நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 7
7
சொந்த மகளாக நினைத்த தன்னை. இப்போது தாயாக நினைத்து சித்தப்பா மாடக்கண்ணு, குழந்தையைப் போல் மன்றாடி அழுவதைப் பார்த்த தமிழரசி, திக்கு முக்காடிப் போனள். வாயதிரப் பேசியோ, கையுயர ஆட்டி அசைத்தோ பேசியறியாத அந்தப் பெரியவர், குழந்தையாய் கேவியதும், தமிழரசி கிட்டத்தட்ட பாட்டியானாள். சித்தப்பாவின் துண்டையெடுத்து, அவர் கண்களைத் துடைத்தாள். என்ன சித்தப்பா. இது என் வீடும் இல்ல. ராஜதுரை அண்ணன் வீடும் இல்ல. இது ஓங்க வீடு. அவன் ஏதோ தெரியாத்தனமாய் சொல்லிட்டான்...” என்றாள்.
மாடக்கண்ணு தமிழரசியை நிமிர்ந்து பார்த்தபோது, ராஜதுரை அருவருப்பாக முகம் கழித்தான். பகவதியம்மாள் புருவத்தை உயர்த்தியபடியே பார்த்துக் கொண்டிருந்தாள். கலாவதி, ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராஜதுரை தற்செயலாக இருமியது, கர்ஜனைபோல் கேட்டது. இருமலுக்கிடையே பொருமினான்.
யோ! நீயா போறியா, நானத் தள்ளணுமா?"தமிழரசி திருப்பிக் கொடுத்தாள்:
"‘போறதாய் இருந்தால் நீதான் போகணுமே தவிர, அவரு போகமாட்டாரு.”
தமிழரசியை, ராஜதுரை அதிர்ச்சியோடு உற்றுப் பார்த்தான். அவள் கன்னத்தில், தன் மோதிரம் பட்டு கிழிந்த ரத்தப் பகுதியை, அவள் கையை வைத்து மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் மீது தான் உயிரையே வைத்திருக்கும்போது, அவளோ, அந்தப் பைத்தியாரன் மீது அதிக பாசம் வைத்திருப்பதைப் பார்த்து, உள்ளூறப் பொறாமை பட்டான். பிறகு, தலையை மேலும் கீழுமாக ஆட்டியபடியே தங்கையிடம் பேசினான்.
“எப்போ நீ பங்காளி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியோ, அப்பவே நீ என்ன அண்ணாய் நினைக்கலன்னு தெரிஞ்சுக் கிட்டேன். ஆனால் அதே மாதிரி, என்னால ஒன்னை பங்காளியா நினைக்க முடியல. இன்னும் என்னோட செல்வத் தங்கச்சியாய்தான் நினைக்கேன். இந்த வீட்லயோ, சொத்துலயோ எனக்கு ஒரு துரும்புகூட வேண்டாம். நீ மவராசியா இரு. நான் போறேன்.”
ராஜதுரை, மாடக்கண்ணுவையும், கலாவதியையும் அழுத்தமாகப் பார்த்துவிட்டு, அம்மாவிடம் கண்களால் விடைபெற்றபடி, தொலைதூரத்திற்குப் போகிறவன் போல், தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பிரிவு மனோபாவத்துடன் பார்த்தபடியே, வெளியே புறப்படப் போனான்.
தமிழரசி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கலாவதி' நாங்க போறோம்...நீ இருண்ணா’ என்று சொல்வதற்காக, அவன் கரத்தைப் பிடித்திழுப்பதற்காக, தன் கரத்தை நீட்டப் போனாள். 'பைத்தியாரத் தர்மர்' மாடக்கண்ணு, அவளை விநோதமாகப் பார்த்தபடி, அண்ணன் மகனை வழி மறிக்கப் போனார்.இதற்குள்----
பகவதியம்மாள் பாய்ந்து வந்தாள். ராஜதுரையின் இடுப்பைப் பிடித்து இழுத்தபடியே, பழைய காலத்து நாட்டுக் கட்டையான அவள், திமிறிய மகனை வலது கையால் அணை கொடுத்து, வராண்டா பக்கம் நிறுத்தி விட்டு, தனது தலையிலேயே இரண்டு தடவை அடித்துக் கொண்டாள். பிறகு, கலாவதியைப் பார்த்துத் தாவி, இரண்டடிக்கு முன்னால் நின்று கொண்டு, வார்த்தைகளைக் கொட்டினாள்.
