நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/நினைப்பும் தவிப்பும்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2. நினைப்பும் தவிப்பும்

மெய் என்றால் உடல், மெய் நோய் என்றால் உடல் நோய். இதையே உண்மையான நோய் என்றும் கூறலாம். பொய் நோய் என்றால் நமக்கே என்னவென்று தெரியாத மனநோய். கண்ணுக்குத் தெரிகின்ற உடல் நோய், கண்டே பிடிக்கமுடியாத மனநோய். இந்த இரண்டிலும் மாட்டிக் கொண்டுதான், மனித இனமே திண்டாடிக் கொண்டிருக்கிறது.

‘மனிதன் நினைக்கிறான். இறைவன் அழிக்கிறான்’ என்பதற்கிணங்க, மனிதனது நினைப்பு எப்படியோ எழுகின்றது. அதன் கூடவே தவிப்பும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

தவம் செய்து திவ்யமடைவதற்காக ஒரு முனிவர் காட்டுக்கு வந்துவிட்டார். உலக ஆசையையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஓர் முடிவுடன் வந்தவர் அவர். பிறந்தபோது, இருந்த மேனியுடனே வாழ்ந்துகொண்டு இருந்தார். காரணம், ‘கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை, கூடவருவதும் ஒன்றுமில்லை’ என்று கூறியவாறு, எல்லாவற்றையும் துறந்ததற்கு அடையாளம் அதுவே என்று எண்ணி, அவர் பிறந்த மேனியராகவே தவம்செய்து வாழ்ந்து வந்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. அரிய தவம் செய்யும் நேரத்தில் அவர் மனத்தில் ஓர் அற்பமான நினைப்பு. மற்ற முனிவர்களும் இருக்கின்றார்கள். மரவுரிதரித்தல்லவோ நடக்கின்றார்கள். நான் மட்டும் இப்படி ஏன் இருக்க வேண்டும்? சிறு கோவணம் கட்டிக்கொண்டால் நல்லது என்று அவர் நினைத்துக் கொண்டாராம்.

செயல், ஆசைக்கேற்ப நடந்தேறி விட்டது. ஒருநாள் காலையில் அவரது கோவணத்தைக் காயப் போட்டிருந்த நேரத்தில், எலியொன்று கடித்துப் போட்டிருந்ததை அறிந்து, அவர் அதிகக் கோபம் அடைந்தார். சாபம் விடவில்லை. மாறாக ஒரு சபலம். பொல்லாத எலியை, பூனையை விட்டுக் கொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, எலியே இருக்காதல்லவா! ஆகவே, ஒரு பூனையைப் பிடித்து வளர்க்கத் தொடங்கினார்.

பூனைக்குப் பால் வேண்டுமே? பசியோடு எப்படி அது எலியைப் பிடிக்கும்? ஆகவே, பூனைக்குப் பால் வேண்டும் என்பதற்காக, பசுமாடு ஒன்றையும் கொண்டு வந்து விட்டார். பூனைக்குப் பால் கிடைத்தது. பசுவுக்கு இரை வேண்டுமே? அதனைக் கட்டிக்காத்து, குளிப்பாட்டி, புல் போட்டுக் காக்க அவருக்கு ஏது நேரம்? தவம் வேறு செய்ய வேண்டுமே? ஆகவே, மாட்டைப் பார்த்துக் கொள்ள ஒருவனை வைத்துக் கொண்டார்.

வந்த மனிதன் தனியாக வரவில்லை. தனக்குத் துணையாக ஒரு பெண்ணையும், மனைவியாகத் தான்-கூடவே அழைத்து வந்துவிட்டான். முனிவரின் ஆதரவில் அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். பசு பால் தந்தது. பூனை குடித்து விட்டுக் காவல் காத்தது. எலியின் தொல்லை குறைந்தது. கோவணம் கடிபடாமல் காப்பாற்றப்பட்டது. இந்தத் தொடர் சம்பவத்திற்குள் ஆண்டுகள் பல ஆயின. வந்த மாட்டுக்கார தம்பதிகளுக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தது. குடிசைக்குள் குதூகலத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. எல்லோரையும் காக்கின்ற பொறுப்பு இப்பொழுது, சாமியார் தலையில்தான் விழுந்தது.

