உள்ளடக்கத்துக்குச் செல்

நூல்

விக்கிமூலம் இலிருந்து

அறஞ்செய விரும்பு

[தொகு]

விருத்தியுரை ஆசிரியர்

[தொகு]

மாகறல் கார்த்திகேய முதலியார்- 1918.

[தொகு]
"அறஞ்செய விரும்பு"என்பது நூற்பா. வடநூலார் 'சூத்திரம்' என்பர். என்னை?
"சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்ப சிறந்தன சூத்திரம்".
ஆசிரியம் மூன்றடியிற் சிறுத்து வாராமையின் சூத்திரமேயாம்.
அறம்= தருமத்தை;
செய= செய்வதற்கு;
விரும்பு= அதிக ஆசை கொள்க.
- என்பது, கண்ணழிப்பு. 'கண்ணழிப்பு' எனினும் 'பதவுரை'யெனினும் ஒக்கும். என்னை?
"தொகுத்த கவியைச் சொற் சொல்லாகப்
பகுத்துப் பொருள் சொல்லல்பத வுரையாமே" என்றாராகலின்.
தருமத்தைச் செய்வதற்கு அதிக ஆசை கொள்க என்பது, 'பொழிப்புரை'. என்னை?
"பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே"
'மறஞ்செய விரும்பேல்' என்பது, எதிரிடை.
தருமஞ் செய்யவேண்டும் என்பது, 'கருத்துரை'. என்னை?
"கவிப்பொருள் சுருக்கிக் காட்டல் தாற்பரியம்" என்றாராகலின்.
"அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை" - என்பது தமிழ்வேதம்.
அறஞ் செய்யும் விருப்பம் எப்பொழுது உண்டாகுமோ எனின், உயிர்கள் பசி, அச்சம், பிணி, நீர்வேட்கை, கொலை, மானக்கேடு, சாக்காடு முதலியவற்றால் துன்பம் நுகரக் கண்ணுற்றபோதேனும், செவியுற்றபோதேனும், இங்ஙனம் நேரிடுமென அறிந்தபோதேனும் அருள்சுரந்து அறம்செய்யும் விருப்பம் உண்டாகுமென்க. என்னை பயனோ எனின், எல்லா உயிர்களிடத்தும் முழுமுதற்பரம்பொருள் உண்மையின், அத்தொடர்பு பற்றி அப்பரம்பொருளினது அருட்சுரப்பு அறம்செய்வாரிடத்தே உண்டாகும். அதுவே பயனென்க. தற்காப்பு நிமித்தம் விலங்கிற்குக் கொம்பும், குளம்பும், திண்ணியதோலும், செறிந்த மயிரும், வாலும் படைத்திருப்பதை நோக்கின் அப்பரம்பொருளினது பேரருளுடைமை யினிது விளங்குகின்றது. அக்கருத்தறியாமே அதனைக் கொல்கின்றனரே! பிற உயிர்கண்மாட்டும் இங்ஙனமே ஆராய்க. ஆராய்ந்து அவ்வழியே நிற்க.
இனி 'விரித்துரை' செய்வாம். என்னை?
"சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி யமையா தியாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐய மகல ஐங்காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி."
"மாத்திரை முதலா வடிநிலை காறும்
நோக்குறுப் புடையது நோக்கெனப் படுமே."
"பொழிப்ப கலநுட்ப மெச்சமிந் நான்கில்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்- பழிப்பில்
