உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/11. பழவினை

விக்கிமூலம் இலிருந்து

11. ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்
(பழ வினை)

அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் அவரை விட்டுப் போவது இல்லை “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி. உன் பழைய வினைகள் உன்னைத் தேடி வந்து அடையும்; தப்பித்துக் கொள்ள முடியாது. பசுவின் கூட்டத்தில் நல்ல ஓட்டமுடைய கன்றுக் குட்டியை விட்டால் அதன் நாட்டம் அதன் தாய்ப் பசுவை நாடித்தான் செல்லும்; அந்தக் கூட்டத்தில் தன் தாய் யார் என்று கண்டு கொள்ளும்; அதே போலத்தான் நீ தோற்றுவித்த பழவினை நீ எங்குச் சென்றாலும் விடாது. சோழ நாட்டை விட்டு மதுரை சென்றாலும் அது பின் தொடராமல் இல்லை; கண்ணகியைப் போலவே தொடர்ந்து சென்ற ஊழ்வினை கோவலன் வாழ்வினைப் பாழ்படுத்தியது. அவன் சாவுக்குக் காரணம் பழவினை என்றுதான் இளம் அடிகள் அளந்து கூறுகின்றார். காவியம் உணர்த்தும் உண்மைகளில் இஃது ஒன்று.

அறம் என்பது யாது? பிறர்க்கு உதவுவதே நல்லறம் ஆகும்; அம்மனப்பாங்கு ஏற்பட வாழ்வின் நிலையாமையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.

“என்றும் செல்வம் நிலைக்கும்; இளமை கொழிக்கும்; அதிகாரம் நிலைக்கும்; அழகு சுவர்க்கும்; என்று நினைக்க முடியாது; அவை தேய்ந்து போகுபவை.

கூரையைப் பிய்த்துத் தெய்வம் கொட்டுகிறது என்றால் குடைபிடித்துத் தடுக்கமாட்டார்கள். பை பிடித்து நிரப்புவார். செல்வம் வந்தால் வேண்டாம் என்று ‘டாம்’ போட்டுப் பேசார்; ‘ஆம்’ வேண்டும் என்றுதான் கூறுவர்; எங்கே வந்து கொட்டுகிறது? லாட்டரிச் சீட்டுகள் வீட்டுக்குப்பை ஆகின்றன. அவற்றைப் பெருக்கும் கூட்டாளி அவன் மனைவி, இவனை ஒரு ஏமாளி என்று வருணிக்கிறாள்; ‘உங்களுக்கு எல்லாம் வராது’ என்று அடித்துப் பேசுவாள்; படித்துச் சொல்வாள். ‘நாய்க்கு வால் அளந்துதான் வைக்கப்படுகிறது; யார் யாருக்கு இவ்வளவு என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்பாள்; விளங்கனியைத் திரட்டியதும் இல்லை; உருட்டியதும் இல்லை; களங்கனிக்கு நிறம் கருப்பு, இஃது யார் படைத்த படைப்பு? வரப்போகும் வெள்ளத்தைத் தடுப்பது அரிது; அணைகட்டினாலும் அதுவும் தடுத்து நிறுத்தி விடாது; தரப்போகும் செல்வத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. துன்பமும் இன்பமும் யாருக்கு? எப்படி? எப்பொழுது வரும்? என்று முன்கூட்டி உரைக்க முடியாது; வந்தாலும் அவற்றை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பருவ மழை தவறிவிட்டால் அதைக் கண்டித்துக் கூட்டமா போட முடியும்? மழை மிக்குப் பெய்து உலகைத் தழைக்கச் செய்தால் அதற்கு நன்றி கூறலாமே அன்றித் தொடர்ந்து பெய்விக்க ஆணையா இடமுடியும்? மழை பொழிவதும் பொழியாமல் ஒழிவதும் இயற்கை நியதி; மானிட வாழ்வு அத்தகையதே.

‘ஒகோ’ என்று உயர வளர்ந்தான்; ‘ஆகா’ அவன் எப்படி வாழ்கிறான்!” என்று உலகம் வியந்தது. நாலு தலைமுறைக்கு என்று அவன் செல்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதபடி நீள் செல்வம் பெற்றவன். அவன் அதை நன்கு வைத்து வாழ்ந்தானா? முரண்படும் மனைவியைப் போல அஃது அவனைவிட்டு விலகிவிடுகிறது. செல்வமும் உரிமையுடன் நடந்து கொள்கிறது. சற்று ஏறுமாறானால் கூறாமல் சந்நியாசம் கொள்கிறது. காரணம் என்ன? அவன் பூர்வ ஜென்மத் தீவினைகள்; விவாகரத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

நாய் வண்டியில் நாய்களைப் பிடித்துச் செல்லும் ‘நாயகனைப்’ பார்த்து, ‘ஏன்’யா? ‘வெறி பிடித்த நாயை விட்டுவிட்டுக் கறிபிடித்துக் கொழுத்த நாயைக் கட்டி இழுத்துச் செல்கிறாய்?’ என்று கேட்டால் அவன் என்ன சொல்கிறான்?

