உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 10

விக்கிமூலம் இலிருந்து

10

தாமோதரனைக் கடக்கிறோம் என்ற உணர்வோடு நடந்தாலும் அவனை ஏறிட்டு நோக்காமல், நெஞ்சின் இடது பகுதியை அழுத்திப் பிடித்தபடி, மூச்சை அடக்கி, முன் நெற்றியைச் சுருக்கி, 'படுகளத்தில் ஒப்பாரி கூடாது” என்ற பழமொழியை மனதுக்குள் சொல்லியபடி நடந்தாள் தமிழரசி. தாமுவும் கைகளை குறுக்காக வைத்தபடி தரையில் இருந்து கண் பிறழாமல், தலையைப் புரட்டாமல் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய சபதம் போட்ட தமிழரசியின் அப்பா, அ ண் ண னு ட ன் சேர்ந்து மோவாயில் கை வைத்தபடி நின்றிருந்தார்.

தமிழரசியின் வலது பக்கமாக வந்த கலாவதி, தாமோதரனைப் பார்த்தாள். அவனுக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தம் இருக்காது என்ற எண்ணமா, இருக்கக் கூடாது என்ற ஆவலோ, எதுவென்று தெரியவில்லை. அவன் நின்ற கோலத்தைப் பார்த்ததும் ஈரக்காயங்களைச் சுமந்த அவள் நெஞ்சும் ஈரமாகியது. கிணற்று மேட்டில், அவன் தமிழோடு காதல் பேச்சுப் பேசியது; தன்னையும் மரியாதையுடன் சரிக்குச் சமமாக நோக்கியது; அவர்களுக்காக, தான் பதநீரும், நொங்கும் கொண்டு வந்து கொடுத்தது அத்தனையும் அவள் நெஞ்சுள் கசிந்து நீர்ப்பிரவாகமாக ஊற்றெடுத்தது. தன் ஒருத்திக்காக தன்னையே அவனிடம் இன்னெருத்தியாகக் காட்டிக் கொள்ளும் தமிழரசியை பயபக்தியுடன் பார்த்தாள். அவளை அறியாமலே அவளுள் ஒரு முடிவு ஏற்பட்டது. அடிபட்ட அந்த உடம்பிற்குள் பூகம்பம் வெடிப்பதுபோல் கத்தினாள்.

“நான் வர்ல. நான் வர்ல. எப்பா, நில்லும். நாங்க வர்ல...”

நடக்காமல், முரண்டு பிடித்து நின்ற கலாவதியை, தமிழரசி, ஆச்சரியமாகப் பார்த்தாள். பிறகு, தாமோதரனுக்குச் சொல்வதுபோல், “நான் மட்டும்... சந்தோஷப்பட்டா நடக்கேன். இனிமேல் எது நடக்கணுமோ அது நடக்கட்டும். இதுவரைக்கும் நான் பேசினது ஒனக்காக. இனிமே பேசப்போறது, போலீஸ் கையில் அகப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணைப் பற்றி. இப்போ நீயும் ஒனக்காக நடக்கல. குறைந்தபட்சம் இந்த ஊர்ல, ஒன்னை மாதிரி ஒருநிலமை, இன்னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாதுன்னு தான். நீ நடக்கிறே...உ.ம்...நட கலா...” என்றாள். -

கலாவதி, வாய்விட்டு அலறிஞள். தமிழரசியின் கழுத்தில், தன் கரங்களைச் சுற்றிக் கொண்டு, அவள் மார்பில் தலை வைத்து மண்ணதிர, மானுடப் பார்வைகள் அதிர வீறிட்டாள். “நான் வர்ல...வர்ல... என்னால யாரோட வேலையும் போயிடப்படாது. “தாமுத்தான்’ என்னல கஷ்டப்படப் படாது. என்னால ஒன்னோட வாழ்க்கை போயிடப்படாது. ஒன்னை...நீ அழிச்சுக்க ஒனக்கு சம்மதமாய் இருக்கலாம். ஆனால் எனக்கு சம்மதமில்ல. எப்பா! ஒமக்கு மூளை இருக்குதா? நான் நடக்கும்போது நீரு ஏன் நடக்கியரு? நம்ம ராசாத்தி தமிழோட வாழ்வு என்னாவுமுன்னு நெனச்சிப் பார்த்தீரா? என் ராசாத்தி! என் தமிழு! என் உடன் பிறப்பே! ஆயிரம் பேர் என்னை ஆயிரம் சொல்லட்டும். ஆயிரம் அடிக்கட்டும். நீ ஒருத்தி, அந்த நொறுங்குவான் செய்த காரியத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லன்னு நெனச்சா, அதுவே எங்களுக்கு ஆயிரம் யானைப் பலம். நான் வர்ல... வர்ல...”