நிரையாமா சேர்க்கு நெடுங்குன்ற நாட
வுரையாமோ நூலிற்கு நன்கு." - என்றாராகலின்.
ஓரடியாற் செய்தது ஏன்?
ஓரடியாற் சூத்திரித்தது என்கருத்து எனின், தெய்வம் ஒன்றுண்டு, வீடு ஒன்றுண்டு அவை அறஞ்செய்வதால் உண்டாகற்பாலன என்பவற்றைக் குறித்ததாகலின், அக்கருத்தென்க.
திரிகரணத்துள் இறுதிக்கண் நின்ற காயத்தி்ன் தொழிலை ஈண்டுக் கூறினமையின் முதற்கண் நின்ற மனத்தின் தொழிலையும், வாக்கின் தொழிலையும் கூட்டி, அறத்தை மனத்தாற் கருதி வாக்கினால் உரைத்துக் காயத்தாற் செய்ய விரும்புக என்றுரைக்க. அற்றேல், "மனத்தின்கண் மாசில னாதல் அனைத்தறன்- ஆகுல நீர பிற." என்பது எற்றுக்கெனின், அற்றன்று. அஃது அழுக்காறு முதலியன பெரிதும் உடையராய்த் தற்புகழ்ச்சியிலேயே அழுந்தி நின்றாரை நோக்கிக் கூறியதென்க. திரிகரணமெனினும், முப்பொறியெனினும் ஒக்கும். இம்மூன்றும் ஒத்ததே அறம் என்பதாம். செய்யவே விரும்பு எனத் தேற்றேகாரம் அமைத்துக் கூறாமையின், கருதவிரும்பேல், சொல்லவிரும்பேல் என்னற்க. செய்யஇயலாவழிச் சொல்லலும், அஃதும் இயையாவழிக் கருதலும் வேண்டுமாகலின் அறம் கருதவிரும்பு, அறம் கருதவும் சொல்லவும் விரும்பு, அறம் கருதவும் சொல்லவும் செய்யவும் விரும்பு, எனத் தனித்தனிப் பிரித்துரைக்க. மனத்தினிடத்தே அறத்தின் வாசனை வீசினாலொழிய ஏனைய வாக்கிலும் காயத்திலும் அமையாதாகலின் அறஞ்செய்க என்றொழியாது, அறஞ்செய விரும்பு என்றார். என்னை? விருப்பம் என்பது மனத்தினிடத்தே தோன்றுமோர் பண்பாகலின்.
தானமும் செய்கையன்றோ "தானமது விரும்பு" என வேறுகூறியது என்னெனின், அற்றன்று. தானம் கைக்கொடை ஒன்றற்கே உரிமையாதல் உடைத்து. அறம் திரிகரணத்திற்கும் பொதுவாதல் உடைத்து. என்னை?
இன்சொல் விளைநிலனா வீதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதி ரீனவோர்
பைங்கூழ்ச் சிறுகாலைச் செய்"
- என்பதானும் உணர்க. நூற்பயன் நான்கனுள், இம்மைப் பயனாகிய பொருளின்பங்களையும், மறுமைப்பயனாகிய வீட்டினையும், அறம் ஒன்றுமே தரலின் அன்றோ, "அறஞ்செய விரும்பு" என முதற்கட் கூறினார். பொருளும் இன்பமும் போலாது இம்மை மறுமை வீடு என்னு மூன்றனையும் பயத்தலால் அறம் ஒன்றுமே சிறந்தது என்று புலனாதலின், ஓரடியாற் சூத்திரித்தது இக்கருத்துமாம் என்க.
இருசீரான் ஓதியது என்குறித்தோ எனின், அவ்வறம் இல்லறம் துறவறம் என இரண்டு பாகுபாடு உடைமையின் அவற்றைக் குறி்தததென்க. நான்கசையால் ஓதியது எந்நோக்குடைத்தோ எனின், பார்ப்பார், அரசர், வணிகர், வெள்ளாளர்

