நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 18
18
மூன்று பக்கமும் மலைவளைய, முன்பக்கம் நீர் பொழிய, மாணிக்கவாசகர் காட்டும் தாவர சங்கமத்தின் பிரதிமை போல் தோற்றம் காட்டும் கோனைப் பகுதியில், அருவியை அடுத்த குகையில், பிரபஞ்சவெளியை கோடுபோட்டுக் காட்டுவதுபோல் காட்சியளிக்கும் லிங்கம். காலையிலேயே வந்து லிங்கத்தை அலங்கரித்த அர்ச்சகர், அருவிகளில் குளித்துக் கொண்டிருப்பவர்கள் கோவிலுக்கு, ‘தரிசனம்’ கொடுத்தாலும் கொடுக்கலாம் என்று நினைத்து, அவர்களையே அவ்வப்போது பார்த்துக் கொண்டார்.
குளித்துக் கொண்டிருந்தவர்களில் பலர், குடித்துக் கொண்டிருக்கப் போய்விட்டார்கள். எஞ்சிய ஆண்களும் வெளியேறுவதற்காக காத்திருந்த இளம் பெண்கள் கூட்டம், அவர்கள் வெளியேற மாட்டார்கள் என்று நினைத்து, அவர்களை வெளியேற்றிக் காட்டுவதற்காக, கூவியபடியே அருவிக்குள் ஓடியது. சென்னை நகரில், ஒரு நாள் விட்டு மறு நாளே தண்ணீருடன் பரிச்சயம் கொள்ளும் அந்தப் பெண்கள், பாய்ந்தார்கள். தலையை விரித்துப் போட்டு தண்ணீரை வாங்கிக் கொண்ட ஒருத்தி, ஆனந்தம் தாங்க முடியாமல் “இந்த அருவியை மெட்ராசுக்கு தூக்கிட்டு போயிடுவோமாடி” என்றாள். உடனே இன்னொருத்தி “ஓ. கே. நீ என்ன செய்யுறேன்னா, இந்த மலையைத் தூக்கி என் தலையில வைப்பியாம். நான் தூக்கிக்கிட்டு வருவேனாம்” என்றாள், உடனே, வளையொலி சிணுங்க கைதட்டியது பெண்கள் கூட்டம்; “ஓல்ட் ஜோக்... ஓல்ட் ஜோக்...” என்று சொல்லவும் ஒருத்தி தவறவில்லை.
பிறகு எல்லோரும் சொல்லிவைத்தது போல், குளியல் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனித்து, குகையை எதிர்த்தாற்போல் பாறை விளிம்பில் போடப்பட்ட கம்பி மேல் சாய்ந்தபடி நின்றவளைப் பார்த்தார்கள். தலையெங்கும் தண்ணீர் மயமாய், உடலெங்கும் ஒட்டிய ஆடையோடு நின்ற பெண்களில் சிலர், அவளைப் பார்த்து “மேடம் மேடம்” என்றார்கள். சிலர் “தமிழு... வாயேன்... ஏன் அப்படி பார்க்கிறே?” என்றார்கள்.
தமிழரசி அசையாமல் நின்றாள். முன்னால் தோன்றிய லிங்கத்தையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லையற்ற விண்பரப்பை, கண்ணால் எப்படி வடிவ வரைவு கொள்ள முடியுமோ–அப்படிப்பட்ட வடிவம் காட்டிய லிங்கம் உடலைத் தாண்டும் உயிரையும், உயிரைத் தாண்டும் ஆன்மாவையும், ஊடுருவும் உள்ளொளியாய் எதையோ ஒன்றைச் சொல்லாமல் சொல்லி, காட்டாமல் காட்டிக் கொண்டிருப்பதுபோல், அவளுக்குத் தோன்றியது. முன்பு, கோவில்களை எதிர்ப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுகூட, மாணவிகள், ‘மேடம்களுக்கு’ அடிக்கும் சலூட்போல், அனிச்சைவாகவும், ஒரு ஒப்பு மரபுக்காகவும் கரங்குவிக்கும் தமிழரசி, இப்போது கரங்குவிக்கவில்லையானாலும், மனங்குவித்து, அந்த லிங்கத்தையே பார்த்தாள்.
