நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 21

விக்கிமூலம் இலிருந்து

21

மரித்தது போல் காட்சி தந்த அந்தப் பகுதி உயிர்த்தெழுந்தது போல் தோன்றியது. சுற்றுப்புறத் தென்னை மரங்களும், புன்னை மரங்களும் இவற்றின் இடையிடையே அப்பிக் கிடந்த ஆயிரமாயிரம் செடிகளையும் மீறி, தலை வாசல்களில் பல தலைகள் தென்பட்டன. ஒருவரை ஒருவர், வினாக்குறியோடு பார்த்தபடி, விடை தேடுபவர்கள்போல் பலர் ஆண்களும், பெண்களுமாய், காவல் நிலையம் அருகே வந்து சாலையைப் பார்த்தார்கள். பழையபடியும் அந்த ‘மண்டைக் காடு’தான் வந்து விட்டதோ என்று சந்தேகப் பட்டு, பலர், சிலம்புக் கம்புகளையும், மீன் முள்களையும் எடுப்பதற்காகத் திரும்பப் போனார்கள். அதற்குள் துாரத்தே கேட்ட இடிமுழக்கம், திரும்பியவர்களை திரும்ப வைத்தது. பிரிந்தவர்களைப் பிணைத்தது. அது புதியவகை ஒலி முழக்கம். வேறுவகை சத்தம்.

‘ஒழிக... ஒழிக... போலீஸ் பாரபட்சம் ஒழிக. .

‘வாழ்க... வாழ்க... தொழிலாளர் ஒற்றுமை வாழ்க’

“காவல் துறையே, காவல் துறையே, பட்டப் பகல் கொலை ஒன் பார்வையில் படவில்லையா?”

சுமார் முந்நூறு தொழிலாளர்கள், மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நீண்ட கொடி பிடித்து, நெடிதுயர்ந்த இரண்டு ஆண்கள், ராணுவ வீரர்கள் போல், காலெடுப்பும், கால் வைப்பும் பார்ப்பவர்கள் பார்வையில் துலக்கமாய் தெரியும்படி நடை போட, அவர்களுக்கு மத்தியில் முப்பது வயதுப்

பெண் ஒருத்தி, கால்களில் கண்ணிர்பட, நெஞ்சினில் சோகம்படிய, தரை பார்த்த கண்ணிராய், செயலற்ற பெண்ணிராய் வந்து கொண்டிருந்தாள். அவளின் இயலாமை நடைக்கு ஏற்றாற்போல், ஆடவர் இருவரும், பாத வேகத்தைக் குறைத்தபடியும், கூட்டியபடியும் நடந்தார்கள்.

இந்த மூவர் முகப்பிற்குப் பின்னால் ஆண்களென்றாே பெண்களென்றாே லேசில் அடையாளம் பிரிக்க முடியாத இரண்டறக் கலந்த மனிதக் கூட்டம் அலையலையாய் வந்தது. எஸ்டேட்களில் இருந்து அப்போதுதான் வேலை முடிந்தவர் ”களாய் தோன்றினார்கள். சில தலைகளில் தேயிலைகள்: சிலவற்றில் துடைத்தாலும் போகாத பிசின்கள். பழுப்பேறிய உடையோடு, முறுக்கேறிய நடையோடு, படபடத்த முகத்தோடு, கலவரக் கண்களோடு காலெடுத்து வைத்தார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் ஏதோ ஒரு துக்கம் நடைபெற்று விட்டது போலவும், அதைத் துடைக்க நினைத்தவர்கள் போன்ற துயர நடை. ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி செயல்படுவது போன்ற தோரணை நடை.

அவர்களின் நிற்காத நடையும், நிறுத்தாத கோஷங்களும், அங்குள்ள தாவர வளாகத்திற்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்தன. ஒன்றாேடொன்றாய் உரசிக் கொண்டிருந்த தெங்கும், பாக்கும் தோழமை பேசுவதுபோல் தோன்றின. கரையோர கருவேல மரங்கள், கொதித்த உள்ளங்களின் கரங்களாய்த் தோன்றின எங்கிருந்தோ வீசிய காற்றை, அங்குள்ள மரங்களும் புதர்களும் மற்று முள்ள தாவரங்கள் ஒன்றுபட்டு உட்புக முடியாதபடி செய்யப்போவது போன்ற தோற்றம். மரங்களில் கூடிக் குலாவி, இப்போது ஆகாயத்தை வட்டமடித்த பறவையினக்குரல், புதிய பாசறையின் முரசொலி போல் ஒலித்தது.