வெள்ளாளர்:

<hr>தமிழ்நூலார் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்பதைப் பார்ப்பான் அரசன் வணிகன் வெள்ளாளன் என மொழிபெயர்த்தலின் வெள்ளாளன் என்பதற்குச் சூத்திரன் எனப் பொருள்கூறல் ஒக்கும். தமிழ்நாட்டில் மருதநிலத் தலைவராகிய வேளாளர் என்னும் சொற்குச் சூத்திரர் எனப் பொருள்கூறல் ஒருசிறிதும் ஒவ்வாதென்க. எங்ஙனமெனின்:- வெள்ளாளன், வெண்மை+ஆள்+அன் எனப்பிரித்து வெண்மையை ஆளுதலுடையான் எனப்பொருள்கூறல் வேண்டும். வெண்மை என்பதற்குப் பொருள் அறிவின்மை. வேளாளன், வேளாண்மை+அன், எனப்பிரித்து வேளாண்மையை உடையவன் எனப் பொருள்கூறல் வேண்டும். வேளாண்மை என்பதற்குப் பொருள் ஈகை. அவ்விருபதங்கட்கும் அப்பொருளுண்மை,

வெண்மை யெனப்படுவ தியாதெனின் ஒண்மை
யுடையம் யாமென்னும் செருக்கு.
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
என்னும் திருக்குறள்களான் உணர்க.
அவ்விரு சொற்கும் பகுதி வேறுபாடும், பொருள் வேறுபாடும் பெரிதும் இருப்ப, நச்சினார்க்கினியர், வைத்தியநாத நாவலர், சுப்பிரமணிய தீட்சிதர் முதலோர் தொல்காப்பியம், இலக்கணவிளக்கம், சொற்பிரயோக விவேகம் முதலியவற்றில் அவை ஒரு பொருளன என உரைத்துப் போயினர். அவர்கள் எல்லாரும் 'சிறப்புடைப் பொருளைத் தான் இனிது கிளத்தல்' என்னும் உத்திபற்றிப் பாராமுகமாகப் போயினர் என்க. இலக்கணக் கொத்துடையார் சாமிநாத தேசிகர் மாத்திரம் பொருளுணர்ந்து மொழிபெயர்த்திருக்கின்றனர்.
ஆகவே, இதுகாறுங் கூறியவாற்றால், வெள்ளாளர் அல்லது வெள்ளாழர் என்னுஞ் சொற்கள் 'சூத்திரர்' என்ற பொருள் தருதலானும், வேளாளர் மருதநிலத் தலைவராதலாலும், ஆரியரது நால்வகைப் பாகுபாட்டினுட் சேராது, தமிழரது பாகுபாட்டினுள் தலைமை பெற்றவராதலாலும், வேளாளச் செல்வர்களே மறந்தேனும் இனி நீங்கள் 'வெள்ளாள'ரென்றாவது, 'வெள்ளாழ'ரென்றாவது கூறாதீர்கள்; 'வேளாள'ரென்றே கூறுங்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

என்னு நான்கு வருணத்து நான்கு நிலையுள்ளார்க்கும் அறம் இன்றியமையாதாகலின் அந்நோக்குடைத்தென்க. அற்றேல் இப்பகுப்பில்லாத ஐரோப்பியர் முதலியவர்க்கும் இவ்வறம் வேண்டாவோ எனின், அற்றன்று, அத்தன்மையுடையார் எந்நாட்டும் உளராகலின் அவர்க்கும் பொருந்துமென்க. ஒன்பான் எழுத்தான் அமையவைத்தது என்குறித்து எனின், அவ்வறம் ஒன்பான் வானோர்கணங்கட்கும், ஒன்பான் சித்தர்கணங்கட்கும், ஒன்பான் கண்டத்தார்க்கும், வேண்டுதலின் அங்ஙனம் அமையவைத்ததென்க. அல்லதூஉம் ஒன்பான் புண்ணியம் குறித்தது எனினும் பொருந்தும். அவை எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்தல், தாள்கழுவல், அர்ச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், அமுதமேந்தல் என்பனவாம்.துறந்தோர்க்குச் செய்யத்தக்கன. நிரையொன்றாசிரியத் தளையான் யாப்புறுத்தது என்குறித்ததோ எனின், அரசும் குடியும் ஒருப்பட்டு நின்றுழி எங்கணும் அறம் புரிவதில் விருப்பந் தோன்றுமாகலின் அதனைக் குறித்ததென்க.
நூற்பாவாற் செய்தது ஏன்?
வெண்பா முதலிய பாவினங்களாற் செய்யாது நூற்பாவினாற் செய்தது என்குறித்தெனின், "சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்" என்பவாகலின், கண்ணாடியிற் ககனம் போல "ஆறுவது சினம்" என்பது முதலாகக்கூறப்பட்டனவும், படாதனவுமாகிய யாவும் இவ்வொன்றிலே அடங்குதலின் அதனைக் குறித்ததென்க.
எட்டுமாத்திரையாற் சூத்திரித்தது என் குறித்தது எனின், ஐயப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழிநீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம் விளக்கல், பேரன்புடைமை என அறத்துறுப்பு எட்டனையும் குறித்ததென்க. அல்லதூஉம், கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் அட்டபுட் கொண்டு மனத்தாற் பூசிப்பதாய அறத்தைக் குறித்ததெனினும் ஒக்கும்.
அல்லாக்கைக் கில்லை அருவருப்பு மில்லை
கொலையுமிலை யுட்பூசை கூடு.
விரும்பு, இவ்வுகரம் ஒரு மாத்திரையுடைத்து. அறஞ்செய விரும்பு என அங்காந்து வாய்மூட நிற்கவைத்தது என்னெனின்,
அறஞ்செய விரும்பு என்று கூறியதுணையானே மனத்தின்கணின்ற மாசெல்லாம் புறப்பட்டு மீண்டும் உட்புகா என்பதை உணர்த்திற்றென்க. வல்லினம் குறைந்து நிற்ப யாப்புறுத்தது என்னையெனின், அறஞ்செய்ய விரும்புங்கால் முன்னர் இன்சொல் இன்றியமையாதது ஆகலின், அதனைக் குறித்தது.
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
அரசர்க்குரிய எழுத்து மிகுதிபடக் கூறியதென்னெனின், அறஞ்செய்தல் பெரும்பாலும் அரையன்மாட்டு நிற்ப அவன் வாயிலாக எலலார்க்கும் பயன்படுதலின் அதுநோக்கி அங்ஙனங் கூறினாராக.
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.