வாழ்க்கை என்ற திடவஸ்துக்கு அப்பாலும், இப்பாலும், அதை ஆட்டிப்படைத்து அபிசேகமாய் ஆக்கிக் கொள்ளும் திரவவெளியும், வாயு வெளியும், எவையும் இல்லாத-பரிசுத்த சூன்ய வெளியும், தன்னைச் சுற்றிச் கொண்டது போன்ற பிரமைக்குள் சிக்கியிருந்தாள். குடி மயக்கம் தீராமலே குளித்து முடித்த ஒருவர் நீட்டிய கற்பூரத்தை, அர்ச்சகர், ஒளிமயமாக்கியபோது, அவள் காதில், வள்ளலார் பாடிய ‘செம்பொருளான சிவமே’ என்ற பக்தி வரியும், அந்த வடலூர் ஜோதி, ‘அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை’ என்று பாட்டுக்குப் பாட்டாய், பாடிய தேடல் வரிகளும், அவள் காதில் ஒலித்தன.
குளித்துக் கொண்டிருந்த பெண்கள் ‘மேடம்... மேடம்...’ என்றும், பலர் ‘தமிழு... தமிழு’ என்றும் இருவேறுபட்டு எழுப்பிய ஒலிவகைகள், “மேடம் தமிழ் “தமிழ் மேடம்”” என்று ஒரே ஒருவகை ஒலியாய் எழுந்த போது, தமிழரசி தோள்களைக் குலுக்கி, புருவத்தை நிமிர்த்தி, மோனம் கலைத்து, அரைக்கண் பார்வையை முழுதாக்கி, அவர்களின் ஒன்றித்த பார்வையை சந்தித்ததால், அவசர அவசரமாய் அருவிக்குள் ஓடினாள். பெண்களோடு பெண்ணாய் நின்று கொண்டாள். உடம்பையும், உணர்வையும் இனிமையாய் சுண்டியிழுக்கும் அருவிதரும் சுகத்தை அறியாமலே, நீர்ச் சுமையை சுமப்பதுபோல் நின்றாள் தமிழரசி. தன்னை மறக்க முடியாத தர்ம சங்கடத்தில் நின்றாளென்றால், இதரப் பெண்களுக்கு இன்னொரு வகையில சங்கடமான தர்மம்.
அங்கே குளிக்கும் எல்லாப் பெண்களும், கல்லூரிகளிலும், மேல் நிலைப்பள்ளிகளிலும், ஆசிரியைகளாகவும் கம்பெனிகளில் செகரட்டரிகளாகவும் பணிபுரிபவர்கள். ‘ஸ்வீட் சிக்ஸ் டீனைத்’ தாண்டி, ‘காரமான லேட் இருபதுகளுக்குள்’ காலூன்றியவர்கள். ஆனாலும் அருவிக்குள் நின்றபடியே ஆடவேண்டும் என்று மனதுக்குள் என்னமோ ஆசை. அதே சமயம், மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற தார்மீகப் பயம். ஆகையால், ஒவ்வொருத்தியும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் சாக்கில் ஆடிக்கொண்டாள். ஒரே ஒருத்தி மட்டும் “இந்த வயதில் ஆடாவிட்டால், இனிமேல் வரப்போவது கிழவியாட்டத்தான்” என்பதை வலுக்கட்டாயமாய் மனதுக்குள் கொண்டு வந்து, ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடி, பகிரங்கமாய் ஆடினாள். உடனே பல பெண்கள், தங்கள் மேலேயும், மற்றப் பெண்களின் முதுகுகள் மேலேயும் தாளம் போட்டார்கள். தப்பாட்டம்... தப்புத்தாளங்கள் தான் என்றாலும், அருவியாட்டத்தில் ஏற்பட்ட மனதின் ஆட்டம் உடலை ஆட்டி, உள்ளத்தையும் ஆட்டுவித்தது. மலையில் இருந்து இறங்கி, அந்தப் பெண்கள் வைத்திருந்த பைகளை ‘ஆய்வு’ செய்யப் போன குரங்குகள், அவர்கள் போட்ட ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, வந்த காரியத்தைப் பற்றி யோசித்தன.