எந்த போலீஸ் அதிகாரியும் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி ஆணையிடுவாரோ, அப்படித்தான் தாமோ தரனும் ஆணையிடுவான் என்று எல்லாப் போலீஸ்காரர்களும் அனுமானித்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கேளாமலே அவர்களாகவே ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்தார்கள். தாமோதரன் கடைசியில் வந்து அவர்களுக்கு முதலாவதாக நின்றான். அவன் கையிலும் ஒரு துப்பாக்கி. எவர்களை ‘பாரேட்’ செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அவர்கள் தலைமையில் தொழிலாளர்கள் ‘பாரேட்’ செய்வதைப் பார்த்த ஏட்டு பொன்னுச்சாமி எகிற முடியாமல் நின்றார். தொழிலாளர் கூட்டத்தின் வருகையை சந்திக்கத் தயாரானவர்கள் போல் எல்லாப் போலீஸ்காரர்களும் சாலையின் குறுக்கே மனிதச் சுவராகவும், அந்த மனித வேலியின் முள் கம்பிகள் போல் உயர்ந்து நின்ற துப்பாக்கிகளுமாய் தரிசனம் தந்த போது-

தொழிலாளர் கூட்டம், சிறிது நின்றது. ஒரு சிலர் ஓடத்தான் செய்தார்கள். ஆனாலும் பெரும்பாலான தொழிலாளர்கள், “பாட்டாளி வர்க்கம் ஜிந்தா பாத்...... ஜிந்தா பாத்” என்று முழக்க மிட்டார்கள். உத்வேகக் குரலோடு, போலீசாரை எதிர் நோக்கி, மார்புகளை நிமிர்த்திய படியே முன்னேறினார்கள்.

ஊர்வலத்தின் நடுவில் நின்ற பெண்களும், “பூமிநாதன் எங்கள் தோழனேக் கொன்னது மாதிரி, நீங்களும் வேணுமானால் எங்களை சுட்டுத்தள்ளி, ஒங்க ரத்த தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கடா!” என்று சிதறி, முன்னேறப் போனார்கள். பலர், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு, நீண்ட காலக் காரணங்கள், உடனடிக் காரணங்கள் என்று இரண்டு வகைக் காரியக் காரணங்கள் உண்டு. ஏற்கனவே சூடுபட்ட கலாவதி தன் நெஞ்சிலும், ஆன்மாவிலும் ஆவிபறக்கும். அனல் கங்கை ஊதிக் கொண்டிருக்கும் சித்ரவதையில் கரிந்து கொண்டிருந்த தாமோதரன், ஊர்வலத்தின் முகப்புத் திலகம் போல் வந்த அந்த பெண்ணைப் பார்த்தான். அவள் யாராய் இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டான். விழுந்த தலை போன்ற கவிழ்ந்த முகம்; வெட்டுண்டு துடிப்பது போன்ற கால் கைகள்: பூவரசம் பூ நிறம். பொங்கிய கண்ணீரை புறங் கையால் துடைக்கும் கோலம். அவளைப் பார்க்கப் பார்க்க தாமோதரனுக்குள், ஒரு புதிய உருவம் உருவாகிக் கொண்டிருந்தது.

திடீரென்று, அந்தப் பெண், போலீஸாருக்கு முதுகைக் காட்டி, கொந்தளித்த கூட்டத்திடம் முகத்தைக் காட்டி “எனக்காக நீங்க ரத்தம் சிந்தப் படாது. செத்தவர் வரப் போறதில்ல. பூமிநாதனுக்கும், அவனுக்கு உடந்தையாய் இருந்த அத்தனை பேருக்கும் ஆண்டவன் கூலி கொடுப்பான். நீங்கள் ஓடுங்க. போலீஸ்காரன் சுடு முன்னால போயிடுங்க,” என்று கத்தினாள்.

