நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
[தொகு]முதல் திருமொழி - வண்ண மாடங்கள் (கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
[தொகு]கலிவிருத்தம்
13:
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.
14:
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.
15:
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.
16:
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.
17:
கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.
18:
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.
19:
வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.
20:
பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.
21:
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.
22:
செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10.
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
[தொகு]வெண்டளையால் வந்த கலித்தாழிசை
23:
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1.
24:
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.
25:
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3.
26:
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.
27:
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
28:
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
29:
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே. 7.
30:
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.
31:
அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.
32:
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 10.
33:
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.
34:
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர். வந்துகாணீரே. 12.
35:
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 13.
36:
எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 14.
37:
நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர். வந்துகாணீரே. 15.
38:
விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர். வந்துகாணீரே. 16.
39:
பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17.
40:
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.
41:
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர். வந்துகாணீரே. 19.
42:
அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 20.
தரவு கொச்சகக்கலிப்பா
43:
சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21