நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/11வது திருமொழி
Appearance
11ம் திருமொழி தாமுகக்கும் திருவரங்கத்துச் செல்வன் மேல் காமுறுதல் தரவு சொச்சகக் கலிப்பா தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ?* யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்!* தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்* ஆ!முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே! 1 எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்* குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2 பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்* அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்* செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்* எங்கோல் வளையால் இடர்தீர்வ ராகாதே? 3 மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்* பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற* பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்* இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே? 4 பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று* எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்* நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்* இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே. 5 கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்* காவிரிநீர் செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்* எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது* நான்மறையின் சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே. 6 உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடறுத்து* பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்* திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்* எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7 பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு* பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்* தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்* பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. 8 கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து* அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த* பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே. 9 செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த* மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்* தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்* தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே? 10 ஆண்டாள் திருவடிகளே சரணம்