உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கு நண்பர்கள்/சுண்டெலிக் கல்யாணம்

விக்கிமூலம் இலிருந்து
சுண்டெலிக் கல்யாணம்

ஒரு முனிவர் கங்கை நதிக்குப் போனார். நன்ரறாகக் குளித்துவிட்டுக் கரைக்கு வந்தார்.

அப்போது ‘தொப்’பென்று ஒரு சுண்டெலி மேலே இருந்து விழுந்தது. அது ஒரு பெண் சுண்டெலி. உடனே, முனிவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். ஒரு பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதுதான் சுண்டெலியைத் தவறிக் கீழே போட்டுவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டார். சுண்டெலி துடிதுடித்துக் கொண்டிருந்தது. முனிவருக்கு இரக்கம் உண்டாகி விட்டது. அவர் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னார். உடனே அந்தச் சுண்டெலி ஒரு சிறு பெண்ணாக மாறி விட்டது. முனிவர் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஆசிரமத்திற்குப் போனார். அன்பாக வளர்த்து வந்தார்.

சில காலம் சென்றது. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யவேண்டிய வயது வந்தது. அவளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று முனிவர் யோசித்தார். சூரியனுக்குத்தான் கொடுக்கவேண்டும். அவன்தான் நல்ல பலசாலி என்று தீர்மானித்தார். 

உடனே சூரியனை வரவழைத்தார். சூரியன் வந்ததும், “ஏனம்மா, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

“இவரா? ஐயையோ வேண்டவே வேண்டாம். இவர் ஒரே சூடாக இருக்கிறார் என்னால் இந்தச் சூட்டைத் தாங்கவே முடியாது. இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்றாள்.

“அப்படியானல், மேகத்தைக் கல்யாணம் பண்ணிக்கொள். மேகம்தான் என்னைவிட பலசாலி. அது அடிக்கடி என்னையே மறைத்துவிடுகிறது” என்றது சூரியன்.

உடனே முனிவர் மேகத்தை வரவழைத்தார். மேகத்தைப் பார்த்ததும், “ஐயோ, இவர் ஒரே கறுப்பு. அடுப்புக் கரி மாதிரி இருக்கிறார். எனக்கு வேண்டாம். இவரைவிட பலசாலிதான் வேணும்” என்றாள்.

“காற்றுத்தான் என்னைவிட பலசாலி. அது என்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் ” என்றது மேகம்.

முனிவர் காற்றை வரவழைத்தார். 

காற்றைப் பார்த்ததும், “இவரோடு எப்படி நான் வாழ முடியும்? இவர் ஓர் இடத்திலே தங்கமாட்டார். எப்போதும் ஒடிக்கொண்டே இருப்பார். இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்றாள்.

“என்னைக் காட்டிலும் பலசாலி மலை தான். என்னல், மலையை அசைக்கக் கூட முடியவில்லையே!” என்றது காற்று.

பிறகு முனிவர் மலையை வரவழைத்தார்.

மலையைப் பார்த்ததும், “இவர் ஒரே கரடு முரடாக இருக்கிறார். இருந்த இடத்தைவிட்டு இப்படி அப்படி  அசையமாட்டார். எனக்கு இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் வேறு பலசாலி கிடையாதா?’ என்று கேட்டாள்.

“ஏன் இல்லை? சுண்டெலி இருக்கிறதே! அது என்னைவிடப் பெரிய பலசாலி. என் வயிற்றையே அது குடைந்துவிடுகிறதே!” என்றது மலை. உடனே முனிவர் சுண்டெலியை வரவழைத்தார். சுண்டெலியைப் பார்த்ததும், “ஆ இவர்தான் எனக்குப் பிடித்தமான மாப்பிள்ளை. ஆகா, என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன சுறுசுறுப்பு!” என்றாள்.

இதைக் கேட்டதும் முனிவர் மகிழ்ச்சி அடைந்தார்.உடனே ஒரு மந்திரத்தைச் சொன்னார். சொல்லி முடித்ததும் அந்தப் பெண் பழையபடி சுண்டெலியாக மாறிவிட்டாள்.

சுண்டெலிப் பெண்ணுக்கும் சுண்டெலி மாப்பிள்ளைக்கும் முனிவர் கல்யாணம் பண்ணிவைத்தார். கல்யாணம் வெகு வெகு சிறப்பாக நடந்தது.




வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு விஷ்ணு சர்மர் என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் மூன்று கதைகள் இப் புத்தகத்திலே இருக்கின்றன.

பதிப்பாளர்:

எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை

பப்ளிஷர் - திருநெல்வேலி.