உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/33. புல்லறிவாண்மை

விக்கிமூலம் இலிருந்து

33. அறிவு குறைந்தவர் அவதி
(புல்லறிவாண்மை)

நூல் பல கற்கிறாய்; நுண்ணறிவு பெறுகிறாய் என்று கூற முடியாது. நூல் ஒரு பாற்கடல்; அதனைக் கடைந்து எடுக்கும் அமுதம் அறிஞர்களின் அனுபவ மொழிகள். அருள் அறமும் மனிதநேயமும் மாண்பும் உடையவர்கள் சிந்தித்துக் கூறும் சிந்தனைகள். அவர்கள் வாயில் வரும் சில சொற்கள் அவை திருக்குறள் போன்றவை. அரிய கருத்துக்கள்; இவற்றை நல்லறிவுடையவர் கேட்டு அறிந்து பயன்படுவர். அறிவு குறைந்தவர் அவை செறிவு மிக்கன என்பதால் அவற்றை வாங்கும் ஆற்றல் அற்று அவை தமக்கு ஏலா என்று புறக்கணிப்பர். அமுத மொழிகளை அறிவதை விட்டுக் குமுத ஏடுகளைப் புரட்டிக் கொண்டு, “இப்படத்தில் எத்தனை சன்னல்கள் இருக்கின்றன?” என்ற கேள்விக்கு விடை கண்டு கொண்டு இருப்பர். இன்று வினா விடைகள் நடிகையின் நயனங்களைப் பற்றியும் நளினங்களைப் பற்றியுமே அமைகின்றன. அறிவு குறைந்த சாமானியர்களைக் கவர அவர்கள் எடுத்தாளும் உத்திகள் இவை. இதில் பங்கு கொள்பவர் நிறை அறிவுடையவர் அல்லர்.

அறிவு குறைந்தவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனைகளில் பிடிப்பு ஏற்பட வாய்ப்புக் கிடையாது. அறிஞர்களிடம் பழகுவார்கள். ஆனால் அவ்வறிவில் நாட்டம் காட்ட மாட்டார்கள். குழம்பைத் துழவும் அகப்பைக்கு "அதன் சுவை எப்படி?" என்றால் "அஃது எத்தனை படி?" என்றுதான் கேட்கும். நல்லது கேட்க நயம் அறியும் நுட்பம் தேவைப்படுகிறது.

அறிவு விவாதங்கள் தொலைக் காட்சியில் வைத்தால் உடனே அவற்றை மாற்றி வைத்து விட்டு அநாகரிக ஆட்டங்களை நாடுவர் பலர்; அவளை அவன் பிடிக்க எடுக்கும் ஓட்டம் அது அவனை ஈர்க்கிறது. அறிவின் நாட்டம் அவனை இழுக்க மறுக்கிறது. எலும்புத் துண்டைக் கடித்து வாயைப் புண்ணாக்கிக் கொள்ளும் நாய்க்குப் பால் ஊற்றிய சோறு போட்டால் அதில் அக்கிரகார வாசனை வீசுவதால் அகன்று போய்விடுகிறது. சாக்கடை மொழி பழகிய அதன் செவிகள் வேறுவிதமாகக் குரைக்கப் பழகியது இல்லை.

அறக்கருத்துகள் ஆயிரத்துக்கு மேல் அறிவித்தார் வள்ளுவர். அதற்கு மேலும் முந்நூற்று முப்பது தேவைப்பட்டது. ஏன் இந்தக் கூட்டல்? ஆயிரம் அது அழகான எண்; திருக்குறள் எத்தனை என்று கேட்டால் யாருமே இன்று சரியாகச் சொல்ல முடிவது இல்லை. சிறிது அவர் குறைத்துக்கொண்டு இருக்கலாம் என்பார். ஏன் ஒரு குறளைக் கூடப் படிக்கத் திரு அருளாளர் வரமறுக்கிறார். குறள் வகுப்பு என்றால் ஒதுக்கிவிடுகிறான். நல்லது கேட்பது அதற்கு அவன் அஞ்ச வில்லை. கேட்டுவிட்டு அதனால் அறம் வழுவாமல் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குறளைப் படிக்கலாம்; உரை காணலாம். ஆனால் அதன்படி நடக்க இயலாது. அதனால் இஃது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகிறது. அறத்தின் திசையையே பார்க்க மறுக்கும் மறக்குடி மாக்கள் இவர்கள். எக்கேடு கெட்டால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? வாக்குரிமை பெற்று விட்டுச் சாவடிக்கு நடக்கத் தயங்கும் சோம்பேறிகள் இவர்களுக்குக் குடி உரிமை வழங்குவது தேவை இல்லை; அதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள்.

