நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/பழிப்பும் துடிப்பும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. பழிப்பும் துடிப்பும்

அழகு நிலையத்தின் உரிமையாளர் ஆனந்தராஜ், அந்தக் கடைக்குள் இருக்கிறார் என்றார், அங்கே ஆரவாரச் சிரிப்பும் இருக்கும். கேலியும் கிண்டலும் வெடிக்கும். கூட இருப்பவர்களின் கும்மாளச் சிரிப்பும் கேட்கும். அதைக் கேட்டுக் கொண்டே அவர் அருகில் போய் பார்க்கலாம் என்று விரும்பிப் போனால், அவர் போட்டிருக்கும் மேல் நாட்டு செண்டின் மணம், மூக்கில் மிளகாய் நெடி ஏறுவதுபோல் ஏறி, நம்மை திக்குமுக்காடச் செய்தவாறு வரவேற்கும்.

நிலையத்தின் உள்ளே ஊதுபத்தி எப்பொழுதும் புகைந்து கொண்டேயிருக்கும். ஆங்காங்கே கண்ணாடி தூய்மையாகத் துடைக்கப்பட்டு, பார்க்கும் ஆட்களின் முகத்தைப் பளிச்சென காட்டிக் கொண்டிருக்கும். அவரோ தும்பை மலர்போல வேட்டி சட்டை அணிந்து கொண்டிருப்பார். அவரது வாய், ஏதாவது ஒரு சினிமா பாட்டை முனகிக் கொண்டேயிருக்கும்.

‘நீங்கள் மிகவும் அழகாயிருக்கிறீர்கள்’ என்று யாராவது சொல்லிவிட்டால், அவரது முகம் சிவந்து போய்விடும். நாணத்தால் அல்ல. தற்பெருமையால், சொல்லியவருக்கு டீ டிபன் உடனே கிடைத்துவிடும். தான் செய்கின்ற தொழிலைத் தெய்வம் போல நினைப்பவர் அவர்.

‘பறவைகள் விதைப்பதுமில்லை. அறுக்கிறதுமில்லை. அவற்றை ஆண்டவனே காப்பாற்றுகிறார். மனிதன் ஏன் இப்படி பணத்திற்காகப் பேயாய் அலைகிறான்’ என்று ஒரு போர்டு எழுதித் தொங்கவிட்டிருந்தார். இது ஏன் என்று கேட்டால், ‘இதுவே என் வாழ்வின் வழிமுறை’ என்பார். கூடவருவது பாவ புண்ணியம்தான். உடலில் ஒன்றுமில்லாமல் உலகில் பிறந்தோம். போகும்போதும் அப்படித்தான்’ என்பார்.

சிங்காரமான பேச்சுக்குள்ளே சிருங்காரம் எதிரொலிக்கும். அன்றாடம் வருகின்ற வருமானத்தை அப்படியே செலவு செய்வதும், மீதியானால் பெட்டியில் வைப்பதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ‘இன்றைக்கு நன்றாக வாழ்வோமே’ என்பதுதான் அவரது சித்தாந்தம். தினம் வருகிற ஐந்து அல்லது பத்து ரூபாயில் அவரது பொழுது ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தது. அவரது மனைவியும், அவரது போக்கைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இருவரும் கவலையே இல்லாமல் ஆனந்த ராஜாவாக, அவரது அழகு நிலையத்தை ஆனந்தக் கோட்டையாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.

அன்றும் அப்படித்தான் அழகு நிலையம் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆனந்தராஜ் கத்தியும் கையுமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு முதியவர் உள்ளே நுழைந்தார். அந்தக் கடையின் வாடிக்கையாளர்தான். ஆனால் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைதான் வருவார். அடிக்கடி வந்தால் காசு செலவாகிவிடுமே! அடிக்கடி வந்தாலும், முடி வளராமலா நின்றுவிடும்! அதற்கு ஏன் போய் வீணாக காசை செலவழிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை!

அவர் வந்துவிட்டார் என்றால் ஆனந்தராஜுக்குக் கொண்டாட்டம். அந்த முதியவரைக் கேலி செய்தே களைத்துப் போய்விடுவார். அந்த ஊரிலே பெரிய பணக்காரரான அந்தக் கிழவர். கிழிந்த கந்தலான வேட்டியையும் துண்டையும் அணிந்து கொண்டிருந்தார். தண்ணீரைப் பல நாளாய்க் காணாத வேட்டி. எண்ணெய் காணாத தலைமுடி. சரியாக சாப்பிடுவாரோ என்னவோ என்பது போலத் தோற்றம். பார்த்தால் ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபப்படுவது போல ஆள் இருப்பார்.