“சண்டாளி... எத்தனை நாளு இந்தக் குடும்பத்தைக் கலைக்கணுமுன்னு நினைச்சியோ? நீ இப்போ நினைச்ச காரியம் முடிஞ்சுட்டுதுல்லா... இப்போ திருப்திதானடி ஒனக்கு...? இல்ல என் பிள்ளங்கள்ல யாராவது ஒண்ணு செத்தால்தான் திருப்தியா? வீட்ட ரெண்டாக்கப் பார்க்காதடி. அந்த அப்பாவிப் பொண்ணு பொன்மணி மனச மாத்துனது மாதிரி, நான் பெத்த பொண்ணோட மனசையும் மாத்திடாதடி. ஒனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு... ஒன் கொள்ளிக் கண்ணே வச்சு எங்கள எரிச்சுடாத டி ...”
கலாவதி, மோவாய்முனை நெஞ்சில் படும்படி, தலை குனிந்து நின்றாள். கண்களில் இருந்து நீர் சொட்டுச் சொட்டாகி மூக்கின் முனையில் திட்டுத் திட்டாகி, அவளை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. மாடக்கண்ணு ஒரு தடவை மகளைப் பார்த்துவிட்டு, பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். இன்னும் அவர்கள் அங்கே நகராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, பகவதியம்மாள் ஏதோ பேசப் போனாள். இதற்குள் ராஜதுரை நீ சும்மா இரும்மா’’ என்று சொல்லிவிட்டு, தங்கையிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புபவன் போல், வராண்டாவில் இருந்து, 'இறங்கிப்' பேசினான்."இன்னும் நீ பள்ளிக்கூடத்துலயும், காலேஜிலயும் சொல்லிக் கொடுத்ததுமாதிரியே... உலகம் இருக்குமுன்னு நினைக்கிறே. இவளப்பற்றி ஒனக்கு என்ன தெரியும்? இன்னைக்குக் காலேயிலே இன்னா...கல்லுளிமங்கியா நிக்காளே... இந்த மூதேவி... நம்ம வீட்ல வினைதீர்த்தான் பயலோட கிசுகிசுன்னு பேசிக்கிட்டு இருந்திருக்காள். நம்ம வீட்டுக்கு வெளியே ஜன்னலுக்குப் பின்னால, பொன்மணி நின்னாளாம். நம்ம அம்மாவைப் பார்த்ததும், பேச்சை டக்குன்னு நிறுத்திட்டாளாம். இவள் அண்ணன் ஒருநாளும் இல்லாத வழக்கமாய் எட்டுமுழ வேட்டி கட்டி, சிலாக் சட்டை போட்டு வந்திருக்கான். அப்பவே நம்ம அம்மாவுக்கு சந்தேகம் வந்திருக்கு.’’
கலாவதி தமிழரசியை மருவியபடியே பார்த்து, அவளிடம் மன்றாடப் போனபோது, பகவதியம்மாள் முந்திக் கொண்டாள்.
"ஒனக்கு என்னடி தெரியும்? பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவுமா? பொன்மணியையும், வினைதீர்த்தான் பயலையும் தனியா வீட்டுக்குள்ளே விட்டுட்டு, இந்த சண்டாளி எத்தனை நாள் வெளில காவலுக்கு இருந்திருக்காள்னு கேளு. ஒருநாளா... ரெண்டுநாளா... தினமும் அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்குள்ள கொஞ்சி குலாவுவாங்க. இவள் காவலுக்கு நிற்பாள். உண்டா இல்லியான்னு அவள் கிட்டேயே கேளு. இது தெரியாமல், நீ என்னடான்ன... கூடப் பிறந்த அண்ணன்கிட்டயே ஜென்ம எதிரிமாதிரி பேசுறே. ஏண்டி பேசாமல் நிக்கிறே...? அண்ணனுக்கு ஒரு அப்பாவிப் பொண்ணக் கூட்டிக் கொடுத்தது நிசமா இல்லியான்னு ஒரு வார்த்தை கேளுடி.”
