நாடக மேடை நினைவுகள்/முதல் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchமுதல் அத்தியாயம்


நேக சாஸ்திரங்களில், இன்ன காரணத்தினால் இன்ன காரியம் உண்டாகிறதெனச் சற்றேறக்குறைய நிச்சயமாய்க் கூறலாகும். மனிதனுடைய குணாதிசயங்களைப் பற்றி ஆராயுங்கால், இன்ன காரணத்தால்தான் இன்னது உண்டாயிற்று என்று கூறுவது மிகவும் கடினமென்பதே என் கொள்கை. என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோஸ்யன் “நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்” என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகை இருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்ட போதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாயு மிருந்தேன். அதற்குக் காரணம், நான் இப்பொழுது யோசித்துப் பார்க்குமிடத்து, நான் பால்யத்தில் பீபில்ஸ் பார்க்கில் வருடந்தோறும் நடந்து வந்த வேடிக்கையிலும், இன்னும் இதர இடங்களிலும், அகஸ்மாத்தாய் நான் 

கண்ட கூத்தாடிகளின் நடையுடை பாவனைகள் என் மனத்திற்கு உண்டாக்கிய ஜிகுப்சையேயென்று நினைக்கிறேன். அன்றியும் என்னுடைய தகப்பனார் என்னைத் தன்னுடன் நுங்கம்பாக்கம் பழைய காலேஜ் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஆங்கிலேய நாடகங்கள் ஐரோப்பியரால் நடிக்கப்பட்டபோது அழைத்துக் கொண்டு போயிருந்தார். அவர்கள் பூண்ட வேஷங்களையும், நான் மேற்கூறிய தமிழ்க் கூத்தாடிகளின் வேஷங்களையும் ஒத்திட்டுப் பார்க்கும் பொழுது, எனக்கு அக் காலத்திய தமிழ் நாடகங்களின்மீதும் அதனை ஆடுவோர்மீதும் விருப்பமில்லாமலிருந்தது ஓர் ஆச்சரியமன்று. அங்ஙனமிருக்க, அந்த வெறுப்பு நீங்கி, தமிழ் நாடகங்கள் மீது விருப்புண்டாகி, இது வரையில் சற்றேறக் குறைய அறுபது தமிழ் நாடகங்களுக்குக் கர்த்தாவாகும்படி என் மனம் மாறியதற்குக் காரணங்களையறிய இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்புவார்கள் என்று நம்பி இக்கதையை எழுத விருப்பங் கொண்டேன்.

நான் தமிழில் நாடகங்கள் எழுதுவதற்கு அஸ்திவாரமாயிருந்த முதற் காரணம், நான் சிறுகுழந்தையாயிருந்தபோது நான் உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான சக்தி குறைவாயிருந்ததே என்று உறுதியாய் நம்புகிறேன். இதை அநேகர் நம்புவது கடினம்; ஆயினும் இது உண்மையே! சற்றேறக்குறைய எனது ஒன்பதாம் வயது வரையில் அடிக்கடி, இரவு போஜனம் செய்தவுடன், அது செரிக்காமல் நான் வாந்தியெடுப்பது வழக்கம். அதைத் தடுக்கும் பொருட்டு, எனது தாயார் ஒரு கதை சொல்லி எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம். கூறிய கதையையே கூறினால் எனக்கு அதில் வெறுப்புண்டாகுமென அறிந்து என் மாதா அவர்கள் சற்றேறக் குறைய தினம் ஒரு புதுக் கதையாகச் சொல்ல முயல்வார்கள். இவ்வாறாக எனது ஒன்பதாவது வயதுக்குள் ராமாயணம், பாரதம், ஸ்காந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய இதிகாச புராணங்களிலுள்ள கதைகள் எல்லாம் அமிர்தம் போன்ற அவர்களது வாய்ச்சொற்களால் என் செவியால் உண்டேன். இதனால் என் மனத்திற்கு அக்கதைகளின்மீது பெரும் விருப்பமும் அக்கதா நாயகர்களின் மீது பெரும் ஆர்வமும் உண்டாயிற்று. அவை என் மனத்திற்கு பெருங்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கியது என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. நான் அப்பொழுது கற்றறிந்த கதைகள் பிறகு நான் நாடகம் எழுதுவதற்கு உபயோகப்பட்டன என்பது திண்ணம். ஆகவே நான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, என் முதல் தெய்வமாகிய மாதாவுக்கே கடன்பட்டிருக்கின்றேன். எனக்கிப்பொழுது வயது ஐம்பத்து எட்டுக்கு மேல் ஆகிறது. என் தாயார் எம் பெருமான் திருவடியை அடைந்து நாற்பது வருடங்களாகின்றன. ஆயினும் இப்பொழுதும் அவர்களை நினைத்து இதை எழுதும்பொழுது என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் வருகிறது.

