நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/1வது திருமொழி

விக்கிமூலம் இலிருந்து

1ம் திருமொழி தையொரு திங்கள்

கண்ணனைக் காட்ட வேண்டி காமனைத் தொழுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்*

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா!*

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியை யும்தொழுதேன்*

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. 1


வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து

வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து*

முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா!*

கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி*

புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்

இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2


மத்தநன்னறு மலர்முருக்க மலர்கொண்டு

முப்போதும் முன்னடி வணங்கி*

தத்துவமிலி யென்று நெஞ்செரிந்து

வாசகத்தழித் துன்னை வைதிடாமே*

கொத்தலர்பூங் கணைதொடுத்துக் கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரேழுதி*

வித்தகன் வேங்கட வாணனென்னும்

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3


சுவரில் புராண!நின் பேரேழுதிச்

சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்*

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்

காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா!*

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்*

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4


வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்தஅவி*

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப*

ஊனிடை யாழிசங்குத் தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்*

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5


உருவுடை யாரிளை யார்கள்நல்லார்

ஓத்துவல் லார்களைக் கொண்டு*வைகல்

தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா!*

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்

கருவிளை போல்வண்ணன்* கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால்

திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6


காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்

கட்டி யரிசி யவலமைத்து*

வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்*

தேயமுன் னளந்தவன்திரி விக்கிரமன்

திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்*

சாயுடை வயிறுமென் தடமுலையும்

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7


மாசுடை யுடம்பொடு தலையுலறி

வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு*

தேசுடை திறலுடைக் காமதேவா!*

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்*

பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்!

பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்*

கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்

என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8


தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்

தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்*

பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே

பணிசெய்து வாழப் பெறாவிடில்*நான்

அழுதழு தலமந்தம் மாவழங்க

ஆற்றவு மதுவுனக்குறைக் குங்கண்டாய்*

உழுவதோ ரெருத்தினைநுகங் கொடுபாய்ந்து

ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9


கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்

கழலிணை பணிந்தங்கோர் கரியலற*

மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த

மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று*

பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை*

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்

விண்ணவர் கோனடி நண்ணுவரே. 10


ஆண்டாள் திருவடிகளே சரணம்.