உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 27

விக்கிமூலம் இலிருந்து

27

யற்கை, கலாவதிக்கு சிதறிப்போன மூளையை ஒன்றாகச் சேர்க்கவில்லையானாலும், அவள் மொட்டைத் தலையில் முடி விதைகளை வளர வைத்திருந்தது. கூர்மையான முட்கம்பிகள் மாதிரி, தலையெங்கும் குந்தகப்பட்ட கூந்தலை, இடது கையால் குட்டிக் கொண்டோ, தட்டிக் கொண்டோ வலது கையால், ‘கும்பாவிற்குள்’ கிடந்த சோளக் கஞ்சியையும், அகத்திக் கீரையையும் துழாவிக் கொண்டிருந்தாள். முடிபட்ட கரத்தை, முள் பட்டவள் போல் எடுத்தபடியே, ‘எய்யோ... எய்யோ...’ என்று கவளத்திற்குக் கவளம் சொன்னபடியே வாயில் கஞ்சியை போட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென்று, மனிதக் கதவுகளாய் வாசலை மறைத்த கூட்டத்தைப் பார்த்து மருண்டாள். ‘எய்யோ...’ என்று கூவிக கொண்டே நார்க் கட்டிலுக்குக் கீழே, தவழ்ந்து தவழ்ந்து பதுங்கப் போனாள். பயந்தோடு பார்த்தவள் கண்களில், பழகிய முகங்கள் தென்பட்டன. விழிகள் பரபரக்க முட்டிகளில் காலூன்றி, எழுந்தாள்.

வெளியே பலத்த கூட்டம், ஆண், பெண் அத்தனை பேரும், வாசலுக்குள்ளும், வாசலுக்கு அப்பால் உள்ள முற்றப் பகுதியையும் வியாபித்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வாசலின் இருபுறக் கதவுகள் போல் நின்ற தமிழரசியும், வினைதீர்த்தானும் கலாவதி மேல் அப்படியே சாயப் போனார்கள். சுருள் சுருளாய் முடியோடு, வட்ட முகத்தோடு, வகிடெடுத்த கூந்தலோடு, புதுப்பானைப் பொங்கல் போல், மங்கலமாய் தோன்றிய கலாவதிக்குப் பதிலாய், மொட்டைத் தலையோடு, தலையிலும், உடம்பிலும், திட்டுத் திட்டாய், பொசுக்கலாய், வெந்த தோலாய், கறுப்புத் துளைகளாய், சிவப்புக் காயங்களாய் சிந்தையிலும் சூடுபட்டு நின்ற கலாவதி, அங்கே இருந்ததால்தான், அவளே இவள் என்று நம்புவது போல் நம்ப முடியாமல் பார்த்தார்கள். பொன்மணி கணவனுக்கும், அண்ணிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தாள்.

கலாவதி, தன்னை நோக்கி வந்த அண்ணனுக்கு தோள் கொடுக்காமல், லாவகமாய் ஒதுங்கி தமிழரசியை, மலங்க மலங்கப் பார்த்தாள். ‘எய்யோ... எய்யோ...’ என்று, முன்னிலும் பலமாய் கத்தியபடியே தனது தந்தை மாடக் கண்ணு படுக்கும் காலியான நார்க் கட்டிலையும், தமிழரசியையும் மாறி மாறிப் பார்த்தாள். நம்ப முடியாமல், நகர முடியாமல், பார்க்க முடியாமல், பகர முடியாமல் கண் தீரப் போவது போல் கலாவதியையே பார்த்தபடி நின்ற தமிழரசி, அவளை ராட்சதத்தனமாய் தன்னிடம் இழுத்து, மார்போடு சாய்த்து, அவளின் சூடுபட்ட தலையிலேயே தனது வெம்பிக் கொதித்த தலையை மாறி, மாறி மோதினாள், கலாவதியும், அவள் கழுத்தைச் சுற்றி கரங்களைக் கோர்த்துக் கொண்டு ‘எய்யோ... எய்யோ...’ என்றாள். மீண்டும், அய்யா படுத்த கட்டிலைக் காட்டுவதற்காக தமிழரசியின் மார்பில் இருந்து மீளப்போனாள்.

தமிழரசியே, கலாவதியையும் சேர்த்துப் பிடித்தபடி சுவரருகே பாய்ந்தாள். தலையை சுவரில் மாறி மாறி மோதினாள். “கலா...அய்யோ...கலா...” என்ற வார்த்தைகளல்லாது அவளால் வேறு வார்த்தை பேச இயலவில்லை. யாரோ அவள் தலையைப் பிடித்தார்கள். உடனே, வீடு கொள்ளாச் சத்தத்துடன் தாங்க முடியா வேகத்தோடு, கரங்களால் முகத்தில் மாறி மாறி அடித்துக் கொண்டாள்.

இதற்குள், பொன்மணி பிடிதாரம் இல்லாமலே தரையில் விழுந்தாள். விழுந்தவள் எழாமல் வினைதீர்த்தானின் காலை கட்டிக் கொண்டு எல்லாம் என்னால வந்தது. என்னாலதான் வந்தது. ஒங்க குடும்பத்தையே கருவறுத்த பாவியோட தங்கச்சி நான். என்னைக் கொன்னுடும். இப்படி வருமுன்னு தெரிஞ்சிருந்தால், நான் அப்பவே விஷத்த சாப்பிட்டு இறந்திருப்பேன். நானே எல்லாருக்கும் விஷமாயிட்டேனே...” என்று அரற்றினாள். பிறகு கண்ணீரும் கம்பலையுமாய் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நின்ற நிலையையும், பார்த்த பார்வையையும் பார்த்தபடியே அவள் கத்தினாள்.

