ப் பண்ணு!” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லி, இதைப்பற்றி எடுத்துப் பேசினேன். ‘மிகவும் நல்லது!’ என்று ஒப்புக்கொண்டார்.


இதற்குச் சில தினங்களுக்கு முன், நான் சேர்ந்திருந்த மதுபான விலக்குச் சங்கம் ஒன்றிற்கு இருப்பிடம் ஏற்படுத்த வேண்டுமென்றும், ஏதாவது நாடகம் போட்டுக் கொஞ்சம் பணம் உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். இதை இரண்டையும் சேர்த்து ஒன்றாய் முடிக்கலாமெனத் தீர்மானித்து ஏற்பாடு செய்தேன்.


இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது. ஏறக்குறைய 50 பெயர்களுக்குமேல் வேஷம் தரித்து வந்தனர்; சபையின் அங்கத்தினர் அல்லாதவர்களும் சிலர் வேடத்தில் வந்தனர். இரவு 9 மணிக்கு ஆரம்பித்துச்சுமார் 12 மணிவரையில் நடந்தது; மேடையின்மீது கொஞ்சம் சங்கீதமும், தோற்றக் காட்சிகளும் நடந்தன. தென் இந்தியாவில் இதுதான் இந்தியர்களுக்குள் முதல் முதல் இம்மாதிரியான கூட்டம் கூடியது. சாதாரணமாக ஆங்கிலேயர்களுக்குள் இவ்வழக்கம் உண்டு. அவர்கள் பால் (Ball) ஆட்டத்துடன் இதை வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பிறகு இம்மாதிரியான கூட்டங்கள் இரண்டொரு முறை நடந்த போதிலும் பிறகு இது விடப்பட்டது. எங்கள் சபையானது மறுபடியும் உத்தாரணம் செய்ய வேண்டிய விநோதங்களில் இது ஒன்றாகும்.


இந்த 1902ஆம் வருஷம், அவ்வருஷத்தில் காரியதரிசிகளில் ஒருவராகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எங்கள் சபையின் வருஷாந்திர அறிக்கையில் தெரிவித்தபடி, எங்கள் சபையின் சரிதையில், ஒரு முக்கியமான வருஷமாம். இவ்வருஷம் எங்கள் சபையானது பால்ய பருவம் நீங்கி யௌவனதிசையை அடைந்தது என்றே கூற வேண்டும். இது முதல் பல வருஷங்களாக ஈஸ்வரகிருபையால் அபிவிருத்தி அடைந்து கொண்டே வந்ததெனக் கூறுதல் மிகையாகாது. இவ்வருஷம் முதல் எங்கள் சபையின் அங்கத்தினரின் தொகையும், நடத்திய நாடகங்களின் தொகையும், சபைக்குப் பண வசூலும் அதிகரித்துக்கொண்டே வந்தது யாவரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கியக் காரணம் சபைக்குக் காரியதரிசிகளாகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனது தமயனார் ஆறுமுக முதலியாரும் எடுத்துக்கொண்ட இடைவிடா ஊக்கமே என்று நம்புகிறேன்.


