நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/4. அறன் வலியுறுத்தல்
“அடுத்த வீட்டு அம்புஜைத்தைப் பார்த்தீர்களா? என்று அங்கலாய்க்கிறாள் இந்த வீட்டுப் பங்கஜம்; அதற்கு அவள் அகமுடையான் சொல்கிறான். “அவள் வீட்டுக்காரர் இரவும் பகலும் உழைக்கிறார்; அதனால் தழைக்கிறாள்; பொறாமைப்படாது நாமும் உழைப்போம்; உயர்வோம்” என்று உறுதி கூறுகிறான். அறமே ஆக்கம் தரும்;
“உழைப்பவர் எப்படியும் முன்னுக்கு வருவர்; இது நியதி; இன்று பெருமையுடன் வாழ்பவர் எல்லாரும் ஒருமையுடன் உழைத்து உயர்ந்தவர்தான். அதனை அறிதல் நலம்” என்கிறான். அதனைக்கண்டு அழுக்காறு கொள்வதில் விழுக்காடு இல்லை; உழைக்காமல் யாரும் முன்னுக்கு வருதல் இல்லை.
நல்ல தொழில்; அவர் வீடு மிக்க எழில்; அவர் சுற்றித்திரிவது பொழில்; பொழுது கழிவது நறுநிழல்; அவர் மட்டும் உண்டு தின்று மகிழ்கின்றார்; மற்றவர்களைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. என்றைக்குத் தான் கதவைத் திறக்கப்போகிறான்; காற்று வெளிசச்சம் பார்க்கப்போகிறான்; ஈனக்குரல் அவனைச்சுற்றி எழுந்தும் ‘அவர்களுக்கு உதவவேண்டும்’, என்ற ஞானவெறி அவனுக்கு ஏன் தோன்றவில்லை? கடந்த நாள்கள் போய்விட்டன; போவன போகட்டும்; இனிச் சிந்தனை செய்து, நல்லறம் உந்துதல் செய்வானாக! நானிலம் செழிக்க! அனைவரும் உழைக்க! உலகம் தழைக்க!
இன்னல்கள் வருகின்றன. இடர்ப்பாடுகள் நேர்கின்றன; இவற்றிற்கு எல்லாம் காரணங்கள் உள்ளன; காரணம் இல்லாமல் காரியம் நிகழ்வது இல்லை; கருக்கொள்ளாமல் எதுவும் உருப்பெறுவது இல்லை; நீ செய்த தீவினை அது; உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது; சிந்தித்துப்பார்; உன்னை நீ திருத்திக் கொள்; நல்லதே செய்க! நன்மையே விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; இதில் இருந்து யாரும் தப்ப முடியாது; அற நூல்கள் ‘கருமம்’ ‘விதி’ என்று இவற்றிற்குப் பெயர்கள் தருகின்றன; இவற்றை வெல்ல தருமமே தக்க துணை நெறியாகும்.
வாழ்க்கை அர்த்தமுள்ளது; இதனையறியாதவர் இதனை வியர்த்தமாக்கிவிட்டு வருத்தம் அடைவர். “ஏன் பிறந்தேன்?” என்று எழுப்பும் வினாவினை ஒவ்வொரு வரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
பிறந்தாகிவிட்ட்து. அதனைப் பற்றிய பிரச்சினையை எழுப்ப உனக்கு உரிமை இல்லை; ‘நீர்க்குமிழி’ இந்தப் பிறப்பு; அது வெடித்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடுகிறது; ‘சாறு எடுக்கப்பட்ட கரும்பு’; ‘வெறும் சக்கை’; அதனை எரிக்கும்போது யாரும் வருத்தப்படுவது இல்லை; மனிதனும் இனிய கரும்புதான்; அதன் சுவை அதற்கு உதவாது. அதனைக் கடித்துச் சுவைப்பார்க்கே பயன்படும்; பிறர்க்கு அவன் பயன்படுகிறான்; பிறருக்காக உழைக்கிறான்; அவர்களும் இவனை நன்கு பயன்படுத்துகின்றனர்; வாழ்க்கை இனியது; சுவைமிக்கது; சாரம் உடையது; அதன் தன்மை அறிந்து நன்மை அடைக; பிறருக்கு நன்மை சேர்க்க.