பிறகு, மீண்டும் உடம்பைத் திருப்பி, போலீலை நோக்கி, பத்தடி வேகமாக நடந்து,“போலீஸ் துரைமாரே, பிரிஞ்ச குடும்பத்தையும் நீங்க சேர்த்து வைக்கிறதாய் பேப்பர்ல படிச்சேன். அது உண்மைன்னால், என்னையும் என் புருஷனோட சேர்த்து வைங்க. என்னையும் அவர் போன இடத்துக்கு அனுப்பி வையுங்க. உம், சுடுங்கடா! என்னை கடுங்கடா! சுட்டுத் தொலைங்கடா!” என்று ஒப்பாரியிட்டாள்.

தாமோதரன், அவளைப் பார்த்தபடியே நின்றான். அவளுள் நியாயம் கேட்ட தமிழரசியையும், சூடுபட்ட கலாவதியையும் பார்த்தான். ஏற்கனவே இதயத்தைக் கனக்க வைத்த குற்றச் சுமை, கொடூரச் சுமையானது. அதை இறக்கி வைக்க இடந்தேடிப் பார்த்தான். ஐந்து நிமிடம் வரை, ஆடாது, அசையாது நின்றான். இறுதியில், இடங்கண்ட உறுதியில், தான் செய்ய வேண்டியதை இனங் கண்ட பெருமிதத்தில், போலீஸ்காரர்களைப் பார்த்து, “உம்... எல்லாரும் ஸ்டேஷனுக்குப் போங்க. இது எனக்கும், இவங்களுக்கும் மட்டும் இடையே உள்ள பிரச்சனை. உம், போங்க” என்றான்.

இதர போலீஸ்காரர்கள் தயங்கியபோது, ஏட்டு பொன்னுச்சாமி ஏதோ பேசப் போனார். உடனே தாமு “கோ மேன் ஐ சே...ஒபேய் மை ஆர்டர்...” என்று கூட்டத்தின் ஒட்டு மொத்தக் குரல் அளவிற்குக் கத்தினான். அவனால் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று அவன் முகத்தைப் பார்த்த ரைட்டர் புரிந்து கொண்டார். அவர், கண்களால் சைகை செய்ய, பொன்னுச்சாமி உட்பட எல்லா போலீஸ்காரர்களும், காவல் நிலையத்திற்குள் போகவில்லை யானாலும், மேட்டோரம் போய் நின்றபடி, துப்பாக்கிகளை தொங்கப் போட்டார்கள்.

தாமோதரன், கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் கண்கள் எவளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்ததோ, அவளையே வலம் வந்தது. காக்கி யூனிபாரம் போட்டிருந்ததாலோ என்னவோ அதட்டலோடு ஆணைக் குரலில் பேசினான்.

“மொதல்ல டிராபிற்கு இடஞ்சல் இல்லாமல் ஒரு ஓரமாய் வாங்க. பெர்மிஷன் இல்லாமல் ஊர்வலமாய் வாரது, சட்டப்படி குற்றமின்னு தெரியாதா? அது கிடக்கட்டும். மொதல்ல ஓரமாய் நில்லுங்க.”

கூட்டம், அவனுள் ஒலித்த அந்தரங்க ஆத்மாவை புரிந்தது போல ஒதுங்கியது. இதனா ல்கூட்டத்தினரின் அகலம் பாதியாகக் குறைந்து, நீளத்தில் கால்வாசி கூடியது. தாமோதரன், அவர்களை நெருங்கிப் போய் நின்றபடி “என்ன விஷயம்?” என்றான் அதட்டலோடு.

தொழிலாளர் தலைவர்கள், அவன் முன்னால் வந்தார்கள். எத்தனையோ அடக்குமுறைகளைக் கண்ணால் கண்டதுடன், அனுபவித்தவர் போலவும் தோன்றிய முன்பு அவரிடம் வந்த அதே அந்தத் தலைவர் நிதானமாக, அழுத்தமாகப் பேசினார்.

"இந்தம்மா கொலை செய்யப்பட்ட எங்கள் தோழன் மார்த்தாண்டத்தின் மனைவி. எஸ்டேட் முதலாளி பூமிநாதன் மேற்பார்வையில்..."

"ஒன் மினிட், ரைட்டர்.. பிளீஸ்... கம்!"