நான் நாடக ஆசிரியனானதற்கு இரண்டாவது காரணமாக, என் தந்தையார் (காலஞ்சென்ற பம்மல் விஜயரங்க முதலியார் அவர்கள்) எங்கள் வீட்டில் சேர்த்துவைத்த தமிழ் ஆங்கிலேயப் புஸ்தகங்களே என்று கூறவேண்டும். அவர் கலாசாலையில் தேறின பிறகு, முதலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். பிறகு பள்ளிக்கூடங்களைப் பரீட்சை செய்யும் “இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ்"என்னும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தார். தானே தமிழ் வாசக புஸ்தகங்கள் முதலிய பல அச்சிட்டார். இவை காரணமாக எங்கள் வீட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் புஸ்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. தமிழ்ப் புஸ்தகங்களை அச்சிடும் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு புஸ்தகம் அனுப்புவதுண்டு. நான் தமிழ் நன்றாய்ப் படிக்கத் தெரிந்த நாள் முதல், அவரிடமுள்ள தமிழ்க்கதைப் புஸ்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் படித்து வந்தேன்; அங்ஙனமே ஆங்கிலம் படிக்கக் கற்றவுடன், ஆங்கிலேய கதைப் புஸ்தகங்களையும் நாடகங்கள் முதலியனவையும் படிப்பேன். இவ்வாறு ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களையும் அச்சிறு வயதிலேயே படித்தேன். அச்சிறு வயதில் மேற்கண்ட புஸ்தகங்களில் நான் அர்த்தம் அறியக்கூடாத பல வார்த்தைகளும் சொற்றொடர்களும் இருந்தன என்றாலும், மொத்தத்தில் கதைகளைக் கிரஹித்துக் கொள்வேன். அக்கதைகளை யெல்லாம் படிக்கும்பொழுது, அக்கதைகளின் நாயகர்களாக என்னையே பாவித்துக்கொண்டு, அவர்கள் துக்கப்படுங்கால் நானும் துக்கப்படுவேன்; அவர்களுக்கு யாராவது இடையூறுகள் செய்யுங்கால் கோபங்கொள்வேன்; அவர்களுக்கு நற்கதி வாய்க்குங்கால் குதூஹலமடைவேன்; இது பிற்காலத்தில் நான் நாடகங்ககள் எழுதுவதற்கு மிகவும் பிரயோஜனப்பட்டது மன்றி, நாடகங்களை நடிப்பதற்கு எனக்குப் பேருதவியாயமைந்தது. ஷேக்ஸ்பியர் மகாகவி யெழுதிய நாடகங்களின் கதைகளை லாம்ப் (Lamb) என்பவர் வசன ரூபமாக எழுதிய புஸ்தகத்தை நான் வாசித்த பொழுது, அதில் மெக்பெத் (Macbeth) என்னும் துக்ககரமான கதையைப் படிக்குங்கால், டங்கன் (Duncan) கொலையுண்ட பாகத்தை நான் முதல் முதல் படித்த பொழுது, தனியாய் நான் மேல் மாடியில் என் தகப்பனாருடைய மேஜையருகில் படித்துக் கொண்டிருந்த அப்புஸ்தகத்தை மூடாமலும் விட்டு, பயந்து, படபடத்த மார்புடன் என் தாயாரிருக்குமிடம் நான் ஓடியது, இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது. மஹாபாரதத்தில் துரோண பர்வத்தில் பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொலையுண்ட கதையை வாசித்த பொழுது, என்னையும் அறியாதபடி கண்ணீர் தாரை தாரையாக எனக்குவர, அருகிலிருந்த எனது அத்தையும் சிற்றன்னையும் என்னை “ஏன் அழுகிறாயிப்படி, இது கதைதானே” என்று தேற்றியது இன்னும் என் ஞாபகத்தில் நேற்று நடந்தது போல இருக்கிறது.