ரத்தம் சொட்டிய கலாவதி, மார்பில் புரண்டதால், பச்சை ஜாக்கெட்டிற்கு சிவப்புக் கறை போட்டதுபோல் தோன்றிய தமிழரசி, அவள் அவலத்தை உள்வாங்கி இடி முழக்கம் செய்தாள்.

‘நடடி! நீ வர மறுத்தாலும், ஒன்னே தூக்கிட்டுப் போக முடியும்...”

கலாவதி, கண்ணகியாகாமல், அன்பினில் நெக்குருகும் அப்பாவிக் கிராமப் பெண்ணாக முறையிட்டாள் :

“நான் வர்ல, வர்ல... அப்படியே நீ என்னை வலுக்கட்டாயமாய் கூட்டிக்கிட்டு போனலும், போலீஸ் அதிகாரி கிட்ட, இவங்க அடிச்சதாய் சொல்ல மாட்டேன். நானும், அப்பாவும் கீழே விழுந்துட்டோம். விழுகிற இடத்துல பனை ஒலையோட கறுக்கு மட்டைங்க கிழிச்சுட்டு’ன்னு பொய் சொல்லுவேன். சத்தியமாய் பொய் சொல்லுவேன். நான் வர்ல. வரமாட்டேன். அப்பாவையும்வர விடமாட்டேன்...”

தமிழரசி, தன் மார்பில் புரண்ட கலாவதியின் தலையை நிமிர்த்தி, அவள் கண்களைத் துடைத்தாள். எதுவும் புரியாமல், அப்பாவித்தனமாக நின்ற சித்தப்பாவைப் பார்த்தாள். அத்தனை பேரையும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தாள். பிறகு, இன்னும் குனிந்த தலை நிமிர்த்தாமல் நின்ற தாமோதரனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்கச் சிவந்தாள். சிவக்கச் சிவக்க வெடித்தாள்:

“பார்த்தீங்களா மிஸ்டர் தாமோதரன், இயேசுநாதர் சிலுவையில் ரத்தம் சிந்துனது மாதிரி சிந்தினாலும், அந்த பாதிப்பு இல்லாமலே இவள் பேசுறதை? ஒங்க காதுல விழுந்துதா? இந்த அப்பாவிப் பொண்ணே அடிக்க வச்சு, வேடிக்கை பார்க்கிற ஒங்களுக்கு, வருத்தம் தெரிவிக்கிற நாகரிகம் கூட இல்ல. தான் சிந்தின. ரத்தத்தைக்கூட தண்ணீர் மாதிரி நினைக்கிறாள். நீங்களோ, இதெல்லாம் தண்ணிப்பட்டபாடு என்கிறது மாதிரி நிக்கிறீங்க. போகட்டும். நீங்க வருத்தம் தெரிவிக்கிறதுனால நடந்தது மறைஞ்சுடப் போறதில்ல. எப்படியோ ஒழியட்டும். நான் ஒங்ககிட்ட கேட்கப் போறது ஒன்றே ஒன்றுதான். இவளே சித்ரவதை செய்ததை இதோட நிறுத்தப் போறீங்களா, இல்ல ஒருபடி முன்னேறப் போறீங்களா? சொல்லுங்க மிஸ்டர் தாமோதரன். கேட்கிறது தமிழரசியில்ல; ஒரு பெண்ணோட கஷ்டத்தைத் தாங்க முடியாத இன்னொரு பெண்...”

தாமோதரன், தலையைக் குலுக்கி, கலாவதியை உற்றுப் பார்த்தான். அவள் காயங்களைப் பார்த்தோ, இல்லை அவள் காய்தல்.உவத்தல் இன்றி நின்றதாலோ, அவன் அவளையே பார்த்தபடி நின்றான். அவன் தோள்கள் குலுங்கின. மெள்ள மெள்ள, பூமிப் பார்வையை ஆகாயமாக்கி, தமிழரசியைப் பார்த்தான். பிறகு, எந்த வேகத்தில் பார்த்தானோ, அந்த வேகத்திலேயே, அவளிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் பாட்டுக்குப் பேசுபவன் போல ஒப்புவித்தான்.

“இங்கே நடந்தது எல்லாமே துரதிருஷ்டமானது. இது தெரிஞ்சால், நான் ஊருக்கே வந்திருக்க மாட்டேன். நான் ஊர்ல வந்ததுல இருந்து, என் வரையில் நடந்த எதுவும் நடக்காமல் இருந்திருந்தால் நான் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன். என்னமோ... எப்படியோ நடந்துட்டு... ஐ ஆம் ஸாரி... இனிமேல் என்னால யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது. கலாவதி நிசமாவே பெரிய மனுஷி.”