“ஒமக்கு என்ன வந்தது? அய்யோ அவரைப் பாருங்க. தமிழண்ணி. ஒங்க அண்ணனைப் பாருங்க. என்னமோ ஆகப் போகுது. எனக்கு பயமாய் இருக்கே. அய்யோ, அவரைப் பாருங்க.”

எல்லோரும் வினைதீர்த்தானையே பார்க்கத் துவங்கினார்கள்.அவனே, திறந்த வாய் திறந்தபடி இருக்க, விழித்த கண் வெறித்தபடி விழிக்க, நின்றபடியே செத்தவன்போல் அசைவற்று நின்றான். பொன்மணியின் ஒப்பாரி, கூட்ட அமளியையும் ஊடுருவிக் கொண்டிருந்தது. வெளியே இருந்து நெருக்கியடித்த கூட்டமும், வினைதீர்த்தானே மொய்த்தது; அவனோ அத்தனை பேரும் பார்ப்பது தெரியாமல் அய்யாவின் வெறுமைக் கட்டிலைப் பார்ப்பது போலிருந்தது. உள்ளுற தன்னைத்தானே பார்ப்பது போலவும் இருந்தது. கூட்டப் பிரளயத்தில் தானாய். மிதந்து வந்த முத்துமாரிப்பாட்டி, எப்படியோ வினைதீர்த்தானின் அருகே போய் “எய்யா... ஏய் ராசா” என்று அவன் கையைப் பிடித்தாள். அந்தக் கை, சுரணையற்றே கிடந்தது.

பொன்மணியின் ஒப்பாரியோ அல்லது கூட்டம் நெருக்கியடித்ததற்கான காரணமோ புரியாமல், நரகலோகத்தில் கலாவதியோடு கூட்டு சேர்ந்து உலவிய தமிழரசி, அங்கிருந்து விடுபட முடியாமல் தத்தளித்தாள். பிறகு எப்படியோ கூட்டத்தின் கூப்பாட்டில் சுயநினைவுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்தாள். கூட்டம், கூட்டாகப் பார்த்த வினைதீர்த்தானைப் பார்த்தாள்.

தமிழரசிக்கு பிரக்ஞை வந்தது. தன்னோடு தானாய், மார்பில் கவசம்போல், கட்டிப்பிடித்த கலாவதியின் மோவாயை நிமிர்த்தி, “கலா... அதோ... நம் அண்ணன் நிற்கான் பாரு! ஒன்னோட நிலைமையைப் பார்த்துட்டு அவன் எந்த நிலையில நிற்கான்னு இதோ பாருடி பாவிப் பொண்ணே!” என்று சொல்லியபடியே, அவளை, வினைதீர்த்தான் மேல் தள்ளி விட்டாள். அண்ணனையே ஏறிட்டுப் பார்த்த கலாவதி, அவனைப்போல் அசைவற்று நின்றாள். பிறகு, அவன் கழுத்தில் கை போட்டு, அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். அவன் கழுத்தில் உதடுகளை அழுத்தி “எய்யோ...எய்யோ” என்றவள், “எண்ணோ ... எண்ணோ...” என்று கூவியபடியே, அவன் மார்பில் புரண்டாள்...எல்லோரும் பேச்சற்று நின்றபோது

கலாவதி ஆட்டுவித்ததால், வினைதீர்த்தானின் உடலாடியது. தானாய் ஆடியது. பிறகு, ஒவ்வொரு அவயமும், துண்டித்து விழப்போவது போல் துடித்தன. படபடப்பாய் ஆடின. பம்பரமாய்ச் சுழன்றன. பின்னர் கரிசல் காடாய் தோன்றிய அவன் கண்கள், ரத்தத்தையே நீராக மாற்றி ‘விஷவாதம்’ செய்வது போல், சுழன்றன. சொட்டுச்சொட்டாய்கண்ணீர், கலாவதியின் மொட்டைத் தலையில் தெறித்தது. ஒரு நிமிட கண்ணீர் வெள்ளம், உறைந்து போன அவன் உள்ளத்தைக் கரைத்ததோ என்னமோ, வினைதீர்த்தான் ஊரே அதிரும்படி கத்தினான். அவன் போட்ட சத்தத்தில், சில பெண்களின் இடுப்புகளில் இருந்த குழந்தைகள் பயந்துபோய், தாய்மார்களே அழுத்திப் பிடித்து, அவர்களின் தலைகளில் சாய்ந்து கொண்டன. கலாவதியை சாறாய்ப் பிழிவதுபோல் பிடித்து, அவளையும், தன்னையும் இல்லாமல் செய்யப் போகிறவன்போல், வினைதீர்த்தான், அங்குமிங்குமாய் புரண்டான். அவர்கள் இருவரையும், வைத்த கண் வைத்தபடி, பேச வாயில்லைசிந்திக்க மனமில்லை என்பதுபோல் பார்த்த தமிழரசி, திடீரென்று அவர்கள் இருவரையும் பற்றிக்கொண்டு. ஓலமே ஒலியாக, அழுகையே அவலமாகக் கத்தினாள்.

