நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. கே. ஆர். ராமசாமி

விக்கிமூலம் இலிருந்து

திரு. கே. ஆர். ராமசாமி

இவர் பால்யத்திலேயே பாலநாடக கம்பெனிகளில் சேர்ந்து பன்முறை நல்ல பெயர் பெற்றவர். அச்சமயங்களில் இவர் பெண் வேடம் தரித்ததாக அறிகிறேன். பிறகு பெரியவரான பிறகு தானாக ஒரு நாடகக் கம்பெனியை ஏற்படுத்தி அதில் பெரும்பாலும் முக்கிய ஆண் வேடங்களை நடித்துள்ளார். இவர் தமிழ்நாடு முழுவதும் நாடகக் கம்பெனியுடன் சுற்றி யிருக்கிறார். ஒருமுறை சென்னையில் வந்தபோது வால்டாக்ஸ் தியேட்டரில் ஏறக்குறைய மூன்று மாதம்வரை எனது மனோகரா நாடகத்தையும் ரத்னாவளி நாடகத்தையும் கோர்வையாக நடத்தியிருக்கிறார். இம்மாதிரியாக வேறெந்த நாடகக் கம்பெனியும் இடைவிடாது மாதக் கணக்காக நடத்தியதில்லை. அச்சமயங்களில் நான் இவர் நடித்ததை நேரில் பார்த்து புகழ்ந்திருக்கிறேன். முக்கியமாக இவர் மனேஹரன் பாத்திரத்தில் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதை தினம் தினம் நடிப்பதென்றால் மிகவும் கடினமான வேலையாம். நான் இந்த மனோகரன் பாத்திரத்தை அநேகர் நடித்ததைப் பார்த்திருக்கிறேன், அவர்களுள் இவர் நடித்ததும் எனது மற்றொரு நண்பர் திரு. T. K. ஷண்முகம் அவர்கள் நடித்ததும் தான் எனக்கு மிகுந்த திருப்திகரமாயிருந்தது. அதற்கொரு முக்கியமான காரணம் அவர்கள் அவ்வேடம் தரித்தபோது பதினெட்டு வயதுடைய பால்யனாகத் தோன்றியதாம். மற்றொரு காரணம் இவர்கள் இருவரும் நான் எழுதியதில் ஒன்றையும் மாற்றாமல் அப்படியே நடித்ததாகும்.

இவர் நமது நாட்டைவிட்டு சிங்கப்பூர், மலேயா முதலிய இடங்களுக்குப்போய் அங்கு தமிழ் நாடகங்களின் பெருமையையும் அருமையையும் பரவச் செய்துள்ளார். ஒருமுறை அவ்வூர்களில் ஒன்றில் சாயங்கால நாடகமாக மனோகராவை ஐந்து மணிமுதல் 8-மணி வரையில் ஆடி முடித்தபோது அதைப் பார்க்க அண்டை அயலிலுள்ள ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருக்கின்றனர் என்று அறிந்து அவர்களைத் திருப்தி செய்வதற்காக அன்றிரவே 9-மணிக்குமேல் 12-மணிவரையில் நாடகத்தை நடத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், இவர் சென்னை சட்டசபையில் ஓர் அங்கத்தினராக சில வருடங்கள் இருந்தார் என்பது போற்றத்தக்கது. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நமது நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஈசன் கருணை யால் சேவை செய்வாராக.