நீங்களும் இளமையாக வாழலாம்/முதுமை என்றால் என்ன?
முதுமை என்றால்?
இளமை என்றால் இனிமை, புதுமை, என்கிறோம். அதை வளமை, செழுமை உச்சக்கட்டத்திறமை, உயர்ந்த பெருமை என்றும் கூறலாம். ஆனால் முதுமை என்றால் என்ன? எப்படி? எது வரை?
இளமையை வளர்ச்சி என்றால், முதுமையை தளர்ச்சி என்று கூறலாமா? இளமையை செழிப்பு என்றால் முதுமையை அதன் இழப்பு என்று கூறலாமா?
இந்த முதுமைக்கு என்னதான் இலக்கணம்?
இளமையின் உச்சக்கட்ட நிலையிலிருந்து இறங்குமுகம் பெறுகின்ற நிலை தான் முதுமை என்பார்கள். அப்படியென்றால் இளமையின் உச்சக்கட்டத்திற்குரிய வயது என்ன? முதுமை தொடங்கி விட்டது என்று கூறுவதற்குரிய அடிப்படை வெளிப்பாடுகள் தான் என்ன?
முதுமையை விவரிக்கும் சில விளக்கங்களைப் பாருங்கள். முகத்திலே முற்றிப்போன முதிர்ச்சி தெரிகிறது. அங்கே வரி வரியான கோடுகளும் ஏற்ற இறக்கங்களும் வருகின்றன. கண்கள் குழி விழுந்தாற்போல் உள்ளடங்கிப் போகின்றன. பார்வையின் ஆற்றல் குறைகிறது. தூரப்பார்வை திட்டப்பார்வை என்று விரிந்து கண்களை சுருக்கிக் கொண்டு பார்க்க வைக்கின்றது. கழுத்திலே சுருக்கங்கள் களையாக மண்டிக் கிடக்கின்றன.
கைநரம்புகள் புடைத்தெழுந்து வரிக்கோலம் போடுகின்றன. முதுகிலே கூன் பரப்பு மிகுதியாகிக் குனியச் செய்யும் தோற்றம் விளைவிக்கிறது. கால் நடை தளர்கிறது. நடையிலே அடி எடுத்து வைக்கும் தூரம் குறைந்து குறு அடி குறு நடையாக மாறுகிறது. தாடைகள் விரிவடைகின்றன. முகப்பொலிவு மாற்றம் பெறுகிறது.
மேனியிலே மினு மினுப்பு குறைந்து, தோலிலே வரட்சி நீர் காணாத நிலப்பரப்பு போன்று இலேசான கீறல்கள். தலையில் வழுக்கை! முடி உதிராமல் இருந்தால் அலைநுரை போன்ற நரை குரலிலே நடுக்கம்.
நடையிலே தளர்ச்சி போலவே, உள்ளத்திலும் ஒருவித வெறுமை உணர்வு. இதுபோல எத்தனையோ மாற்றம்.
இப்படித்தான் முதுமை இருக்கும் என்று நாம் அறிகிறோம். ஆனால் எந்த வயதில் முதுமை நம் மீது ஏறிக் கொள்கிறது? இருபதிலா, முப்பதிலா? எழுபதிலா? யாராலும் சொல்ல முடியவில்லையே!
மேலே கூறிய எல்லாமே வந்தால் தான் முதுமையா? அல்லது ஒன்றிரண்டு வந்து சேர்ந்துவிட்டாலே முதுமை என்று சொல்லி விடலாமா?
நாற்பது வயதுக்குள் நரை வந்து விடுகிறது. முகத்திலே சுருக்கங்கள் விழுந்து விடுகின்றன. சிலருக்கு இருபது வயதிற்குள்ளேயே முடி விழுந்து தலை வழுக்கையாகிப் போகிறது. இரத்தக் குழாய்களின் தடிப்புத்தன்மை முப்பத்தி ஐந்துக்குள் கைகளிலே தெரியத் தொடங்குகிறது.