பயன்பட வாழும் வாழ்க்கை நயன் உடையதாகும்; சாவதிலும் ஒரு பெருமை உண்டு; உன்னால் ஆவது செய்து முடிக்கிறாய்; உன்னை நம்பியவரைத் தூக்கிவிடுகிறாய்; ஆல நன்னிழலாக இருந்து பிறர்க்குக் குளிர்ச்சி தருகிறாய்; உடம்பு பழுது ஆகிறது முழுதும் அது பயன்பட்டபிறகு நீ அழுது அலமரத் தேவை இல்லை; விழுது பல நீ விட்டுச் செல்கிறாய்; அவை மறுபடியும் பிறருக்குச் சுமை தாங்கியாய் நிற்கும்; கரும்பு பிழிந்த சக்கை; அதுதான் உன் பழுதுபட்ட யாக்கை; அதுபற்றி எரியட்டும்; அஃது உன் ஒளியை உலகுக்குக் காட்டும்; வெந்து சாம்பல் ஆகட்டும்; அதனை மற்றவர் நெற்றியில் இட்டு உன்னை வழிபடுவர்; வழிபடத்தக்க வாழ்வை வாழ்ந்து காட்டு; பழிபடத் தாழ்ந்து அழியாதே.
சாவுக்கு அஞ்சாதே; அஃது இன்றும் வரும் நாளையும் வரும்; என்றாவது வரட்டும்; அதனைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? ஆனால் ஒன்று; அதற்குள் நீ நினைக்கும் நற்செயல்கள் அன்னத்தையும் செய்து முடித்துவிடு; அது உன்னால் செய்ய முடியும்; நீ பெற்ற கல்வி, கற்ற தொழில் திறன், வாய்ப்புகள் பிறர்க்கு வாய்க்கும் என்று கூறமுடியாது; தமிழில் இராமகாதை எழுத ஒரு கம்பனால்தான் முடிந்தது; அறநீதியை வள்ளுவன் ஒருவனால்தான் உணர்த்த முடிந்தது; அவர்கள் அன்று உடம்பு வளைந்து, ஏடு எடுத்து, எழுத்தாணியை அழுத்திப் பதிக்கவில்லை என்றால், அவற்றை யார் செய்து தந்திருக்க முடியும்? சில காரியங்கள் சிலரால்தான் முடியும். பொதுப்படச் செய்யும் பணிகளை யார் வேண்டுமானாலும் செய்து விடமுடியும்; உனக்கு என்று சில தகுதிகள் இருக்கின்றன; அவை உன்னிடம் மிகுதியாய் இருக்கின்றன; அவற்றைப் பகுதியாகச் செயலாற்று; அதுவே நீ பிறந்ததன் பயனாகும். நல்லதோர் வீணை! அதனை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிடாதே.
எடை இயந்திரம்! வீட்டு நடைபாதையிலேயே வைத்திருக்கிறான்; கூடிற்றா குறைந்ததா? இதுவே அவன் கவலை; அடுத்தது நாக்குச் சுவை! அதனைக் கட்டுப்படுத்துவதே இல்லை; ‘தின்பதில்தான் சுகம் இருக்கிறது’ என்று நினைக்கிறான்; அடுத்துத் தின்பது யாது? எந்தப் புதிய உணவகம் சுவைக்கிறது; எங்கே விருந்து? இதுவே இவன் வாழ்வும் நோக்கமாகவும் அமைகிறது. இவன் இந்த உடம்பினை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறான்; இந்த உடம்பின் நினைவு மட்டும் இருக்கின்றது; தன்னை மறந்து, இவன் எந்த நல்ல காரியமும் செய்வது இல்லை. இவன் கண்ணாடி முன் நின்று தன் அழகைக் கூட்டுதற்கே தன் திறமையைக் காட்டிக் கொண்டு நிற்பான். பெண்களின் இயல்பும் இதுவே, அவர்களிடம் ஒழுங்கு, சீர்மை எதிர்பார்க்கப்படுகின்றன. பெண்களே தம்மைப்பற்றி விமரிசனம் செய்வர்; அதற்காகவாவது அவர்கள் தம்மை அழகு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது; அதுவும் சற்றுக் கூடிவிட்டால் உள்ள அழகினைக் கெடுத்துவிடுகிறது; முகம் திட்டுத்திட்டாய்ப் பட்டை தீட்டிக் காட்டப்படுகிறது; மற்றவர் மகிழ, அவர்கள் தம்மை அணிசெய்து கொள்கின்றனர். இஃது உலகத்து எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும். இஃது அவள் இயல்பு வசீகரம் அவளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அவள் கிழமாக இருந்தாலும் ஒரு முழம் பூ வைத்தால்தான் அவளுக்குப் பொலிவு சேர்கிறது.
இளைஞர் சிலர், முகத்துக்கு வண்ணத் துகள் பூசி, வருணனைப் பொருள் ஆக விரும்புவது சரி என்று படவில்லை. பாரதி சொன்னான், “ஆண் நன்று'” என்று; அவன் அழகன் என்பதால் பெருமை இல்லை; நல்லவன் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படுகிறது; தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, சட்டைக் காதினைத் தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைவிட்டுக் கடமைகளில் ஈடுபடுவதே அவனுக்குப் பெருமை சேர்க்கும்; “ஊன் வளர்த்தேன், உடம்பு வளர்த்தேன்” என்பதில் பெருமை இல்லை; ”அறிவு வளர்த்தேன்; ஆற்றல் மிகுத்தேன்; செயலாற்றினேன்” என்பதில்தான் பெருமை விளங்குகிறது.
ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பினால் சோம்பல் முரித்து எழுகிறான்; அப்புறம் பார்த்தால் “இவன் தானா அவன்?” என்று வியக்க மாறிவிடுகிறான்; துளி விஷம் போதும், உயிரைக் கொல்ல; அதுபோலத் துளி தூண்டுதல் போதும் கடல் ஏழையும் தாண்ட, தொடக்கம் சிறிது எனினும் அது வளர்ந்து, விவரம் நிறைந்ததாய் நிறைகிறது; வானை எட்ட விசுவரூபம் எடுக்கிறது.
ஆலம் விதை! சிறிதுதான்; அது எந்தக் காக்கை எச்சமிட்டதோ? தெரியாது; பள்ளிக் கூடத்துச் சிறுவர் போல் அது சுறுசுறுப்பாய் வளர்கிறது. ஒரு பெரிய கூடாரமே அமைக்கிறது; அம்மரத்தின் பசுங்கிளைகளில் எத்தனை நிறப் பறவைகள் வந்து கூடு கட்டுகின்றன? அவை ‘கிரீச் கிரீச்’ என்று கதவு மூடும் சப்தத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன. அதன் நிழலில் யாரோ அமரும் பலகைகள் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாய்ப் போட்டுள்ளனர்; அவை உடைந்து கிடக்கின்றன; அவற்றில் எத்தனை பேர் வந்து உட்காரு கன்றனர்? மாடுகள் சுற்றி வருகின்றன; படிக்காத பிள்ளைகளைப் போல அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. அந்த இடத்தைவிட்டு அகல மறுக்கின்றன; சுண்டல் விற்கும் கிழவி, வியாபாரம் அதிகம் ஆகாவிட்டாலும் அந்த இடத்திலேயே காலம் தள்ளுகிறாள்; மண்டையையும் போடுகிறாள்.
நல்லவர், அல்லவர், சின்னவர், பெரியவர் எல்லாரும் ‘வெய்யிலுக்கு ஏற்றநிழல்’ என்று அங்கு வந்து சுகம் பெறுகின்றனர். ஆலவிதை சிறிதுதான்; அது வளர்ந்தால் பயன் பெரிதுதான். அறச்செய்கை ஆரம்பத்தில் நெல்லிக்கனிதான் வளர்ந்துவிட்டால் அது சாகாவரம் பெற்றுவிடுகிறது; அற நிறுவனங்கள் வளர்க; வளர உதவுக.
மணி அடித்தால் சோறு, மணி அடித்துக் கொண்டுதான் இருக்கிறது; சோறு கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது சிறை வாழ்க்கை! நாளும் கிழமையும் அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கின்றன; சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்கு மார்க்கு நாளேடுகள் கிழிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; 365 தாள்கள் இருந்தன; இன்று எலும்பு உருக்கி நோயாளி போல் சிறுத்துக் காணப்படுகிறது; சென்ற நாள்கள் திரும்பி வரப்போவது இல்லை; அழிந்துவிட்டது; செழிக்கப் போவது இல்லை; கழித்தல் கூட்டல் ஆகாது. அறத்தைப் பெருக்கு ஈட்டிய பொருளை வகுத்துக் கொடு; உன் கணக்குச் சரியாகும்; வரவு செலவு கணக்குச் சரிபார்த்து வை; தொல்லையில்லாமல் வாழமுடியும். சிறை வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகாது, விடுதலைபெற்று வீறுடன் வாழ்க, அறம் செய்க. இங்கே இவனைப் பற்றி என்ன சொல்வது? அவனவன் கொடுத்துப் புகழ் பெறுகிறான்; இவன் தன்னைக் கெடுத்துக்கொண்டு இகழ்வு பெறுகிறான். மானம் கெட்ட வாழ்வு; வீட்டு முகப்புகளில் அந்த அந்த வீட்டுப் பதுமைகள் தரும் அகப்பைச் சோற்றுக்குக் கையேந்தி நிற்கிறான். “உயிர் போகிறது; பிடி சோறு” என்று கேட்கிறான். இந்த உயிரை வைத்துக் கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்?
“சோம்பல் மிகவும் கெடுதி, போ உழைத்துப் பிழை, உழைக்க நிமிர்ந்து நில்; பிறர் கையேந்தி நிற்காதே; திட்டமிட்ட வாழ்க்கை அமைத்துக் கொள்க; எதிலும் அளவோடு வாழ்வது என்று உறுதி கொள்க. பிச்சை எடுக்க நேராது பிறர் உழைப்பின்றித் தருவதைத் துச்சமாக மதித்து நட. பிச்சை எடுப்பது பிசகான செயல்; அது மாபெரும் வீழ்ச்சி, மானிடத்துக்கே அது தாழ்ச்சி.”