தாமோதரன், கலாவதியையே மீண்டும் பார்த்தான். பிறகு போகிற போக்கில் தமிழரசியையும் பார்த்துவிட்டு வேகமாக வெளியேறி விட்டான். அவனைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக, முத்துலிங்கமும் வெளியே ஒடினார். போலீஸ் படையினரும், சுற்றுப்புறச்சூழலை, குறுக்கும் நெடுக்குமாகப் பார்த்து விட்டு, வெளியேறியது.

மாடக்கண்ணுவின் வீட்டிலிருந்து, தெருவுக்கு வந்த அனைவரும், கும்பல் கும்பலாக நின்றார்கள். இதற்குள், ஜீப்பில் முன்னிருக்கையில் ஏறிய சப்-இன்ஸ்பெக்டரிடம், முத்துலிங்கம் வினயமாகப் பேசினார். அவரது கையைப் பிடித்து, இறங்கும்படி இழுத்தார். ஆனால், அவரோ பலமாக தலையை ஆட்டிவிட்டு டிரைவரைப் பார்த்தார். ஜீப் பாய்ந்தது. அதன் பின்னால் நான்கைந்து சிறுவர்கள் ஒடி, கல்லையும், மண்ணையும் வாரியிறைத்தார்கள். முனையில் திரும்பப் போன ஜீப்பை தங்களைப் பார்த்துதான் திரும்புகிறது என்று அனுமானித்து, ஒடினார்கள். கூட்டத்தில் நின்ற ஒருவர் “ஏல பசங்களா, வெளியூர்க்காரன் சைக்கிள் டயர்கள பஞ்சராக்குறது மாதிரி, ஜீப்பில காற்ற புடுங்கி விடாண்டாம்? என்ன பையங்கடா...” என்றார். உடனே ஒரு சிறுவன் “அவ்வளவுதான்... அப்புறம் வெளில போக முடியாம...நேரம் போறதுக்காக... இங்கேயே போறவன்...வாரவனை எல்லாம் அடிப்பாங்க” என்று, தன்னை புத்தியுள்ள பயந்தாங் கொள்ளிப் பையனாகக் காட்டிக் கொண்டான். கூட்டத்தில் கிசுகிசுக்கள், முணுமுணுப்புகளாகி வார்த்தை பிரளயங்களாக வெடித்தன. ஆயிரந்தான் இருந்தாலும்... நம்ம ஊரு பொண்ண...போலீச வச்சு அடிச்சால் என்னய்யா அர்த்தம்” என்ற கேள்விகள்; “இவ்வளவு நேரமும் சும்மா இருந்துட்டு, இப்போ பேசினால் என்னவே அர்த்தம்” என்ற எதிர்க் கேள்விகள். “நம்ம ஊர்ப் பையங்க பெரிய வேலைக்குப் போனால், ஊரைத்தான் குட்டப் புழுதியாக்குவாங்க என்கிறது தெரிஞ்ச கதை தானே” என்ற வியாக்கியானங்கள். ராஜதுரைக்கும், அருணாசலத்திற்கும் இடையே ஒடுங்கிப் போய் நின்ற முத்துலிங்கம், கூடிக் கூடிப் பேசிய கும்பல்களை முறைத்தார். அவர்களோ, அந்த மூவரையும், ஊரின் கால, தூத, எமனாக நினைத்து, சிறிது பேச்சில் பின்வாங்கினார்கள். பிறகு, தமிழரசியின் தைரியத்தை நினைத்தபடி, பேச்சில் முன்வாங்கினர்கள். இதைத் தாக்குப் பிடிக்க முடியாத அந்த மூவரும், பொடி நடையாக நடக்கத் துவங்கினார்கள்.