சவரம் செய்தாயிற்று. கேலியும் முடிந்தாயிற்று. ‘இந்தப் பணத்தைக் கட்டிக்கொண்டு அழுகின்றீர்களே! நாம் வைத்ததுதான் பணம். அந்தப் பணத்திற்கு நாம் அடிமையாக ஆகிவிடக்கூடாது’ என்று பேசியவாறே கூலிக்குக் கையேந்தினார் ஆனந்தராஜ். வந்தவரின் மடி காலியாக இருந்தது.

மடியைப் பார்த்தார் முதியவர். அங்கே பணம் இல்லை, உடனே ஆனந்தராஜ் அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தார். உடனே அந்த முதியவர், ‘நீ வீடுவரை வந்து போயேன். அங்கே தருகிறேன்’ என்று கெஞ்சாக் குறையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். ‘இப்படியும் ஒரு ஜென்மமா’ என்று தலையிலடித்தவாறு பின் தொடர்ந்தார்.

வீட்டில் உட்கார்ந்திருந்த ஆனந்தராஜ் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கையிலே எதையோ அள்ளி வந்து, அவரது துண்டை விரிக்கச் சொன்னார் முதியவர். ஆனந்தராஜ் துண்டை விரித்துக் காட்டினார். அதிலே வெள்ளி நாணயங்களை, வீழும் அருவி போலக் கொட்டினார்.

கைகள் கனக்க பிடித்துக் கொண்டார். அழகு நிலையத்தின் உரிமையாளர் முகத்தில் அசடு வழிந்தது. ‘என்னங்க இது’ என்று குழைந்தார். ‘இது உனக்காகத்தான். எடுத்துக்கோ’ என்றார் முதியவர். ‘எதுக்குங்கு’ என்று பேச ஆரம்பித்தபோது, ஆனந்தராஜுக்குப் பேச்சே வரவில்லை. தொண்டையில் ஏதோ பந்து அடைத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

சமாளித்துக் கொண்டு புறப்பட்டார் ஆனந்தராஜ். முதலில் நடை ஆமையாயிற்று. மனம் ஊமையாயிற்று. வீடு நெருங்க நெருங்க நடை முயல் வேகமாயிற்று. இதில் எவ்வளவு இருக்கும்? என்ற கேள்வி, மனதில் தேள் கடித்த குரங்கு போல குதித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்குள் சென்றதும் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போனார்.

கைகள் மின்னல் வேகத்தில் நாணயங்களை எண்ணத் தொடங்கின. வெறும் பத்துப் பைசா, நாலணா நாணயங்களைப் பார்த்துக் கொண்டிருந்த கைகள், வெள்ளி நாணயங்களின்மேல் விளையாடிக் கொண்டிருந்தன. எண்ணிப் பார்த்தார். 199 ரூபாய். அடேயப்பா! இவ்வளவு ரூபாயா! கஞ்சன் எப்பொழுது கர்ணன் ஆனான்!

199 என்ற எண் மனதிலே பூதாகரமாக உருவெடுத்து, நிறைந்து கொண்டது. இன்னும் ஒரு ரூபாய் இருந்தால் 200 ரூபாய் ஆகிவிடுமே என்ற நினைவு முளையிட்டுக் கொண்டது. இருந்த 1 ரூபாயைப் போட்டுப் பார்த்தார். 200ஆகி விட்டது. இன்னும் பத்து ரூபாய் என்றால் என்று அடுத்த நினைவு. தினந்தினம் வந்ததையெல்லாம் போட்டு சேர்க்க ஆரம்பித்தார். ஆறுமாதம் ஆயிற்று! ஆனந்தராஜ் வாழ்வில் அப்படி ஒரு திருப்பம்.

மறுமுறை முதியவர் அழகு நிலையத்திற்கு வந்தார். ஆறுமாதம் கழித்துதான். ஆனந்தராஜ் எங்கே என்று, கத்தியும் கையுமாக நின்றவரைக் கேட்டார். ‘நான்தாங்க’ என்ற பதில் வந்தது. கிழிந்த கந்தல் உடை. எண்ணெய் இடாத தலைமுடி. தாடி மீசை, என்னப்பா இது என்றார்! எல்லாம் நீங்க போட்ட பிச்சைங்க. ஒரு ஆயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு! ஒரு வீடு வாங்கணும்னு, நிலம் வாங்கணும்னு வீட்டில மனைவி சொல்றா! என்று பணப்பேச்சில் மணியடித்துக் கொண்டிருந்தார்.

