நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 4
4
பத்தாண்டு காலமாக, மனதுள் பதியமானாலும், தனித்த சந்திப்பு என்ற இருவர் மட்டுமே "கிஸ்தி” கட்டக்கூடிய சொந்த இடத்தில் நடமுடியாமல், இப்போது 'மர'மாகும் நிலைக்குப் போயிருந்த காதல் செடிக்கு, தாமோதரனும், தமிழரசியும், 'முதிர்வு’ என்ற களைகளைக் கொய்து, அந்த காதல் மரத்தைச் செடியாகச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். அவன் காக்கி ச் சட்டையை மறந்தான். அவள், பட்டி மன்றத்தைத் துறந்தாள்.
இந்தத் துறவில் பூத்த உருவத்திற்கு உருவகங்களாகி, எவ்வளவு பெரிய காலத்தை, வெல்லாமல் வெல்லப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு உந்த, அவர்கள் ஒருவரை ஒருவர் கண்முட்டப் பார்த்து, வாய் முட்டப் பேசிக்கொண்டிருந்தார்கள். கடத்திப்போன கடந்த பத்தாண்டு காலத்தையும், அந்த நிகழ்காலத்திலேயே நிகழ்த்திக் காட்டப் போகிறவர்கள்போல், ஒருவர் கண்களில் பிறிதொருவர் மட்டுமே நிறைந்திருந்ததால், இடைச்செருகலாக வந்த பொன்மணியை, அவர்கள் கவனிக்கவில்லை. மூச்சு முட்ட ஓடிவந்து நின்ற அவளோ, அங்கேயே, அந்தக் கணத்திலேயே, தனது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முடிவை ஏற்படுத்திவிடத் துடித்து நின்றாள்.
பொன்மணி, தாமோதரனின் கடைசித் தங்கை. அவன் வீட்டில், அவள்தான் கடைக்குட்டி’. கறுப்புக்கும், சிவப்புக்கும் இடைப்பட்ட மாநிறம். அதே சமயம் மங்காத நிறம். குற்றால நீரை உள்வாங்கி உள்வாங்கி, நீர் பொங்க பளபளத்து நிற்கும் பாறைபோன்ற உறுதியான முகம். வேல்போல் குவிந்த புருவ மத்தி. வெண் பொங்கலும், அரை குறையாய் அதில் கரைந்த கருப்பட்டியும், பானையில் இருந்து பொங்குவது போன்ற கண்கள். ஈரப்பசையான உதடுகள். ஏதோ ஒட்டப் பந்தயத்தில், ஒடுவதற்குத் தயாராக இருப்பவள் போல் உள்நோக்கி லேசாய் குவிந்த உடம்பு. பத்தொன்பது வயதுக்கேற்ற பார்வை வீச்சு,
'பிளஸ்டு'வில் மைனஸ்ஸாகப் போனதால், தானாகவே படிப்பை முடித்துக் கொண்டவள். எவர் சொன்னாலும், முடிவை மாற்றிக் கொள்ளாதவள் என்பதை அறிந்திருந்த குடும்பத்தினர், அவளை 'பள்ளிக்குப்போ’ என்றும் சொல்ல வில்லை. 'வயலுக்கு வா’ என்றும் கேட்கவில்லை.
தாமோதரனும், தமிழரசியும் பேச்சுவாக்கில், எதேச்சையாகத் திரும்புவது வரைக்கும் காத்திருக்க விரும்பாத பொன்மணி, அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இருமினாள். அதனல் திருப்பப்பட்ட தாமோதரன், தங்கை மிகப் பெரிய தப்பைச் செய்துவிட்டவள் போல், அவளைச் சுட்டெரிக்கப் பார்த்தான். பின்னர் தனது 'தப்பை' மறைக்கும் வகையில், சிறிது விலகி உட்கார்ந்தான். பேச்சை நிறுத்தினான்.
அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த தமிழரசி, அவன் பேச்சற்றதும், அற்றவனைப் பார்த்து, அவன் கண்கள் குவிந்த இடத்தில், பொன்மணியைக் கண்டாள். லேசாக நாணப்பட்டாள். பிறகு அதை மறைக்கும் வகையிலோ அல்லது இப்போதுதான் கூடி வரும் காதலை, நாணத்தில் கரைக்க விரும்பாததாலோ, பொன்மணியைத் தைரியமாகப் பார்த்தாள். நன்றியோடு பார்த்தாள். இவள்தானே, 'எங்க தாமோதரன் அண்ணனுக்கு தமிழரசி அண்ணியை வாங்குறதுக்காக ஒங்களுக்கு' எங்கக்காவை’ கொடுக்கோம்’ என்று தன் தமையன் ராஜதுரையிடம் சொன்னவள்! இவள் அப்படிச் சொல்லவில்லையானல், ஒருவேளை நானே இங்கு வந்திருக்க மாட்டேன். அதனல், ஒருவேளை இவரை... வேண்டாம். நினைக்கவே பயமாய் இருக்கு.
ஒட்டியும் ஒட்டாமலும் விலகி நின்ற பொன்மணியின் கையைப் பிடித்திழுத்து, அவளே உட்காரும்படி பலவந்தப் படுத்தியபடியே "வாம்மா கல்யாணப் பொண்ணு, ஏன் இப்படி வெட்கப்படுறே?” என்றாள். பொன்மணியோ, தமிழரசியிடம் இருந்து திமிறி விடுபட்டு, அருகே நின்ற தென்னைமரம் பக்கமாகப் போய் நின்று, முந்தானையை கண்களுக்கு மேல் கொண்டுபோனாள். இடுப்பில் இருந்த விஷப்பாட்டிலே தடவியபடியே, அவர்களுக்குப் புறமுதுகு காட்டி நின்ற பொன்மணி, தனது மன நிலையை எப்படி விளக்குவது என்று புரியாமல் தவித்தாள். அது என்னமோ, அண்ணனிடம் நேருக்கு நேராய் பேசியறியாதவள்; பேசித் தீர்த்து விடவேண்டும் என்று வந்தவளால், பேச முடியவில்லை. எப்படி விஷயத்தை விவகாரமாக்குவது என்று தெரியாமல், தவித்தபடி நின்றாள்.இதற்குள், தமிழரசியின் சித்தப்பா ‘பைத்தியாரத் தர்மரின்' மகள் கலாவதி, இடது கையில் ஒரு கலசத்துடனும், வலது கையில் பனைஒலை குருத்தோடும் வந்து விட்டாள். குருத்து ஒலைகளை பட்டையாக உருவாக்கி, ஒன்றை தமிழரசியிடமும், இன்னொன்றை தாமோதரனிடமும் கொடுத்து விட்டு “பயினிக்குள்ள நொங்க வெட்டிப் போட்டாச்சு’’ என்று சொன்னபடியே, கலசத்தைத் தூக்கி, லேசாகக் கவிழ்த்து, பட்டையில் பதனீரைக் கொட்டினாள்.
உடனே "பொன்மணிக்கும் ஒரு பட்டை பிடி!" என்று தமிழரசி, கலாவதியிடம் சொல்லி விட்டு, "பொன்மணி! பொன்மணி! ஒன்னைத்தான்" என்று கூப்பிட்டாள். அப்போதுதான் அவளைப் பார்த்த கலாவதி இன்னக்கு இவளுக்கு என்ன வந்துட்டுது. புதுப் பொண்ணு மாதிரி ஏன் 'பவுசு' காட்டுறாள். ஏய் பொண்ணு, வந்து பயினிய ஒரு கை பாருடி" என்றாள்.
பொன்மணியையே பார்த்த தமிழரசி, பின்னர் கலாவதியிடம் "ஒனக்கு விஷயம் தெரியாதா? அவளுக்கு நாகர்கோவிலுல இவரு மாப்பிள்ளை பார்த்துட்டாராம். இனிமேல பொன்மணி, அங்கே போகவேண்டியதுதான் பாக்கியாம். அதனால், இப்போ அவள் மாப்பிள்ள ஊர் திசையைப் பார்த்து நிற்கிறாள். அம்மாவுக்கு வெட்கம் வந்துட்டு. ஏய் பொன்மணி, வாடியம்மா. ஒங்க அக்காவுக்குக் கல்யாணம் நடக்குற நாள்லயே, ஒனக்கும் நடக்குமாம். கவலைப்படாதே. காத்திருக்க வேண்டியதில்ல’’ என்றாள்.
