நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/26. அறிவின்மை

விக்கிமூலம் இலிருந்து

26. படித்துக்கொண்டே இரு
(அறிவின்மை)

நுட்பமான அறிவு இல்லை என்றால் அவர் வறியவருக்கு நிகராவார்; ஒட்பமான அறிவு உடையவர் பெருஞ் செல்வருக்கு நிகராவர்; பேடிகள் பெண்மை அவாவுகின்றனர். பெண்களைப் போல் தம்மை அலங்கரித்துக் கொள்பவர். பயன்? அவர் பெண் ஆக முடியாது. அத போல ‘கலகல’ என்று தன்னை மிகைப்படுத்திக் கொள்பவர் கல்லாதவர், ‘பொல பொல’ என அறிவுடையவராகத் திகழ்வது அவர்களால் இயலாது.

இதனை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக உள்ளது; நூல் பல கற்றவர்; அவர் வீட்டு அடுப்பில் பூனை தூங்குகிறது. கேட்டால் “இனிமேல்தான் கடைக்குப் போக வேண்டும்” என்று கதைக்கிறாள் அந்தக் கற்றவர் மனைவி; “என்னய்யா நீ பல நூல் கற்று எல்லாம் தெரிந்தவராக இருக்கிறாய்; பஞ்சப் பாட்டுப் பாடுகிறாயே” என்று கேட்டால் அவர் தன் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் சரசுவதியின் படத்தைக் காட்டுகிறார். “இரண்டு படத்துக்கு இங்கு இடமில்லை” என்கிறார். “திருவேறு தெள்ளியராதல் வேறு, இந்த உலகத்தின் இயற்கை இது” என்று கூறுகிறார். “கலைமகள் இங்கு இருப்பு; மலர்மகள் உள்ளே வர மறுக்கிறாள்” என்று நகைத்துக் கொண்டே விடை தருகின்றார். கல்வியே பெருமை தருவது என்பது உணர்த்தப்படுகிறது. “பள்ளிக்குச் செல்லு” என்று படித்துப் படித்துக் கூறினார் பையனின் தந்தை; துள்ளிக் குதிக்கும் பருவம்; எள்ளி நகையாடினான் அன்று. அடித்தும் பார்த்தார். படியாத மாடாகிவிட்டான். ‘கல்’ என்று சொன்னால் அவன் அது 'தக்க சொல்' என்று எடுத்துக் கொள்ள வில்லை. இன்று அவன் நிலைமை என்ன? பலபேர் கூடியிருக்கும் அவையில் நீட்டோலை வாசிக்க முடியாத நெடுமரமாக நிற்கிறான். ‘ஏடு அறியேன் எழுத்து அறியேன்’ என்று நாடோடிப் பாடல் பாடுகிறான். அவன் அங்கே நிற்க முடியாமல் நாணி அந்த இடத்தை விட்டு ஓடோடி வந்து சேர்கிறான். கல்லாதவன் நிலை இதற்கு மேல் எப்படிச் சொல்ல முடியும். அன்று அடித்துத் திருத்தியபோது படித்துத் தொலைக்காதவன் இன்றுபடும் வேதனை இது.

இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈயிற்கு என்ன வேலை? அந்தச் சூடு அது தாங்காது. கற்றவர் அவையில் கல்லாதவன் செல்வது அவனுக்கு எந்தப் பயனும் விளையாது. அவன் வாயைத் திறந்தால் நாய் குரைக்கிறது என்பர். அவன் எதுவும் உரையாமல் இருந்தாலும் நாய் கிடக்கிறது என்பர். கத்தினாலும் தப்பு; சத்தமில்லாமல் சுத்தமாக இருந்தாலும் அஃது ஏற்கப்படுவது இல்லை.

படித்தவன்தான்; பட்டம் பெற்றவன்தான். ஆனால் முழுவதும் கல்லாதவன்; அவன் வாயைத் திறக்கிறான். சும்மா இருந்தால் சுகம்; தன் கல்வித் திறனைக் காட்ட உளறுகிறான். ஆழப்படிப்பு இல்லை; புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. அவர்கள் கற்றவர்கள் என்று கருத முடியாது. மேலும் கற்பதே கல்வி என்று கருதப்படும். தொடர்ந்து நூல்களைக் கல்லாமை அறிவு விளக்கத்திற்குத் தடையாகும்.