உடனே ஒருத்தி “ஆ... குரங்கு... ஏய்... நிர்மல்! டான்ஸ் ஆடுடி! அப்போதான் குரங்குக பயந்து ஓடும்” என்று சொல்லவும், நிர்மல், குரங்கு மாதிரியே அபிநயம் பிடித்தாள். பைகளில் மாற்றுப் புடவைகளை வைத்திருந்த பெண்களும், உடம்பில் இருந்த புடவைகளை உருவிப் போட்டுவிட்டு நின்ற பாவாடைக்காரிகளும், குரங்குகளைப் பார்த்து, பாயப் போவது போல் பாசாங்கு செய்தனர்.
எல்லோரும் குளித்து முடித்துவிட்டு, கூந்தல்களை உலர்த்தியபடி, வெளியே வந்து ஆடைகளை மாற்றிக் கொண்டார்கள். குகையில் கொலு கொண்ட கைலாச நாதர் லிங்கத்தைப் பார்த்து ஒப்புக்குக் கையை தூக்கிக் காட்டிவிட்டு, கீழே இறங்கினார்கள், தமிழரசியும், அவள் அறைத் தோழி பத்மாவும், வானுக்கும் பூமிக்கும் வள்ளலாய் விளங்கும் லிங்கத்தை, கரம் கூப்பி, மனம் விட்டு வணங்கினார்கள். கீழே இறங்கிய பெண் பட்டாளம் “தமிழு...மேடம்” என்றது. உடனே பத்மா “வா... போகலாம்”என்றாள். அந்தக் குகையருகே குடிசை போட்டு இருக்கலாமா என்பது போல் சிந்தித்த தமிழரசியை பலவந்தமாய் கடத்திக் கொண்டு சென்றாள்.
அருவியில் இருந்து கால் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தோப்புக்குள் இறங்கிய பெண் பட்டாளம், தமிழரசியும், பத்மாவும் போய்ச் சேருவதற்கு முன்பாக, பெட்ஷீட்டுகளை விரித்து, டிரான்ஸிஸ்டர் செட்டை தட்டி விட்டு, உணவுப் பொட்டலங்களைப் பிரித்துக் கொண்டிருந்தது. அங்கே பரிதாபகரமான மைனாரிட்டியாக இருந்த டீலக்ஸ் பஸ் டிரைவரும், கிளீனரும், ஹாஸ்டல் சிப்பாயும், பொட்டலங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். தமிழரசி, தன்னிடம் நீட்டப்பட்ட பார்சலை யந்திரம் போல் வாங்கி, அதைப் பிரிக்காமல் மனதைப் பிரித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பத்மாதான், அதைப் பிரித்து அவள் மடியில் திணித்தாள்.
தமிழரசியோ, இதோ இந்த அருவி, தானும் தாமுவும் நீராடி விட்டு, இதே இந்த தோப்பில், இன்னும் சற்று மறைவான இடத்தில், கையோடு கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, நெஞ்சோடு கொண்டு வந்த காதல் மேலோங்க, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதுபோல் மனதில் கற்பித்துக் கொண்டாள். பிறகு, “அய்யய்யோ ... காதல் ஜோர்ல லிங்கத்தை மறந்துட்டேன்” என்று உதட்டைக் கடித்தபடி, தானும், தாமுவும் லிங்கநாதர் முன்னால் கற்பூரம் ஏற்றி, '“மாசில் வீணையும், மாலை மதியமும், வீசுதென்றலும்” பாடுவது போல் பாவித்துக் கொண்டாள்.