சூத்திரர்க்குரிய எழுத்து ஒன்றும் இல்லையே. அவர்க்கு அறம் வேண்டாவோ எனின், முதன்மூவர்க்கும் பணிசெய்தலே அவர்க்கு அறமாகலின், அவ்வெழுத்தொன்றும் அமைக்காராயினார். எல்லாத் தொழிலும் குறைவற நடைபெறலே நால்வகைச் சாதியின்பயனும் ஆகலின் ஒருவரை ஒருவர் இகழ்தல் கூடாது. முதலும் கடையும் அ-பு என்னும் தேவகதிக்குரிய எழுத்தமைத்தமையின் அறஞ்செய விரும்புவார்க்கு அக்கதி கிடைக்கும் என்க.
ஆண்பாற்குரிய குற்றெழுத்தால் யாப்புறுத்தது என்குறித்தோ எனின், பெண்மக்கட்கு ஒருவாற்றானும் சுதந்தரமின்மையானும், கொழுநனே தெய்வமாகலானும் அறஞ்செய விரும்பல் ஆண்மக்கட்கே யுரித்தாம் என்பதைக் குறி்த்ததென்க.
குலமகட்குத் தெய்வங் கொழுநனே
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
கோதறு கற்பினாய் கொழுநன் கைத்தலங்
காதலன் கைத்தல மன்றிக் கன்றின்வா
லாதலிம் மூன்றிலொன் றங்கை பற்றியே
யோதநீ ராடுதன் மரபென் றோதினார். (திருவிளையாடல்)
-இதனானும் உணர்க.
இற்புறமாதல் மகப்பேறடைதல் முதலிய அசந்தர்ப்பங்கள் உண்மையால், பெண்மக்கட்குச் சுதந்தரம் கூடாதென்பர். பெண்மக்கள் வியர்க்க நெற்குத்தல் முதலிய தொழில் கொள்வதால் உடம்பு இறுகிப் பெலம்பெறும். சந்தானங்களும் பெலம் பெறும்.
உயிரினும் மெய்யினும் உயிர்மெய் மிகைபட வைத்துக் கூறியது என்குறித்தோ எனின், உயிர் மெய்யொடு கூடிய அறஞ்செய விரும்பல் வேண்டுமாகலானும், பிரிந்து நின்றுழி அதனைச்செய விரும்பல் கூடாதாகலானும் அதனைக் குறித்ததென்க.
முன்னிலை யிடத்து வைத்துக் கூறியதென்னெனின், அறஞ்செயவிரும்பல் உயர்திணைக்குரியதோர் பண்பாகலின் அதனை அறிவுறுத்த அத்திணை யொன்றற்கே உரிய ஏவன்முற்றாற் கூறினார், தன்மையாற் கூறல் சிறப்பன்றாகலின்.
"தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை."

-எனப்பொதுப்படக் கூறுமாலோ எனின், அது பொருந்தாது என்பது, இலக்கணவிளக்கச் சூறாவளி முதலியவற்றான் உணர்க.

"செய்யாய் என்னு முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி யாகிட னுடைத்தே" (தொல்காப்பியம்)
'விரும்புவாய்' எனற்பாலது 'விரும்பு' என நின்றது. முதனிலைகளே இயற்கையில் முன்னிலை யுணர்த்தல் தமிழ்வழக்கென்க. அற்றேல் ஏனையிடங்களிற் செல்லல் வழுவாம் பிறவெனின்,
"தரல் வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
யெழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்" - என்பதில் படர்க்கை ஒன்றற்கே யுரிய 'தரல்வரல்' ஏனையவிடங்கட்கும் உரியனவானாற் போல வழுவாகா என மறுக்க. நன்னூலாரும் 'செய்யென்னேவல்' என்றது அக்கருத்தாம்.