1902ஆம் வருஷத்தில் நான் இன்னொரு தமிழ் நாடகம் எழுதினேன்; அதாவது “காதலர் கண்கள்” என்பதாம். ஆங்கிலத்தில் “தி ஐ ஆப் லவ் The Eye of Love என்று இதன் பெயர். இப்பெயர் கொண்ட ஒரு சிறு நாடகம், முதலில் ஜர்மன் பாஷையில் எழுதப்பட்டதாம்; அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை மியூசியம் (Museum) புஸ்தகசாலையில் நான் ஒரு முறை 1895ஆம் வருஷம் படித்தது ஞாபகமிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்பே குறித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு, சென்னை டிராமாடிக் சொசைடி (The Madas Dramatic Society) யாரால் ஆடப்பட்ட பொழுது நான் பார்த்தேன். இது இவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஆடிய ஒரு சிறு நாடகமாயிருந்த போதிலும், மிகவும் நன்றாயிருந்ததென என் மனத்திலும்பட்டது. இதைத் தமிழில் நாம் பெருக்கி மூன்று மணி நேரம் ஆடக்கூடிய நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன்; ஆயினும் அத் தீர்மானத்தை நிறைவேற்ற அநேகக் காரணங்களால் இதுவரையில் முடியாமற் போயிற்று. இவ்வருஷம், சென்ற வருஷம் போல், சபை தினக் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புது நாடகம் போடவேண்டுமென்று எனது நண்பர்கள் வற்புறுத்த, இதைத் தமிழில் “காதலர் கண்கள்” என்று பெயரிட்டு விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகத்தின் கதை, இதை வாசிக்கும் அநேகருக்குத் தெரிந்திருக்குமென நம்புகிறேன்; ஆகவே அதைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; ராஜகுமாரனும், ராஜகுமாரியும் ஒருவரை யொருவர் ஏமாற்ற, வேலைக்காரனாகவும், வேலைக்காரியாகவும் வேடம் பூண்டது, அந்த ஜர்மன்கதையினின்றும் எடுக்கப்பட்டது. இந் நாடகம் ஆடும் பொழுதெல்லாம் பெரும் நகைப்பை விளைவிக்கும் கத்திச் சண்டைக் காட்சியின் அபிப்பிராயம். ஷெரிடன் (Sherden) என்பவர் ஆங்கிலத்தில் “தி ரைவ்ல்ஸ்” (The Rivals) என்று எழுதிய நாகடத்தினின்றும் எடுக்கப்பட்டது; மற்றக் கதையெல்லாம் என் சொந்த மனோபாவத்தைக் கொண்டு எழுதியது. இந்நாடகத்தில் மஹமதுஷா ஜுல்பிகர்கான் முதலிய சில பாத்திரங்கள் வருகின்றன. அவர்கள் ஹிந்துஸ்தானி பதங்களை உபயோகித்து கொச்சைச் தமிழுடன் பேச வேண்டியதற்கு, நான் 1898ஆம் வருஷம் வக்கீலான பிறகு, என் கட்சிக்காரர்களுடன் பேசுவதற்காக ஒரு மகமதிய உபாத்தியாயரை வைத்துக் கற்றுக் கொண்ட, ஹிந்துஸ்தானி மிகவும் உபயோகப்பட்டது. அன்றியும் கொல்ஹாபூர் சமஸ்தானத்தில் பழகிய சுதர்சனாசாரி என்பவர், ஹிந்துஸ்தானி நன்றாய்க் கற்றவர். நான் எழுதிய சில வாக்கியங்ளைத் திருத்திக் கொடுத்தார். நான் நாடகத்தை எழுதும்பொழுது, இவ்வாறு திருத்திக் கொடுக்கவே, அந்த ஹிந்துஸ்தானி வார்த்தைகளைச் சரியாகப் பேசவேறு ஆக்டர்கள் ஒருவரும் கிடைக்காதவனாய், அவரையே ஜுல்பிகர்கான் வேஷம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அதுவரையில் மேடையின்பேரில் ஏறினவரல்ல. ஆகவே தனக்கு வெட்கமாயிருக்கிறதென்று முதலில் மறுத்தார். பிறகு என் பலாத்காரத்தின்பேரில் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். பிறகு ஒத்திகைகள் நடக்கும் பொழுதெல்லாம் “நீ படித்து விடு, நீ படித்து விடு” என்று தான் தப்பித்துக்கொண்டு, என்னையே ஆக்டு செய்யும்படி கேட்டுக் கொண்டு வந்தார். ஆயினும் ஒரு முறை உங்களுக்குக் கொடுத்த பாகத்தை மாற்றப் போகிறதில்லையென்று கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை வழிக்குக் கொண்டு வந்தேன்.