ஊதுவத்தி மணம் இல்லை. கடையில் பளபளப்பு இல்லை, பணத்திற்கு அடிமையான ஆனந்தராஜ் தன்னைக் கவனித்துக் கொள்ளாததால் நோய்க்கு அடிமையானார். காசு காசாகச் சேர்ந்தது, கூடவே நோயும் கவலைகளும் சேர்ந்துகொண்டன. ஆனந்தராஜுக்குப் புரிந்தாலும் அவரால் பண ஆசையிலிருந்து மீளவே முடியவில்லை.

ஆசைக்கு அடிமைப் பட்ட ஆனந்தராஜ், அறியாமையில் வீழ்ந்தார். அறிவினை இழந்தார். ஆரோக்கிய வாழ்வினையும் மறந்தார். இறுதியாக, நோயாளியாகி நொந்து நைந்தார். காரணம், ஆசையெனும் பொய் நோய் அவரை அல்லோலகல்லோலப் படுத்தி விட்டதுதான்.

கொஞ்ச நேரம் தன்னை நினைத்து, தன்நிலையை மதித்து, தன் தகுதியை யோசித்து வாழ்ந்து வந்திருந்தாரானால், அவர் இன்னும் வசதியுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்திருக்கலாம். தன் குறையை உணர்ந்து அதனை நிறைவாக்கிக் கொள்கின்றவாறு அறிவைப் பயன்படுத்தி வாழ்ந்துவிட்டால், மனக் குறையெனும் பொய் நோய் வந்து வாலாட்டுமா?

இந்தக் கதையின் நாயகனைப் பாருங்கள். தன்னையறிந்து, தலைவனாகி விட்டான்.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற சேதி கேட்டு அரண்மனை ஜோசியர் ஒருவர் ஆனந்தப்பட்டார். தன் குழந்தையைப் பற்றி வருங்காலம் எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்கும்பொழுது, அவன் பயங்கரத் திருடனாகப் பிற்காலத்தில் மாறிவிடுவான் என்பதாக அறிந்தார்.

அரசனின் அன்புக்குப் பாத்திரமான அரண்மனை ஜோசியரின் மகன் திருடனாக வாழ்ந்தால், அவரின் பெயரும் புகழும் என்னவாகும்! ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளானார். யாருக்கும் தெரியாமல், காட்டில் போய் குழந்தையைப் போட்டுவிட்டு வந்தால்..... இப்படியும் யோசித்தார். காலம் முழுவதும் திருடனின் தந்தை என்று கண்கலங்குவதைவிட, ஒரே நாளில் அழுது தீர்த்து விடலாமே என்றும் யோசித்தார்.

கடைசியில் தந்தை பாசம் வென்றது. அவன் எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்! நாம் சகல கலைகளிலும் அவனை வல்லவனாக்கி விடுவோம் என்று கல்வி கேள்விகளில் சிறப்புறப் பயிற்றுவித்தார். தந்தையைப் போவவே அவனும், கைரேகை கலையிலும் அற்புத ஆற்றல் படைத்தவனாக விளங்கினான். அவனது ஆற்றலைக் கண்டு அந்த நாட்டு அரசனும், அவனுக்கு அரண்மனையில் உயர்ந்த பதவி அளித்துக் கெளரவித்தான்.

வாலிபனாகிக் கொண்டு வரவர தந்தையின் எண்ணமெல்லாம், கலவரத்திலேதான் உழன்று கொண்டிருந்தது. இப்பொழுது அரண்மணை உத்தியோகமும் கிடைத்தாகி விட்டது. திருட்டுக்கு நல்ல வாய்ப்பு உண்டே! நம் குடும்ப மானமும் பாரம்பரியமும் இதோடு தொலைந்தது என்று தந்தை தவித்தார். மகனுக்குப் பதவி கிடைத்தது பற்றி மகிழ்ச்சி ஒரு புறம். மானபங்கப்படப் போகிறோமே என்ற கலக்கம் ஒரு புறம்.