“இதுக்கெல்லாம் நானே காரணம். சித்தப்பாவையும், கலாவையும் ஓநாய்க்கு காவு கொடுக்கது மாதிரி விட்டுட்டு ஓடிப்போன படித்த முட்டாள் நான். வினைதீர்த்தான், இந்தப் பாவியை அரிவாளால ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுடு.”

தமிழரசியின் அழுகை, அனைவரையும் உலுக்கியது. முத்து மாரிப்பாட்டி, கூப்பாடு போட்டாள். தாய்மார்கள், தாங்க முடியாமல் அழுதார்கள். கில்லாடியார், தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். மண்டையன் துண்டால் தன் வாயை அடைத்துக் கொண்டான். வினைதீர்த்தானின் ஏழை பாழை பங்காளிகள் தலை கவிழ்ந்து, நீர் சொறிய நின்றார்கள். தமிழரசி, மீண்டும். “என்னை அரிவாளால வெட்டிப் போட்டுடு” என்று கத்தினாள்.

வினைதீர்த்தான், தமிழரசியை விழுங்கப் போகிறவன் போல் பார்த்தான். ‘அரிவாள்’ அவனுள் ஒரு ஆவேசத்தை ஏற்படுத்தியது. கூட்டத்தை நெருக்கியடித்து, நார்க், கட்டிலுக்குள் குனிந்தான். பளிச்சிட்ட பாளை அரிவாளை எடுத்தபடி நிமிர்ந்தான். பெண்கள் பயந்துபோய். ஒதுங்கினார்கள். அவன் கர்ஜித்தான்:

“இதுக்கெல்லாம் காரணமானவங்களோட தலைகளை வெட்டி, என் கலா காலுல கொண்டு வந்து போடாமல், நான் திரும்பமாட்டேன். உ.ம்... வழி விடுங்க...”

பெண்கள், வழி விட்டார்கள். தமிழரசி, அவனைத் தடுப்பாள் என்ற எதிர்பார்ப்போடும், தடுக்க வேண்டும். என்ற எண்ணத்தோடும் பார்த்தார்கள். அவளோ, அவன் செய்யப் போவது நியாயம் என்பதுபோல் பேசாமல், நின்றாள். லேசாக அவனுக்கு வழிகூட விட்டாள்.

வெளியே வந்து ஆவேசமாக ஓடப்போன வினைதீர்த்தானை சிலர் பிடித்தார்கள். அவளோடு சேர்ந்து செல்வதற்குத் தயாராகி பங்காளிகள் சிலர் உலக்கைகளையும், அம்மிக் கல்லையும் எடுக்கப் போனார்கள். கில்லாடியார் வினைதீர்த்தானின் இடையைப் பிடித்து எகிறியபடியே பேசினார்.

“ஏய் வினை, ஒன்னால இவ்வளவு நடந்தது போதாதா? இன்னுமா நடக்கணும்? நீ ஜெயிலுக்குப் போயிட்டால் ஒன் பைத்தியார தங்கச்சியையும், ஒன்னையே நம்புற பொன்மணியையும் யார்டா காப்பாத்துறது? மடையா... மடையா... நில்லுடா. சொன்னால் கேளுடா...”

வினைதீர்த்தான், கில்லாடியாரையும் தூக்கிக் கொண்டு, பாளை அரிவாளோடு பாயப்போனான். அவன் அரிவாள் முனை, அவர் விலாவை இடித்ததால், அவர் இப்போது தற்காப்பை முன்னிட்டும், பலமாகக் கத்தினார்.

“தமிழரசி, இங்கே ஓடிவாம்மா. ஓடிவா! இது கொலையில முடியப் படாது. கொலைகாரங்க ஜெயிலுல முடியும் படியாய் முடியணும். வாம்மா, வந்து இந்தப் பயலுக்குச் சொல்லும்மா.”

தமிழரசி நிதானமாக வந்தாள். கில்லாடியாரை கீழே தூக்கிப் போட்டுவிட்டு, அனுமான்போல் அரிவாளுடன் பாயப்போன வினைதீர்த்தான் முன்னால் வந்து நின்றாள். அவன் ஓங்கிய அரிவாளை பிடித்தாள். உடனே, வினைதீர்த்தான், கையடங்கி மெய்யடங்கி அரிவாளை தூரே எறிந்து விட்டு அவளைக் கட்டிப் பிடித்தபடி “நான் இப்படி நடக்குமுன்னு நினைக்கலியே தமிழு” என்று குழந்தை போல் கேவனான்.

கில்லாடியாரை யாரோ தூக்கிவிட்டார்கள். தூசிகளைத் தட்டிவிட்டபடியே, தமிழரசியின் முன்னால் வந்து தழுதழுத்த குரலில் பேசினார்.