பொன்மணி,அவர்களைப் பார்த்துத் திரும்பப்போனாள். முடியவில்லை. நிச்சயம் கண்கள் நீரில் மிதக்கும். இப்பவே சொல்லிடலாமா? அண்ணாவை அவமானப் படுத்துறது மாதிரி...இங்கேயே எப்டி சொல்றது? என்ன செய்யலாம்? தமிழரசி அண்ணிகிட்ட சொல்லி, அவங்கள அண்ணாகிட்ட சொல்லச் சொல்லலாம். ஒன்னும் முடியாமல் போனால் இருக்கவே இருக்காரு அவரு ... அவர் இல்லன்னா விஷம். நான் காதலுக்குப் பயப்படுறதுனால, உயிருக்குப் பயபபடாதவள்.
பொன்மணியின் கலக்கம் புரியாத கலாவதி, தனக் குள்ளேயே அப்போதுதான் ஒரு தாற்காலிகக் கற்பனையை சிருஷ்டித்துக் கொண்டிருந்தாள். எனக்கு எப்போ... யாரு...எங்கே... நமக்குன்னு ஒருவன் இனிமேல் பிறக்கவா போருன்? வரப்போறவன் அப்பாமாதிரி பைத்தியாரத் தர்மராயும் இருக்கப்படாது. வினைதீர்த்தான் அண்ணாச்சிய மாதிரி முரட்டு வீமனாயும் இருக்கப்படாது. அருச்சுனன் மாதிரி... சீ... அவன் மாதிரியும் கூடாது. ஆற்று மணல எண்ணினாலும் எண்ணிடலாமாம். அருச்சுனன் பொண்டாட்டியள எண்ண முடியாதாம். இப்பவே ஏன் நினைக்கணும்? எவனே ஒருவன் வரும்போது பார்த்துக்கிட்டா போச்சு. நல்ல மாப்பிள்ள கிடைக்க நமக்கு என்ன நகைநட்டு இருக்கா? சொத்து சுகம் உண்டா...?
கற்பனையை, நடைமுறை வாழ்க்கை நினைப்பு குலைக்க, கலாவதி எழுந்தாள். பிற பெண்களைப்போல், பொன் மணியைப் பொருமையாய் பார்க்காமல், சினிமா கதாநாயகியிடம் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளும் ரசிகை போல, அவள், தன்னை பொன்மணியுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டாள். மெள்ள நடந்தாள். தான் நடப்பது பொன்மணிக்குத் தெரியாமல் இருப்பதற்காக, கைகளைப் பரவலாகத் தூக்கி, குதிகாலில் நடந்து, பொன்மணியைப் பின்புறமாகப் போய் பிடித்தாள். பிடிபட்டுத் திமிறியவளை அலாக்காகத் தூக்கிக் கொண்டுவந்து தமிழரசியின் அருகே போட்டுவிட்டு, "பரவாயில்லியே! அக்காளுக்கும், தங்கைக்கும் ஒரே நாள்ல கல்யாணமா? ஒரு பந்தயம். இரண்டு பேர்ல, யாரு மொதல்ல பிள்ள பெறப்போறாங்கன்னு பார்ப்போம்” என்று சொல்லிச் சிரித்தாள்.உடனே தாமோதரன் “அது... ஒங்க அண்ணன் ராஜ துரையோட சாமர்த்தியத்தையும், நாகர்கோவில்காரர் திறமையையும் பொறுத்திருக்கு...” என்று சொல்லிவிட்டு, பிறகு, தங்கையின் முன்னால் பேசத் தகாத.இதுவரை பேசி யறியாத வார்த்தையைப் பேசிவிட்ட குற்றவுணர்வில், தமிழரசியையும், கலாவதியையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களோ, சொல்லிவைத்தாற்போல், கண்களை கைகளால் மூடிக்கொண்டார்கள்.
... இந்தச் சாக்கில், பொன்மணி, தானும் நாணப்படுவது போல், முகந்திருப்பி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தமிழரசி, எப்போது தனியாக விடுபடுவாள் என்று அவள் வினாடிகளை நிமிடங்களாக, நிமிடங்களை மணிகளாகப் பாவித்துக் கொண்டிருந்தாள். பிறகு இருக்க முடியாமல் எழுந்தாள். நடக்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்தாள். கைகளை நொடித்தாள். கால்களை தரையில் தேய்த்தாள்.