தாடி வளர்த்துவிட்டான்; கேட்டால் “நாடி தளர்ந்துவிட்டது” என்கிறான். வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டால் இவன் கத்தி அடக்குகிறான். குப்பை கிழித்துப் போட்டால் சுத்தம் சோறு போடும் என்கிறான். சிரித்துப் பேசினால் சீரழிந்து போவாய் என்கிறான். புகையிலை விரித்தால் போச்சு பெண் சிரித்தால் போச்சு என்று கட்டுப்படுத்துகிறான். விடுமுறைவிட்டால் கூடப் பாடம் படி என்று பையனை வற்புறுத்துகிறான். சிரிக்கவே அந்த வீட்டில் இடம் இல்லை. முகத்தை மூஞ்செலியாக்கி வைத்துக் கொள்கிறான். கேட்டால், “வம்பு தும்புக்குப் போகமாட்டேன். நான் உண்டு; என் வேலை உண்டு; பெண்டு உண்டு; பிள்ளை உண்டு; அவர்கள் எனக்குக் கற்கண்டு; வேறு எதையும் நான் கண்டு கொள்வதில்லை” என்கிறான். ஓட்டைக் கார் அதை ஓராயிரம் முறை துடைத்துக் கொண்டு இருக்கிறான். நாலு சுவர் அதன் நடுவில் இவன் நாயகன். தனிமனிதன் சே! கொஞ்சம் சிரிக்க மாட்டான்; விடு அவனை; வேறு பேச்சைத் தொடு.

வாலிபமுறுக்கு; பணச் செறுக்கு; அதிகாரம் எல்லாம் இருக்கு; இப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிக்க முடியும். ஆனால் நினைப்பது யாது? செய்யத் தக்கது யாது? இன்று பொது வாழ்வில் எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. ஆட்சியாளரை நம்பி அங்குமிங்கும் பொருள் திரட்டிச் சில நன்மைகள் கருதித் திரட்டிய நிதி; அஃது அதோகதி; படித்தவன் அதற்குப் பிறகு முடித்த பிறகு, “ஏன் படித்தாய் மகனே! இருந்த பணம் இருந்திருந்தால் விருந்துடன் நன்றாகச் சாப்பிடலாமே” என்று வருந்தும் இளைஞர் ஏராளம்; பெண்ணைப் பெற்று வளர்த்து அவளைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல காசு குறைவாகக் கேட்பவனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டு அவள் கட்டுக் கழுத்தியாக வீடு வந்து சேர்கிறாள். ‘வாழா வெட்டி’ என்று அவள் எட்டி உதைக்கப்படுகிறாள். அவள் வாழ்வு எட்டிக்காய் ஆகிறது. எவ்வளவோ அறங்கள் செய்யலாம். அதற்கு நீ சிந்தை செலுத்து; என்ன செய்வது? பொழுது கழியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாய் வேலையா இல்லை; வேண்டியது இருக்கிறது. விவரம் அறிந்து செய்துமுடி; இந்த வயதில் நீ நல்லதை நாடாவிட்டால் முதுமையிலா நாடப்போகிறாய்? எட்டி அடி எடுத்து வைக்க நீ தட்டுத் தடுமாறும் காலம்; நீ கட்டியவளும் கருதாள் ஒட்டி உறவாடிய சின்ன வீட்டாளும் சீண்டாள். யாருமே வேண்டார். இளமையில் கல்; வளமையில் அறத்தோடு வாழ்க! உயர்க.

பிடித்து வைத்த பிள்ளையார் என்று அசையாமல் எதற்கும் இசையாமல் இருக்கும் இந்தப் பிள்ளை யார்? கொட்டாப் புளிபோல இருக்கிறான். கொடுக்காப்புள்ளிக் காய் போல் கரிக்கிறான். எப்பொழுதாவது சிரிக்கிறானா என்றால் சிரிப்பது இல்லை. வசதி இருந்தும் வாழ மறுக்கிறான். அவனாக இன்பம் அடையமாட்டான். சரி இல்லாதவன் அவனுக்குக் கூழுக்கு உப்பு இல்லை என்கிறான்; மகளுக்கு மனம் முடிக்க அதுவே அன்றாடம் அவன் வீட்டுப்பட்டி மன்றப் பேச்சாக அமைகிறது. அவசரத்துக்கு ரூபாய் ஐந்து என்று கேட்டால் அதை எடுத்துவிட்டால் திருப்பிப்போடுவது எப்படி? அப்படியே போய்விடும் என்று அஞ்சுகிறான். காசு என்றால் வேசியர்கள் கெட்டார்கள் அலைகிறான்.