தமிழரசி அதிர்ந்தாள். அன்று, சென்னையில் இருந்து வந்த நாளில், கிணற்றுப் பக்கம் போய்க் கொண்டிருந்த தன் பின்னல் வந்த இதோ இவளிடம் பொன்மணி வரலையா என்று கேட்டபோது, இவள் 'அவள் வர்ல' என்று சொல்லாமல், 'வரமாட்டாள்” என்று திட்டவட்டமாகச் சொன்னது, தமிழரசியின் நெஞ்சைத் தட்டியது. உடனே கலாவதியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, சந்தேகப் பார்வையை உணர்த்தியபோது--
தன்னைத்தானே உறிஞ்சிக் கொள்பவள்போல், கண்ணென்ற மலையில் இருந்து விழுந்த அருவியை, வாயென்ற குளத்திற்குள் விட்டு உதடுகளால் உறிஞ்சுபவளாய், குனிந்த தலை நிமிராமல் நெடிதாய் நின்ற கலாவதி எவரும் எதிர்பாராத வகையில்-அவளே எதிர் பாராத வகையில், தடாரென்று தரையில் குப்புற விழுந்து, தமிழரசியின் கால்களைப் பிடித்தபடியே, விம்மியழுது வெடித்தாள்.
"நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க தமிழு. சத்தியமாய் என்ன நம்புக்கா. காலையில எங்கண்ணன் விருந்துக்குப் போறது மாதிரி சட்டை போட்டிருந்தான். அதனால அவன்கிட்ட என்ன விஷயமுன்னுதான் கேட்டேன். அதுவும் இந்த வீட்ல வச்சுத்தான் கேட்டேன். ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பொன்மணி நின்னது சத்தியமாய் எனக்குத் தெரியாது. எங்கண்ணன் இன்னிக்கு வேற வழியில்லாம சினிமாவுக்குப் போறேன். அப்பாவை பத்திரமாய் பார்த்துக்கன்னு” சொன்னதை, லேசா எப்போவாவது குடிச்சுட்டு உளறுறது மாதிரி அப்பவும் உளறுருன்னு நெனச்சேன். உடனே 'என்னையும் சினிமா வுக்குக் கூட்டிட்டுப் போயே’ன்னு கேட்டேன். அப்போ பெரியம்மா வந்தாள். ‘என்னளா பொம்புள இப்படி அடக்கம் இல்லாமல் சினிமா கினிமான்னு பேசுறியேன்"னு திட்டுவாள்னு, சொன்ன சொல்ல பாதில விட்டேன். சத்தியமாய் நடந்தது இதுதான். அந்தப் பாழாப் போற பாவி, இப்படிப் பண்ணுவான்னு எனக்குத் தெரியாது, தெரியவே தெரியாது.”தமிழரசி, கலாவதியை தூக்கி நிறுத்தினாள். ஆனல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. கலாவதியிடம் பேசப் போனால், தனக்கும் அழுகை வந்து விடும் போலிருந்தது. ஆயிரம் நடந்ததோ, நடக்கலியோ ஒரு வயதுக்கு வந்த பெண், பழிதுடைக்க முடியாமல், கண்களைத் துடைக்கும்போது, மனிதாபிமானம் கலங்காமல் இருக்காது. தமிழரசி கலங்கினாள். உடனே பகவதியம்மாள் இடைச்செருகலானாள்:
‘"ந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளி, வென தீர்த்தானையும் பொன்மணியையும் உள்ள வச்சுட்டு, வெளில எத்தனையோ நாளு காவல் காத்திருக்காள். அதை ஏன் கேட்க மாட்டக்கே?’’
தமிழரசி, கலாவதி சார்பில், அன்னையிடம் கண்களால் மோதி, தன் சார்பில் குறுக்கு விசாரணை செய்தாள்.
“அப்படின்ன நீயே... அப்பவே அவங்களையும், இவளையும் கண்டிச்சிருக்கலாம். நீ ஏன் கண்டிக்கல? நீயும் வேடிக்கை பார்க்க நினைச்சியா?”