இதற்குள், வேறொரு கிணற்றுப் பக்கத்திலிருந்து, அவர்களிடம் வந்துசேர்ந்த வினைதீர்த்தான், அவர்களைக் *கண்டுக்காமலே' தென்னை மரங்களை அண்ணாந்து பார்த்த படியே நின்றான். தாமோதரன், அவனையே விழுங்கப் போவதுபோல் நோக்கினான். வேலூரில் போலீஸ் பயிற்சி பெற்ற தன்னைவிட, அவன் உடம்பு கனகச்சிதமாய் இருப்பதை ரசித்துப் பார்த்தான். குத்திட்ட மீசை. குதிக்கும் கண்கள், விரிந்த தோள். தூக்கலான பார்வை. ‘ப’ வடிவத்தில் அமைந்த வயிற்றை, ஆங்கில 'ஒய்' எழுத்தின் வடிவத்தில் சுமக்கும் இடுப்பு. இவன், சாட்டைக்கம்பு வைத்திருக்கும் வேலையில் இருக்கக் கூடாது. கையில் லத்திக்கம்பு இருக்கவேண்டும்.
சிறிதுநேர பார்வைக்குப் பிறகு, தாமோதரன், தமிழரசியைப் பார்த்து "ஒங்க வினைதீர்த்தானை... போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்த்துடலாமுன்னு நினைக்கேன். இன்னும் வயசு இருபத்தைந்தை தாண்டியிருக்காது. சரி தானா?’ என்றான். தான், அவளைப் பார்க்கும் விதத்தை சரிதானா என்று வினவுகிறானா அல்லது பேசியதை சரிபார்க்கிறானா என்ற இன்பப் புதிர் புரியாமல் தடுமாறிய தமிழரசி, இறுதியில் சிரிப்பு சிந்த பதிலளித்தாள்.
"நீங்கவேற... இவன் முன் கோபத்துக்கு, இவனை போலீஸ்ல சேர்த்திங்கன்னா, அப்புறம் ஒங்களையே அரெஸ்ட் செய்யப் பார்ப்பான்.”
அவர்களின் விமர்சனத்தை காதில் வாங்காமலே, அண்ணாந்த பார்வையை தாழ்த்தாமல், வினைதீர்த்தான், :ஏ. தேவடியா மவன் ... என்னையே ஏமாத்திட்டான் பாருங்க...’’ என்றான்.
பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாக நோக்கி அந்தத் தென்னையில, நாலு குலை தேங்காய் இருந்துது. முந்தா நாள் தான் முள்ள வச்சுக் கட்டுனேன். எவனே ஒரு பயல் மரத்துல ஏறி, தேங்காய பறிச்ச தோட, முள்ளையும் விறகுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.’’ என்றான்.
தாமோதரன், அவனே கிண்டலாகச் சாடினான்.
"மாப்பிள்ளை வெறும் பிள்ளைதான் போலுக்கு. தேங்காயையே காப்பாத்தத் தெரியாதவரு, பொண்டாட்டியை எப்படிக் காப்பாத்தப்.போறாரோ?”
உடனே தமிழரசி இடைமறித்தாள்.
"ஒங்களால முடியுமோ என்னவோ? இவனால முடியும். அப்புறம் போலீஸ் சார், தேங்காய் பறிக்கிறவனை, எந்த சட்டத்துல சார்ஜ் பண்ணுவீங்க? இருக்கிற தேங்காய் களுக்கு, நீங்க இங்க இருக்கிறவரைக்கும் பாரா போடுங்களேன். கரெக்டா சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடுங்க... ஏன்னா, யாரும் பார்க்க மாட்டாங்கன்னு அப்போதான் திருடன் வருவான்" என்றாள்.தாமோதரன், அவள் சொல்வதைப் புரிந்து கொண்டான். ஆக நாளைக்கு மாலை ஆறு மணிக்கு இங்கேயே சந்திப்பு. 'ஒங்களாலதான் முடியாதுன்னு” சொல்லும் போது எப்படி கன்னத்தைக் குவித்து, கண் வீசுறாள்.
அவளிடம் “திருடனா, திருடியா’’ என்றான்
தமிழரசி கலாவதியை கண்களால் சுட்டிக் காட்டி அவனை எச்சரிக்கைப்படுத்தினாள்.
கலாவதி, அவர்கள் கண்ணடி தாங்காமல் தர்ம சங்கடமாகத் தவித்த போது பொன்மணி, புற முதுகைக் காட்டியபடி, எங்கேயோ நோக்கியபோது ‘தொப்பு...தொப்பென்று' சத்தம் கேட்டது. பொன் மணி தவிர, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். வினை தீர்த்தான், ஒரு தென்னை மரத்தின் உச்சியைப் பிடித்து உசுப்பிக் கொண்டிருக்கிறான். கலாவதி, தேங்காய்களை எடுப்பதற்காக எழப்போனாள். அதற்குள் பொன்மணி அங்கே ஒடினாள்.