தன் மகன் எப்படியிருப்பான் என்று கணித்து வைத்தக் குறிப்பினை, யாருக்கும் தெரியாமல்தான் வைத்திருந்தார். ஆனால், மகனுக்குக் கிடைத்த செய்தி, அவருக்கே தெரியாமல்தான் இருந்தது.

தனது விதி திருட்டுப் பழக்கத்தில் திருப்பி விட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்ட மகன், முதலில் தடுமாறிப் போனான். விதியை மதியால் வெல்லலாம் என்று அவனது கல்வியறிவு கண் சிமிட்டியது. முடியுமா மாற்ற என்று விதி நினைவு அச்சமூட்டியது. இரண்டுக்கும் இடையில் மகனும் இருதலைக் கொள்ளி எறும்பானான்.

மாலையில் வேலை முடிந்து, வீடு திரும்பும் பொழுதெல்லாம் அவனது உள்ளங்கை அரிக்கும். எதையாவது ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று ஆசை மனம் துடிக்கும். இதனை அடக்கி அடக்கிப் பார்த்தான், முடியவில்லை. முடிவில், திருடினால்தான் மனம் மகிழும் என்ற முடிவுக்கும் வந்து, திருடுவது என்றும் துணிந்து விட்டான்.

வழக்கமான அன்றாடப்பணி முடிந்து, வீடு திரும்பும் வேளையில் ‘தன் தொழிலைத்’ தொடங்கி விடுவது என்று முடிவுக்கு வந்தான். அரண்மனையை விட்டு வெளியே செல்லும் பொழுது, காவலர்கள் அவனை பரிசோதனை போடுவது இல்லை. ஏனென்றால், அவன் அரசருடன் நெருங்கிய தொடர்பு உடையவனாக பதவியிருந்ததே காரணம்.

ஓர் அறைக்குச் சென்று, ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடி வெளியே வந்தான். நல்ல வேளை; யாரும் பார்க்கவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டான். முதல் நாளே மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா!

அதைத் தன் அங்கிக்குள் மறைத்துக் கொண்டு வெளியே வந்தான். வாயிற் காவலர்கள் வணக்கம் செய்து வழியனுப்பி வைத்தார்கள். ‘வெற்றியோ வெற்றி’ என்று ஆசைமனம் கூவிக் கொண்டாட்டம் போட்டது. கால்கள் விரைந்து நடந்தன. வீட்டிற்கு வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு அறைக்குள் போனான். சுற்றுமுற்றும் பார்த்து, தான் எடுத்துக் கொண்டு வந்ததை பத்திரப்படுத்தி வைத்தான். நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.

அரண்மனையில் இருந்து திருடி வருவது மிகவும் எளிது என்பது இப்பொழுது அவனுக்குப் புரிந்து போயிற்று. இனிமேல் இப்படியே செய்தால், ‘மனமும் மகிழ்ச்சியடையும், மாட்டிக்கொள்ளவும் மாட்டோம்’ என்று எண்ணிக் கொண்டான். திருட்டு வேலை தினமும் திவ்யமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.

மகனைப் பற்றி எந்தவிதமான அவக்கேடான செய்தியும் வரவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த தந்தைக்கு, மடிமீது இடி விழுந்ததைப் போல செய்தி ஒன்று வந்தது.

தினமும் எதையோ மறைத்துக் கொண்டு எடுத்துப் போகிறான் என்ற ஓர் சந்தேகம், வாயிற் காவலர்களுக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது.

என்றாலும், நேரடியாகக் கேட்க முடியாத சூழ்நிலை, என்னவென்று கேட்டு, ஒன்றும் இல்லாமல் போய் விட்டால், இராஜகோபத்திற்கு ஆளாக நேரிடுமே! அதற்காக ‘அவனை’ கண்காணிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சந்தேகம் சரியானதுதான் என்று உறுதி பட்டதும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரசனிடம் போய்க் கூறிவிட்டார்கள்.

‘எல்லாக் கலைகளிலும் வல்லவனாகவும், சிறந்த இராஜ தந்திரியாகவும் விளங்குகின்ற அவனா திருடுகிறான்! என்று முதலில் ஐயப்பட்டான் அரசன். பிறகு இப்படியும் இருக்குமா என்று வேதனைப்பட்டான். முடிவில் தானே சோதனை செய்து விடுவது என்றும் அவன் துணிந்து விட்டான்.