“இந்த வெறிபிடித்த நாயைப் பிடித்துச் சென்றால் இதை மீட்க யாரும் வரமாட்டார்கள். வெறும் சக்கை; இதற்கு மதிப்புக் கிடையாது. நல்ல கொழுத்த நாய் செல்வர்களுடையது. அதனால் எங்களுக்கு நன்மை உண்டாகும். அவர்கள் எங்களை மதிப்பார்கள்; எமக்குக் காசு கொடுப்பார்கள்” என்கிறான்.

“ஏன்யா” நல்லவர்களை மட்டும் விரைவில் நீ வந்து அழைத்துச் செல்கிறாய்? தீயவர்களை விட்டுச் செல்கிறாய்” என்று எமனைக் கேட்டால் எமன் என்ன சொல்கிறான்? “தீயவர்கள் வெறும் சக்கை; அவர்கள் இந்த உலகத்துக்கே நன்மை இல்லை என்றால் அவர்களை இழுத்துச் சென்று நான் என்ன செய்வது?” என்று பதில் கூறுகிறான்; உயிர் பறிப்பவன். நல்லவர்கள் தாழ்வதும் அல்லவர்கள் உயர்வதும் நியாயம் என்று கூற முடியாது. என்றாலும் உலக நியதி அப்படி அமைந்துவிட்டது. அதைத்தான் ‘விதி’ என்று கூறுகிறோம்.

இந்தப் பரதேசிப் பயல்கள் இவர்கள் அணி அணியாக வீடுகள் நோக்கித் தம் கேடுகளைச் சொல்லிக் கையேந்தி நிற்கிறார்களே இப்படி இவர்கள் வறுமை உறுவதற்குக் காரணம் என்ன? இளமையில் தக்க கல்வி கல்லாமை; தொழில் செய்யத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளாமை; வருவாய் வந்தபோது வகையாகப் பிடித்து வைக்காமை; என்று பதில் கூறப்படுகிறது. ஏன் இத்தவறுகள் இவர்கள் செய்ய வேண்டும். விதி அவர்களுக்கு வழி காட்டவில்லை; அவர் மதி கெட்டுவிட்டது.

கல்வி கற்றவன்; ஒழுக்கம் மிக்கவன்; பண்பு உடையவன்; அறிவாளி; இவனும் மிகப் பெரிய தவறு செய்கிறான் என்றால் அதை நம்மால் நம்பவே முடிவதில்லை. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது பழமொழி. எப்பேர்பட்டவனும் தப்பேதும் செய்யாதிருக்க முடியாது. இதற்கு எல்லாம் காரணம் வினையின் ஆற்றல். “அவன் புத்தி தடுமாற வேண்டும் என்று இருக்கிறது” என்றுதான் கூறவேண்டும். சபலத்துக்கு இரையாகி விட்டான். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. நடுநிலைமை கெட்டுவிட்டான்; அவன் நன்மதியால் பொருள் கை நீட்டி வாங்குவதில்லை என்று உறுதியோடு வாழ்ந்தவன்தான்; மாசுமரு அற்ற வாழ்க்கை; அன்று அவன் கெட்ட காலம். ‘யார் அறியப் போகிறார்கள்? கொடுத்தவன் சொல்லப் போவது இல்லை; வருவது வேண்டாம் என்று எப்படித் தள்ளுவது?” என்ற சிறு சபலம்; அடுத்த வினாடி, அவனுக்குக் கைவிலங்கு. தொண்ணூற்று ஒன்பது நாள் அவன் பத்தினி, உலகம் மன்னிக்காது எல்லாம் விதியின் செயல்; மற்றொருவன் யார் ஜோலிக்கும் போகான்; தான் உண்டு; தன் வீடு உண்டு என்று வாழ்ந்து வரும் மண்டு; நன்மையையும் தேடுவது இல்லை; தீமையையும் நாடுவது இல்லை. அவன் வீட்டில் அன்று திருடன் புகுந்து அவனை அடித்துப் போட்டு விட்டு உள்ளதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான். இது செய்தி, அவன் யாருக்கும் ஒரு தீங்கும் செய்தது இல்லை; அப்பாவிதான்; எந்தப் பாவியோ அவனை அடித்துப் போட்டான். காரணம் விதி; அதனால் ஏற்பட்டது இந்தக் கதி.

முருகா! உனக்கு வந்த செல்வம் சிறுகாது; பெருமை அருகாது; முறைகெட்டுத் தாரார். வருவது வந்து தீரும்; போவது போய்த்தான் தீரும். இன்னாருக்கு இன்னது என்று முன்னாளே அவன் எழுதிவிட்டான்; அவன் எழுதியதை யாரும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம் அன்று தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்கு; எனவே அந்த எழுத்து நன்கு அமைய வேண்டுமானால் உன் காரியங்களும் நன்மையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் மூல ஆசிரியன் முதல் மதிப்பெண் தருவான்; சரியாகப் படிக்காவிட்டால், தேர்வு எழுதாவிட்டால் வட்டம்தான்; அதனால் வாட்டம்தான்.