நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/21. சுற்றம் தாழஅல்
சுமைதாங்கி என்ற நிலையில் மகனை வயிற்றில் தாங்கி அவள் பெற்றவை நோய்கள், மசக்கைகள் இவை எல்லாம் மகனைப் பெறும் நாள் மறுக்கிறாள். அவை இன்ப நினைவுகளாய் நிற்கின்றன. பட்ட சுமை எல்லாம் ஒரு கணத்தில் மறக்கிறாள் மகனைப் பெற்ற மகிழ்ச்சியில். அதேபோலத் தாளாற்றிப் பொருள் தேடுகிறான்; பின்பு காலாற்றிச் சுற்றத்தோடு சூழ இருந்து உண்கிறான். அவர்களோடு பகிர்ந்து உண்டு, அளவளாவுகின்றான். அவர்கள் பசியைப் போக்கிய பெருமிதம் அவனை ஆட்கொள்கிறது. காதலியின் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவர் இளைஞர்கள்; பிறர் வருத்தம் தீர்கிறது என்றால் விண்ணையும் வளைத்து மண்ணையும் அளந்து அல்லும் பகலும் பாடுபட யாரும் முனைவர். சுற்றத்தினரைத் தழுவிக் கொண்டு அவர்கள் துயர் தீர்ப்பதே செல்வம் பெற்றதனால் ஏற்படும் பயன் ஆகும். நல்ல ஆண் மகனுக்குக் கடமைகள் சில உள்ளன. ஆளுமை உடையவன் என்று நாளும் அவனைப் பாராட்டுவர். கோடையிலே இளைப்பாறும் குளிர் மரநிழல் என்று சொல்லும்படிப் பிறர் வாடையிலே அவர்க்கு ஆறுதல் தருபவனே சிறந்த தலைமகன் ஆவான். அது மட்டுமன்று; பழுத்தமரம் உள்ளுரில் பொது இடத்தில் இருக்கிறது. அது பலர் பசியைத் தீர்க்கிறது; சுவையை அளிக்கிறது. பலரும் பயன் பெறுகின்றனர். சுற்றத்தினர் வந்து நற்பயன்கள் பெற அவன் கற்றுண்போல் அவர்கள் சார நிற்கின்றான்; சுற்றம் போற்றுதல் நற்செல்வம் உடையவரின் கடமையும் ஆகும். அஃது அவர்கள் தாளாண்மையை அறிவிக்கும்.
செடிக்குக் காய் சுமை அன்று; காய்கள் அடுக்கடுக்காகக் காய்த்தாலும் மரம் அவற்றைத் தாங்குவதற்குத் தயங்குவது இல்லை; பழுத்துக் காய்த்துப் பயன்தரும் மரங்களே மதிப்புப் பெறுகின்றன. வெடிக்கும் துயரத்தோடு இவன் படிகட்டு ஏறி மாறி மாறி வந்து இருந்து விருந்துண்டு செல்லும் சுற்றம்கண்டு உழைப் பாளி துவண்டு போகமாட்டான். வருவிருந்து வைகலும் ஓம்புவதில் அவன் மனம் மாழ்குவது இல்லை. சுமை அவனுக்குச் சுவை, மிகை அவனுக்கு உவகை; அவர்கள் வருகை உள்ளத்துக்குத் தரும் மகிழ்மை;
சிரித்துப் பேசிச் சிருங்காரம் விளைவிக்கும் சிற்றினத்தவர் உறவு கனத்துக் காணப்பட்டாலும் அவை நாட்கள் நீடிப்பது இல்லை; வெறுத்து ஒதுங்கிவிடுவர்; மிகுத்துப் பழகி நம் துயர் வருத்த அவற்றைத் தீர்க்கும் தகையாளர் நம் சுற்றத்தினர். அவர் மிகையாளர் எனினும் நம் துயர் தீர்க்கும் மருந்தாளர் ஆவர். நண்பர்கள் நீடித்து இருக்க விரும்புவர்; சுற்றத்தவர் துயர் தீர்க்க எப்பொழுதும் ஒட்டி உறவாடுவர். நண்பர் உறவினர் நமக்குத் தேவையே எனினும் உறவுக்கு உள்ள உறுதி நட்புக்கு இருக்க வாய்ப்பு இல்லை.
நம்மை அண்டவரும் மண்டை ஓடுகள் அவர்கள் யாராக இருந்தால் என்ன? அவர்கள் தம் தலையெழுத்தை எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறி விலை மதிப்பு இல்லா உறவு பாராட்டினால் அவர்கள் மகிழ்வர்: ‘நீ யார்?’ எப்படி உனக்கு உறவு? உனக்கு நன்மை செய்தால் எனக்கு என்ன மேன்மை?" என்று கேள்வி கேட்டு அவர்களைப் புறக்கணித்தால் அவர் வருந்துவர். விருந்தாகிய வேள்வி செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள் ஆவர். தராதரம் பாராமல் பராவரும் பண்பினர் யாவராயினும் அவர்களைச் சுற்றமாகக் கொள்பவரே ஏற்றம்மிகு மேன்மக்கள் ஆவர்.