வழக்கம் போல அவன் திருடி மூட்டைக் கட்டிக் கொண்டு சென்றவுடன், ஒரு கிராமத்தான்போல மன்னன் மாறு வேடம் அணிந்து கொண்டு பின் தொடர்ந்தான். அவன் வீட்டிற்குள் சென்று அந்த மூட்டையை வெளியே மெதுவாக எடுக்கும் பொழுது, கையைப் பிடித்துக் கொண்டான் மன்னன். கையும் களவுமாகப் பிடித்து விட்டான் மன்னன் என்றதும், அவன் துடித்துப் போனான். திருடிய பொருட்களை எல்லாம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்? எத்தனை நாளாய் இது நடக்கிறது என்று அரசன் அதட்டவே, அச்சத்தால் நடுங்கிப் போய், அரசனைப் பார்த்தான் அவன்.

‘நான் திருடவே இல்லை. திருடவே இல்லை’ என்று அவன் கூறினாலும், யார் நம்புவார்? கையும் களவுமாக அல்லவா பிடிபட்டிருக்கிறான்!

அந்த அறைக்குள்தானே மறைத்து வைத்திருக்கிறாய்! கதவைத் திறக்கிறாயா? அல்லது பூட்டை உடைத்து என்று அரசன் பேசி முடிப்பதற்குள், தான் மறைத்து வைத்திருத்த மூட்டையை ஒரு மேடையின் மேல் வைத்தான்.

அரசன் கண்ணசைவைப் புரிந்து கொண்டு அங்கு இருந்த சேவகன், மூட்டையை அவிழ்த்தான்.

எல்லோருக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அரசனைவிட, அவனைப் பெற்ற தந்தையான அரண்மனை ஜோதிடருக்குத்தான் அதிக ஆச்சரியமாக இருந்தது. அந்த மூட்டைக்குள்ளே பொன்னும் மணியும் இருக்கும் என்றல்லவா நினைத்தார்கள்? அதற்கு மாறாக அங்கே இருந்தது மண். ஆமாம்! அந்த மூட்டை மண்மூட்டையாக இருந்தது.

மண்ணையா திருடிக் கொண்டு வந்தாய் என்றான் மன்னன்! ஆமாம் மன்னா! வேறு என்ன செய்வது! என் விதியோடு போராடிக் கொண்டிருந்தேன். எதையாவது திருட வேண்டும் என்ற என் மன அரிப்பை இப்படி மாற்றிக் கொண்டேன். அரண்மனையிலிருந்து தெரியாமல் இந்த மண்ணையும் திருடிக் கொண்டு வந்தது தவறுதான். என்னை மன்னிக்க வேண்டாம். தண்டித்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

விதியை மதியால் வெல்ல முயன்ற இளைஞனை, மன்னன் வாழ்த்தினான். அவன் அறிஞன்தான் என்று பாராட்டினான். பெற்ற மகனுக்குத் தான் கற்றுத் தந்த கலைகளும் கேள்வி அறிவும் கைவிட்டுப் போய் விடவில்லை. மானத்தைக் காப்பாற்றி விட்டது என்று ஈன்ற பொழுதினும் சான்றோன் எனக் கேட்டத் தாய்போல், தந்தை மனம் மகிழ்ந்தான்.

திருடும் குணத்தை மனத் தெம்புடன், வெற்றி கண்ட அந்த இளைஞனைப் போல, மனதை அடக்கி ஆளும் வல்லமை படைத்தவர்களே, வாழ்க்கையில் ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றார்கள். எதையாவது எண்ணச் செய்வது. ஏக்கமுற வைத்து, புரட்டி எடுத்து சித்ரவதை செய்கின்ற பொய் நோய்க்கு ஆளாகாதவனே, வாழ்க்கையில் நோயில்லாமல் வாழ முடியும்!

கற்ற அறிவின் மூலம் வெற்றி பெற்றவனைப் போல, வாழ்வில் வெற்றி பெறுபவர்களும் உண்டு. இருந்த தண்ணீரை வந்த வெள்ளம் கொண்டு போன கதை போல, இயல்பாகவே இருக்கின்ற தன் சுய அறிவையும், வந்தவன் சொல்லுக்கு விற்று, வாழ்விழந்தவர்களும் உண்டு. அவ்வாறு வாழ்விழந்த உலகநாதனை இங்கே பார்ப்போம்.