இப்படியெல்லாம் எந்த வயதிலும் ஏற்படுகின்ற தன்மையை வைத்து. எப்படி நாம் முதுமையைக் கணக்கிடுவது? இப்படிப்பட்ட மாற்றங்கள் சிலருக்கு இருபதிலேயே தொடங்கி விடுகின்றன. ஒரு சிலருக்கு ஐம்பது ஆனாலும் வராமலேயே இருக்கின்றன.
50 வயது மனிதன் 30 வயது போலத் தோற்றமளிக்கிறான். 40 வயது மனிதன் 70 போல இருக்கிறான். ஏன்?
உடல் உறுப்புக்களில் வருகின்ற மாற்றங்கள் இயற்கையானதே. ஆனால் அது படிப்படியாக வரவேண்டுமே தவிர, ஒரேயடியாக நம்மை ஆட்கொள்ளுமாறு அனுமதித்துவிடக் கூடாது. அப்படியென்றால் முதுமை எப்படி நம்மை அடிமைப்படுத்தி விடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
மழலைப்பருவம் என்பது பிறந்து ஓரிரண்டு ஆண்டுகளில் இருப்பது. குழந்தைப் பருவம் என்பது முதலில் முளைத்த பொய்பற்கள் விழுந்து பிறகு முளைத்து உறுதியான பற்களாய் நிலை பெறும் வரை இருப்பது.
சிறுமியாக இருக்கும் பருவம் என்பது பூப்படையும் வரை என்பார்கள். சிறுவர்களுக்கு இப்படி ஒரு நிலை இல்லை என்பதால், சிறுவர் பருவம் எதுவரை நீடிக்கிறது? பெண்களுக்கு 12 முதல் 14 வயது வரை சிறுமி எனும் பெயர் தொடர்கிறது. பிறகு அவள் இளம் பெண்ணாக, கன்னிப் பருவத்தை அடைந்து விடுகிறாள்.
வாலிபப் பருவம் என்பது பெண்களுக்கு பதினாறில் தொடங்கி 18 வயது வரையிலும், ஆண்களுக்கு 20-ல் தொடங்கி 23 வயது வரை நீடிக்கிறது என்றும் சிலர் கூறுவார்கள்.
உடலாலும் உள்ளத்தாலும் திறம்பட பணியாற்றும் காலத்தை இளமைக் காலம். எழுச்சி மிக்கக் காலம் என்று கூறுவார்கள். இந்த எழுச்சிமிக்க இளமைகாலத்தின் இறக்கம்தான் முதுமையின் தொடக்கம் என்று கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு வயதால் வளர்ந்து வரும் உடல் தோற்றத்தையும் மாற்றத்தையும் வைத்துக் கொண்டு, இரண்டு வகையான காரணங்களை மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
- ஒன்று - இயற்கையாக வருகின்ற முதுமை
- இரண்டு - நோய்கள் தருகின்ற முதுமை.
இயற்கையாக வரும் முதுமை
கொஞ்சம் கொஞ்சமாக நொடிக்கு நொடி நாளுக்கு நாள் நாம் பெறுகிற, பெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சியை நம்மால் தடுக்கவே முடியாது. அது இயற்கையான வளர்ச்சி. சென்று போன காலத்தை நம்மால் மீட்டுக் கொண்டு வரமுடியாது. அது போலவே சுற்றிக் கொண்டு போன கடிகாரத்தைத் திருப்பி வைத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டு விட இயலாது.
வளர்ச்சி வளர்ந்து கொண்டே போகிறது. அந்த வளர்ச்சி வளமையுள்ளதாகத் தொடர்ந்து கொண்டேபோக வேண்டும். அந்த முதிர்ச்சியைத்தான் நாம் பெற வேண்டுமே தவிர, வளர்ச்சியில் தளர்ச்சியெனும் வெள்ளத்தைப் புகுந்துவிட அனுமதித்து விடக் கூடாது.