உச்சரிக்கும் முறை

[தொகு]
இன்னும் தன்னின் உயர்ந்தோனையும், தன்னின் இழிந்தோனையும் முன்னைலையாக்கி அறஞ்செய விரும்பு என்புழி முறையே குற்றியலுகரவீறாகவும், முற்றியலுகரவீறாகவும் உச்சரிக்க. எனவே, ஒப்போன் மாட்டு அவ்விரண்டற்கும் பொதுப்பட உச்சரிக்க என்பது. 'அறம் விரும்பு' என்னாது 'செயவிரும்பு' என்றதென்னெனின், புத்திச்சக்கரத்துள் தருமம், ஞானம், ஐசுவரியம், வைராக்கியம், அதர்மம், அஞ்ஞானம், அநைசுவரியம், அவைராக்கியம் என்னும் எட்டாரையுள் ஒன்றாகிய 'தருமம்' இயற்கையில் ஒருமுறை நினைவு மாத்திரையின் நிற்பதைக் குறிக்குமாகலானும், அது பயனின்றாக முடியுமாகலானும், அறம் விரும்பென்னாது 'அறஞ்செயவிரும்'பென்றார், நன்று.
அப்பொருள் குறித்த வீறு முதலிய சொற்களாற் கூறாது அறமென்னும் சொல்லாற்றானே கூறியதென்னெனின், தமிழ்ச்சொற்களுள் மங்கலச் சொல்லாய், மங்கலப் பொருத்த முதலியனவுடையதாய், முதலெழுத்து முப்பதுள் முதலும் கடையும் இன்னவென வுணர்த்துவதாய், எதிரடையுடைத்தாய், வருக்கைக் கோவைக்குரியதாய், உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்துநின்ற அகர முதலாய், முற்றும் அமுதவெழுத்துடையதாய், காரணக்குறி மரபுப்பெயராய், 'அறஞ்செய விரும்பு' என அங்காந்து வாய்மூடப்பட்டு நிற்றல்போலத் தன்கண்ணும் அவ்விலக்கணமுடைத்தாய், காலமுணர்த்தும் எழுத்து முதலதாய், ஆன்றோரால் அடிப்பட்ட வழக்குடைத்தாய், திரிபதார்த்த முதலியன உணர்த்த மூன்றெழுத்தாய், வரலின் அச்சிறப்பு மரபுநோக்கி அறம் என்னுஞ்சொல்லையே முதற்கட் கூறினாராக.
முப்பதெழுத்துள் முதலும் கடையும் இன்னவெழுத்தென அறிவுறுத்தற்குக் கூறினாரெனின், அறன் எனக் கூறலேஒக்கும், பிறவெனின் அற்றன்று. அங்ஙனங் கூறுவதால் அப்பொருட் பேறுடையதேனும், முதற்செய்யுள் முதன்மொழியின்கண் எழுத்தானந்தம் என்னும் குற்றமாதல் நோக்கி அங்ஙனங் கூறாராயினார். இது பற்றியன்றே 'அறனை மறவேல்' என மேலெழுந்ததூஉம் என்க.
காலமுணர்த்தும் எழுத்தென்றலின், அறஞ்செய்தற்கு விடியல் ஐந்துநாழிகைக்குட் சிறந்ததாகலின் அங்ஙனங் கூறியதென்க. பிறகு பொழுது செல்லச் செல்லத் தத்துவங்கள் தளர்தலின். "வைகுறு விடியன் மருதம்" என்பதனால், அந்நிலத்து விளைந்தனவும். அறஞ்செய்தற்குரியனவாம், அவை குற்றந் தவிர்ந்தனவாகலின்.
"துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்
பகடு நடந்தகூழ் பலரோ டு்ண்க"

-என்பதும் அக்கருத்து.

