நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/வதந்திக்கோர் வனிதாமணி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
8. வதந்திக்கோர் வனிதாமணி

தான் என்ன நினைக்கிறோம் என்பதை வெளியில் சொல்லாமல் மனதில் போட்டுக் கொண்டு, மருகிக்கொண்டிருப்பவர்கள் பலர். தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளியில் சொல்லாமலேயே, மர்மமாக நல்லது செய்ய விழைந்து, மனப்போராட்டத்தில் உருகிக் கொண்டிருப்பவர்கள் சிலர் செய்கின்ற தவறைத் திருத்திக் கொள்ளாமல், இதிலே திருப்தி பட்டுக்கொண்டு தேய்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவ்வாறு, மன நோய்க்குப் பாய் விரித்து, படுக்கை அமைத்து, படுவேதனைக்கு ஆளாகும் மனிதர்கள் சற்று சிந்தனை செய்ய ஆரம்பித்தால் போதும், சந்தோஷம் தானாகவே வந்துவிடும்.

வாய்க்குத் தீனி போட்டு, வாயைத் திருப்திபடுத்தி வதைபட்டான், வாழ்வை இழந்தான் கனகசுந்தரம். வாயையே தீனியாக்கி வதந்தியில் மிதக்கவிட்டு, தன் வாழ்வையே இழந்தாள் ஒரு வனிதாமணி, அவள் பெயரும் வனிதாமணிதான்.

படித்தவள்தான். பலருக்குப் புத்திமதி சொல்லக் கூடிய உயர்ந்த நிலையில் இருப்பவள்தான். பணவசதிக்குக் குறைச்சல் இல்லைதான். நினைத்ததை வாங்கக்கூடிய நிலைமையில் வாழ்பவள்தான். பொறுப்பான அரசாங்கப் பணியில் சில ஆண்டுகளாக இருப்பவள். அவளுக்கு ஒரு மனத்திருப்தி. அதாவது அடுத்தவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.

தன் வீட்டிற்கு யார் வந்தாலும் சரி, எந்தக் குறையும் இல்லாமல் கவனிப்பாள். உபசரிப்பாள். விருந்து வைப்பாள். பிறகு, அரசியல் பேசத் தொடங்கி தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி ஆரம்பித்து, ஒரு விரிவுரையே ஆரம்பித்துவிடுவாள். பேசுவது பொய் என்றாலும், தான் பேசுவதை உண்மைபோலவே கேட்பவருக்குச் சொல்வதில் கெட்டிக்காரி, அவள்.

அவளிடம் ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் அவளுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றியே பேச ஆரம்பித்தால் போதும். விழுந்தடித்துக்கொண்டு உதவி செய்ய ஆரம்பித்து விடுவாள். காட்டு நெருப்பாக அவள் பேசும் செய்திகள் காற்றில் மற்றவர்கள் காதில் போய் மோதிக் கொண்டிருந்தன.

‘பிறரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் பிணம் தின்னும் கழுகுகளுக்குச் சமமானவர்கள்’ என்று வேத நூல் கூறுவதை யார் கேட்கின்றார்கள்? தன்னைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி எண்ணாதவர்கள், செக்கு மாட்டுக்குச் சமமானவர்கள்.

என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிடாமல் நடப்பவர்கள், ராட்டினத்தில் குதிரையேறிப் பயணம் செய்பவர் போலத்தான். வதந்தி பரப்பும் வனிதாமணியின் வாயில் வீழ்ந்து வதைப்பட்டவர்கள் பலர் என்றாலும் வதைப்பட்டவர்கள் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்ததால், வனிதாமணிக்குத் திமிர் துளிர்விட்டுப் போயிருந்தது.

‘வெந்நீரே தன்னை சூடேற்றிய நெருப்பையும் அணைக்கும். வளர்த்த கிளையே கோடாரிக் காம்பாக மாறி, தானிருந்த மரத்தைவெட்டும் என்பது வனிதாமணிக்கு ஒருநாள் புரியத் தொடங்கியது. அந்தநாள் வந்தபொழுது வனிதாமணியின் நிலை எப்படி இருந்தது தெரியுமா?