“இந்த ஊர்ல படித்தவங்களிலேயே, நீ ஒருத்திதான் ஆம்பிளைம்மா. நீ எப்படிப்பட்டவள்னு நல்லா புரிஞ்சுக் கிட்டேம்மா. ஒன் சின்னய்யாவையும் கொலை செய்துட்டு, இவளேயும் இந்தப் பாடு படுத்துன பயலுவளை சும்மா விடப் படாது இதை விட்டால், நாளைக்கு என் பொண்ணுக்கே இந்த நிலைமை வரத்தான் செய்யும். குற்றாலத்துக்கு கலெக்டர் வந்திருக்காராம். ஜமாபந்தியோ, சாப்பாட்டுப் பந்தியோ நடக்குதாம். நாம் எல்லாரும் ஒன்று திரண்டு போய் அவருக்கிட்ட முறையிடலாம். ஏதாவது செய்துட்டு பலன் இல்லாட்டால் பரவாயில்ல. பலன் இருக்காதுன்னு எதையுமே செய்யாமே இருக்கது தப்பு பாரு. என்னம்மா சொல்ற?”

தமிழரசி, சேலையை இறுக்கிக் கட்டினாள். கன்னத்தில் வழிந்த கண்ணீரைச் சுண்டி விட்டாள். எதிர் வீட்டில்தனது சொந்த வீட்டில் – அம்மா அவளே ஜன்னல் வழியாகப் பார்ப்பது தெரிந்தது. தமிழரசியை, வாரியணைக்கப் போவதுபோல், அவள் கைகளை வளைய வளைய வலிப்பது தெரிந்தது. அம்மாவின் முகம் போனதும், விஜயாவின் முகம், அப்புறம் அண்ணன் ராஜ துரை முகம்; மீண்டும் அம்மாவின் கலங்கிய முகம்... கண்ணீர் முகம்... ஒவ்வொருவரும், அந்த சின்ன ஜன்னலில் தன்னை முறை வைத்துப் பார்ப்பதைப் பார்த்தாள்... அப்பா முகம் தெரியவில்லை. ஒரு வேளை, அவர்தான் ‘தமிழ் எப்படி இருக்கான்னு பாருங்க’ என்று பார்க்கச் சொல்லியிருக்கலாம்... அம்மா பார்க்கிருள்... என் அம்மா...

தமிழரசிக்கு அடிவயிற்றில், மெல்லியதாய் ஒரு உணர்வு உருவாகி, இதயத்தை விட பெரிதாய் வளர்ந்து, தொண்டையையே ராக்கெட்டாக்கி, வாய் வரை வந்து ‘அம்மா’ என்று சொல்லப் போனது. அவள் அதை அடக்கிக் கொண்டாள். கண்ணீரைச் சுண்டிவிட்டதுபோல், பாசத்தையும் சுண்டி விட்டாள். இதுவும் ஒரு வகையில் பார்தப் போர். அது மன்னர்கள் மக்களை வைத்து நடத்திய போர். இது அதிகாரத்தை அறிந்து வைத்திருக்கும் பதவி மன்னர்களுக்கும், தாங்கள்தான் இந்நாட்டு மன்னர்... போகட்டும்... மக்கள் என்று கூட அறியாதவர் களுக்கும் இடையே நடக்கும் போர்.

தமிழரசி, தன்னையே பார்த்த கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்.

“குற்றாலத்துக்குப் போவோம். கலெக்டர் கிட்டேயே நியாயம் கேட்போம். இந்த மாதிரி எந்த வீட்லயும் நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க எல்லோரும் வரலாம். வினைதீர்த்தான், கலாவதியோட கையைப் பிடிச்சுக்கோ.”

தமிழரசி முன்னல் நடக்க, முத்துமாரிப் பாட்டியும், பொன்மணியும் தோளுக்கொருவராய் அவளைப் பிடித்த படி நடக்க, அடக்கிய உணர்வுகளுக்கு வடிகால் தேடுவது போல் அத்தனை ஏழைகளும், பின்னல் நடந்தார்கள்.

ஒரு சிலர் “என்னய்யா... கலெக்டர்...அவரு மட்டும் என்னத்த கிழிப்பாரு? முத்துலிங்கம் வீட்டை இடிச்சு நொறுக்காம அன்ன நடை போடுறீயளாக்கும்” என்று பொது வழியில், கிளை வழியை அமைக்கப் போனார்கள். உடனே கில்லாடியார் ஏல... மூள கெட்டப் பயலு வளா! கூட்டம் தீப்பிடிக்காத மூங்கில் காடு மாதி. எசகு பிசகான ஒரு வார்த்தையை விட்டுட்டால் கூட போதும், காட்டுத் தீ மாதிரி பிடிச்சுடும். பொறுப்போட. வாங்கடா” என்றார்.

அந்த ஊரில் அம்மன் கொடைகளில் கூட கூடாத, கூட்டம்; சாமியாடிகளுக்குக் கூட வராத துள்ளல்; அனைவரும் அடியடியாய், எதையோ அடிக்கப் போவதுபோல் நடந்தார்கள்.

தர்மகர்த்தா உட்பட, அந்த ஊர் பெரிய மனிதர்கள் கூட்டம் தங்களையும் உதைத்துவிடக் கூடாதே என்று உள்ளுறப் பயந்து, “அவன்... முத்துலிங்கப்பயல் ஆடுன ஆட்டம், கடவுளுக்கே தாங்காது” என்றார்கள். தமிழரசியைப் பார்த்து, சிநேகிதப் புன்னகையை, முகத்தில் பவுடர் பூசுவதுபோல் பூசிக் கொண்டார்கள்.