மேற்கூறியவைகள் அன்றி, மற்றொரு காரணம் அடியில் வருமாறு:- நான் சிறுவனாயிருந்தபொழுது பள்ளிக்கூடங்களில் வருஷோற்சவக் கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆங்கிலேய கவிகள் இயற்றிய கிரந்தங்களிலிருந்து சிலபாகங்களை ஒப்புவிப்பது வழக்கம்; அப்படி நன்றாய் ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதும் வழக்கம். இம்மாதிரியான பரீட்சைகளில் நான் சிறுவயது முதல் தேர்ந்தவனாய் பல பரிசுகள் பெற்றேன். இதனால் ஆங்கில நாடகங்களின்மீது எனக்கு அதிக விருப்பம் ஜனித்தது. அக்காலத்தில் கலாசாலைகளில் வாசிக்கும் மாணவர் வருடந்தோறும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களை ஆங்கிலேயத்தில் நடிப்பார்கள். அந்நாடகங்களையெல்லாம் தவறாமல் நான் போய்ப் பார்த்து வருவேன்; அப்படி மற்றவர்கள் நடிப்பதை நான் பார்க்கும் பொழுதெல்லாம் நாமும் அப்படி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்று ஏக்கமுறுவேன். அக்காலத்தில் என் விளையாட்டுத் துணைவர்களாயிருந்த என் நேர் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரியும் நானுமாக, நாங்கள் பார்த்த சிறுநாடகங்களை எல்லாம், விளையாட்டாக வீட்டில் எங்கள் தகப்பனார் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து நடிப்போம். ஒருமுறை ஒரு ஆங்கில சர்க்கஸில் நாங்கள் பார்த்த “டிக்டர்ப்பின் என்னும் திருடன் யார்க் பட்டணத் துக்குக் குதிரைச் சவாரி செய்தது” (Dick Turpin's ride to York) என்னும் நாடகக் கதையை, வசனரூபமாக நான்கு ஐந்து காகிதங்களில் நான் எழுத, அதை நாங்கள் காகிதத்தினால் ஒரு திரைசெய்து, அதன் முன் நடித்தது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

ஆயினும் மேற்கண்ட காரணங்களால் ஆங்கில நாடகங்களின் மீது எனக்குப் பெரும் உற்சாகம் உண்டாயதேயொழிய, தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு கொஞ்சமேனும் குறையவில்லை . என்தாயாதியாகிய ஒரு சிறுவன், அக்காலத்தில், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட மூங்கில் கொட்டகையில், அக்காலத்தில் ஹரிச்சந்திரனாக நடிப்பதில் தனக்குச் சமமானவர்கள் இல்லையென்ற கீர்த்தி பெற்ற சுப்பராயாச்சாரி, வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஹரிச்சந்திர நாடகம் நடத்து வதைப் போய்ப்பார்ப்பதுண்டு. அத்தாயாதி என்னைத்தன்னுடன் வரும்படி என்னை அழைப்பதுண்டு. அப்படி நான் அழைக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ் நாடகங்களைப் பற்றி இழிவாகப் பேசி அவைகளைப் பார்க்க எனக்கிஷ்டமேயில்லை என்று நான் கூறுவேன். இவ்விஷயம் நான் முன்பு குறிப்பிட்டபடி, என் சம வயதுடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாயிருந்தது.

தமிழ் நாடகங்களின்மீது இருந்த இந்த வெறுப்பு மாறி, தமிழ் நாடகங்களை நான் எழுத வேண்டுமென்றும், அவைகளில் நடிக்கவேண்டுமென்றும் எனக்குப் பெரும்பிரீதி உண்டானதற்கு முக்கியமான காரணம், என்னுடைய பதினெட்டாம் வயதில், (1891), சென்னையில், பல்லாரியிலிருந்து காலஞ்சென்ற மா-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு என்பவர், “சரச வினோதினி சபா” என்னும் தனது நாடகக் கம்பெனியாருடன் வந்து, விக்டோரியா பப்ளிக் ஹாலில் அவ்வருஷம் நான்கைந்து நாடகங்கள் தெலுங்கு பாஷையில் நடத்தியதேயாம். இக்காரணம் நான் தமிழ் நாடகாசிரியன் ஆனதற்கு ஒரு முக்கியமான காரணமாயிருந்தபடியால் இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.