நெடுஞ்சாலையில் கார் ஒய்யாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கும் ஒய்யாரி வனிதாமணி, சொந்தக்காரில் போவது போன்ற தோரணையில் உட்கார்ந்திருக்கிறாள். கர்வத்தின் கர்ஜனை முகத்தில் பொங்கி வழிகிறது. கேட்டதும் காரைக் கொடுத்து விடுகின்ற கங்காதரனை நினைத்தால், வனிதாமணிக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் கொப்பளிக்கும். ஏனென்றால், வனிதாமணி என்றால், கங்காதரனுக்கு அவ்வளவு அலர்ஜி.

அவள் வதந்திக்குப் பயந்து, காரைக் காணிக்கையாக்கி விட்டு, அவன் ஒளிந்து கொள்வான், பதுங்கிக் கொள்வான். அவள் பக்கத்திலே உட்கார்ந்திருந்த பாலாம்பாளுக்கும் இந்தச் சேதி முழுவதும் தெரியும். இல்லையென்றால் வனிதாமணியின் அருகே இப்படி ஒயிலாக உட்கார்ந்திருக்க முடியுமா?

வனிதாமணியின் வலது கையே இந்தப் பாலாம்பாள்தான். தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி முக்கியமானவர்களிடம் வதந்தியைப் பரப்புவதில் வனிதாமணி கெட்டிக்காரி என்றால், மொட்டைக் கடுதாசி எழுதுவதில் பாலாம்பாள் படு கைகாரி. இப்படியாக அவர்கள் வாழ்வு குறுக்கு வழியில் உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தது.

ரோட்டின் குறுக்கே கங்காதரன் போய்க் கொண்டிருந்தான். காரைக் கொடுத்துவிட்டு கால்நடையாக அவன் செல்கிறான். அடிக்கடி ஓசி வாங்கும் வனிதாமணி, அவனைப் பார்த்து பரிகாசமாகப் பேசிக்கொண்டே காரை ஓட்டுகிறாள். மாதர் சங்கத் தலைவியான இவளுக்கு, இன்று முக்கியமான கூட்டம். ஆகவே, கொஞ்சம் சீக்கிரம் போனால் நன்றாக இருக்கும். வந்திருக்கும் உறுப்பினர்களே தம் வலைக்குள் மாட்டி வைக்க வசதியாக இருக்கும் என்று பாலாம்பாள் விரைவுபடுத்துகிறாள்.

‘என்னை மிஞ்சி யாரும் போகமாட்டார்கள். இட்ட கோட்டைத் தாண்டிப் போக யாருக்குத் தைரியம் உண்டு என்று தன் சுய புராணம் என்ற பல்லவியை வனிதாமணித் தொடங்கியதும், அனுபல்லவியாக பாலாம்பாள் ஆரம்பித்து விட்டாள்.

இருவரின் முகத்திலும் இனம் புரியாத இன்பம், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.

ஒருவர் முதுகில் ஒருவர் பெருமையாகத் தட்டிக் கொண்டிருக்கும் பொழுது, எதிரே ஒரு எருமைமாடு குறுக்கே வந்து விட்டது. அதை ஓரம் போகவிட்டு காரை திருப்பப் பார்த்தால், வயதான ஆயா ஒருத்தி சுற்றிலும் பத்துக் குழந்தைகளுடன், ரோட்டைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