நாடக ஆரம்பத்திற்கு முன்கூட, “சம்பந்தம், எனக்கு பயமாயிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “அதெல்லாம் உதவாது; நீங்கள் எப்படியும் இந்தப் பாத்திரத்தை மிகவும் நன்றாய் நடிப்பீர்கள். எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமில்லை” என்று உற்சாகப்படுத்தி, “மேடைக்குப் போன பிறகு ஹாலில் வந்திருப்பவர்களைக் கவனியாதீர். உங்கள் பாகத்தின்மீதே கண்ணும் கருத்துமாய் இரும்” என்று சொல்லி அனுப்பினேன். அவரும் அவ்வாறே செய்து அந்தப் பாகத்தை மிகவும் நன்றாக நடித்தார். இந்த ஜுல்பிகர்கான் பாகத்தைப் பிறகு அநேகர் நடிக்கப் பார்த்திருக்கிறேன்; நானும் இரண்டொருமுறை நடித்திருக்கிறேன். இருந்தாலும், அது வரையிலும் நாடக மேடை யென்பது இன்னதென்றறியாத அந்த சுதர்சனாச் சாரி, அன்று நடித்தது போல இதுவரையில் யாரும் நடிக்கவில்லையென்று உறுதியாய்க்கூறுவேன். இதை நான் இவ்வளவு சவிஸ்தாரமாக எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. அதாவது, நாடக மேடையில் தாம் நடிக்க வேண்டுமென்று விருப்பமுள்ளவர்கள், லஜ்ஜையைவிட்டு. ஊக்கமுடையவர்களாய் முயற்சி செய்வார்களாயின் எப்படியும் சாதிக்கலாம் என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். சொல்லிக் கொடுப்பவன் புதிதாய் வரும் ஆக்டரை, “இதென்ன இப்படி ஆபாசமாய் நடிக்கிறாயே,” என்று இகழாது, கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகப்படுத்திக் கொண்டு வருவாராயின் நலமாம் என்பது என் துணிபு. இதை நான் எப்பொழுதும் மறவாதவனாய், புதிய ஆக்டர்கள் என்னுடன் மேடையின் பேரில் யாராவது வந்தால், அப்போதைக்கப்போது அவர்களுக்கு சபையில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ஏதோ பை பிளே (Bye-play) நடப்பது போல், அவர்களுக்குத் தைரியம் சொல்லி, உற்சாகப்படுத்துவது என் வழக்கம். இதனால் எனது புதிய நண்பர்கள் பயன்பெற்றதாகப் பன்முறை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாடகத்திற்கு கண்டக்டர்களாயிருப்பவர்களும், பழைய ஆக்டர்களும் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. நான் பிரத்தியட்சமாய்ப் பார்த்திருக்கிறேன்; புதிய ஆக்டர்கள் ஏதாவது மேடையின்பேரில் நாடகம் நடிக்கும் பொழுது, தவறு இழைத்து விட்டால் “என்ன இப்படிச் செய்து விட்டாயே! உன்னால் எல்லாம் கெட்டுப் போய் விட்டதே!” என்று அவர்கள் மீது ‘சள்’ என்று வீழ்வதை; அதனால் முன்பே பயந்திருக்கும் ஆக்டர், இருக்கும் கொஞ்சம்தைரியமும் போய், பிறகு நாடகம் முடியும்வரையில், தன் பாகத்தை யெல்லாம் மறந்து ரசாபாசம் செய்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்! ஆகவே கண்டக்டர்கள் என் சொந்த அனுபவத்தை கொஞ்சம் கவனித்து நடக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். குற்றம் செய்வது யார்க்கும் சகஜமாம். அதிலும் புதிய ஆக்டர்கள் அதிகக் குற்றம் செய்யக்கூடும். அப்படிச் செய்தபோதிலும், நாடகம் நடக்கும் பொழுதே மேடையின்மீது பலர் அறிய அதைக் கண்டிக்காமல், நாடகம் முடிந்தவுடன், மெல்ல அவர்களை ஒருபுறமாக அழைத்துக் கொண்டு போய், இப்படிச் செய்வது சரியல்ல; இப்படிச் செய்ய வேண்டும் என்று நல்வார்த்தை கூறி அவர்களைத் திருப்புவதே நலமெனத் தோன்றுகிறது. மேற்சொன்ன சுதர்சனாச்சாரியார், சில வருஷங்களுக்கெல்லாம் எங்கள் சபையைவிட்டு நீங்கி ஹைதராபாதிற்குப் போய்விட்டார்; அவர் பிறகு என்னவாயினாரோ அறிகிலேன். (அவர் வெடிகுண்டினால் கொலையுண்டதாக ஒரு வதந்தியிருந்தது.) அவர் கடைசிவரையில், ‘என்னை நீ அடிக்கடி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திரா விட்டால், நான் அன்று மேடையை விட்டு ஓடிப்போயிருப்பேன்’ என்று பன்முறை கூறியது இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது.