ரைட்டர், வந்தார்.

"இவங்க சொல்றதுல கொலை சம்பந்தப்பட்ட தகவல்களை எழுதுங்க, ஒங்க பேரு?"

"வைத்திலிங்கம்!"

"உம், சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க."

"எங்கள் தோழன் மார்த்தாண்டன், பூமிநாதன் எஸ்டேட்ல கொத்தடிமைகளைவிட மோசமாய் நடத்தப்பட்ட சகோதர சகோதரிகளை ஒன்று திரட்டி சங்கம் அமைக்கப் போனான். பூமிநாதன் சொல்லிப் பார்த்தார். பதவி உயர்வாலும், பணத்தாலும் வலை விரித்தார். மார்த்தாண்டன் கேட்கல. சம்பவம் நடந்த நாளில், மத்தியான வேளையில், எஸ்டேட் பேக்டரில தன்னந் தனியாய் எதையோ கழுவிக் கொண்டிருந்த மார்த்தாண்டத்தை பூமி நாதன், தன் தனியறைக்குக் கூப்பிட்டார். அவன் போனான். உடனே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கு. இதையடுத்து பூமிநாதனோட மேற்பார்வையில், அவரோட கையாட்கள் உள்ளறையில் இருந்து வெளிப்பட்டிருக்காங்க, மார்த்தாண்டனைக் குப்புறத்தள்ளி, அவனோட முகத்துலயும், பிடறியிலயும் இரண்டு தலையணைகளை வைத்து மூச்சை அடக்கி, உயிரையும் அடக்கிட்டாங்க. பகல் முழுவதும் பிணத்தை அங்கேயே வச்சுட்டு, ராத்திரியில் மரத்துல கயிற்றைக் கட்டி தொங்கப் போட்டுட்டார்."

"மறுநாள், பூமிநாதன் அனுப்புன கார்லயே ஏட்டு பொன்னுச்சாமி விசாரிக்கப் போனார். அதுக்கு முன்னதாக, நானே டெலிபோனில் விவரம் சொல்லிட்டு, அப்புறம் எழுத்து மூலம் புகாரும் கொடுத்தேன். என் புகார் மீது எப். ஐ. ஆர். ல எழுதுனதுக்கான ஸ்லிப் எனக்கு இன்னும் வர்ல. குற்ற விசாரணையில் என்குயரி... இன்குயரி... இன்வெஸ்டிகேஷன்... அதுதான் பெரிய விசாரணை, உள்விசாரணை, புலன் விசாரணைன்னு மூன்று உண்டு. எதுவுமே நடத்தப்படல. எவிடென்ஸ் கொடுக்கப் போன எங்களையும்... அப்போ... பொன்னுச்சாமி ஒரு பொருட்டாய் நினைக்கல. உள் விசாரணையை அவர் ஒழுங்காய் செய்திருந்தால்,கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தலையணைகளைக் கைப்பற்றி இருக்கணும். மருத்துவ பரிசோதனையில் ஒ. பி., அட்மிஷன், இன்குஸ்ட் மூன்றையும் கேட்டிருக்கணும். தடயங்களையும், சாட்சிகளையும் கலைக்காமல் இருக்க, பூமிநாதனையும், அவருடைய அடியாட்களையும் கைது செய்திருக்கணும். அதற்கு மாறாய் நீங்க - அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் - பூமிநாதனுடன் கார்ல பறக்கார். அவருக்கு குட்டாம்பட்டியில பட்ட அடி, இந்த் போலீஸ் நிலையத்தில் நெறியாய் கட்டுது. எங்களை ஏட்டு பொன்னுச்சாமி ஆபாசமாய் திட்டுறார். எங்கள் தோழன் மனைவியை மாசுபடுத்துறார். ஆகையால் இன்று எங்களுக்கு, துக்க நாள். இரண்டு பேரைப் பறிகொடுத்ததை அனுஷ்டிக்கிற நாள். எங்கள் தோழன் மார்த்தாண்டமும், நாங்கள் நேசித்த சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனும் செத்துப் போனதையும், அவர்கள் செத்ததுக்கான காரணங்களைச் சொல்லவும். எஸ். பி. அலுவலகத்தைப் பார்த்துப் போறோம். இந்த போலீஸ் நிலையத்தை தாக்குறதுக்காக வர்ல. எங்கள் கரங்களில் ஆயுதங்கள் இல்லாததே இதற்கு சாட்சி. தடுத்தால் மீறுவோம்.”