தென்னை மரத்திலிருந்து கம்பீரமாக இறங்கிக் கொண்டிருந்த வினைதீர்த்தானைப் பார்த்தபடியே "வினைதீர்த்தான் மாப்பிள்ளை மட்டும் எங்க வீட்ல வேலைக்குச் சேரலன்னா, விவசாயமே பார்க்க முடியாதுன்னு அப்பா அடிச்சுச் சொல்றார்’ என்றான் தாமோதரன்.
வினைதீர்த்தானும், பொன்மணியும், தேங்காய்களோடு, ஏதோ பேசியபடியே வந்தார்கள். வந்ததும் வராததுமாய், தேங்காய்களை கும்பமாகச் செதுக்கி, ஒன்றை தாமோதரனிடம் நீட்டியபடியே "சாப்பிடுங்க அத்தான்... ஊருக்கு வந்தால்தானே ஒமக்கு இள நீர் கிடைக்கும்” என்றான். தமிழரசி தலையிட்டாள்.
"இந்த போலீஸ் சாருக்கா கிடைக்காது? நாகர் கோவிலுல தேங்காய்க்குப் பஞ்சமில்ல. எவனாவது கேட்டு கொடுக்காட்டால், அவன்மேல ஒருசெக்க்ஷனை ஏவி விட்டுட மாட்டாரா? பணக்காரன் வீட்ல அல்சேஷன் நாய் மாதிரி, போலீஸ் கையில சட்டம்; இல்லியா சப்-இன்ஸ்பெக்டர்?"
சப்-இன்ஸ்பெக்டர் டக்கென்று பதில் சொன்னார்:
‘'இப்படியும் சொல்லலாம்... வாத்தியாருங்க கையில பரீட்சை பேப்பர் சிக்கிக்கிறது மாதிரி...சட்டம் எங்க கையில். நானே... பரீட்சை மார்க் மோசடி விஷயமாய் ஒரு கேஸ் புக் பண்ணியிருக்கேன்...”
இளநீரை முடித்துவிட்டு, எல்லோரும் எழுந்தார்கள்’ ஊர் முனைவரைக்கும் ஒன்றாக நடந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தார்கள். வடக்கு நோக்கி, எள்ளுத் தோட்டத்துக்குள்ளே நெகிடெத்துச் சென்ற ஒற்றையடிப் பாதையில் தாமோதரனும், கையில் ஒரு கட்டு அகத்திக்கீரையுடன் வினைதீர்த்தானும் ஒன்றாக நடந்தார்கள்.
பொன்மணி அவர்களோடு போகாமல், தமிழரசியுடன் நடந்தாள். தமிழ், வீட்டுக்குப் போகாமல் தன்னோடு வரும் அவளை, ஆச்சரியத்தோடு பார்த்தாள். பொன்மணியின் துயரம், மகிழ்ச்சியாக இருந்த தமிழரசிக்குத் தெரியவில்லை. இதற்குள் கலாவதி, இடையில் பிய்த்துக்கொண்டாள். மாட்டுக்குப் புல் வெட்டிக்கொண்டு வரவேண்டுமாம்! போகும்போது தமிழரசியைப் பார்த்து, ‘எக்கா, ஆறு மணிக்கு மேல அந்தக் கிணத்துப்பக்கம் பாம்பு நடமாட்டம் அதிகம்...” என்று சொல்லி, பிறகு அவளே வெட்கப்பட்டு ஓடிவிட்டாள்.
கலாவதி தூண்டிவிட்ட உள்ளத்து சுடர்விளக்கின் ஒளியுள் ஒளிந்து, நடப்பது தெரியாமலே நடந்த தமிழரசியின் முன்னால் நின்று, வழிமறித்து, பொன்மணி தேம்பினாள். பிறகு உடைந்த குரலில் ஒப்பித்தாள்:
"அண்ணி... நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். எனக்கு...இந்த நாகர்கோவில் கல்யாணத்துல இஷ்டமில்ல அது மட்டும் உறுதியான, நான் இதோ இந்த விஷத்தைக் குடிச்சுட்டு ஒரேயடியாய் போயிடுவேன்...’