திடீரென்று, “என்னடி, எல்லாரும் கை கழுவியாச்சுது. நீ இன்னும் தொட்டுக்கூடப் பார்க்கல...” என்ற அதட்டல் கேட்டு, லேசாய் கண்ணுயர்த்தினாள். பத்மா, அவள் வாயில் இரு இட்லித் துண்டை ‘விரலைக் கடிச் - சுடாதடி’ என்று சொல்லியபடியே வைத்தாள்.
தமிழரசி, தன்னையே தான் தின்பதுபோல் அதைத் தின்றாள். “ஒன் கண்ணில் உள்ள உத்திரத்தைக் கவனிக் காமல், பிறத்தியார் கண் துரும்பை கவனிக்காதே” என்று சொன்னது எவ்வளவு உண்மை! பொது நீதிக்காகப் போராடுகிறவள்னு எனக்குப் பேரு. ஆனால் இப்போ ... இப்போ மட்டுமில்ல, சென்னைக்கு வந்த பிறகு எப்பவுமே கலாவதி ஞாபகம் வர்ல; சித்தப்பாவைப் பத்திய சிந்தனையே இல்ல. அண்ணனைப் பற்றி அக்கறைப் படல. பெற்றோரைப் பத்தி நினைத்துப் பார்க்கல. எப்போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும், எண்ணும் போதும், எழுதும் போதும், எதற்காக தாமுவைப் பற்றி மட்டுமே நான் நினைக்கணும்...? நானா நினைக்கேன் ...? நான் நினைக்கல! ஏதோ ஒன்று அப்படி என்னை நினைக்க வைக்குது. அதற்குப் பெயர் தான் காதலா? அப்படியானால்... காதல் விவஸ்தை கெட்டதா...? என்னுள் உயிரையும் தன்னுள் உடம்பையும் வைத்திருக்கும்— கலாவதியைவிட, இந்த தாமு எந்த வகையில் உசத்தி?’
தோளில் எடுத்து வைத்துச் சுமந்த சித்தப்பாவைவிட, என்தோளைத் தட்டி விட்டு, அப்புறம் அண்ணனின் அநியாய இழுப்புக்கு தலையைக் கொடுத்த இந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா எந்த வகையில் உசத்தி? என் மனம் ஏன் அவரிலேயே உழல வேண்டும்? என்னிலும் ஏதோ ஒரு சுயநலம் இருக்கு. அதை அகற்ற முடியாட்டாலும் அடக்கணும். உறுதியென்ற அங்குசத்தால் ஒரேயடியாய் அடக்கணும்.
தமிழரசி, உணர்ச்சிகளைக் கடித்து உருக்குலைப்பவள் போல், உணவை பலங்கொண்ட மட்டும் பற்களால் குதறினாள். குதறியபடியே, காதல் உணர்வை உதற முயற்சித்தாள். ஊரிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. அங்கே என்ன நடந்தது என்று அவளும் அறிய விரும்பவில்லை; எவரும் அறிவிக்கவும் இல்லை.
ஊருக்குப் போனவள், போனவளாய் திரும்பி வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அறைத் தோழி பத்மாவிடம் கூட, ஒரு வாரம் வரைக்கும், தனது இனிய—கொடுமையான அனுபவங்களைக் கூறவில்லை... அப்புறந்தான் அவளுடைய வற்புறுத்தலாலும், யாரிடமாவது சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற மனக் கட்டாயம் ஏற்பட்டதாலும், காதலை மட்டும் கொஞ்சம் ‘எடிட்’ செய்துவிட்டு, இதர விவகாரங்களை அப்படியே சொன்னாள். பிறகு, போகப்போக காதல் விவகாரத்தையும், உள்ளது உள்ளபடியாய் ஒப்பித்தாள். நல்ல வேளையாக, ‘ஸோஷியாலஜி’ (சமூக இயல்) உதவிப் பேராசிரியையான பத்மா அவள் மனோ நிலையைப் புரிந்து கொண்டு, அவளின் அரைப் பைத்திய’ நிலைக்கு ஈடு கொடுத்ததோடு, அவ்வப்போது ஆறுதலும் சொன்னாள்.