கூட்டம் ஊரின் பிரதான வீதியில் – தேநீர்க்கடைகள் மலிந்த தெரு வழியாக நடந்தது. ஒரு கடையில் உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருந்த முத்துலிங்கத்தின் கையாட்களான தோட்டத்துப் பஞ்சபாண்டவர்கள், பெஞ்சுகளுக்குக் கீழேயும் மிருகங்களாய் – அற்பப் பூனைகளாய் – பதுங்கிக் கொண்டார்கள். தேநீர்க் கடைக்காரன், அவர்களால் தனக்கும் கடைக்கும் ஆபத்து வந்து விடக் கூடாதே என்று அஞ்சினான். அவர்களே காட்டிக் கொடுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. இறுதியில் தற்செயலாய் கடையை மூடுவதுபோல் அவர்களை உள்ளே வைத்தே வெளியே பலகைகளைச் சாத்தினான், பின்னர் கூட்டத்தின் ஆவேசத்தால் உந்தப்பட்டு அவனும் கூட்டத்தில் கூடிக்கொண்டான்.

கூட்டத்தினர் எட்டி நடந்தார்கள். எதிரே கிடந்த பொருட்களை எத்தியபடியே நடந்தார்கள். மாடக் கண்ணுவின் சமாதியருகே போனபோது கலாவதி, அந்த மண் புதையலேயே பார்த்தபடியும் தன் கையைப் பிடித்து நடந்த அண்ணனே நோக்கியபடியும் “எய்யோ...எய்யோ’ என்றாள். எவரோ ஒருவர் “இதுதான் மாடக்கண்ணு மாமா சமாதி” என்றார். தமிழரசியும், வினைதீர்த்தானும் போட்டி போட்டு ஓடுவதுபோல் ஓடிஆர்கள். வினைதீர்த்தான் அந்த மண்குழியில் பொத்தென்று விழுந்தான். எய்யோ! என்னைப் பெத்த அய்யாவே! என்ன விட்டுட்டு எங்கேய்யா போயிட்டீரு? நான் ஒம்மை விட்டுட்டுப் போயிட்டேமுன்னு என்ன விட்டுட்டு எங்கேய்யா போயிட்டீரு? இதோ பாருமய்யா, ஒம்ம செல்ல மகளே பாருமய்யா. பாவிப்பயலுவ என்ன பாடு படுத்திருக்காங்கன்னு பாருமய்யா.”

தமிழரசி, வினைதீர்த்தானைத் தூக்கி நிறுத்தின்னாள். அவனே, தந்தையின் சமாதியில் இருந்து மண் துகள்களை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டான். தமிழரசிக்கும் பூசிவிட்டான். உடனே எல்லோரும் அவனைப் போலவே பூசிக்கொண்டார்கள். கில்லாடியாரின் அதட்டலில், தமிழரசியின் பார்வையில், கூட்டம் ஒழுங்குபட்டு சாலைக்கு வந்தது. “எய்யோ... எய்யோ...” என்று புலம்பிய கலாவதியை, வினைதீர்த்தான், தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, அவளின் சுமை தெரியாமலே நடந்தான். முன்பின் நினைக்காமல் புறப்பட்ட ஒரு சில தாய்மார்கள் திரும்பிப் போனார்கள். ஆனால் கூட்டத்தின் எண்ணிக்கை முந்நூறுக்குக் குறையவில்லை.

மரம் வெட்டுபவர்கள், கிணறு தோண்டுபவர்கள், விவசாயக்கூலிகள் உட்பட ஏழை எளியவர்கள் நடந்த கூட்டத்தில், ஒதுங்கியிருந்த சேரிமக்களில் பலரும் சேர்ந்து கொண்டார்கள். வாலிபப் பையன்கள், வயதுப் பெண்கள், விடலைப்பயல்கள், முதியவர்கள் என்று சமூகத்தின் எல்லா வயதுகளுக்கும் பிரதிநிதித்துவம் காட்டும் கூட்டம் நிராயுத பாணியாய்த் தோன்றினாலும், போர்ப்பரணிப் பார்வை யோடு போய்க் கொண்டிருந்தது.

‘போலீஸ்காரர்களையும், பணக்காரர்களையும் எதிர்க்க முடியும் போலுக்கே’ என்று பலர் வியந்து கொண்டார்கள். “எட்டி நடங்க” என்ற உசுப்பல்கள் “மெள்ள நடங்கடா முட்டாப்பய மவனுவளா, இந்தக் கிழவியால எப்டி நடக்க முடியுமுன்னு நினேச்சுப் பார்த்தியளா?” என்று கூட்டத்தை தன்னைப்பற்றி நினைக்க வைத்த முத்துமாரிப்பாட்டியின் செல்லச் சிணுங்கல்கள்.