தமிழரசி திடுக்கிட்டு, அந்த விஷப்பாட்டிலே எடுத்து வீசப்போனாள். பிறகு, வேறு யாராவது அல்லது ஆடோ மாடோ பயன்படுத்தப்படாது என்று நினைத்து, காலால் தரையைத் தோண்டி, விஷத்தைக் கொட்டி மண்ணை மூடினாள். பொன்மணியை அதட்டலாகக் கேட்டாள்:
"பைத்தியக்காரி! இதுக்குப் போயா சாகப்போறே? ஒனக்கு அந்தக் கல்யாணம் பிடிக்கலன்னா, யாருக்கும் பிடிக்கப்படாது. நீ பொண்ணு . ஆடு மாடல்ல ஒன் இஷ்டத்துக்கு விரோதமாய் எதுவும் நடக்காது. நான் பார்த்துக்கிறேன். நான் நிறுத்திக் காட்டுறேன். அதுசரி, ஏன் கல்யாணம் வேண்டாங்கற? யாரையும் காதலிக்கிறியா?”
பொன்மணி தயங்கினாள். 'அதை' தமிழரசியிடம் சொல்லலாமா என்று யோசித்தாள். பிறகு, ஒரு வேளை ‘அதை' அண்ணி பைத்தியக்காரத்தனமான காதலாக நினைத்து, அதற்கு மாற்று மருந்தாக, அவளே தனக்கு நல்லது செய்வதாக நினைத்து, இந்த நாகர்கோவில் கல்யாணத்தை அவசரப்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினாள். படபடப்பான குரலில் “அப்டில்லாம் இல்ல அண்ணி. நம்ம ஊர்ல. நான் காதலிக்கிற அளவுக்கு யார் இருக்காங்க?" என்றாள். அவளின் படபடப்புக் குரலை, தனக்குள் இருந்து இன்னும் முற்றிலும் விடுபடாத தமிழரசி, உறுதிக்குரலாக நினைத்து, அதை உண்மையாக எடுத்துக் கொண்டாள்.
வழிநெடுக குசலம் விசாரித்தவர்களுக்கு பதிலளித்த படியே, தமிழரசி வீட்டுக்குள் வந்தாள். அப்போதுதான். தான் கிணற்றுக்குப் போயும் குளிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. இதை கலாவதியாவது...அவள் கிடக்கட்டும் இந்த தாமுவாவது குளிக்கச் சொல்லியிருக்கலாம். போன வேலையை விட்டுட்டு...
தமிழரசியுடன் வந்த பொன்மணி, வீட்டுக்குள் தனது “பெரியண்ணன்' முத்துலிங்கம் இருப்பதைப் பார்த்து விட்டு நழுவி விட்டாள். தமிழரசி, அவரிடம் குசலம் விசாரித்தாள்.
"சுகமா அத்தான்? என்ன இது, ரெண்டு பேர் போடுற வெத்திலையை நீங்க ஒரே ஆள் போடுறீங்க?’’
கல்யாண மாப்பிள்ளை ராஜதுரையும், மற்றவர்களும் சிரித்தபோது, முத்து லிங்கம் சமாளித்தார்.
"ரெண்டு கல்யாணம் நடக்கப் போறதுனால, ரெண்டு பேர் வெத்திலய போடுறேன். எங்க பொன்மணிக்கும், நாகர்கோவில் மாப்பிள்ளை குதிருது. ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணத்தையும் வைக்கலாமான்னு யோசனை கேட்க வந்தேன். நீ வரட்டுன்னு ஒங்க அண்ணன் சொன்னாரு. என்ன சொல்றே?”
தமிழரசி நேரடியாகக் கேட்டாள்: "பொன்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்பீங்களா? வாழப்போறவள் அவள்... அவளுக்கு சம்மதமான்னு...”
முத்துலிங்கம், தமிழரசியை முடிக்கவிடாமல், அட்ட காசமாகப் பேசினார்:
“அதிகமா படிச்சால் புத்தி போயிடும் போலுக்கு... பெண்புத்தி பின்புத்தி என்கிறது மாதிரி பேசுறியே... பொன்மணியை சாகடிக்கவா போறோம்! அந்தக் கழுதைக் கிட்ட ஏன் கேட்கணும்? தூக்கி வைக்கிற பொதியை சுமக்க வேண்டியதுதான் அதனோட வேல?”