நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/007-013
ஏழை மனிதன் ஒருவன் புத்தரை விருந்துக்கு அழைத்திருந்தான். அவனால் வேறு எதுவும் வாங்க முடியாத நிலையில் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்ட (காளான்) நாய்க்குடைகளை எடுத்துச் சமைத்திருந்தான்.
அந்த உலர்ந்த நாய்க் குடைகள் விஷமாகிவிட்டிருந்தவை. புத்தர் அதைச் சுவைக்கும்போதே கசப்பாய் இருந்தது. ஆனால் அந்த ஏழை விசிறியால், விசிறியவாறு ஆனந்தக் கண்ணீர் சொரிய, நின்று கொண்டிருந்ததைப் பார்த்த புத்தர் எதுவும் கூறாமல் உண்டு முடித்துவிட்டார். அது மிகவும் கடுமையான விஷம். அவர் தன் இருப்பிடம் திரும்பியதும் நினைவை இழந்து விழுந்து விட்டார். வைத்தியர்கள் இனி பிழைப்பது சாத்யமில்லை எனக் கூறி விட்டனர்.
அந்தப் பேதை மனிதன் “அது கசப்பாய் இருந்தது என்று ஏன் கூறவில்லை சுவாமி” என அரற்றி அழுது புரண்டான்.
சிறிதளவு நினைவு வந்தபோது புத்தர், “உன் கண்களில் ஆனந்தத்தைக் கண்டேன். நாய்க் குடையின் கசப்பையும் கண்டேன், என் இரத்தத்தில் பரவும் விஷத்தையும் கண்டேன், என்னை அணுகி வரும் மரணத்தையும் கண்டேன். பிறகு நான் நினைத்தேன். மரணத்தை யாரும் தடுக்க முடியாது. இன்றில்லாவிட்டால் நாளை அது வந்தே தீரும். ஆதலால் நாய்க்குடை கசப்பாக இருந்தால் அதன் மீது வெறுப்பு ஏன்?
இன்றில்லாவிட்டாலும் நாளை வரும் மரணம். இந்தச் சிறிய விசயத்திற்காக உன் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் பறிப்பவனாக நான் ஏன் ஆகவேண்டும்? நான் கசப்பு எனக் கூறியிருந்தால், உனது மகிழ்ச்சி கசப்பாக மாறியிருக்கும். ஆகவே நான் பூரணமாக ஆனந்தமடைந்தேன்” என்றார்.(Upload an image to replace this placeholder.)
இறப்பதற்கு முன் புத்தர் தன் பிட்சுகளை அழைத்து, “எந்த மனிதன் புத்தருக்கு கடைசி போஜனம் அளித்தானோ! அவன் பரம புண்ணியவான் எனக் கிராமம் முழுவதும் பறை அறிவியுங்கள்” என்றார். பிட்சுகள் கலங்கினர். அவன் கொலைகாரன் என்றனர்.
புத்தர், “உங்களுக்குத் தெரியாது, ஆயிரக்கணக்கான வருடங்களில் புத்தரைப் போன்ற ஒருவர் பிறக்கும்போது முதல் உணவு அளித்த தாயின் பாக்கியத்துக்குக் கடைசி உணவு அளித்தவன் பாக்கியம் சற்றும் குறைந்ததல்ல!” என்றார்.
எல்லோரும் சென்ற பிறகு ஆனந்தர் மட்டும் நின்றார். “நீங்கள் கூறுவதை என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்றார். புத்தர், “ஆனந்தா, நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய். விஷம் தன் வேலையைச் செய்தது. அந்த மனிதனோ தன் வேலையைச் செய்தான். நான் புத்தன், என்னை எனது குண தர்மத்திற்கேற்பச் செயல் புரியவிடு! இல்லையென்றால், மக்கள் என்னை என்ன சொல்வார்கள்? நான் இதைக் கூறாமல் இறந்துவிட்டால், நீங்கள் அனைவரும் சேர்ந்து அவனைக் கொலை செய்து விடலாம், அல்லது அவன் வீட்டைக் கொளுத்திவிடலாம்.
நீ இதைச் செய்யவில்லையென்றால் ஜென்ம ஜென்மாந்திரத்திலும் தேவையற்ற அவமானமும் நிந்தனையும் அடைவீர்கள்” எனக் கூறினார்.
எத்துணை அழகான மரணம்! எத்துணை அருமையான மகிழ்ச்சி! எத்துணை ஆழமான சொற்கள்!
கடவுளே! மனித வர்க்கம் ஒரே ஒரு கணமாவது சிந்திக்குமா?
எல்லாப் பொருள்களும் தத்தம் குணத்தால் அறியப்படுகின்றன. விஷம் கசப்பு. விருந்தளிப்பவன் ஆனந்தமடைபவன். விருந்துண்பவன் ஆனந்தமடைபவன். நான் பூரணமான ஆனந்தம் அடைந்தேன். விஷம் என்னை அழிக்க முடியாது. விஷத்தின் குணம் சரீரத்தை அழிப்பது. நான் சாட்சி காண்பவன். இறப்பவன் அல்ல! - என்றார் புத்தர்.
⚫
“ஓஷோ பகவத்கீதை அதீதா பப்ளிகேஷன்ஸ்”