பைத்தியாரத் தர்மரின் வீட்டிற்குள் மொய்த்து நின்ற கூட்டம், சிறிது சிறிதாக விலகிக் கொண்டிருந்தது. “பாவிப்பயலுவ...கரிமுடிவான் மவனுவ...எப்டி அடிச்சிருக்காங்க...” என்று அச்சத்துடன் அலுத்துக் கொண்ட தாய்மார்கள்; தமிழரசி அங்கே நடமாடிய இடத்திற்கெல்லாம் சென்று, அவளை ஆச்சரியமாகப் பார்த்த சிறுவர், சிறுமியர்கள்-அத்தனை பேரும் அகன்றார்கள். “நல்ல வேள! கடவுளாப் பார்த்து என் தங்கம்... தமிழரசியை அனுப்பியிருக்காரு. இல்லன்னா... மாடக் கண்ணு மச்சானும், கலாவதியும் போன இடம் புல்லு முளைச்சிருக்கும்” என்றாள் முத்துமாரிப்பாட்டி, தனது அடிபட்ட அங்கங்களைத் தடவியபடியே. இன்னொரு பெண், தமிழரசியை, வாயகலப் பார்த்தபடி “ஆமாம்...தமிளு. போலீஸ்காரங்கள அப்படிப் பேசுனியே, ஒனக்கு பயமாய் இல்லே? அவங்க அடிச்சால் என்ன பண்ணுவே? நான் மனசுக்குள்ளேயே அவங்கள திட்டுனேன். அப்போகூட பயம். அது தெரிஞ்சு, அவங்க என்னை அடிச்சிடுவாங்களோன்னு மனசு படக்படக்குன்னு அடிச்சிக்கிட்டு” என்றாள்.

தமிழரசி, தன்மானத்தை விலையாகக் கொடுத்து, சுதந்திரத்தை அனுபவிக்கும் அந்த மானுட ஜீவிகளைப் பார்த்து, வெறுமையாகப் புன்னகைத்தாள். அப்போதுதான் மேடைப் பேச்சிற்கும், ஊர் நிலைமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை, முழுமையாகப் புரிந்து கொண்டாள். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று அவளே பேசியிருக்கிறாள். ஆனால், அதோ அந்த அப்பாவித் தர்மர், தான் வாங்கிக் கொடுத்த ஜரிகை வேட்டி, தும்பு தும்பாக, ராமபாணம் துளைத்த ராவணன்போல், லத்திக் கம்புகளின் குத்துக்களாலும் குடைச்சல்களாலும் நார்க் கட்டிலில் சோர்ந்து கிடக்கிறார். ‘தாய்க்குலம்...புதுமைப் பெண்...பெண் விடுதலை’ என்று அரசாங்க போஸ்டர்களில் இருந்து, ‘ஆண்டிகள்’ அடிக்கும் போஸ்டர்கள் வரை பீற்றிக் கொள்ளும் இதே இந்தக் காலத்தில்தான், இந்தக் கலாவதிப் பெண் கிழிந்த ஜாக்கெட்டை பிய்த்துக் கொண்டு, பீறிடும் பிறண்ட சதையை வெறுமையோடு பார்த்துக்கொள்கிறாள்! சமுதாயக் கொடுமைகளைப் பற்றிப் பேசாமல், ‘ராமாயணம் சிறந்ததா...பாரதமா’ என்று பேசுபவர்களைத் தூக்கில்போட வேண்டும்! முஸோலினிையப் போட்டது போல், போடவேண்டும்!

கூட்டம் போய்விட்டது.

முத்துமாரிப் பாட்டி, மாட்டுச் சாணத்தைச் சுட வைத்து, அதை ஒரு கந்தல் துணியில் போட்டு, குப்புறப்படுத்துக் கிடந்த மாடக்கண்ணுவை நெருங்கினாள். அவர் உடம்பெங்கும் ஒத்தடம் கொடுத்தாள். அடிபட்ட தனது கைக்கும், காலுக்கும் ஒத்தடம் கொடுத்துக் கொண்டாள். கலாவதிக்கு ஒத்தடம் கொடுத்த போது, அவள் வலியின் வலிமைக்குள் சிக்கி, வாய்விட்டுக் கத்தினாள். முத்துமாரிப் பாட்டியின் ஒத்தடத்தையே பார்த்துக் கொண்டு இருந்த தமிழரசி, போலீசாரை, அவ்வளவு எளிதாக விட்டிருக்கக் கூடாது என்ற குற்றவுணர்வில் அல்லா டினாள். தற்காலிகமாகவோ அல்லது நிரந்தர மாகவோ காதலில் இருந்து மறக்கடிக்கப்பட்ட தாமோ தரனே, கலாவதி நினைவுபடுத்தியதால், தானும் அவன் காதல் ஆளுகைக்கு உட்பட்டு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இணங்கியிருக்கலாமோ என்று வெட்கப் பட்டாள். இன்னும் அவர்கள் காயங்கள் போல், அவள் மனம் ஆறவில்லை அதே சமயம், தாமோதரன் கூனிக் குறுகி நின்றதும் பிறகு திரும்பிப் பாராமலே ஒடியதும், அவள் மனதில் ஓடாமலே நின்றது.