இந்த வளர்ச்சியின் வேகம் பரம்பரைக் குணாதிசியங்களைக் கொண்டு வருவதும் உண்டு. ஆகவே இயற்கையாகவே நமது உடலில் வரும் வளர்ச்சியையும், அது நம் மேல் கொள்கின்ற ஆதிக்கத்தையும் நாம் அனுசரித்துக் கொண்டே போக வேண்டும்.
வயதாகிக் கொண்டு வருவதைக் கண்டு ஆத்திரப்படுவதும் ஆதங்கம் கொள்வதும் அநாவசியமான முயற்சியே தவிர, அது அறிவார்ந்த போராட்டமாக அமையாது அந்த வளர்ச்சியின் முதுமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
நோய்கள் தரும் முதுமை
ஆனால் சந்தர்ப்பங்கள் சரியில்லாமலும், எதிர் பார்க்காத நேரத்திலும் நோய்கள் வந்து நெருக்கிக் கொண்டு நம்மை நசுக்குவதும் உண்டு. இத்தகைய நோய்கள் தான் உடலுறுப்புக்களை நோகச் செய்து, நொறுங்கச் செய்து, நசுங்கச் செய்து நேர்த்தியான உடலமைப்பினையும் நிறைவான தோற்றத்தினையும், நிலைகுலையச் செய்து விடுகின்றன.
இப்படி ஏற்படுகின்ற நோய்களை நாம் தடுத்து விடலாம். இதனால் ஏற்படுகின்ற முதுமைக் கோலங்கள் நம்மில் விளையாமல் விலக்கி விடலாம். இதனை முன்னெச்சரிக்கையான வாழ்க்கை, நல்ல பழக்கங்கள், நலமான சத்துணவு, நிம்மதியான உறக்கம் போன்ற முறைகளால் மாற்றி விடலாம்.
ஆகவே, நோய்களால் வரும் முதுமையை மாற்ற முயல்வது போலவே, இயற்கையாக வரும் முதுமையையும் நாம் வெற்றி கொள்ள முடியும். எப்படி?
அதாவது முதுமையில் இளமை என்பதாக
வயது உயர்ந்து கொண்டே போகட்டுமே? முதுமை தொடர்ந்து கொண்டே வரட்டுமே? மயக்கம் என்ன? வலிமையான இளமை கொண்டு வாழ்வதுதான் புத்திசாலித்தனம். அதைத் தான் நாம் இங்கு அறிய இருக்கிறோம்.
நாமெல்லாம் தனிமனிதர்களாக இருந்தாலும், சமுதாயத்திற்குள்ளே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமுதாயத்திற்கு அடங்கி, சமுதாயக் கட்டுப்பாட்டுக்கெல்லாம் இணங்கியே காலந்தள்ளிக் கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிற பருவங்களை நாம் இப்பொழுது மூன்று வகையில் பிரித்துக் கொள்வோம். அப்படிப் பிரித்துக் கொள்வது எளிதாக நிலைமையை தெரிந்து கொள்ள உதவும்.
1. வாலிபவயது, 2. நடுத்தரவயது, 3. முதிர்ந்த வயது.
வாலிப வயதைப் பற்றிக் கவலையில்லை. பெற்றோர்கள் பாதுகாப்பில் கவலையில்லாத வாழ்க்கை. உணவு, உடை உறக்கம் எல்லாமே மற்றவர் கொடுப்பதில் ஓடி விடுகிறது. இளமை வேகம் எதையும் ஜீரணித்துக் கொள்கிறது. ஆகவே, வாழ்க்கையின் பொற்காலம் இந்த வாலிபக் காலம். இதனை வீணாகக்கழிக்காமல் விவேகமாகப் போற்றி வாழ்பவர்களே முதிர்ந்த வயதில் சிறந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். அதாவது அந்த இளமைக்காலம் வளமையையும் வலிமையையும் சேர்த்து வைக்கின்ற காலம். எதையும் அறிந்து, எதிலும் இணைந்து எல்லாவற்றிலும் தேர்ந்து சீர்மையும் பெருமையும் பெறுகின்ற காலம்.
