புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/நியாயம்
நியாயம்
தேவ இறக்கம் நாடார் - அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ, எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில்' எழுதுவது போலவே எழுதி விடுவோம். நல்ல கிறிஸ்தவர். புரோட்டஸ்டாண்ட், ஸர்கில் சேர்மனாக இருந்து, மிஷனில் உபகாரச் சம்பளம் பெற்று வருபவர். இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காகப் பாடு பட்டதனால் ஏற்படப்போக இருக்கும், இந்த உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்திருக்கிறார்.
ராஜ பக்தியும், சமூக சேவையும் ஒத்துவராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவியில் கொஞ்சம் பெருமையுண்டு. ஒரே கல்லில் இரண்டு காக்கையடித்தால் பெருமையடையமாட்டார்களா? அவரும் மனிதன் தானே?
அவருடைய மதபக்தி, ராஜ பக்தியுடன் போட்டியிடும். ஞாயிற்றுக்கிழமை வரத் தவறினாலும், அவர் கடவுளால் கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாளில் கோவிலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார். சில சமயம் பால்ராஜ் ஐயர் அவர்கள், ஓர் இருபதாம் நூற்றாண்டு இந்திய யோவான் ஸ்னானகனைப் போல், "ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே! உங்கள் பாபங்களை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி, கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வழியாக, அந்த மனுஷகுமாரன் வழியாக, பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை முழங்கால் படியிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே!..." என்று உற்சாகமாகப் பிரசங்கிக்கும்பொழுது, தமது அருமை மேரிக் குஞ்சு முதல், அங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார பிஷப் உள்பட எல்லாம் இரட்டை நாக்குகளை நீட்டிக் கொண்டு நெளிவதுபோல் தோன்றும். வெகு உருக்கமாக மன்றாடுவதற்காகக் கண்களை இறுக மூடிக் கொள்வார். அவ்வளவு மதபக்தி. பைபிலை இந்த உலகத்துக்கே சரியான ஓர் இந்தியனின் பீனல் கோடாகவே மதித்தார். சமணரைக் கழுவேற்றியதாக மார் தட்டிக் கொள்ளும் திருவாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கூட அவ்வளவு இருக்குமோ என்னவோ?
அன்று கோர்ட்டில் கூட்டம் எப்பொழுதும்போல். நியூஸென்ஸ் சார்ஜ், லைசென்ஸ் இல்லாத குற்றம், சின்னத் திருட்டு, 'பெரிய' விவகாரங்களுக்குப் பிள்ளையார் சுழி, சின்னக் கடன் இத்யாதி.
பஞ்சபாண்டவர் மாதிரி இருந்த அந்த மாஜிஸ்திரேட்டுகள், வெகு ஊக்கமாக நியாயத்தை நிறுத்துப் பறிமாறிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒரு கேஸ்தான் அப்பா!
ஒரு எஸ்.பி.ஸி.ஏ. இன்ஸ்பெக்டர், அவர் பிடித்த கேஸ், காயம் பட்ட குதிரையையும் வண்டிக்காரனையும் பிடித்த விதத்தை விரிவாகக் கூறிவிட்டு இறங்கினார்.
தேவ இறக்கம் நாடாருக்கு இந்த அநியாயமான குற்றத்தைக் கேட்டவுடன் தாங்கமுடியாத கோபம். இனிமேல் இம்மாதிரி நடக்காதபடி ஒரு 'முன்மாதிரி'யாகத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.
"யாரு ஓம்பேரென்னா!"
"சொள்ளமுத்துப் புள்ளெ."
"சொள்ளமுத்து இன்னு சொல்லுமேவே, புள்ளை என்ன புள்ளை! கூண்டுலே ஏறுனாப்ப? நீரு புண்ணாப் போன குருதையெ வண்டிலே மாட்டலாமா? என்னா மரங்கணக்கா நீக்கிராவே; ஒமக்கு புத்தியில்லே? வாயில்லாச் சீவனை; ஊமையாகவே! என்ன நிக்கிரா?"
"தரும தொரைகளே! எங்குருதயெ புள்ளமாருதி வளக்கேன். வவுத்துக் கொடுமை; இல்லாட்டாகே நாம் போடுவேனா சாமி? இனி மேலே இப்பிடி நடக்காது சாமி. ஒரு தடவை, தருமதொரைக மன்னிக்கணும்."
"நல்லாச் சொன்னீரு! வேலையத்துப் போயாவே நாங்க இங்கெடந்து பாக்கம்? 5 ரூபா அவராதம்; தவறினா ஒரு மாசம். சரிதானே... அப்புறம்" என்று மறுபக்கம் திரும்பினார்.
சுடலைமுத்துப் பிள்ளை ஆவேசம் கொண்டவன்போல் ஓடிவந்து காலைப் பிடித்துக் கொண்டு, "தரும துரைகளே! இந்த ஒரு தடவை மன்னிக்கணும். புள்ளே குட்டி வவுத்துல அடியாதிங்க..."
"பின்னாலே போசாத்தானே!" என்று தேவ இறக்கம் நாடார் கர்ஜித்தார். கோர்ட் ஆர்டலி, சுடலைமுத்துப் பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே போனான்.
இரவு, தேவ இறக்கம் நாடார் படுத்துக் கொள்ளுமுன் முழங்கால் படியிட்டு ஜபம் செய்கிறார்."பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் பரிசுத்தப்படுவதாக! உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய அப்பத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே... ஆமென்!"
கண்ணை விழித்து எழுந்தார். அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி ஞாபகமேயில்லை!
மணிக்கொடி, 22.7.1934