சூத்திரமுழுதும் அமுதவெழுத்துகள் நிரம்பியுள்ளனவாகலின், அறஞ்செய்யப்பட்டோரும் அதனையொத்த தக்கோரே என்பதாம்.
"அமுதெழுத் தென்ற வாதியுயிர் நான்கொடும்
புணர்ந்த மெய்யை யுணர்ந்தமுத மென்ப" -
என்ற சூத்திரப்படி நச்செழுத்தொன்றேனும் அமைக்காமையின், அதனையொத்த கொடியவர்கட்கு அறஞ்செய்யலாகாதென்க.
மண்மலை யத்தனை மாதன மீயினும்
அண்ண லிவனென் றஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த விருவரும்
நண்ணுவ ரேழா நரகக் குழியிலே." -(திருமந்திரம்)
இனைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
உறக்குந் துணையதோ ராலம் வித்தீண்டி
யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
நெஞ்சிற் றுவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
தானஞ் செய்வாரை வஞ்சித்தலாவது, யாம் மறுமைக்கட் டேவராதற் பொருட்டு, இவ்வருந்தவர்க்கு இன்னதீதும் என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல்,
அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினா லறுமுந்நீர்த்
தடங்கட னடுவுட் டீவு பலவுளவவற் றுட்டோன்றி
யுடம்பொடு முகங்க ளொவ்வா ரூழ்கனி மாந்திவாழ்வர்
மடங்கலஞ் சீற்றத்துப்பின் மானவேன் மன்ன ரேறே.
என்பதனான் அறிக. "தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் வன்கணாரில் என்றார்" என்பர் பரிமேலழகர்.
அறஞ்செய விரும்பு, அறஞ்செயவும் விரும்பு என இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கதெனக் கொண்டு, 'அறங்கருதவும் விரும்பு', 'அறஞ் சொல்லவும் விரும்பு' எனக் கூறலும் ஒக்கும். 'அறஞ்செய்ய இரும்பு', இரும்பு என்பதனைப் 'பொருளாகுபெய'ராகக் கொண்டு அறமானது செவ்வையாகிய இரும்பிற் செய்த அரமாகும் எனப் 'பிறிதுமொழிதல்' என்னும் அணியின்பாற்படக் கூறலும் அமையும். என்னை? அரமென்னும் கருவி ஏனைய இரும்புகளை முரண்கெடுத்துச் செப்பஞ்செய்வதுபோல, அறமும் உயிர்களைத் திருத்திச் செப்பஞ்செய்தலினால் என்க.
'செய்ய' குறிப்புப் பெயரெச்சம் 'விரும்பு' என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக்கொண்டு, செய்யவிரும்புதல் அறம் எனவும்; 'செய்ய' என்பதனைக் குறிப்பு வினையாலணையும் பெயராக வைத்து, 'மருதநிலத்து விளைந்தவை' அறத்திற்குரியவாகும் அவற்றை விரும்பு எனவும்; வியங்கோள் வினைமுற்றாகவைத்து, 'அறஞ்செய இரும்பு', அறம் செய்க, அஃது இரும்புபோல் உறுதிபயக்கும் எனவும்; வேறு வினைமுதல் வினையைக் கொண்டு முடியும் எச்சமாக வைத்து, 'பிறனொருவன்' அறம் செய்ய அதனைக் கண்டு விரும்புதல் செய்க, அழுக்காறு கொள்ளற்க எனவும்; பொதுவினையாக வைத்து, நீயும் அதனைச் செய்யவிரும்பு, செய்விக்க விரும்பு எனவும்; அறம் (உலையிற் காய்ந்து) சிவந்த இரும்பு பொல்வதெனவும், செய அறம் விரும்பு என மொழிமாற்றி வைத்து நல்ல அறங்களை விரும்புக எனவும்; செங்கோலென்பது பொல் அறம்செய்ய இரும்பெனவும், அறம் பெருமை தரற்பாலது, அதனை விரும்புக எனவும்; நடுநிலைமையான நீதிகளை விரும்புதல் அறம் எனவும் கொள்க.
வடநூலார் ஒருவினை முதலைச் சமான கர்த்தா எனவும், வேறுவினை முதலைப் பின்னகர்த்தா எனவும் கூறுப.
'அறஞ் செய' என்றொழியாது, 'விரும்பு' என்றது என்னையெனின், விரும்பென்னாது, 'செய' என்றொழியின் அச்செயல் பொருளுடையார்க்கு மாத்திரம் அமையுமன்றி, அஃதில்லார்க்கு அமைதல் அரிதாகலின் 'விரும்பு' என்றார். என்னை? அவ்விருப்பம் பொருளுடையார்க்கு உண்டாயின், தம்மாட்டுப் பொருளுண்மையின் செய்யாதொழியார். இல்லாதார்க்கு உண்டாயின், அறத்தின் பொருட்டு முயன்றும் பொருள் கைகூடாதாயினும், அவ்விருப்பமடைந்த காரணத்தானே, அவ்வுயிர் நல்வினை யெய்தி மறுமையிலேனும் பயனுறூஉமாகலின், அதுபற்றி இருவர்க்கும் பொருந்தச் 'செய விரும்பு' என்றதென்க.
உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
அற்றேல் மேவு வெஃகு என்னாது, விரும்பு என்றது என்னையெனின், மேவு, வெஃகு முதலியவற்றின்கண் ஓசையுடைமை என்னும் அழகில்லாமையால், அவ்வழகு நிறையும் பொருட்டு விரும்பு என்றார். தமிழின்கண்ணே ரகரறகர வேறுபாடு உண்மையின் அதனை உணர்த்தும்பொருட்டு எனலுமாம், தமிழ்கற்போர் ரகரறகர வேறுபாடுகளைக் கவனிப்பது ஆவசியமாகலின், அதனை முதற்சூத்திரத்திலேயே நினைப்பூட்டுவாராயினார்.
அண்ண நுனிநா வருட ரழவரும்
அண்ண நுனிநா நனியுறிற் றனவரும்

- என்னுஞ் சூத்திரத்தால் அவ்வேறுபாடுணர்க. இயற்ற விரும்பு, புரிய விரும்பு என்னாது செய்ய விரும்பு என்றதென்னெனின்,