தாமோதரனும், தொழிலாளர் தலைவரும், நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, தாமோதரன் கண்களைத் தாழ்த்தியபடி, “நீங்க சொல்லுங்கம்மா”
என்று வேலம்மாவைப் பார்த்துக் கேட்டான். அதற்குள் அவன் வெல வெலத்தான்.

வேலம்மா, அவன் சொன்னது கேட்காததுபோல், தொலை நோக்காகப் பார்த்தாள். பின் வரிசையில் நின்ற பெண்கள் பலர், அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். தொழிலாளர் தலைவர், அவள் முன்னால் வந்து "சப்-இன்ஸ்பெக்டர் மேல, நமக்கு நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நடந்ததை சொல்லித்தான் ஆகணும். சொல்லும்மா" என்றார்.

வேலம்மா, தலையை மெள்ள மெள்ள நகர்த்தினாள். எல்லோரும் அவளையே கண்களால் ஈரம் மொய்க்கப் பார்த்தபோது, அவள் கூட்டத்தை ஏறெடுத்துப் பார்த்து விட்டு, அந்த வேகத்திலேயே, தலையை தாழ்த்திக் கொண்டு "அன்னிக்குக் காலையில், என் ராசா... என் மன்னவனே... என்னை இந்தக் கோலத்துல விட்டுட்டுப் போயிட்டியே... பாவிங்க ஒன்னை துள்ளத் துடிக்க கொன்னதும் இல்லாமல்... நீ என்னோட நடத்தையில் சந்தேகப்பட்டு, தற்கொலை பண்ணுனதாய் சொல்றாங்களாமே. நான் அந்தப் பேச்சைக் கேட்டுட்டு, இன்னும் சாகாமல் இருக்கேனே..." என்று அழுதழுது அரற்றினாள்.

தலையில் அடித்தடித்து, சொல்ல வந்தது தெரியாமல், ஏக்கமே ஒலியாக, இதயமே கண்ணானதுபோல் விம்மினாள். பொங்கினாள். புகைந்தாள். மார்பிலும், தலையிலும் மாறி மாறி அடித்தாள். சில பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேலம்மா கண்களைத் துடைத்தபடியே, "அன்றைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் சாப்பிட்ட என் ராசா... 'ஒன் கையில... என்ன மந்திரம் இருக்குடி ஒரு நாள்கூட சாப்பாடு அலுப்புத் தட்டலன்னு'... அய்யோ . என் ராசா... என் மவராசா..." என்று சொன்னபடியே, கூட்டத்தை விட்டு, தனியாக ஒடி, ஒரு ஆலமரத்தருகே நின்றபடி, அதன் மேல் தன் தலையை மோதிக் கொண்டாள். நான்கைந்து பெண்கள் போய், அவளைப் பிடித்துக் கொண்டு, அவளோடு சேர்ந்து அழுதார்கள்.

தாமோதரனுக்கு, துக்கம் தொண்டையையும், வெட்கம் கண்களையும் அடைத்தன. ரைட்டரைப் பார்த்து “இந்த அம்மாவோட ஸ்டேட்மெண்டையும், சம்பந்தப் பட்டவங்களோட ஸ்டேட்மெண்டையும் எழுதிட்டுவாங்க. இந்த அம்மாவை தொந்தரவு செய்யாண்டாம். அவங்களால எப்போ பேச முடியுமோ அப்போ பேசட்டும்” என்று ஆணையிட்டான்.

பிறகு கூட்டத்தைப் பார்த்து “நான் யோக்கியன்னு ஓங்ககிட்ட வாதாடல. ஒருவனுக்கு நேர்மை என்கிந்து கற்பு மாதிரி. அது ஒரு தடவை போனாலும், பல தடவை போனாலும் ஒண்ணுதான். என்னோட தர்மம், தானாய் கற்பிழக்கல - கற்பழிக்கப்பட்டது. ஒங்களுக்கு என்னால நியாயம் வழங்க முடியாட்டாலும், அநியாயம் வழங்க மாட்டேன். போகப்போகப் புரியும். ரைட்டர், குயிக்!” என்று சொல்லிவிட்டு, கண்களைப் புறங்கையால் துடைத்தபடி, காவல் நிலையத்திற்குள் வந்தான்.