மூன்றாண்டு காலமாக, சென்னையில் பிரபலமான உழைக்கும் பெண்கள் விடுதியில், தங்கி இருக்கும் தமிழரசி, அதை தன் சொந்த வீடு போலவே நேசித்தாள். ஆண்டுக்கு மூன்று தடவை, அவளே முன்நின்று, ‘ஹாஸ்டல் மேட்களை’ ஒன்று திரட்டி, எங்கேயாவது ‘பிக்னிக்’ போக ஏற்பாடு செய்வாள். தேக்கடிக்குப் போன போதும், ஒகேனக்கலுக்குப் போன போதும் அவளே முன் நின்று, எல்லாப் பொறுப்புகளையும் வலியச் சுமந்தாள். இந்தத் தடவை அவள் ஒதுங்கிக் கொண்டபோது, தலைமைப் பொறுப்பை, தகுதி இல்லாமலேயே பெற விரும்பிய சில பெண்கள் பொறுப்புக்களை மேற்கொண்டார்கள். வரமறுத்த தமிழரசியை, இந்த பத்மாதான் வரவழைத்தாள்
மீன்களோடு போட்டி போட்டு துள்ளிக்குதித்த நீர்த் துளிகளைப் பார்த்ததாலோ என்னவோ, தமிழரசிக்கு, ஏதோ ஒருவகை வீரியம் ஏற்பட்டது. ஊரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிய மனமில்லாமல் இருந்தது பொறுப்பற்ற செயல். தொட்டிலையும் ஆட்டி, குழந்தையையும் கிள்ளிவிட்ட செயல். முதல் வேலையாய் சென்னைக்குப் போனதும், அடையாறில் உள்ள மகாலிங்கம் மெடிக்கல்ஸ் உரிமையாளர் ராஜகோபாலுக்கு டெலிபோன் செய்ய வேண்டும். பக்கத்து ஊர்க்காரர், இல்லையானால், ஊரில் யாருக்காவது லட்டர் எழுதிக் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறை வீட்டுக்கு லட்டர் போடுறதை நிறுத்தி ஒரு மாதமாச்சுது. அவங்களும் போடல. கலாவதி எப்படி இருக்காளோ? வினை தீர்த்தான்–பொன்மணி ஊருக்குப் போய் விட்டார்களோ என்னமோ?
தமிழரசியின் முன்னாள் மாணவியும், இந்நாள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியையுமான அலமேலுமங்கை, “மேடத்துக்கு என்ன வந்தது? எல்லாத்துக்கும் முன்னால நிற்கிறவங்க, இப்போ பின்னால கூட நிற்க மாட்டங்காங்க. ரூம்ல போர்வையை தலையோட சேர்த்து மூடி, பால்காரன் கூவுன பிறகும் தூங்குறாங்க, ‘ஓட் இஸ் திஸ்’ என்றவள், —பிறகு, டேலண்டும்... இளமை மாதிரி ஒரு நிலையில்லாத அம்சந்தானோ?” என்று. இன்னொருத்தியின் காதைக் கடித்தாள். உடனே, அந்த இன்னொருத்தி நான் மேடத்தை வழிக்குக் கொண்டு வாரேன் பாரு என்று” சொல்லிவிட்டு, தமிழரசியின் முன்னால் வந்து உட்கார்ந்தபடி தன் டேலண்டைக் காட்டினாள்:
“மேடம், நீங்க டி.வி.யில நமது விருந்தினரை இன்டர்வியூ செய்தது நல்லாவே இல்ல. பொதுவாய், நீங்க டி.வி, யிலே வந்தால் நேச்சுரலாய் இருக்கும். ‘அவர்களே.... அவர்களேன்னு’ செந்தமிழ்ல சிக்க மாட்டிங்க. நடமாடும் தமிழ்ல, ஏற்கனவே ‘கடம்’ போட்டு ஒப்பிக்காமல் ‘பிரஷ்ஷா’ கேட்பீங்க. பட், போன வாரம் ‘போர்’. நீங்களான்னு எனக்கே சந்தேகம். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்கிற போர்டை, டி.வி.க் காரங்க ஒங்க கழுத்துல தொங்கப் போட்டிருக்கலாமுன்னு தோணிச்சுது.”