நடுத்தரவயதோ பொறுப்புக்கள் நிறைந்த காலமாக வந்து சேர்கிறது. தனக்கென்று ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் உத்தியோகப் பந்தாக்கள், சமுதாய சூழல்கள், எல்லாமே வந்து கூடிக் கொள்கின்ற காலம், இந்தப் பருவத்தில் வேகம் குறைந்து, விவேகத்தின் வளர்ச்சி மிகுந்திருக்க வேண்டியது முக்கியம். அறியாமை விளையாட்டுக்கள் மாறி, அனுபவத்தால் தெளிவடைந்திருக்க வேண்டியது தேவையான குணமாகும்.
இந்த நடுத்தர வயதானது உடலால் வளர்ச்சியுற்றுப் பக்குவம் அடைந்திருப்பதுபோலவே, உள்ளத்தாலும் பக்குவம் அடைந்திருக்க வேண்டும். மனதில் தெளிவுபோலவே, உள்ளத்தாலும் பக்குவம் அடைந்திருக்க வேண்டும். மனதில் தெளிவு போலவே, உடலிலும் வலிமை இருக்க வேண்டிய காலம். ஒன்றிருந்து ஒன்றில்லையென்றால், இந்த நடுத்தர வயது வாழ்க்கை நாசமாய்ப் போய்விடும். அதற்குப் பிறகு முதிய வாழ்க்கை எப்படி இருக்கும்.
குச்சியே கோணலாக இருந்தால், நீரிலே அதன் பிம்பம் நேராகவா விழும்? அதுபோல்தான் அவரது பிற்கால வாழ்க்கை பெரும் பிரச்சனைகளோடு தொடர்ந்து கொண்டேயிருக்கும். நடுத்தர வயது வாழ்க்கையை மிகவும் எச்சரிக்கையுடன் தொடர வேண்டும். அதனால் தான் மேனாட்டறிஞர் ஒருவர் கூறுகின்றார் இப்படி, வாழ்க்கை நாற்பதில் தான் தொடங்குகிறது என்று.
மூன்றாவது காலக்கட்டந்தான் பார்க்க வேண்டிய முக்கியமான கட்டம். உடலால் முதிர்ச்சி பெற்றிருக்கும்போது இளமையாக வாழ்வது எப்படி என்பதுதான் நமக்குரிய பிரச்சினை.
வயது தான் உடலினை வளைத்துக் கொண்டிருக்கிறது. முதுமையோ மேலேறி மிரட்டிக் கொண்டு விரட்டிக் கொண்டிருக்கிறது. என்றாலும், மனம் என்று ஒன்று இருக்கிறதே. அதன் நிலை என்ன? தசைகளுக்குத் தான் இளமையும் முதுமையும் உண்டு. ஆனால் மனதுக்கு அவை இல்லை. அது என்றும் இளமைதான் என்னும் வேதக் கருத்தினை நாம் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வயதாகிறது என்று நம்மிடையே ஒருவித மனப்பாங்கினை கவலை ஒலிக்கின்ற தொனியிலே கூறிக் கொண்டு, கலங்கிப் போய்விடுகிறோம். எந்தக் காலத்திலும் கவலையிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கருத்துக்களை அறியவும் செயல்படவும் இல்லாமல், விட்டுவிடுகிறோம்.
முதிய வயது வருகின்றது என்றால், அதற்கென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அதை எண்ணிப்பார்க்காமல், வந்து விட்டதற்காக ஏன் வருந்த வேண்டும்? வதங்க வேண்டும்? கலங்க வேண்டும்? மயங்க வேண்டும்?
மூன்றாவது காலக் கட்டம் வந்த பிறகு, மனதுக்குத்தான் அதிகம் கடமைகள் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்தே போய் விடுகின்றார்கள். அந்த வயதிலே வருகின்ற குழப்பங்கள். குதர்க்கமான நினைவுகள், குறுகுறுக்கும் கற்பனைகள் முதலியவற்றை முனைப்புடன் அறிந்து பின்தொடர வேண்டுவது மிக மிக முக்கியமாகும்.