பகவதியம்மாளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாததால், ஏதாவது பேசண்டா...’ என்பது போல் மகனைப் பார்த்து விட்டு, அவனும் பேசாமல் இருந்ததால், தமிழரசியிடம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தாள். அதாவது முறைத்தாள்.
கலாவதி, மீண்டும் மன்றாடினாள். “சத்தியமாய் இவங்க ரெண்டுபேரோட இழவுச் சமாச்சாரம் எனக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் தெரியாது. பொன்மணி அண்ணன்கிட்ட வந்து, அவங்க வீட்டு விவகாரத்தை சளசளன்னு சொல்லிக்கிட்டு வருவாள். அவளோட அண்ணி- அதுதான் முத்துலிங்க மச்சானோட பெண்டாட்டி இவளை எப்படில்லாம் திட்டுறாள்னு சொல்லி, அவன்கிட்ட அழுவாள். அவனும் ஏதாவது ஆறுதல் சொல்லுவான். அடுத்த குடும்ப விவகாரம் நமக்கு எதுக்குன்னு, நான் வேற பக்கமாய் போயிடுவேன். அந்த நாசமாப் போறவன், இப்படி மோசம் பண்ணுவான்னு எனக்கு எள்ளளவும் தெரியாது. என்னை நம்பு தமிழரசி."
பகவதியம்மாள் மீண்டும் பாய்ந்தாள்:
“ஆமாடி...இந்த மேனாமினுக்கிய நம்புடி. பெத்த அம்மா பேச்சு ஒனக்குப் பெரிசா தெரியாது. இவளையே நம்பு. அடிப்பாவி. எத்தன நாளுடி. எங்க குடியைக் கெடுக்கக் காத்திருந்தே? சொந்த பெரியப்பா வீட்டையாவது கெடுக்காமல் இருப்போமுன்னு ஒனக்குத் தோணல பாரு. என் மகளை என்கிட்ட விட்டுடுடி. என் மவள என் கிட்ட இருந்து பிரிச்சிடாதடி. பாவி. கைகேயி... கூனி... குடி கெடுப்பாள்."
ராஜதுரை, கண்களைத் துடைத்த அம்மாவை அதட்டினான்.
"நீ ஏம்மா அழுவுற? இந்த வீட்ல யாராவது அழனு முன்னால், நான் தான் அழணும். 'இவன் ராஜதுரை, தாமோதரன் வீட்ல கால்வைக்கப் போறான். அதுக்குள்ள, அந்தக் குடும்பம் சந்திக்கு வந்துட்டுன்’னு ஊர்க்காரப் பயலுவடிக்கடையில பேச ஆரம்பிச்சுட்டாங்களாம். இன்னும் என்னென்ன பேசப் போறாங்களோ? ஒன் மகளுக்கே என்னோட மனசு படும்பாடு புரியல. ஊருக்கு எப்டிப் புரியும்...? கடைசில, கூட்டிக் கொடுத்தவள் பெரிசாப் போயிட்டாள். கூடப்பிறந்த அண்ணன் சிறிசாப் போயிட்டான்."
தமிழரசி, தழுதழுத்த குரலில், அழாக்குறையாகப் பேசிய அண்ணனைப் பார்த்தாள். கேவி நின்ற அம்மாவைப் பார்த்தாள். அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவளையறியாமலே கலாவதிமேல் லேசாக எரிச்சல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில், கலாவதியும் போட்டி போட்டு அழுதபடியே “நான் சொல்றது. அத்தனயும் சத்தியம். என்னை யாரு நம்புனாலும் நம்பாட்டாலும் பரவாயில்ல தமிழு. ‘நீ சொல்றத நம்புறேன்’னு ஒரு வார்த்தை சொல்லுக்கா... ஒரே ஒரு வார்த்தை’ என்று கேட்டாள். இதை பலவந்தமாகக் கருதிய தமிழரசியும், எரிச்சலோடு பதிலளித்தாள்.
‘நான் இந்த ஊர்ல குடியிருக்கல. என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம். நான் யாரையும் நம்பத் தயாராய் இல்ல. நீ கூடத்தான் அன்றைக்கு 'பொன்மணி வரமாட்டாள்னு’ என்கிட்டயே ஒரு மாதிரி சொன்னே...”