டெலிபோனும், கையுமாக இருந்த ஏட்டு பொன்னுச்சாமி, அவனை கண் சிவக்கப் பார்த்தார். அவர் அங்கே இருப்பதை அங்கீகரிக்காதவன்போல், தாமோதரன், தன் இருக்கைக்கு வந்தான். உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு, ஒரு முனைப்பாகி, தலையைக் குத்திக் குடைவது போலிருந்தது. இதற்குள் ஏட்டுப் பொன்னுச்சாமி அங்கே வந்து, சலூட் அடிக்காமலே படபடப்பாய் பேசினார்.

“சார், பூமிநாதன் முதலாளி ஒங்களோட பேசணுமாம். லைன்ல இருக்கார்.”

“யார், அக்கூஸ்டா?”

“பூமிநாதன் முதலாளி சார்!”

“ஆமாய்யா, அவரைத்தான் கேட்டேன். அந்த அக்கூஸ்டை நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு ஸ்டேஷன்ல வந்து மார்த்தாண்டன் கொலை விஷயமாய் ஆஜராகச் சொல்லு. இல்லன்னா, அரெஸ்ட் வருமுன்னு நான் சொன்னதாய், நானே சொன்னதாய் சொல்லுங்க. குயிக். அவரோட நான் பேச விரும்பல.”

“சார்.”

“போய்யா. நான் பெரிய அக்கூஸ்ட், நீ சின்ன அக்கூஸ்ட். போய்யா!”

“சார் உடம்புக்கு ஏதாவது? ஆஸ்பத்திரில...”

“என்னோட உடம்பு மிருக வகை... ஒன்னை மாதிரி. எனக்கு ஆஸ்பத்திரி இனிமேல் சுடுகாடுதான்... ஐ... லே... யு... கெட்அவுட்... ஒபேய் மை கமாண்ட்.”

பொன்னுச்சாமி, விரைப்பாக வெளியேறினார். தாமோதரன், பேசியது தெரியாமல் பேசிவிட்டு, நாற்.காலியில் கை பரப்பி, கால் பரப்பிக் கிடந்தான். அவன் கண் முன்னாலேயே, காது கேட்கும் தூரத்திலேயே, ஏட்டு பொன்னுச்சாமி, “வளர்த்த கிடா... நன்றி கெட்டவன்... கவலப்பட வேண்டாம் முதலாளி... ஆண்டிஸிபேட்டரி பெய்ல...” என்பன போன்ற வார்த்தைகள் கலக்க, டெலிபோனை நாக்கால் குத்திக் குடைவது கேட்காமலே, குற்றுயிராய் கிடப்பவன் போல் கிடந்தான். சும்மா கிடந்தான். சூன்யமாய் கிடந்தான்.

நீண்ட நெடிய நேரங்கழித்து, ரைட்டர், கையில் ஒரு கத்தைக் காகிதத்தோடு வந்தார். அவன் நாற்காலியை லேசாய் குலுக்கினார். அவனோ, கண்களை மட்டும் உருட்டினான். உடனே ரைட்டர் ஜனங்களுக்கு ஒங்க மேல அந்தப் பழைய நம்பிக்கை வந்திருக்கு சார். அமைதியாய் போயிட்டாங்க. ஆனாலும் நாலு நாள் டைம் கொடுத்திருக்காங்க. எல்லா ஸ்டேட்மெண்டையும் ரிக்கார்ட் பண்ணிட்டேன் சார். எவிடென்ஸைப் பார்த்தால் மார்த்தாண்டம் கொலை செய்யப்பட்டது மாதிரி தெரியுது சார்” என்றார்.

தாமோதரன், சுதாரித்தான்.

“நாளைக்கு அக்கூஸ்டை வரச் சொல்லியிருக்கேன். குயிக்காய் சார்ஜ்ஷீட் பைல் பண்ணுங்கோ.’’

