நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சாரங்கபாணி
இவரும் மேற்சொன்ன P. D, சம்பந்தத்தை போல் ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயதில் ஆடியவர். முதன் முதலில் அக்கம்பெனியில் காட்சிக்கும் காட்சிக்கும் இடைநேரம் ஏதாவது வந்தால் அச்சமயங்களில் 'மீன் பாட்டு' 'கத்திரிக்காய் கூடை கொண்டாடி' முதலிய பாட்டுகளை இவர் பாடி வந்தது நன்றாய் ஞாபகமிருக்கிறது. இவரிடத்திலிருந்த முக்கிய குணம் என்னவென்றால் தனக்கு ஹாஸ்ய பாகங்கள் தான் பொறுத்தமானவை மற்ற பெரிய பாகங்களை எடுத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தது. ஆதிமுதல் இதுவரையில் ஹாஸ்ய பாகங்களையே மேற்கொண்டு நடித்து வருவதாம். எனது 'சபாபதி முதல் பாகத்தில் தமிழ் வாத்தியாராக இவர் பன்முறை நடித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இவர் நடுவயத்திற்கு மேலாகியும் இன்னும் சினிமாவில் நடித்து வருகிறார். இவரிடம் நான் மெச்ச வேண்டிய குணம் என்ன வென்றால், பணம் சம்பாதித்த பல நடிகர்களைப் போல் பணத்தை விரயம் செய்து தேக நலத்தையும் கெடுத்துக் கொண்டு ஏழைகள் ஆனதைப் போலல்லாமல் தன் உடம்பையும் சம்பாதித்த பணத்தையும் வைத்தும் கொண்டு ஜாக்கிரதையாய் வாழ்ந்து வருவதேயாம். இவர் இன்னும் பல்லாண்டு மேடை நாடகங்களிலும் பேசும் படங்களிலும் நடித்து தமிழ் நாடக அன்னைக்கு தொண்டு செய்து வருவாராக.
இது வரையில் நான் எழுதியதை அச்சிட அனுப்பிய போது இதை படித்த சில நண்பர்கள் "இதென்ன சம்பந்தம் — உங்கள் சுகுண விலாச சபையின் மிகச் சிறந்த நடிகர்களான அ. கிருஷ்ணசாமி ஐயர், C. ரங்க வடிவேலு, S. பத்மநாபராவ் முதலிய மிகச்சிறந்த நடிகர்களைப் பற்றி என் ஒன்றும் எழுதாது விட்டீர்" என்று என்னை கேட்டனர். அதே கேள்வி இதைப் படிக்கும் பல நாடக அபிமானிகளுக்கும் மனதில் பட்டிருக்கலாம். இக்கேள்விக்கு நான் தக்க பதில் சொல்ல வேண்டியவனாய் கடமைப் பட்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அம் மூவர்களைப் பற்றியும் இன்னும் சுகுண விலாச சபையில் என்னுடன் நடித்த சில நண்பர்களைப்பற்றியும் மதுரை டிரமாடிக் சங்கத்தில் என்னுடன் நடித்த சில நடிகர்களைப் பற்றியும் எழுதாதற்குக் காரணம் அவர்களையெல்லாம் பற்றி விவரமாய் "நாடக மேடை நினைவுகள்" என்னும் என் நூலில் எழுதியிருக்கிறேன். ஆகவே அதையெல்லாம் பெயர்த்து இந் நூலில் எழுதுவது அநாவசியம் என்று எழுதவில்லை, அவர்களையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்கள் யாராவது அறிய வேண்டுமென்றால் அந்நூலில் நான் எழுதி யுள்ளதை படித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
இச்சிறு நூலை இத்துடன் முடிக்கின்றேன், ஈசன் கருணையால் தமிழ் நாடகம் வாழ்க. தமிழ் நடிகர்கள் வாழ்க.