கலாவதி, தமிழரசியை நிமிர்ந்து நோக்கினாள், எதிர் பாராத அதிர்ச்சி. தனக்கு எதிராகத் தானே பேசுவது போன்ற பிரமிப்பு. எதை ஆதாரமாக நினைத்தாளோ, அதுவே அவளைத் தள்ளப்போவதைக் கண்ட தவிப்பு. எந்த முகத்திற்காக, பழிசொன்ன முகங்கள் லேசாக சுழிக்கும் படிகூட பேசாமல் நின்றாளோ, அந்த முகமே மாறுபட்ட முகமாய் மாறியதைக் கண்ட இயலாமை. என்றாலும், அதிர்ச்சி, த வி ப் பு, தாட்சண்யம் தேவையில்லாத நிர்மலம், இயலாமை ஆகிய அனைத்தும் அவளை, அவளே இனங்கண்டறிய முடியாத ஒரு கூட்டுப் பொருளாக்கியது. தலையை கம்பீரமாக உயர வைத்தது. உடம்பை உறுதிப் படுத்தியது. தந்தையின் கைகளை இழுத்துக்கொண்டு, அவளை அந்த வீட்டில் இருந்து போக வைத்தது.
தந்தையை பலவந்தமாக இழுத்தபடி, கம்பீரமாக நடந்துபோன கலாவதி, தமிழரசி கண்படும் முனையில் சிறிது நின்றாள். அவளை நிமிர்ந்து நோக்கினள். தமிழரசியோ, அவற்றைப் பார்க்க முடியாமலோ அல்லது விரும்பாமலோ வேறுபக்கம் திரும்பிய போது, கலாவதியின் பேச்சு. அவள் காதில் ஒலித்தது."இனம், இனத்தோடு; வெள்ளாடு தன்னோடு’ என்கிற பழமொழி சரியாப் போச்சுக்கா. ஒரே ஒரு வரம் மட்டும் ஒன்கிட்டே கேட்கேன். அதுவும் இஷ்டமிருந்தால் கொடு. அந்த நொறுங்குவான் - என் அண்ணன் என்கிறவன் செய்திருக்கிற காரியத்துக்கு, அவனை மாறுகை மாறுகாலு வெட்டலாம். ஆனாலும் இந்தப் பாழும் மனசு கேட்க மாட்டக்குது. முத்துலிங்கம் மச்சான் அவனை கையோட பிடிச்சுவாரதுக்கு கத்தி அரிவாளோட ஆட்களை அனுப்பி இருக்காராம். மனசு கேட்க மாட்டக்கு. ஒன்னல முடியு முன்னால் அவனைக் காப்பாற்று. அப்படியே முடியாட்டாலும், அவனை எங்க கண்ணுமுன்னால கொல்லாமல்... வேற எங்கேயாவது கொல்லச் சொல்லு. இந்த ஊர்ல அவன் அடிபட்டுச் சாகுறதைப் பார்த்துட்டு எங்களால இருக்க முடியாது. உ.ம். எட்டி நடயுமிய்யா... நம்ம வீட்டுக்குப் போவோம்..."
தமிழரசி திரும்பிப் பாராமலே நின்றாள். கலாவதி போவதைப் பார்க்கத் தைரியமோ அல்லது பேசியதை நினைத்துப் பார்க்க உறுதியோ அற்றவளாய் நின்று கொண்டிருந்தாள். எப்படியோ, அவள் திரும்பிப் பார்த்தபோது, கலாவதியும், அவள் தந்தையும் இல்லை. அம்மா, மீண்டும் எதுவும் நடக்காதது போல் வீட்டுவேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அண்ணன்காரன், சக மாட்டுடன் சண்டை போட்ட ஒரு காளை மாட்டை, சாட்டைக் கம்பால் விளாசிக் கொண்டிருந்தான்.
