நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/40. காமத்துப் பால்
பசலை; அது என் நிறத்தை மாற்றும். என் விசனத்தை எடுத்துக் காட்டும். விளர்த்துவிட்டேன் என்பதைக் கிளர்த்திவிடு. அவர் என்னைத் தழுவுவார்; சிறிது நழுவி விட்டால் உடனே இந்தப் பசலை என்னை இறுகப் பிடித்துக் கொள்ளும். முயங்காத இடத்து இந்தப் பசலை வந்து பாயும். அவரோடு கூடுவது; அதனோடு நிற்பது சுவை தருவது இல்லை. ஊடுவதும் தேவைப்படுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; ஊடல் இல்லாத கூடல் அதில் நயம் இல்லை. அழகு இல்லை; அறிவுச் சுவை இல்லை. ஊடி விடுகிறேன் அது நீடித்துவிடுகிறது. கூடுவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. வாள்போல் வைகறை வந்து தோள் தோய் காதலரைப் பிரித்துவிடுகிறது.
பொருள் தேடிச் சென்ற காதலர் மழைக்காலம் வரும்முன் விழைந்து வருவதாகச் சொற்கள் இழைத்தார். நாள் ஒற்றி என் விரல்கள் தேய்ந்துவிட்டன. வழி பார்த்து விழிகள் பொலிவிழந்துவிட்டன. எங்கள் மண நாள் முரசு போல வானத்து இடி முழக்கம் கேட்கிறது. மழை வருகிறது என்பதால் ஊரவர் மகிழ்கின்றனர். நான் மட்டும் ஏன் மகிழ முடியவில்லை. மழை நீர் என் கண்ணீராக மாறுகிறது. பிரிவு அரிது; சாப்பறை போல அது எனக்கு விளங்குகிறது. நெய்தல் பறை இரக்க உணர்வைக் கிளறுகிறுது. அதுபோல இந்த மழை பெய்தல். என் அழுகைக் குரலை அதிகப்படுத்துகிறது. காரோ வந்தது; அவர் தேரோ வரவில்லை; யாரோ என் துயர் அவருக்கு அறிவிப்பர்?
கம்மியத் தொழில் செய்யும் கருமகன்கள் தம் கருவிகளை ஒடுக்கிக் கட்டி வைத்துவிட்டனர். உலைக்களத் தீ அணைந்து விட்டது. அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வீடு திரும்புகின்றனர். மாலைப் பொழுது பூமாலை தொடுக்கிறாள் தலைவி, மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறாள். பொன்மாலைப் பொழுதாகக் கழியவேண்டிய அது புன்மாலையாகி விட்டது. தன் துணைவர் அவளோடு இல்லை. இணையில்லாத இன்ப வாழ்வு அவளை விட்டு இரிந்துவிட்டது. கனவுகள் முறிந்துவிட்டன. இன்பப் பொழுது சரிந்து விட்டது. மாலை மயக்கத்தில் அவள் உழன்று வருந்தி அலமருகின்றாள். என் செய்வது? ஆற்றுவது என்பது இயலாத ஒன்று; அவர் வருகைதான் மாற்றம் செய்ய இயலும் அதுவரை? இப்படித்தான் மாலைப் பொழுதுகள் மாலை தந்து அந்த மாலாவை அழச் செய்து கொண்டுதான் இருக்கும். அவள் மட்டுமா? கன்னிப் பெண்கள் கதைகளைக் காவியத்தில் தீட்டினால் இந்த அழுகை என்பது அழியாத அத்தியாயம். பிரிவு அது பாலை; அவர் வந்து சேர அவள் காத்திருக்கிறாள் அதனால் அது முல்லை; வேறு வழியே இல்லை;
தலைவன் தலைவியின் பிரிவுக்கு வருந்துதல்
காலையரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் மங்கையின் காதல் நோய்; கதிரவன் கால் சாய்க்கின்றான். அதிரவரும் மாலைப் பொழுது கண்டு அவள் கண்கள் நீர் நிறைகின்றன. அவள் தன் மெல்லிய விரலால் அதனைச் சிதற அடித்துத் தனிமையில் பதறுகின்றாள். மோனம் அங்குக் குடி கொள்கிறது. விம்முகிறாள்; அவள் குரல் கம்முகிறது. கும்மிருட்டு வந்து குவிகிறது. இதற்கு எல்லாம் காரணம் என்ன? வருகிறேன் என்று குறித்த நாளில் யான் அங்குச் செல்ல இயலவில்லை. அவள் தோள்மேல் தன் கை வைத்து உறக்க மின்றி இரவு கண் விழித்து என் குற்றத்தையே அவள் எண்ணுவாளோ என் செய்வது? வினை முடிந்ததும் வீடு திரும்ப விழைகின்றேன். நான் வரும் நாள் எண்ணி விரலைச் சுவரில் தேய்த்து நாட்குறி வைக்கிறாள். அவள்விரல் தேய்கிறது. என்னை எதிர்பார்த்துப் பார்த்து அவள் விழிகள் ஒளி இழக்கின்றன.
தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்
கயல் ஒத்தன அவள் கண்கள்; அவற்றைக் கயல் மீன் என்று கருதிச் சிரல் பறவை அவற்றைக் கொத்திக் கவர அருகில் தத்திச் செல்கின்றன. அந்தோ! அங்கே வில்லின் வளைவை அவள் புருவத்தில் காண்கிறது அப்பறவை. களம் கண்ட வீரன் உளம் அஞ்சிப் பின் வாங்குகிறான். அதுபோல் இந்தச் சிரல் பறவையாகிய மீன்கொத்தி அஞ்சிப் பின் வாங்குகிறது. அவள் விழிகள் கயல்மீன்கள் என்றால் புருவங்கள் வில்லின் வளைவு.