அவனைப் பார்த்தால் படித்தவன்போல் தெரியவில்லையே என்று ஒருசிலர் பேச ஆரம்பிக்கின்றனர். ஏன் அவையின்கண் அடங்கி இருக்கத் தெரியவில்லை. அவசரப்படுகிறான்; அடித்துப் பேசுகிறான்; அவன் படித்தும் பேதை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசன்டன் என்பார். பனை ஒலை சலசலக்கிறது; அதில் பசுமை இல்லை; பச்சையோலை சல சலப்பு செய்வது இல்லை; அது ஈரம் தாங்கி நிற்கிறது; கற்ற அறிவாளிகள் அடக்கம் காட்டுவர்; அருமையாக ஒருசில பேசினாலும் அவை பெருமை காட்டக் கூடியவை; ஆய்வுக் கருத்துகள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்; அதை உலகம் வியந்து வரவேற்கிறது. நுட்பமாகப் பேசுபவர் மிகுதியாகப் பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள். கத்திப் பேசினால் கற்றவன் என்று மதித்துவிடமாட்டார்கள்.

பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டில் அதில் மாம்பழச்சாறு ஊற்றினால் அந்தப் பன்றிக்கு அதன் அருமை தெரியப்போவது இல்லை. பாறைக் கல்லிலே முளைக்குச்சி அடித்தால் அது பிளவுபடப் போவது இல்லை; செவிடன் காதில் சங்கு ஊதினால் அது மற்றவர்களைத்தான் செவிடாக்கும். அரிய கருத்துகளை அறிந்து பயன்படுத்திக் கொள்வார் முன்பே அவற்றைக் கூற வேண்டும்; பல்லில்லாத கிழவிக்குக் கல்முறுக்குத் தந்தால் அவள் என்ன செய்ய முடியும்? முறுக்கு கல் என்பாள்; கல்வி கடுமை என்பான் கல்லாதவன்.

கரித்துண்டு அதை வெளுத்துக் கட்டுவது என்று ஒருவன் பாலில் கழுவி அதை உலர்த்துகிறான்; அது உளுத்துப் போகுமே அன்றி நிறம் மாறாது கருப்பு நாயை எவ்வளவுதான் தேய்த்துக் குளிப்பாட்டினாலும் அது வெள்ளை நிறம் பெறாது. முரடன் படிக்க மனம் இல்லாதவன் அடித்து அடித்துப் படிக்க வைத்தாலும் அவன் மண்டையில் ஏறப் போவது இல்லை; இந்த மாட்டு ஜென்மங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. என் செய்வது?

நறுமலர் பூத்த நந்தவனம்தான்; அங்கே தேனீ கழன்று திரியும்; தேனருந்தும்; பயன்பெறும். கழிசடையில் மேயும் ஈ அதனைப் ‘பூந்தோட்டத்துக்குப் போ’ என்றால் அதற்கு “ஆவல் தனக்கு இல்லை” என்று குப்பைக் கூளம் தேடித்தான் சல்லும்; அது அதன் வாழ்வு முறை. அறிவு தரும் நூல் நிலையம் சென்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்க விரும்பாதவர் பகல் காட்சிக்கு வெய்யிலில் கியூ வரிசையில் நிற்பர். மட்டமான படங்களைப் பார்க்கச் செல்வரே அன்றித் திட்டமிட்ட கல்வியை நாடமாட்டர்கள் சிலர்.

கற்றவர் கூறும் கசடு அற்ற ஞானம் அஃது அவனைக் கவரவில்லை; ஈர்க்கவில்லை; ‘அறுவை’ என்று சொல்லிவிட்டுக் கேளிக்கை விரும்பும் வேடிக்கை மனிதரோடு உல்லாசப் பேச்சுப் பேச அவர்கள் சகவாசத்தை நாடிச் செல்வர். கல்விமேல் நாட்டம் செலுத்தமாட்டார்கள்.