இரவில் தமிழரசி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். பகவதி அம்மாள் மகளின் மன வோட்டத்தை அறிந்தவள்போல், அவளைச் சாப்பிடக் கூப்பிடாமல், தானே சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு போனாள். அவள் எவ்வளவு சொல்லியும், இவள் சாப்பிடவில்லை. வாயில் ஊட்ட வந்த அம்மாவை, வலுக்கட்டாய மாக வெளியேற வைத்தாள். கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள். வெளியே சத்தம் கேட்டது. அப்பா அ ப் போ து தா ன் வந்திருக்க வேண்டும். தாமோதரன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக, போலீஸ் நிலையம் போய்விட்டுவந்த கதையை, மகனிடம் சொல்லிக், கொண்டிருந்தார்.
"எங்க பொறுப்புல ஒப்படைச்சிடுங்க, பெண்ணை ஓங்க கிட்ட ஒப்படைக்கதும், அந்தப் பயலை கைய காலேக் கட்டி ஓங்ககிட்ட ஒப்படைக்கிறதும் எங்க பொறுப்புன்னு. போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டாங்க. தாமோதரன் மாப்பிள்ளைக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? இவரும், சப்-இன்ஸ்பெக்டரும் இங்லீஸ்ல பேசிக்கிட்டாங்க... என்னென்னு புரியல... அவங்க பேசுனதைப் பார்த்தால் ஏதாவது நடக்கும் ’’
“ஒம்ம தம்பி, மகளோட இங்க வந்திருந்தாரு.”
“அந்தப் பாவிப் பயல என் தம்பின்னு சொல்லாதடா. அவன் உடன் பிறந்தே கொல்லும் நோய். சொந்த அண்ணன்கிட்ட நிலத்தை விற்காமல், தெக்குத் தெருக்காரன் கிட்ட நிலத்த வித்துட்டு, அவனை நமக்கு நிரந்தர பகையாளியாய் ஆக்குன பயல், அவன் எனக்கு தம்பியில்ல. அதுவும் அவன் மகன். இப்படிப்பட்ட ஒரு. காரியத்த செய்த பிறவு, இவன் எனக்கு கெளரவங்க மாதிரி...”
தமிழரசி உற்றுக் கேட்டாள். லேசாக வந்த தூக்கம் கூட தானகப் போய்விட்டது. போலீஸ் நிலையத்திற்குப் போன தாமோதரன் மேல் சாடுவதா, அல்லது அவன் நிலையில் யார் இருந்தாலும் இப்படித்தான் என்று ஆற்றுப் படுத்துவதா? அடுத்துக்கெடுத்தான் என்று வினைதீர்த்தானை வெறுப்பதா, அல்லது நான்கு நாட்களுக்குள்ளேயே தானே தாமோதரமயமாகும் போது, வினைதீர்த்தானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நியாயம் கொள்வதா? எத்தனை வருஷங்கள் பழகினர்களோ, எப்படிப் பழகினர்களோ?
தூங்காமலே தமிழரசி துவண்டபோது, சேவல் கூவியது, காகங்கள் கத்தின. மைனாக்கள் நச்சரித்தன. அணில்கள் விசிலடித்தன. இவற்றினூடே, சித்தப்பா வீட்டில் ஒலச்சத்தம் கேட்டது. கலாவதி ‘அடிக் காதிங்கய்யா... என்ன வேணும்னாலும் அடிங்க... எங்க அப்பாவை விட்டுடுங்கய்யா... அய்யோ... அம்மா’’ என்று புலம்பும் சத்தம் கேட்டது.
தமிழரசி வெளியே ஓடிவந்தாள். வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை ஒரு தினப் பத்திரிகைக்குள், தன்னை மறைத்துக் கொண்டார். அம்மா, முகத்தை ரசனையோடு திருப்பிக் கொண்டாள். ராஜதுரை சம்பந்தம் இல்லாத ஏதோ ஒன்று நடப்பது போல், பல் தேய்த்துக் கொண்டிருந்தான். சித்தப்பா வீட்டிலோ, ஒலச் சத்தம், அவலச் சத்தமாகியது. திடீரென்று முத்துமாரிப் பாட்டியின் சத்தம் ஓங்கி ஒலித்தது. -
"போலீஸ் எசமான் மாரே... ஒரு பொம்புளய இப்டிய்யா அடிக்கது? அதுவும் ஜாக்கெட்ட பிடிச்சு இழுத்து...”