தலைவன் பின் சென்ற தலைவி குறித்துத் தாய் வருந்துதல்
அரக்குப் போன்று சிவந்த ஆம்பல் இதழ்கள் உடையவள்; பருக்கைக் கற்களை உடைய தெருக்களில் அவள் எப்படித்தான் நடந்தாளோ? இதற்கு முன் காலுக்குச் சிவப்பு ஊட்டச் செம்பஞ்சுக் குழம்பு பூச அவள் ‘பைய பைய’ என்று வருந்திக் கூறுவாள். பஞ்சு கொண்டு மெல்ல பூசினும் அஞ்சும் அவள் மெல்லடிகள். அந்தப் பரற்காட்டை எப்படித்தான் கடந்து செல்கின்றனவோ! தலைவன் உடன் போவதில் காடும் அவளுக்குக் கரடுமுரடு என்று படவில்லை. அது வியப்புதான்.
தலைவியின் பிரிவுத் துயர்
ஓலைக் கணக்கர் அவர்களும் தம் பணிகளை முடித்து வைத்துவிட்டு, மாலைப் பொழுதில் ஓய்வு கொள்கின்றனர். அத்தகைய புன் மாலைப் பொழுதில் வானத்தைப் பார்க்கிறாள். சிவந்த வானம் அதுவும் கருகப் போகிறு. அந்நேரத்தில் தன்னை மணந்தவன் இப்பொழுது தணந்து தன்னை விட்டுப் பொருள் தேடப் புது இடும் தேடிச் சென்று விட்டான். அவன் வருகைக்கு ஏங்கும் இவ்வறியவள் சூடிய மாலையை அறுத்து எறிந்துவிட்டு அழுகிறாள். முலை வனப்பு? அதன்மீது பூசிய சாந்தத்தை ஏசியவளாய்க் கலைத்து மனம் குலைகிறாள். மாலை வருவார் என்று வழி பார்த்தாள். பூப் புனைந்தாள், பூசிய சந்தனம் பூவைக்கு வெறுப்பைத் தந்தது. அலங்கரித்துக் கொண்டிருந்த அவள் கலங்கியவளாய்க் கலுழ்கின்றாள்.
தோழியுடன் தலைவி உரையாடல்
“காளை ஒருவன் வழி நடத்த நாளை அவன் பின் எப்படி நடப்பாய் என்று வினவுகின்றாய்! குதிரை ஒருவன் பெறுகிறான்; முன்பின் ஏறியது இல்லை. அதற்காக அந்தக் குதிரையை அவன் அவிழ்த்தா விட்டு விடுவான். அதில் ஏறிச் செல்ல அவன் தானாகக் கற்றுக் கொள்கிறான். ‘ஏய் எப்படி முடிந்தது’ என்றா அவனைக் கேட்டுக் கொண்டிருப்பர். அப்பொழுதே வரும் வேகம்; அதற்கு ஏற்ற விவேகத்துடன்” என்கிறாள் தலைவி.
பிரிந்த பின் தாய் மகள் செயலை எண்ணிப் பார்த்தாள்
“நேற்று என்னை வந்து என் மகள் மார்போடு கட்டி அணைத்து எனக்கு முத்தமிட்டாள்; புல்லினாள்; தழுவினாள்; விம்மினாள்; எனக்கு வியப்பு ஏற்பட்டது; அதற்கு அப்பொழுது அறிகுறி யாது என்பதை அறியேன். என்ன! இவள் திடீர் என்று சிறு குழந்தையாகிவிட்டாளே என்று வியந்தேன். முகத்தில் அவள் வியர்வை முத்து எனத் தெரிந்தது. அவள் என்னைச் சேர்த்து அணைத்துக் கொண்டது ஏன்? காளை அவனோடு மறு நாளை அவள் செல்லத் துணிந்தது அறியேன். வேங்கை கண்டு வேகமாக ஓடும் மான் கூட்டம் நிறைந்த காட்டுவழியே அவள் செல்லத் துணிந்துவிட்டாள் என்பதை இப்பொழுதே கேட்டு அறிகிறேன். அவன் வேட்டது அது; அதற்கு அவள் காட்டியது அது.
பிரிந்த தலைவியின் கூற்று
“கண்மூன்று உடையவன் சிவன். அவன் பார்வைக்கு எப்படி இந்தக் காமன் தப்பிப் பிழைத்தான்? அவன் எரிபட்டு இருந்தால் என்னை வெறிகொள்ளச் செய்யமாட்டான். இந்த அரவு இந்த இரவு ஏன் இந்த நிலவை விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது. அரவே நீ எனக்குப் பகையாகின்றாய்! இந்தக் காக்கை அதற்கு என்ன கேடு? பொழுது விடிவதற்கு அது வந்து ஏன் கரையாமல் இருக்கிறது? இந்த இரவு நீள்கிறது. அதனை மாளச் செய்வதற்கு ஏன் இன்னும் இந்தக் காக்கை எழவில்லை; என் அன்னை எனக்குக் காவல். அவள் அடக்குகிறாள் என் ஆவல். என் தலைவன் வர இயலாமைக்கு அவள் ஒரு தடை இல்லாவிட்டால் நான் எழுந்து நடப்பேன் நடை எனக்கு அவள் முடை” என்கிறாள் தலைவி.
★★★