இந் நாடகத்தில் வரும் இரண்டு ஸ்திரீ வேஷங்களாகிய தாராபாய், துளசிபாய் முறையே சி. ரங்கவடிவேலு, பத்மநாபராவ் இவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. பத்மநாபராவ் இதுதான் முதல் முதல் அரங்கத்தில் ஸ்திரீவேஷம் தரித்து ஆக்டு செய்தது. இருந்தபோதிலும் துளசிபாயின் பாகத்தை மிகவும் நன்றாய் நடித்தார்.


ஆண் வேடங்களில், அவருக்கென்றே எழுதப்பட்ட மதால்சிங் பாத்திரத்தை என் நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் மிகவும் நன்றாய் நடித்தார். அந்தப் பாத்திரத்திற்குப் பெயரும், மத்தளத்தைப்போல் “மெல்லிய” உடம்பை உடையவராயிருந்தபடியால் மதால்சிங் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாத்திரம் மதன்சிங் என்னும் தத்துவாயனே; அதை அ. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் வெகு விந்தையாய் நடித்தது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தத்துவாயனைப் போல் மேடையில் நடிப்பது எளிதல்ல. அதில் முக்கியமான கஷ்டமென்ன வென்றால், அளவுக்கு மிஞ்சித் தத்தினாலும் ஆபாசமாகும்; அளவுக்குக் குறைந்தாலும் சோபிக்காது. சரியாக எவ்வளவு இருக்கவேண்டுமோ சுபாவப்படி, அதன்படி தத்துதல் கடினமாம். நான் இதே நாடகத்தை மற்றவர்கள் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் எல்லோரும், அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தத்துகிறார்களே யொழிய, நாராயணசாமிப் பிள்ளையைப் போல் சுபாவத்திற்கிசைய தத்துவதைக் கண்டேனில்லை. தத்திப் பேசுவது சபையோர்க்கு நகைப்பை உண்டு பண்ணுகிறதேயென்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிகமாகத் தத்தினால், ரசாபாசமாகிறது. இதை இப்பாத்திரத்தை நடிக்க விரும்புவோர் கவனிப்பார்களாக. காலஞ்சென்ற பிட்டாபுரம் ஜமீன்தார் (தற்காலத்திய ஜமீன்தாருடைய தந்தையென நினைக்கிறேன்), இந்நாடகத்தின்மீது மிகவும் பிரீதியுடையவராயிருந்தார். தன் தேக அசௌக்கியத்தையும் பாராது இதை நாங்கள் ஆடும்பொழுது தெல்லாம், வந்து பார்த்து வந்தார். வேறு நாடகங்கள் நாங்கள் ஆடும்பொழுது வந்தால், இந்நாடகத்தை மறுமுறை எப்பொழுது ஆடப் போகிறீர்கள் என்று பன்முறை கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது.


இந் நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது 180 முறைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதை நாடகாபிமானிகள் விரும்பும் ஒரு நாடகமெனவே நான் கூற வேண்டும். நகைப்பைத் தரும்படியான நாடகத்தை ஆட வேண்டும் என்று விரும்பும் சபைகள் இதை எடுத்துக் கொள்ளலாம்.