ஒருநாள், அடுப்பிலிருந்து தெறித்து விழுந்த பொறியால் திடீரென்று குடிசை தீப்பிடித்துக் கொண்டது. அது காட்டுக்குள்ளே ‘காட்டுத் தீ’ போல பரவத் தொடங்கியது. தவம் செய்ய உட்கார்ந்த முனிவர் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என, வேகமாக ஓடத் தொடங்கினார். அவரது கால்களை யாரோ கட்டிப்பிடித்து இழுப்பது போலத் தோன்றவே, திரும்பிப் பார்த்தார். மாட்டுக்காரத் தம்பதிகள் ஆளுக்கொரு காலைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

‘எங்களைத் தவிக்க விட்டுவிட்டு எப்படி நீங்கள் மட்டும் ஓட முடியும்!’ ‘பிடியுங்கள் பிள்ளைகளை’ என்று இரண்டைத் தந்தார்கள். ஆளுக்கு இரண்டு என்றார்கள். ஆளுக்கு இரண்டு என்று அவர்கள் பிரித்துக் கொண்டது போக, மீதி இரண்டையும் தூக்கித் தோள்களில் வைத்துக் கொண்டு, சாமியார் ஓடினார். கோவணம் கட்ட ஆசைப்பட்டு, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு குடும்பஸ்தன் போல ஓடுகின்றேனே என்று வேதனைப் பட்டாராம் அந்த முனிவர்.

அவர் நினைப்பு ஒன்று. நிகழ்ந்த தவிப்பு ஒன்று, அந்த நினைப்புதான் ஆசையாக வந்து மனிதனை பாடாய்ப்படுத்தி விடுகிறது. மனதிலே இது நோயாக மாறி வாட்டி வதைத்து விடுகிறது. இந்தப் பொய் நோய்கள் போடும் தூபம்தான் ஆசை. ‘ஆசைதான் அனைத்துக்கும் காரணம். ஆகவே ஆசையை அழித்துவிடு’ என்று புத்தர் கூறினாலும், ஆசையை அழிக்கும் ஆசைப்பட்ட அவரால் முடியவில்லையே! ஆட்டிப் படைக்கும் ஆசைக்குள் அகப்பட்டுக் கொண்டு ஆவலாய் பறக்கின்றவர்களாகத்தானே நாம் வாழ்கிறோம்!

இந்த மனித நெஞ்சம் இருக்கின்றதே! அது யாருக்கும் அஞ்சாத ஒன்று. படுத்துக்கொண்டு அசை போடும் பசு மாட்டைப் போல, நினைத்த இடத்திலே திமிர் முறிக்கும் நாயைப் போல, கொம்பு விட்டுத் தாவித் திரியும் குரங்கைப் போல, கண்ட இடத்தில் கத்தி மகிழும் கழுதையைப் போல, ‘அறுக்கப் பிடித்தாலும் கத்தும்’ அடைக்கப் பிடித்தாலும் கத்தும் என்று கூறுகின்ற கோழியைப் போல வாழ்கிறது மனித மனம்.

அந்த மனத்தில் ஆசை நினைப்பு ஏற ஏறத் தவிப்பும் மீறிக் கொண்டே போகின்றது. அந்த ஆசை நெஞ்சை அடக்கி விட்டால் எந்த நோயும் வராதுதான்! மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது என்பார்கள். ஆனால் நல்லதை நினைத்துக் கொண்டு வாழலாம் அல்லவா! நல்லதை நினைத்து வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு எப்படி மாறும்? இல்லையென்றால் கற்பக மரத்தின் கீழே இருந்தவன் கதை போலத்தானே வாழ்க்கையும் அமைந்து விடுகிறது. அவன் கதை எப்படி?

அதையும் தெரிந்து கொள்வோமே.