ரைட்டர், தனது தொழில் தர்மத்தின் பின்னணியில், அவனேயே அதிர்ச்சியுடன் பார்த்தபோது, அவரைப் போகலாம் என்று கையாட்டி விட்டு தாமோதரன், மயக்கம் கலையாதவன்போல், பிரமை குலையாதவன்போல், உடம்பின் எந்த அங்கமும் ஆடாமல் அசையாமல் இருக்க, அப்படியே கிடந்தான். திடீரென்று, மேல் நோக்கி எழுந்தான். மேஜையில் இரண்டு காகிதங்களைப் பரப்பியபடி, ம்டமடவென்று எழுதினான். நீரற்ற வறட்சிக் கண்களுக்கு நிவாரணம் தேடுபவன் போல் எழுதினான். பிறகு “மிஸ்டர் சபாஸ்டின்...” என்றான். ரைட்டர் வந்து, அவன் கண்களைத் திறக்காமல், உதடுகளைக் கடித்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு “கூப்பிட்டீங்களா சார்” என்றார்.

“ஆமாம்...இந்தாங்க...இது என்னோட லீவ்லெட்டர்... நாளேயில இருந்து இரண்டு மாதத்துக்கு லீவ் போட்டிருக்கேன்...நீங்கதான்... நாளையில் இருந்து ஸ்டேஷனுக்கு இன்சார்ஜ்...மார்த்தாண்டம் கேஸ் ஒங்க பொறுப்பு. நீதி தவறாமல் சார்ஜ்ஷீட் போடுவீங்க என்கிறதுல எனக்கு சந்தேகம் இல்ல... இந்த கேஸை மூடி மறைக்கிறதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். நீங்க...என் மேலேயும் சார்ஜஸ் பிரேம் பண்ணலாம். ஏன்ன...நான் இனிமேல் ஒங்க பாஸ் இல்ல. இந்தாங்க ... நாளைக்கே எஸ்.பி கிட்ட பெர்சனலாய் கொடுங்க...”

ரைட்டர், அந்தக் காகிதத்தை வாங்கிப் படித்தார். பிறகு “நோ...நோ...நத்திங் டுயிங்” என்று கத்தியபடியே அதை கிழிக்கப் போனார். தாமோதரன், “ஐ ஸே” என்று அதிகார மிடுக்கோடு ஆணையிட்டான். அவர் ஒடுங்கிப் போனவராய் நின்றபோது, தாமோதரன் எழுந்தான் அவரது கைகளை எடுத்து முத்தமிட்டான். பிறகு அமைதியாகப் பேசினான்:

“ஒங்களை மாதிரி...ஒரே ஒரு சில நல்லவங்களாலதான் ஸார் இன்னும் நம் டிபார்ட்மெண்ட் பிழைக்குது... ஆனால் நான்...? என்னோட நிலைமை, பாரதத்துல வந்த கர்ணனோட நிலைமை... பலியான அரவானோட நிலைமை... ராமாயணத்தில் வார கும்பகர்ணன் நிலைமை. ஆனால் அவங்களை மாதிரி ஆகாமல், நான் விலகிக்கிறேன். ஒரு நேர்மைவான்கிட்ட பொறுப்பை ஒப்படைச்ச திருப்தியோடு போறேன்...

“நான் போகப்போற பாதை எனக்கே தெரியல... வழி இருந்தபோது தப்பாய் நடந்தேன்...இப்போ சரியாய் நடக்க நினைக்கிறேன், வழி தெரியல. திக்குத் தெரியாத காட்டுக்குள்ளே கெட்டுத்திருந்திய இந்த சின்னவன் போறேன். என்ன ஆசீர்வதிங்க பிரதர்...என் பாவத்தை நீங்களாவது மன்னிச்சிடுங்க பிரதர்...ஏன்ன... நீங்கள் என்னை மன்னிக்கிறது... ஏசுநாதர் என்னையும் ஏற்றுக்கொண்டது மாதிரி ... கலாவதி, நீ மன்னிப்பாயா? மாடக்கண்ணு மாமா மாமா...”

ரைட்டர், குலுங்கிக்குலுங்கி அழுதார். தாமோதரன் புறப்படத் தயாரானான், புரியாத ஊருக்கு தெரியாத வழியில்.