நேரம், மனோவேகமாய் ஒடிக்கொண்டிருந்தது.

தமிழரசி, தங்களுடன் இருக்கிறாள் என்ற உணர்வு இல்லாமலே, கலாவதி, அடுப்பங்கரைப் பக்கம் முடங்கிக் கொண்டாள். வலது கையை மடித்து தலையை அதில் வைத்து, தலைமுழுவதையும் முந்தானையில் மூடிப்படுத்தாள். அவள் கண்களில் திரண்ட நீர்த்திவலைகள், ஆலங்கட்டி மழைபோல் கை வெளிக்குள் விழுந்து கொண்டிருந்தன.

“கட்டுலுல படும்மா...” என்ற குரல் கேட்டு நிமிர்ந்த தமிழரசி, சித்தப்பா, அவளுக்காக ஒரு சேலையை மடித்து ‘பெட்டாகப்’ போட்டிருப்பதைப் பார்த்தாள். அவர், கட்டில் பக்கம் முடங்கப் போனார், அவள் கட்டிலில் படுப்பது வரைக்கும் தான் முடங்கப் போவதில்லை என்பதைப் போல் அவளே ஏகாறி போல் பார்த்தார். அவருக்காக தமிழரசி, கட்டிலுக்கு வந்தாள்.

“எக்கா... எக்கா” என்ற சத்தம் கேட்டு கண் விழித்த தமிழரசி, தனது வீட்டு வேலைக்காரச் சிறுவன் நிற்பதைப் பார்த்தாள்.

“என்னடா?” “ஒங்கம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க...”

“அவங்களுக்கு நான் மகள் இல்லன்னு சொல்லு. போ... போடா...”

சிறிதுநேரம், தன் பங்கிற்காகவும் காத்து நின்ற சிறுவன் போய்விட்டான். தமிழரசியால் தூங்க முடிய வில்லை. அப்பாவும், அண்ணனும், தனக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக, வெளியே காத்து நின்றது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவை, கூட்டத்தில், அப்படித் தள்ளியிருக்க வேண்டாமென்றும் தோன்றியது. எப்படியோ... இப்போ நடந்ததைப் பார்த்தால், என் வாழ்க்கையில் என்ன நடக்கப் போவுதுன்னு தெரியல... எது வேண்டுமானலும் நடக்கட்டும்.

உச்சக்கட்ட துக்கத்தாலும், சோர்வாலும் மீண்டும் கண்ணயரப் போன தமிழரசி, நிமிர்ந்து உட்கார்ந்தாள். அம்மா, ராகமில்லாத நிச ஒப்பாரி போடுவது கேட்டது. கல்லூரி விடுதிக்குள், தன் குட்டியை குரங்காட்டியிடம் பறிகொடுத்த ஒரு பெண் குரங்கு கத்தியதே, அதே மாதிரியான அவல ஒலி. பாசம் என்று வந்து விட்டால், பெண் புலியும், மான் போல் மருளும் என்பதை எடுத்துக்காட்டும் ஏக்க ஏக்கமான விம்மல்கள். துக்கம் துக்கமான ஒலி...

தமிழரசி, பாய்ந்து நனாடந்தாள். அம்மாவைப் பார்க்காத ஒவ்வொரு வினாடியும், வீண் வினாடி என்று நினைத்தவள் போல், தெருவுக்கு வந்து, தன் வீட்டுக்குள் வந்தாள். அவள் முற்றத்திற்கு வரும் முன்பே, அம்மாக்காரி ஓடிவந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “நான் கலாவதியை திட்டி அழ வைக்க மாட்டேம்மா... என்கிட்டேயே இரும்மா” என்று அவள் பாசத்துள் கரைந்து, தமிழரசியை தன் கர்ப்பப்பைக்குள் மீண்டும் வைக்கப் போகிறவள் போல், அழுத்திப் பிடித்தாள். ‘ஏய்’ என்ற குரல் கேட்டு, இருவரும் நிமிர்ந்தார்கள். வெளியே இருந்து வந்த தமிழரசியின் தந்தை அருணாசலம், மகள் மேல் பாயப் போனார். வார்த்தைகள் வேகமாகவும், அவர் மகளைப் பார்த்து ஓடியது, அதிவேகமாகவும் இருந்தன.

“நீ என் மகள் இல்லன்னு காலையிலேயே தலைமுழுவிட்டேன். என் வீட்டுக்குள்ளே நீ எப்டி வரலாம்? சண்டாளி. ஒன்னை என் கையாலயே வெட்டி, இங்கேயே குழிவெட்டிப் புதைக்கப் போறேன், பாரு.”