நல்ல வழிகளில் அவர்கள் நடத்தை இயங்காது. ‘குட்டி’ என்கிறான்; ‘புட்டி’ என்று தேடுகிறான். ‘வட்டி’ என்று அதில் வாழ்கிறான். 'கட்டி' என்று பொன்னைத் திரட்டி வைக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு மட்டியாகச் செயல்படுகிறான். சும்மா இரு சொல்லற என்றால் அது தன்னால் இயலாது’ என்கிறான். ஒயாப் பேச்சு; அவன் விடும் மூச்சு ஆசைத் தீயாக இருக்கிறது. வேலை இருக்காது; ஆனால் வீணாகத் திரிவான்; பொய் சொல்வது அவனுக்குப் பொழுதுபோக்கு. கேட்டால் நான் கவிஞன் என்கிறான். ‘கவிதைக்குப் பொய் அழகு, என்று புதுக் கவிஞன் ஒருவன் பாடிவிட்டான், அதனை இவன் சான்றாகக் காட்டுகிறான் பொய் சொல்வதற்கு.

காசு மிகுந்துவிட்டால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. பேரன் பேர்த்தி எடுத்துவிட்டான்; பேரமைச்சன் என்ற நிலையையும் எட்டிப் பிடித்தான் என்றாலும் அவன் அடங்கிக் கிடக்கவில்லை. பேரழகியைக் கைப்பிடித்தான். அஃது இந்த நாட்டுப் பெரியவர்கள் விவகாரம். அப்படி வாழ்ந்த முதியவன் ஒருவன் கன்னி ஒருத்தியைக் கைக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று கலியாணமும் செய்து கொண்டான். இது ஓர் இலக்கியச் செய்தி.

அவள் அதிர்ஷ்டக்காரி, மூப்பு வந்து அவனைக் கிடத்திவிடுகிறது. செல்வத்துக்கு எல்லாம் அவள்தான் வாரிசு; அதற்குத் தேவையில்லை யார் சிபாரிசும். வயித்தியன் சொல்லிவிட்டான். வேண்டியவர்களுக்குச் சொல்லி அனுப்புக என்று. அதற்குப் பொருள் தேவைப் பட்டவர்களை வரச் சொல்லி அனுப்பி வைத்தாள். காணார், கேளார், கால் முடப்பட்டோர் இந்த வரிசைக் காரர்கள் அந்த வீட்டை நோக்கி முற்றுகையிட்டனர். சேர்த்து வைத்த பொன்கட்டி அது வைத்திருந்த கைப் பெட்டி ‘புதுசுவிடம்’ தந்திருந்தான். அவள்பால் ‘மவுசு’ குறைந்தது; “தருமம் செய்தால்தான் அந்தப் புண்ணியம் கூட வரும்” என்று தம்பூராக்காரர்கள் தம்பட்டம் அடுத்துப் பேசியதைக் கேட்டிருந்தான். புண்ணியத்தை ஈட்ட அவன் அந்தப் பொன்னைக் காட்ட அவள் அறிந்து கொண்டாள். “இந்தக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டேன் இளமையை அவனுக்கு அடகு வைத்தேன்.” என்று குமுறுகிறாள்.

அவன் படகு “திசை மாறுகிறது” என்பதை - அறிகிறாள். அவன் பரிபாஷை அவளுக்கு மட்டும்தான் புரிந்தது. மற்றவர்கள் அதை அறிய முடியாமல் ஆர்வம் காட்டுகின்றனர். “ஐயா விளாம் பழமா கேட்கின்றீர்; அஃது உடம்புக்கு ஆகாதே” என்று அன்புடையாளைப் போலப் பேசி அவன் பேச்சை மாற்றுகிறாள். அவர் மறுபடியும் கையை உருட்டுகிறார்; அவள் “கடலை உருண்டையா? அஃது உடலுக்கு ஆகாதே” என்கிறாள். அவர் “எள்ளுருண்டை” என்று எரிச்சலோடு சொல்லி வினவுகிறார். “இது நள்ளிரவு; எங்கே போவது?” என்று மழுப்புகிறாள். இழுப்பு வருகிறது; திரை மூடப்படுகிறது. அவனால் நினைத்ததை முடிக்கவில்லை. வாலிப வயதில் வாய்தா கேட்காமல் எந்த நல்ல காரியத்தையும் செய்து முடிப்பதுதான் அறிவு; அதுவே வாழ்க்கையின் விரிவு.