தமிழரசி, தன் முன்னாள் மாணவியைப் பலவீனமாய் பார்த்தாள். போன வாரம், டி.வி. நிகழ்ச்சிக்குப் போக மறுத்தாள். ஆனால் தயாரிப்பாளர் ‘ரிக்கார்டிங்...’ பிக்ஸாயிட்டு... நீங்க வருவீங்கன்னு... அந்த தமிழ் அறிஞர்கிட்டேயும் சொல்லிட்டேன் என்று சொன்னதும் அவளால் தட்ட முடியவில்லை....
முன்னாள் மாணவி விடவில்லை. அது போகட்டும். மேடம். நீங்க டாக்டரேட்டுக்கு, எதுக்காக ‘தமிழ் இலக்கியத்தில் வீரம் இல்லாமல் மார்தட்டியதால் ஏற்பட்ட விளைவுகள்னு’ சப்ஜெக்ட் எடுத்தீங்க? இதுக்கும், இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?”
தமிழரசி, தமிழரசியானாள்:இலக்கியம் என்கிறது கற்பனா வாதம் இல்ல. அது மக்களின் காலக்கண்ணாடின்னு ஒனக்குத் தெரிஞ்சிருந்தால், இப்படிக் கேட்டிருக்க மாட்டே. எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கோ இல்லியோ, என்னால நிரூபிக்க முடியும். கண்ணகியை போற்றிக்கிட்டே, பரத்தையரைப் பாடினோம். அமைதியை தேடிக்கிட்டே, மார்புக் காயத்தைப் பற்றியும், போரில் சாக சந்தர்ப்பம் இல்லாமல், இளமையில் செத்த குழந்தையின் மார்பை இரண்டாகப் பிளந்து புதைச்சதாய் கதைக்கிறோம். புறநானூறு வந்த பிறகும் அதைப் பாடிக்கிட்டே, யார்னு இன்னும் கண்டு பிடிக்க முடியாத ‘களப்பிரர்’ கிட்டே தோற்றோம். அந்தக் காலத்திலேயே தலைவிக்கு ஒரு கற்பு நிலை, தோழிக்கு ஒரு கற்பு நிலைன்னு வச்சோம். ஜனரஞ்சக பத்திரிகைகள்ல சங்கராச்சாரியார் படத்தையும், வாரியார் படத்தையும் சில்க் சுமிதா படத்தையும் ஒரே மாதிரி போடுறோம். அந்நிய கலாச்சாரத்தைப் புகுத்துறோம். இதை எதிர்த்து என்னால போராட முடியாட்டாலும், நம்ம யோக்கியதையை, பல்கலைக் கழக அறிஞர்களுக்காவது தெரியப் படுத்தலாமுன்னுதான் இந்த ‘டாபிக்கை’ எடுத்தேன். ஒனக்குப் புரியாட்டால், இனிமேல் ஒரு தடவை என் கிளாசுக்கு வா.”
கேள்வி கேட்டவள், குறும்பாய் சிரித்தாள்.
“புரியுது மேடம், புரியுது. அப்புறம் நான் எம். பில், எடுக்கலாமுன்னு நினைக்கேன். ‘அடித்தள மக்களும். இன்னாருடைய புதுக் கவிதையும்’ என்கிறது சப்ஜெக்ட். எந்தக் கவிஞரை எடுக்கலாம் மேடம்? மேத்தாவா, நா. காமராசனா, வைரமுத்தா, இல்ல வாலியோட பொய்க்கால் குதிரையைப் பிடிக்கட்டுமா?”