நடவா மடிசீ- யென்னுஞ் சூத்திரத்துள் எல்லா முதனிலைகளையும், செய் என்னும் முதனிலைக்கண் அடக்கிக் கூறினமையின் அவ்வாய்பாட்டில் ஏற்ற பெற்றியெல்லாம் கொள்ளற்குச் செய்ய விரும்பு என்றனர். எங்ஙனமெனின், அறம் நடத்தவிரும்பு, அறம் பெற விரும்பு, அறங்கொள விரும்பு என்று இங்ஙனமே உணர்க.
அறஞ்செய விரும்பு என்றலே சாலும். மேலும், 'அறனை மறவேல்' என்றது என்னெனின், "அறத்தினூஉங் காக்கமுமில்லை" யாகலின், "அறஞ் செயவிரும்பு" எனவும், "அதனை மறத்தலினூஉங் கில்லை கேடு" ஆகலின் "அறனை மறவேல்" எனவும் கூறினார்.
திரிசொல் லின்றி இயற்சொல்லால் யாப்புறுத்தது என்னெனின், அறம் கற்றார் கல்லார் எல்லார்க்கும் இன்றியமையாமையின் விளங்கற் பொருட்டு அங்ஙனங் கூறினார். ஐயுருபு வெளிப்படாது தொக்குநிற்பச் சூத்திரித்தது என்னையெனின், பலரறிய வெளிப்படச் செய்வனவெல்லாம் "ஆகுல நீர"வாகலின், அதனைக் குறித்தற்குத் தொகவைத்தார் என்க.
மூன்றுமொழியாற் கூறியது என்னெனின், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னு மூவகைகளானும், அறம் வேண்டப்படுமாகலின் அங்ஙனங் கூறினார் என்க.
நாற்கணம் புணர வைத்தது என்னெனின், சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதத்தாரும் அறஞ்செய வேண்டுமாகலின் அங்ஙனம் புணரவைத்தார்.
ஏவன் முற்றாற் கூறியதென்னெனின், எல்லாம் அறத்துப்பாலுள் அடங்கி நிற்றலானும், இம்மை முதலிய தரலானும், அப்பெரும்பயன் விளைவு நோக்கிக் கட்டளையிடல் தக்கதாகலின் அம்முற்றாற் கூறினார். அறச்சிந்தை சிறிதும் இல்லாமல் பொருளீட்டுதலிலேயே தம் வாணாளைப் போக்குவாரை நோக்கி அறஞ்செய விரும்பென முதன்மொழியில் எடுத்தும், அதனை நினைத்தன் மாத்திரமுடையாரையும் சொல்லுதன் மாத்திரம் உடையாரையும் நோக்கி இரண்டாம்மொழியில் எடுத்தும், அதனை யொருமுறை செய்து, இதுபோதும் எனக் கருதுகின்றாரை நோக்கி அதனை விடற்க மீட்டும் விரும்பு என மூன்றாம்மொழியில் எடுத்தும் சொல்லுக.
"அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை."

-எனக் காண்டலளவை கூறலின், குறிப்பு வினைமுற்று ஒன்றேனும் அமையாது, தெரிநிலைவினை அமைத்தாரென்க, அறத்தாறு தெரியநிற்றலின்.

'அறஞ்செய' என இருமொழியில் மூவினமும், 'விரும்பு' என ஒருமொழியில் மூவினமும் அமைத்தமையின் அறஞ்செய்தற்கும், அதனைவிரும்புதற்கும் வலியோர், மெலியோர், இடையோர் என்ற மூவரும் உரியாரென்க.
அறஞ்செய என மகரந்திரிய வைத்தது என்குறித்ததெனின், வரம்புயர என அரசனை வாழ்த்தெடுக்குமாறுபோல, அறஞ்செய்வார்க்கு மலந்திரியும் என்பது குறித்ததென்க. ;ம= மலம்.
செயவிரும்பு. இயல்புப் புணர்ச்சிபடக் கூறியதென்னெனின், அறஞ்செய விரும்புங்கால், உள்ளந்திரிபின்றி இருத்தல் வேண்டுமாகலின், அப்புணர்ச்சிபடக் கூறினார்.
அறமெனப் பொதுப்படக் கூறியவாற்றான் முப்பத்திரண்டு அறமுங் கொள்ளப்படும். அறஞ்செய விரும்பு என்பதில் முதற்கண்ணும், இறுதிக்கண்ணும் அ-உ என்னும் எழுத்துகளை வைத்தது என்குறிப்பு எனின், அவை முறையே எடடும் இரண்டும் என்னும் எண்ணாகலின், அவற்றது இலக்கணங்களை அறிதல் வேண்டுமென்பது குறித்ததென்க. எட்டாவது என்ன? இரண்டாவது என்ன? என்பது,
"கூடிய வெட்டு மிரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துளே வைத்து
வாடிய வைவரு மங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே."