பெருமையாகத் தன்னைப் பற்றிய பேசிக் கொண்டே வந்துவிட்டதால், திடீர் என்று பிரேக் போட முடியவில்லை. அவசர அவசரமாகக் காரைத் திருப்ப முயற்சித்தபொழுது, கார் அவளது கட்டுப்பாட்டை மீறி சாலையின் ஓரத்திற்குப் போய், அங்கிருந்த மின் விளக்குக் கம்பத்தின்மீது திடீரென்று மோதி நின்றது. முன் பகுதி நசுங்கி விட்டாலும், கார் துடித்தவாறே சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. கூட்டம் கூடிவிட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான், வனிதாமணிக்கு பிரக்ஞையே வந்தது. கண் விழித்துப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் டாக்டரும் நர்சுகளுமாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். தன் உடலைப் பார்த்தபோது, ஆங்காங்கே ஒட்டும் கட்டுமாக இருந்தது. என்ன நடந்தது என்று பேச வாயெடுத்தபோது, அவளால் பேச முடியவில்லை. வாயில் பஞ்சு வைத்துக் கட்டியிருந்தார்கள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள், வேகத்தில் கார் மோதி நின்றதும், முன்புறமாக முகம் மோத, பற்கள் எல்லாம் இடிபட்டு கொட்டிப் போய் விட்டதை அவர்கள் கொஞ்சங் கொஞ்சமாக விளக்கிக் கொண்டிருந்தார்கள். ‘பல் போச்சு என்றால் சொல் போச்சு’ என்பார்களே, இனி எப்படி பேச முடியும்? பொய்ப் பல்லைக்கொண்டு, பாக்கி வாழ்க்கையைப் போக்க வேண்டியதுதானோ? அழகான பல் வரிசையை இழந்து அலங்கோலமாகி விட்டதைவிட இன்னொரு அதிர்ச்சி அவளுக்குக் காத்திருந்தது.

இடப்புறமாக உட்கார்ந்திருந்த பாலாம்பாளின் வலது கை நசுங்கி, ரணமாகி, சீழ் பிடித்தது. அதனால் உயிருக்கே ஆபத்து வரும் என்ற நிலையில், கையை மணிக்கட்டுடன் எடுத்து விடவேண்டும் என்ற முடிவெடுத்து, அது நிறைவேறியும் விட்டது என்று அறிந்ததும் வனிதாமணி ஓவென்று அலறினாள்.

பாவத்துக்குத் துணைபோன பாலாம்பாள் பாவம், வலது கையை இழந்து அங்கே புலம்பிக் கொண்டிருந்தாள். ஊரைப் பற்றி வம்பளந்து, வதந்தியைப் பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்த வனிதாமணி, வெளியே தலைகாட்ட முடியாமல் போனதுடன், இனி வேகமாகப் பேசவும் முடியாது, வகையாக உண்ணவும் முடியாது என்ற இழிவான நிலைமையில், பரிதாபகரமாகப் படுத்திருந்தாள்.

ஊரார் வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொள்வதில், உண்மை இன்பம் கண்ட அவள் பரிதாப நிலையைக் கண்டு, உள்ளம் வருந்துகிறோம் என்று வெளியே சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும், இனி இந்தப் பொல்லாப்பு நேராது என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.

படித்தவள், நல்ல பதவியில் இருப்பவள். பணவசதி படைத்தவள் வனிதாமணி.

பிறரைப் பற்றிப் பேசியே பூரிப்பும், பெருமையும் கொண்டு திரிந்த அவளுக்கு, தெய்வமே நல்ல தண்டனை அளித்துவிட்டது. தெய்வம் நின்று கொல்லும், அரசன் அன்று கொல்லும் என்ற பழமொழி இப்பொழுது மாறிக் கொண்டல்லவா வருகிறது!

அப்பொழுதைக்கப்பொழுதே தெய்வம் தண்டித்து, நல்லவர்களை நல்ல பாதையிலே நடத்தி வைத்தும், தீயவர்களின் வழியை மாற்றி வைத்து வருகிறது என்ற உண்மையை வனிதாமணி, காலம் கடந்து புரிந்து கொண்டாள். பாலாம்பாளும் புரிந்து கொண்டாள்.

எத்தனை பேர் வாழ்வை இந்த வலது கையால் மொட்டைக் கடுதாசி எழுதிக் கெடுத்தோம்’ என்று எண்ணியவாறே மொட்டையாக நிற்கும் தன் வலது கையைப் பார்த்தாள். அவள் விட்டப் பெருமூச்சு ஆந்திராவை அடிக்கடி பாழாக்கும் பெரும் புயலைவிட வேகமாக இருந்தது.

பிறரைப் பற்றிப் பேசுவதைவிட, தன்னைப் பற்றி தலைக் கனத்துடன் பேசித் திரிபவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன், எவற்றிலும் இன்பம் காணமுடியாது. பிறரை மகிழ்வித்து இன்பம் காண்பதே உண்மையான இன்பம். அதுவே மெய்நோயைப் போக்கும் வலிமையான மருந்தும் ஆகும்.