கூட்டம், கூட்டணியாய், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குப் போய்விட்டது. காவல் நிலையம் கண்ணில் பட்டது. தமிழரசி அந்தக் கட்டிடத்தை எரிக்கப் போவது போல் பார்த்தாள். திடீரென்று காக்கிச் சட்டைக்காரர் ஒருவரை அவள் பார்த்தாள். உடனே அவளுக்குத் தாமோதரனின் நினைவு வந்தது. ‘பதவியையே தூசாக நினைத்தவர்... இப்போ எங்கே இருக்காரோ? என்ன பாடு படுறாரோ? தாமு... என் தாமு... இதோ இந்த விதி நொந்த எளியவர்களுக்கு இடையே நடக்கும்போதும், உங்களை என்னால் மறக்க முடியலியே, ஒங்களை இனிமேல் பார்ப்பேனா? பார்க்கக்கூட வேண்டாம்; ஒங்களை நல்ல படியாய் பார்த்ததாய் யாரோ சொல்லி, நான் எவளோ மாதிரியாவது கேட்க முடியுமா? தாமு, என்னோட தாமு, நீங்களா சமூகமா என்று வரும்போது, நான் சமூகத்தின் பக்கம். நீங்களா நானா என்றால் எனக்கு நான் பெரிசில்ல; நீங்களே! ஒங்க பக்கமே! இப்போ எந்தப் பக்கமும் பார்க்க முடியாமல் போனேனே. தாமு, போயிட்டிங்களே தாமு! பார்க்க முடியாததெல்லாம் அழிந்தவை அல்ல. ஒங்க நினைவு, நான் அழிவது வரைக்கும், அழியாமல் இருக்கும் தாமு... என் தாமு ...’

காவல் நிலையத்தை, அடிவயிற்று நெருப்பாய்ப் பார்த்த தமிழரசி, சிறிது நேரத்தில் நிதானமாக மூச்சு விட்டாள். படுகளத்தில் ஒப்பாரி கூடாது. ஒப்பாரிக்காரர்கள் களத்திற்கு வரக்கூடாது... அவள், தனக்கு த் தானே வெட்கிக் கொண்டாள். கலாவதியை சென்னைக்குக் கையோடு கூட்டிக் கொண்டு போய், தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால், பெண்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்திருப்பதும், பத்மா, இந்நேரம் அதற்காக இயக்க உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருப்பாள் என்பதும் நினவுக்கு வந்தது. மனதில் ஆர்ப்பாட்டம் ஒழியவில்லை யானாலும், அது, மனதிற்குள் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு மூலைக்குள் ஒளிந்து கொண்டது. இதயத்தை நிமிர்த்த முடியாமல் போன தமிழரசி, தலையை நிமிர்த்திக் கொண்டாள்.

பாத யாத்திரையோ- நியாயப் பசியாத்திரையோ?’ அந்த கிராமத்துக் கூட்டம் நீதி உபாசகர்களாய், தர்ம யாத்ரீகர்களாய் காவல் நிலையம் அருகேயுள்ள சாலை வழியாகக் கடந்தது. கூட்டத்தில், கால்வாசிப்பேர் அந்த நிலையத்தைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றார்கள். நின்றபடி பார்த்தார்கள். காவல் நிலையத்தின் முன்னால் ஒரு மோட்டார் பைக். அதன் முன்னிருக்கையில் ஒரு கையைப் போட்டபடி, இன்னொரு கையில் சிகரெட் புகைக்க, முத்துலிங்கம், ஆத்திரமாகவோ, அச்சமாகவோ, அலட்சியமாகவோ கூட்டத்தைப் பார்க்கிறார். பைக்கின் பின்னிருக்கையில் ஒரு கையையும், முத்துலிங்கத்தின் தோளில் ஒரு கையையும் போட்டபடி, ஒரு போலீஸ்காரர் நிற்கிறார். நான்கைந்து போலீஸ்காரர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி கூட்டத்தை ஆச்சரியமாய் பார்க்கிறார்கள். எப்படி பெர்மிஷன் இல்லாமல் ஊர்வலமாய் வரலாம்? அவர்கள் கூட்டத்தை வழிமறிக்கப் புறப்படுகிறார்கள்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டபோது, வினைதீர்த்தானும், முத்துலிங்கத்தைப் பார்த்து விடுகிறான். அவன் உடம்பில் மின்சாரம் பாய்கிறது. எவரும் எதிர்பாராத வகையில் முத்துலிங்கத்தை நோக்கி ஓடினான். “அடே செறுக்கி மவனே! செய்யுறதையும் செய்துட்டு திமிரோடேயா நிக்கே?” என்று கூவியபடி பாய்ந்தான். எதிரே வந்த ஒரு பனையேறித் தொழிலாளியின் கையில், மின்னிய அரிவாளைப் பிடுங்கிக் கொண்டு குதித்தபடி ஓடினான். தோளில் கிடந்த கலாவதியை பாதி வழியில் கீழே இறக்கி விட்டு விட்டு, பாய்ந்து பாய்ந்து ஓடினான்.

அவ்வளவுதான்.