சரசவினோத சபையார் அச்சமயம் நாடகங்கள் நடத்தியது வரை, சென்னையில் எனக்குத் தெரிந்தவரையில் திராவிட பாஷைகளில், கல்வியறிவுடைய பெரிய மனிதர்கள் ஒருவரும் நடித்ததில்லை. கொத்தவால் சாவடி முதலிய இடங்களில் எப்பொழுதுதாவது தெருக்கூத்தாடிகள் ஆடுவது தவிர, வேடிக்கைக்கன்றி தங்கள் ஜீவனமாக நாடகம் நடத்தும் இரண்டொரு நாடகக் கம்பெனிகளே இருந்தன. மேற்சொன்ன சுப்பராயாச்சாரி கம்பெனி அதில் ஒன்று; கவர்மென்ட் உத்தியோகத்திலிருந்ததைவிட்டு, நாடகமாடுவதையே தன் ஜீவனோபாயமாகக் கொண்ட காலஞ்சென்ற கோவிந்தசாமி ராவினுடைய “மனமோஹன நாடகக் கம்பெனி” ஒன்று. இரண்டாவது கூறிய கம்பெனி பட்டணத்துக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருதரம் வந்து, இரண்டு மூன்று மாதங்களுக்கு செங்காங்கடையில் கட்டியிருந்த ஓட்டுக் கொட்டகையில் தமிழில் புராண சம்பந்தமான சில நாடகங்களை நடத்துவதுண்டு. ஆயினும் அதனால் வரும் ஊதியத்திற்கின்றி, வேடிக்கையாக நாடகம் திராவிட பாஷைகளில் அதுவரையில் ஒருவரும் நடத்தியதேயில்லை . ஆகவே அவ்வருஷம், பல்லாரியில் வக்கீல் வேலையிலிருந்த கிருஷ்ணமாச்சார்லு என்பவர், கற்றறிந்து தன்னைப் போலவே வினோதத்திற்காகவே நாடகம் ஆடப் பிரியம் கொண்டு ஆடும் இதர அங்கத்தினருடன், சென்னைக்கு வந்து தெலுங்கு பாஷையில் முதல் முதல் நடித்த பொழுது, சென்னையில் ஒரு சிறு குழப்பத்தை யுண்டாக்கியது. கற்றறிந்த வக்கீல்கள் உத்தியோகஸ்தர்கள் முதலியோர் நாடகம் நடத்துகிறார்களென்று கேள்விப்படவே, சென்னையிலிருந்த அந்தஸ்துள்ள பெரிய மனிதர்கள் மேற்சொன்ன பல்லாரி கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் நடத்திய நாடகங்களைக் காணச் சென்றனர். என்னுடைய தமயனார்களில் ஒருவராகிய ஐயாசாமி முதலியாரும் அம்மாதிரி தன் சினேகிதர்கள் சிலருடன் சென்றனர். அவர் ஒரு நாடகத்தைப் பார்த்து வந்து மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்து பேசினார். அதன்மீது நானும் அச்சபையார் நாடகங்களில் ஒன்றைப் பார்க்கவேண்டும் என்னும் இச்சை எனக்குப் பிறந்தது. அதுவரையில் தமிழ் தெலுங்கு நாடகங்களுக்கு நான் அறிந்த வரையில் போயிராத என் தகப்பனாரை, என்னை அழைத்துக் கொண்டு போகும்படி எப்படிக் கேட்பதென்று நான் கொஞ்சம் சங்கோசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, மறுநாள், என் தந்தையாருடைய நண்பர் ஒருவர் அந்த கிருஷ்ணமாச்சரியார் அவர்களையே எங்கள் வீட்டிற்கு என் தகப்பனாரிடம் அழைத்துக் கொண்டு வந்தார். அப்பொழுது நான் பார்த்த அவரது உருவம் இன்னும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அப்பொழுது அவர் வாலிபம் கடந்து முதிர் வயதுடையவராயிருந்தார்; இருந்தும் தலையில் பிள்ளைகள் அணியும் ஒரு சரிகைத் தொப்பியை அணிந்திருந்தார். கிருஷ்ண மாச்சாரியார் என் தகப்பனாரை அன்றிரவு தான் நடத்தப் போகும் “சிரகாரி” என்னும் நாடகத்திற்கு அழைத்தார். என் தகப்பனார் என்னையும் என் நேர் தமயன் ஆறுமுக முதலியாரையும் அழைத்து நீங்களும் வருகிறீர்களா? என வினவினார். நாங்கள் இருவரும் மிகுந்த குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டோம். அன்றிரவு விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அந் நாடகத்தைப் பார்க்க என் தகப்பனாருடன் என் சகோதரனும் நானும் சென்றோம். எங்களுக்கெல்லாம் ரிசர்வெட் டிக்கட்டுகள் இருந்தபடியால், நாடக ஆரம்பத்திற்கு சில நிமிஷங்களுக்கு முன்புதான் போனோம். நாங்கள் போன பொழுது விக்டோரியா ஹாலில் இடமில்லாதபடி