- என்ற திருமந்திரத்தானும் உணர்க.

எட்டுமிரண்டும் பத்தாகலானும், அப்பத்தென்னும் எண் யகரம் போல்வதாகலானும், அது திருவைந்தெழுத்தில் ஒன்றாய் ஆன்மாவை யுணர்த்தி நிற்குமாகலானும், ஆன்மவிலக்கணம் அறிதல் வேண்டும் என்பது குறித்ததுமாம்.
எழுத்துக்களெல்லாம் அங்காப்பினாலும், இதழ்குவி்ப்பினாலும் உண்டாகற் பாலன என்பதும் குறிக்கும்.
இனி ஓர்சார் இலக்கணமுறைமை வருமாறு:-

அறம்

[தொகு]
பால்பகா அஃறிணைப் படர்க்கைப் பண்புக்காரணக்குறி மரபுடைய ஒருமொழியாய், இயல்பு வழக்குள் இயனெறியுடையதாய், மூவெழுத்தானாய வெளிப்படைச் செந்தமிழ்ச் சிறப்பியற் சொல்லாய், உறுதிப்பயன்தரும் உயர்பொருட் பெயராய், வேற்றுமையுள் ஆக்கப்படு பொருட்கண் வந்த இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தழுவுதொடராய் வந்து, தன் வினைமுதல் வினையைத் தழீஇநின்றது.
நன்மகனாகிய நீ - செய்பவன்
அகக்கருவியாகிய நற்சிந்தை - முதற்கருவி
புறக்கருவியாகிய கையும் பொருளும் - துணைக்கருவி
கண்ணறை முதலோர் குழீஇய இடம் - நிலம்
கொடை முதலியன - செயல்
செய - நிகழ்காலம்
அறம் - செய்பொருள்
ஆக்கப்படு பொருட்கண் வந்த உ-ம். வேற்றுமைத் தொகைநிலைத் தொடர். வினைமுதற் றொழிற்பயனுறுவது, செய்பொருளாகலின், பழியஞ்சிப் பொருளீட்டல் முதலியன வினைமுதலின் தொழில். தானும் நுகர்ந்து, நன்னெறிக்கட் செலவு செய்யக் கருதல் அத்தொழிலின் பயன். அப்பயனுறுவது அறமாகலின், அறம் செய்பொருளாயிற்று. பிறவு முணர்ந்து கொள்க.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், பகைமை, செருக்கு, கரவு, களவு, இகழ்வு முதலிய தீக்குணங்களைத் தன்னிடத்தும் பிறரிடத்தும் அறுத்தற் கருவியாக நிற்றலின் அறமெனப்பட்டது.
"அவாவற வளித்தலா லறமெனப் படுமே." - (அகத்தியம்).
அறு- பகுதி, அம்- கருவிப்பொருள் விகுதி. அறம், அறவன்,அறவு, அறவுளி, அறவை, அறவைச்சோறு, அறளை, அறுதி, அறுப்பு, அறுவடை, அறுவை, அறல், அறுத்தல், அறை, அறைதல், அற்றம், அற்றை, ஆறு, ஆறல், ஆற்றல் முதலியனவெல்லாம் அறு என்னும்முதனிலையடியாகப் பிறந்த சொற்களாம்.
அறவை= திக்கற்றவன். அறுவை= துணி. அறைதல்= துணித்தல். அற்றை= சிறுமை. ஆறு= நதி.
இவ்வுரை செங்கற்பட்டில் ஆசிரியர் பேறை தசாவதானம் செகநாதப் பிள்ளையவர்களிடம் நன்னூல் விருத்தியுரை முதலியன கேட்ட காலத்து எழுதப்பட்டது.
இதன் முதற்பகுதி ஸ்ரீ கல்குளம் குப்புசாமி முதலியாரிடத்தோ கறுப்பையா பாவலரிடத்தோ தவறிப்போயிருக்கின்றது. இது ஓர் குறிப்புரை கொண்டு எழுதப்பட்டமையால் சிறிது வேறுபட்டிருக்கும்.

இங்ஙனம்,

திருமாகறல்

கார்த்திகேய முதலியார்.

[தொகு]
முடிவுற்றது


பார்க்க

ஆத்திசூடி முதற்சூத்திர விருத்தியுரைபாயிரம்

[[]]

ஆத்திசூடிநூல்-பாயிரவிருத்தி
ஆத்திசூடி- பரிமேலழகர் உரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=நூல்&oldid=26157" இலிருந்து மீள்விக்கப்பட்டது