பொன் தட்டில் புலி நகம் போன்ற புழுங்கல் சோறு, கறிகாய், வடை வகை இவற்றை அயலான் அழைக்க அருவிருந்து என அவற்றை வாரிக் கொட்டிக் கொள்வதைவிட நம் வீட்டில் இருந்து கொண்டு நம் உழைப்பில் ஈட்டிய பொருளைக் கொண்டு உப்பு இல்லாத வெறுஞ்சோறு ஆயினும் நம் சுற்றத்தவரோடு அமர்ந்து உண்பதே எக்காலத்தும் இனியது ஆகும். அதற்கு இணையான இன்பம் எதுவுமே இவ்வுலகில் இல்லை.
அவசரம், ஆவேசம், பசி, இவற்றோடு சுவைமிக்க உணவு, நடுப்பகலுக்கு முன்பே சுடச்சுடப் படைத்து உண்ண அழைக்கின்றார்; ஆனால் அவர்கள் முன்பின் பழகாத அறியாத புதியவர்கள்; அயலார்; “அய்யா! கொஞ்சம் பொறு! நேரம் ஆனாலும் ஆகட்டும்; சாயுங்காலம் வரை காத்திருக்க வேண்டுமா? பொறுத்திரு. அது ஆறிய கஞ்சியாக இருக்கலாம்; அஃது அமுதினும் இனியது ஆகும். அயலார் இடுவது கருணைக் கிழங்கு பொறியல் ஆயினும் அது வேப்பங்காய்தான். சுவை என்பது பொருளை ஒட்டியது மட்டும் அன்று. அது தருவாரது மன அருளையும் ஒட்டியும் ஆகும்.
கொல்லன் உலைக்களத்தைப் பார்; அதில் சுட்டுக் காய்ச்சப்படும் இரும்பும் அதைப் பிடிக்கும் சூட்டுக் கோலும் இணைபிரிவது இல்லை; காய் எரி புகுந்து கனத்த சூட்டில் இரண்டும் பதன்படுகின்றன. சூட்டைக் கண்டு ஒன்றை விட்டு ஒன்று விலக முற்படுவதில்லை; ஆனால் அதைப்பிடிக்கும் குறடும் அடிக்கும் சம்மட்டியும் பிரிந்து விடுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் வளம் சுருங்கிய காலத்தில் ஒட்டி உறவாடுவர்; பதுங்கும் பண்பினை உடைய நண்பினர் சமயம் வரும்போது நெகிழ்ந்து தப்பித்துச் சென்றுவிடுவர். பழகுகிறவர் எல்லாம் பண்பினர் என்று கொள்ளுவதற்கு இல்லை; இளகுகிறவர் நம்மோடு இணையும் சுற்றத்தினரே ஆவர்.
இறுதிவரை நம்மோடு இணைந்து உறுதியாக உதவுவார் என்று நம்பி ஒருசிலரை நயக்கின்றாய்; மறுமைக்கும் அவர்கள் பெருமை தேடித் தருவர் என்று கருதுகிறாய். வாழும்போது நம் இன்பத்தில் பங்கு கொள்கின்றனர். ஆனால் துன்பத்தில் நெகிழ்ந்து விடுகின்றனர். மண் குதிரை; இவர்களை நம்பி வேகமாகச் செல்லும் வெள்ளத்தில் பயணம் செய்ய இயலாது. பங்குச் சந்தை சரிந்துவிட்டால் அங்குப் போடும் பணம் அரோகராதான். தங்கும் இன்பம் நிலைக்கத்தக்க சுற்றத்தினரை நயக்க; அவர்கள் பயன்படுவர்.
இருந்து முகம் திருத்தி ஈர்க்குக் கொண்டு பேன் வாங்கி விருந்து வந்திருக்கிறது என்று சொன்ன அளவில் அவள் பேயாடுகிறாள்; அத்தகைய வீட்டில் ஏதோ புத்தி தடுமாறி அழைப்புத் தந்து கொழுக்கட்டை போட்டுக் காய்கறிப் பொறியல் வைத்து “அடிகளே அமுதம் உண்க” என்று படி இறங்கி அழைத்தால் நீ உள்ளே நுழைந்தால் நெய் கமழ்க்கும். தின்றால் அந்த உணவும் கசக்கும்; வேம்பாக சுவைக்கும். ‘வந்தால் போதும்’ என்று வருகைக்கு மகிழ்ந்து ஆதனம் தந்து அமர வைத்து ஊறுகாயும் இல்லாத பழஞ்சோறு உண்ணத் தந்தால் அஃது அமிழ்தம் ஆகும். தேவரும் இந்த உணவைத் தேடி மண் உலகில் அடி எடுத்து வருவர். அன்பு என்பையும் குளிரச் செய்துவிடுகிறது.