கூட்டம் கலைந்து ஆளுக்கொரு கல்லை யெடுத்தபடியே அவன் பின்னால் ஓடியது. குடைகளைப் பழுது பார்த்தவரின் குடைக் கம்புகளைக் காணவில்லை. சாலையோரம் குவிக்கப்பட்ட கற்களைக் காணவில்லை. சாலையில் மலையாளம் சந்தைக்கு மாடுகளைப் பற்றிக் கொண்டு செல்பவர்களின் சாட்டைக் கம்புகளும், ஒரு வீட்டின் முன்னால் நல்லதுக்கோ கெட்டதுக்கோ போடப்பட்டிருந்த பந்தல் கம்புகளும் கூட்டத்தினரின் கரங்களுக்கு வந்து விட்டன. கண் திறந்து கண் மூடுவதற்குள் கூட்டம் கண் மண் தெரியாமல் ஓடி காவல் நிலையத்தை சுற்றி வளைத்துக் கொண்டது. கையில் இருந்த கல்லாயுதங்களையும், கம்பாயுதங்களையும் நீட்டி நீட்டி, தூக்கித் தூக்கி, ‘ஏய்... ஏய்...’ என்ற குரல்கள். ‘முத்துலிங்கத்தை கைது செய்யாமல்...கொஞ்சுறதா’ என்ற அதட்டல்கள்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார், உள்ளே ஓடினார்கள். முத்துலிங்கமும், அவர்களோடு ஒட்டிக் கொண்டு, உள்ளே ஓடினார். வழி மறிக்கப்போன போலீசாரும், பாதி வழியில், திரும்பிப் பார்க்காமலே ஓடி, காவல் நிலையத்திற்குள் ஓடினார்கள். திடீரென்று, காவல் நிலையக் கதவுகள் சாத்தப்படுகின்றன. ஜன்னல்கள் ஒடுக்கப்பட்டு, துப்பாக்கி முனைகள் தெரிகின்றன.

வழியில் இதர பெண்களோடு திகைத்து நின்ற தமிழரசியின் காதில் ‘எப்பதம் வாய்த்திடும் போதும் - அதை யாவர்க்கும் பொதுவில் வைப்போம்” என்று பாரதி கொக்கரிக்கிறான். உடனே அவள் பெண்களை கை காட்டி அழைத்தபடியே, காவல் நிலையம் நோக்கி ஓடுகிறாள். பாதி வழியில் மீளத் தெரியாமல் நின்ற கலாவதியை இழுத்துக் கொண்டே ஓடி கூட்டத்தில் சேர்கிறாள். திடீரென்று பயங்கரமான சத்தம்...

‘டுமீல்...டுமீல்...டுடுடு. டுமீல் டுமீல்!’

எறியப்பட்ட கற்களுக்குப் பதிலாக, இரும்பு புல்லாங் குழல் போல் தோன்றிய, ஜன்னலோர துப்பாக்கி முனைகளின் பேய் வாய் வழியாய், உருண்டை உருண்டையாய், வட்ட வட்டமாய் ஈயப்பொருட்கள், ராக்கெட் வேகத்தில் வெளிப்படுகின்றன. மூன்று பேர், அடியற்றுக் கீழே விழுகிறார்கள். தலையில் சிறு துவாரத்தின் வழியால் ரத்தம் பீறிட, பிடரியில் பெருச்சாளிப் பொந்துபோல் மூளை சிதற, அவர்கள் முனங்கக் கூட நேரமின்றிச் சாய்கிறார்கள். இந்த மூவரின் முதல்வியாய், தலையில் ரத்தம் நீரூற்றாய் மேலோங்க, கலாவதி ‘எய்யோ... எய்...’ என்றபடி மல்லாந்து கிடக்கிறாள். தமிழரசிக்கு எதுவுமே நினைவில்லை. யார் விழுந்தார் என்ற பிரக்ஞை இல்லை. கீழே கிடந்த காலாவதியான கலாவதியின் ஒரு கையைத்தூக்கியபடியே, அவள் கலாவதி என்பதை உணராமலே தூக்கித் தோளில் போட்டபடி அரிவாளை வீசப்போன வினைதீர்த்தானின் ஒரு கையையும் பற்றியபடி செத்தவளுக்கும், இன்னும் சாகாமல் நிற்பவனுக்கும் இடையே அவள் இழுபட்டாள். பிறகு கலாவதியை விட்டுவிட்டு, வினைதீர்த்தானைப் பின்னுக்குத் தள்ளி காவல் நிலையத்தின் முன்னால் துப்பாக்கிக் காலனின் நேரடிப் பார்வையில் மேனியைக் காட்டியபடி அடங்கிப்போக முடியாத - அடக்க முடியாத - ஆவேசியாகிறாள். அவள் கழுத்து துப்பாக்கிபோல் நிற்கிறது. வாய் அக்கினிக்குழம்பை கக்குகிறது.

“சுடுங்கடா! என்னோடு சேர்த்து எத்தனைபேரை வேண்டுமானாலும் சுடுங்கடா! சுட்டுத் தொலைங்கடா! தன் மானத்தை விட்டுக் கொடுத்து, நாங்க சுதந்திரத்தை அனுபவிக்கத் தயாராய் இல்லை. உம்... சுடுங்கடா! காலம் ஒங்களை சுடுமுன்னால எங்களை காலனிடம் அனுப்புங்கடா!”

சிதறிய கூட்டம் மீண்டும் அணிவகுத்து, காவல் நிலையத்தை நெருங்குகிறது. அதோடு வேடிக்கை பார்ப்பது போல் நின்ற கூட்டம் தோள் கொடுக்கிறது. மூட்டை தூக்கிகள், வாடகை வண்டி ஒட்டிகள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள் கூட்டத்தை கும்பலாக்குகிறார்கள். குற்றாலத்திற்கு, ஜமாபந்திக்குப் போய்க்கொண்டிருந்த அதிகாரிகளின் கார்கள், காவல் நிலையத்தை நோக்கி நகர்கின்றன.

ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறைத் தலைவரும் வந்தாலும் வரலாம் என்று அனுமானித்து அவர்களுக்கு துப்பாக்கிகள் சகிதமாய் அணிவகுப்பு வரவேற்புக் கொடுக்கத் தயாராய் இருந்த போலீஸ்காரர்களும், சப்இன்ஸ்பெக்டரும், செய்வதறியாது திகைக்கிறார்கள். துப்பாக்கிகள் ஆடாமல் கிடக்கின்றன. கூட்டம் மீண்டும் சூழ்கிறது.

தமிழரசியோ, கலாவதியின் சடலத்தை தோளில் போட்டபடி ஆயிரம் கால்கள் கொண்ட ஆதிபரா சக்தியாய் அங்குமிங்கும் நடமாடுகிறாள். ஆயிரம் வாய் கொண்ட அபூர்வ சிந்தாமணியாய் கத்துகிறாள், பதைக்கிறாள்.

“சுடுங்கடா... சுட்டுப் பாருங்கடா...”

துப்பாக்கி ரவைகள் துளைத்தெடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வோடு பலரும், என்ன ஆனாலும் சரி இனிப் பொறுப்பதில்லை என்று உள்ளத்தால் வேகப்பட்டு, உடம்பால் யந்திரப் பட்ட ஒருசிலரும், விலகியும், நெருக்கமாயும் நின்றபடி, சரமாரியாகக் கற்களை வீசுகிறார்கள். ஈன முனங்கலாய் முனங்கி, கைகால்களை அறுபட்ட ஆடு போல் உதறிவிட்டு ஓய்ந்துபோன இரண்டு சடலங்களை கூட்டம் சூழ்கிறது. ரத்தம், கட்டி கட்டியாய் உறைந்து கிடக்கிறது. பீறிட்ட ரத்தத் துளிகள் நியாயம் தேடிகளின் கண்களிலும், வாய்களிலும் செம்புள்ளிகளாய் தோற்றம் காட்டுகின்றன. போலீஸாரை ஏசிய தமிழரசி, கலாவதியை கீழே வைத்துவிட்டு, இன்னொரு சடலத்தை இழுத்தபடி, காவல் படியில் கால் வைக்கிறாள். இதற்குள் கார்கள் வந்து நிற்கின்றன. அதிகாரிகள், அவற்றிலிருந்து குதிக்கிறார்கள் அவர்களுள் ஒருவர், தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிடுகிறார். தமிழரசி, இன்னும் “சுடுங்கடா! ஏண்டா ஓஞ்சிட்டிங்க. சுடுங்கடா” என்று கத்தியபடியே படிகளில் ஏறுகிறாள்.

குட்டாம்பட்டியில் நடந்த கொலையும், ஒரு அப்பாவிப் பெண்ணிற்கு சூடுபோடப்பட்ட சமூக விவகாரமும், இனி மேல் செய்தியாகாமல் இருக்கமுடியாது. அந்தச் செய்தி, செய்தியாளருக்கும் - காவல் நிலையத்திற்கும் இடையே நிலவும் உறவின் அடிப்படையில், விமர்சன செய்தியாக அனுப்பப்படலாம். அரசியல் பத்திரிகைகள் அதற்கு வர்ணம் பூசலாம். சட்டசபையில், அரசு இதைக் குறைத்துக் காட்டலாம். எதிர்க்கட்சிகளைக் கூட்டிப் பேசலாம். நாளைக்கே, ஆயுதப் போலீசார் குட்டாம்பட்டிக்குள் சென்று, தங்களது தீராத தீரத்தைக் காட்ட ‘பிளாக் மார்ச்’ செய்யலாம். விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படலாம். வயிறு காய்ந்தவர்கள், கோர்ட் கோர்ட்டாய், வாய்தா வாய்தாவாய் அலையலாம். ஆனாலும்

இந்தச் செய்திக்குள் இருக்கும் சேதி எப்போதும் ஜோதி வடிவாய் சுற்றும். பூசி மழுப்பி பொங்கலிடப்பட்ட விவகாரம், செய்தியாவதற்கு இதுவரை மூன்று உயிர்கள் விலையாயின.

அந்தச் செய்தி மீது நடவடிக்கை எடுக்க எத்தனை உயிர்கள் தேவையோ? தர்ம நடவடிக்கை எடுக்கப்படுமா? ‘தர்மத்திற்கு’ என்று எடுக்கப்படுவதுபோல் எடுக்கப்படுமா...?

காலத்திற்கே வெளிச்சம். காலத்திற்கு வெளிச்சம். இருக்கிறதா?

காலத்திற்கு வெளிச்சம் மட்டுமல்ல, கஷ்டப்படுத்தியவர்களே கஷ்டப்படுத்தும் சக்தியும் உண்டு என்று வரலாறு கூறுகிறது. ஒரு தடவை சொன்னால், முரட்டு மூடர்களுக்குப் புரியாது என்று, பல தடவை, பல நாடுகளில் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.