ஏராளமாக ஜனங்கள் வந்திருந்தனர். எங்களுக்கு ரிசர்வெட் டிக்கட்டுகள் இல்லாவிட்டால் இடம் கிடைத்திருக்காதெனவே நம்புகிறேன். ஹாலில் நுழைந்தது முதல் நாடகம் முடியும் வரையில், சற்றேறக்குறைய 5 மணி நேரமான போதிலும், நாடக மேடையை விட்டு என் கண்களை எடுத்தவனன்று. அரங்கத்தின் முன்னாகக் கட்டப்பட்டிருந்த திரையானது மேலே சென்றது முதல், கடைசியில் நாடகம் முற்றிய பொழுது, அது மறுபடியும் விடப்பட்டதுவரையில் நான் கண்டகாட்சிகள் பெரும்பாலும் என் ஞாபகத்தில் இன்றும் மறையாதபடி இருக்கின்றன. நாடகமானது தெலுங்கு பாஷையில் நடத்தப்பட்ட போதிலும், அக்காலம் இப்பொழுது அப்பாஷையிலிருக்கும் கொஞ்சப் பயிற்சியும் இல்லாதவனாயினும், சற்றேறக் குறைய நடிக்கப்பட்டதையெல்லாம் கதையின் வரலாற்றைக் கொண்டு ஆவலுடன் கிரஹித்து வந்தேன். அதுவரையில் பகல் வேஷக்காரர்கள் முகங்களில் அரிதாரத்தை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு வருவதைக் கொண்டு நான் அருவருப்புற்றேன் என்று முன்பே கூறியிருக்கிறேன் அல்லவா? அன்று அப்படி அசங்கியமாக ஒன்றுமிராது, நாடகப் பாத்திரங்களெல்லாம் வெகு அழகாய் வேடம் புனைந் திருந்தனர். ஸ்திரீவேஷம் பூண்டவர்கள் நான் ஸ்திரீகளே என்று சந்தேகிக்கும்படி இருந்தது. சங்கீதத்தில் எனக்கு அச்சமயம் ஒருவிதப் பயிற்சியும் இல்லாதபோதிலும் அவர்கள் பாடிய பாடல்கள் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை விளைத்தது. நாடகப் பாத்திரங்கள் நடித்ததும் எனக்கு மிகவும் திருப்தியைத் தந்தது; நாடக ஆரம்பமுதல் கடைசிவரை, நாடக மேடையையன்றி நான் வேறொன்றையும் கவனித்தவன் அன்று; என் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தது என்றுகூடப் பார்த்தவனன்று ; நாடகம் முடிந்தவுடன், சற்றேறக்குறைய முன்பு கூறியபடி ஐந்து மணி நேரம் ஆனபோதிலும், முடிந்துவிட்டதே என்று வருத்தமுற்றேன். பிறகு தகப்பனாருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்குவதற்காக என் படுக்கையில் படுத்தும் ஏறக்குறைய விடியுமளவும் அன்று நான் உறங்கினவன் அன்று; நாடகமேடையில் கண்ட ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் அவர்கள் நடித்ததைப் பற்றியும் திருப்பித் திருப்பி என் மனத்தில் வியந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். அன்றிரவு எப்படியாவது நானும் நாடக சபையில் அவர்களைப் போல் நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு பெரும் அவா பிறந்தது. அன்றிரவே, பிறகு ஆந்திர நாடகப் பிதாமகன் எனும் பட்டப்பெயர் பெற்ற, இந்த கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எப்படி தெலுங்கில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நடித்தாரோ, அம்மாதிரியாகவே தமிழில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நான் அதில் நடிக்கவேண்டுமென்று உறுதியான தீர்மானம் செய்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை சற்றேறக்குறைய நாற்பது வருடங்கள் கழிந்தன. இந்த நாற்பது வருடங்களில், அன்று செய்த தீர்மானத்தை நிறைவேற்றி என்னை ஒரு தமிழ் நாடக ஆசிரியனாக்கியது, எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் கிருபையும் என் பெற்றோர்கள் அனுக்கிரஹமுமென்றே உறுதியாய் நம்புகிறேன். இத்துடன் இக்கதையை முடித்து, பிறகு நான் சுகுணவிலாச சபையை ஸ்தாபித்ததும், என்னுடைய முதல் நாடகத்தை எழுதினதும் இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு இனி தெரிவிக்கிறேன்.