“நீ சொல்ற கவிஞர்கள் எல்லாம் நல்ல கவிஞர்கள். ஆனால் நீ இவங்க கவிதைகளை விட, இவங்களுக்கு சினிமா மோஸ்தர் இருக்கதால தான் கேட்கிறேன்னு நினைக்கேன். ஆய்வு என்கிறது பிரபலமானவங்களோட படைப்புகளை மட்டும் பரிசீலனை செய்யுறது இல்ல. உண்மையான ஆய்வு, மொதல்ல தக்க படைப்பாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல துவங்கணும். இப்போ எவ்வளவோ புதுக்கவிதை புத்தகம் வருது... நமக்குத் தெரிந்தவங்களைவிட, இந்த தெரி யாதவங்க சிறப்பாய் எழுதியிருக்கலாம். தேடிப் படிக்கணும். எனக்குத் தெரிந்த வரைக்கும் கவிஞர்கள் தணிகைச் செல்வன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப், ஜீவபாரதி, பழனி சுந்தரேசன், வெங்கடேசரவி இவங்க அடித்தள மக்களைப் பற்றி மட்டும் எழுதல, பொருளாதாரத்துல அடித்தள மக்கள் முன்னேறாத வரைக்கும் நாங்களும் முன்னேற மாட்டோமுன்னு பப்ளிசிட்டிக்கோ பணத்துக்கோ ஆசைப்படாமல் இருக்காங்க.”
“தேங்க் யூ மேடம்!”
“நான்தான் ஒனக்கு தேங்ஸ் சொல்லணும்.”
எல்லோரும் தமிழரசியையே பார்த்தார்கள். வெளியே தோற்றது போல் பாசாங்கு காட்டிய அந்த முன்னாள் மாணவி, வெற்றி மதர்ப்போடு திரும்பினாள். பேசி முடித்த தமிழரசியோ, தன் முன்னால் தனியாய், அந்தரத்தில் தொங்கிய அச்சமும் ஆவேசமும் இயலாமையும் ஏக்கமும் உருக்கமான பூதம் ஒன்று தன்னை வாரிச் சுருட்டி, வாயில் போடப் போவதைப் பார்த்தவள் போல் பத்மாவுடன் நெருக்கியடித்து உட்கார்ந்தாள். உடனே பத்மா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே! “மனம் நெருப்பு மாதிரி, எதையாவது ஒன்றை பற்றாமல், தனியாய் நிற்காது... முடியாது. அதனால் இந்த மாதிரி பாஸிட்டிவ்வாய் பேசு” என்றாள்.
டீலக்ஸ் பெண்களோடு, அந்த டீலக்ஸ் பஸ் புறப்பட்டது. மேட்டில் பதுங்கிப் பதுங்கி ஏறி, பள்ளத்தில் பாய்ந்து, திருப்பதி—சென்னை சாலைக்கு வந்து, சீராக ஓடியது. தமிழரசி, கோனைப் பகுதிக்குள் இருந்த இன்னொரு, விநாயக முருக ஆலயத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள். பஸ்லே, சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிச் செய்வது போல் பெண்கள் ஒலி, பெருவொலியானது.
பிச்சாட்டூர் ‘டானா’ வளைவைத் தாண்டி, பஸ் பாய்ந்த போது, சில பெண்கள், “ஹோல்டான்... ஹோல்டான்... பூ... வாங்கணும்” என்றார்கள். பஸ் நின்றதும், பெண் பட்டாளம், கீழே இறங்கி, பூ வாங்காமல் சோடா குடித்தார்கள்.
பஸ்சுக்குள்ளேயே இருந்த தமிழரசி, “மொதல்ல இறக்குறதை இறக்குறேன், காசைப் பற்றி கவல இல்லை,” என்ற பழக்கப்பட்ட குரல் கேட்டு, பஸ்சிற்கு வெளியே கழுத்தை நீட்டி, எட்டிப் பார்த்தாள்.
தார் பாய்ந்த வேட்டியோடு, வேர்வை பாய்ந்த மேனியோடு, ஒருவன் எதிர்ப்புறத்து பஸ்சில், பால் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தான்.
வினை தீர்த்தான்!