பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨-௧௩.கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்சம் = அணிகலன்களை ஈட்டி வரும் எண்ணத்தாலே கடந்து செல்வதாகக் காட்டி எம்மைப் பின்னின்று தூண்டும் நெஞ்சமே!

௧௫-௧௭.கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய் = முருக்கம் பூவினையொத்த காண்டற்கு இனிய சிவந்த வாயினையும், அம் தீம் கிளவி = அழகிய இனிய மொழிகளையும், ஆய் இழை = ஆய்ந்த அணியினையுமுடைய, மடந்தை = நம் தலைவியது, கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் = வளைந்த குழையோடு மாறுபட்ட நோக்கமானது, நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று = மிக நீண்ட அரிய சுரத்திடத்தே தோன்றித் தடுக்கும் அன்று,

௧௩-௧௪.நின் வாய்போற் பொய்ம்மொழி எம் எவ்வம் என் களைமா = நின் வாயினது மெய்போலும் பொய்ம்மொழி எமது துன்பத்தை எங்ஙனம் போக்குவதாகும்?

(முடிபு)அகன் சேண் அத்தம் கலம் தரல் உள்ளமொடு பின்னின்று துரக்கும் நெஞ்சமே! ஆயிழை மடந்தை நோக்கம் ஆரிடை விலங்கும் ஞான்று நின் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா?

புலி கவான் மரையா தொலைச்சி உண்டு துறந்த கடுமுடை எனவும், பேடைக்கு இரை தரீஇய எழுந்த எருவை கடுமுடை கவரும் அத்தம் எனவும் இயையும்.

(வி - ரை.)மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது. உயரத்தால் ஏறவொண்ணாமை பற்றிக் கடியுடை நனந்தலை யென்றார். ஈன்ற பேடை பிறிதிடத்திற் செல்லலாகாமையின் 'இளைப்பட்ட' என்று கூறப்பட்டது. பின்னரும் 1'பருந்திளைப் படூஉம்' என இங்ஙனம் வருதல் காண்க. இளைப்பட்ட - வலைப்பட்ட என்பாருமுளர். அல்கு இரை எனற்கு வைத்திருந்து உண்ணும் இரை என்றும், இராப்பொழுது உண்ணும் இரை யென்றும் கூறுதலும் பொருந்தும். எருவை - பருந்தின் ஒருவகை. விறல் வரை - தன் பெருமையால் பிற மலையை வென்ற வெற்றியை யுடைய மலை எனலுமாம். கவான் - பக்க மலை. மரை ஆ - ஒருவகை மான். புலி பிற விலங்கினை வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணும் இயல்பின தென்பது சான்றோர் செய்யுட்கள் பலவற்றான் அறியப்படுவது. உவறி= இ்து ஊற்றி என மருவி வழங்குகின்றது. நிறைந்து எனப் பொருள்படும் ஆர்ந்து என்பது அருந்துபு என்றாயிற்று. கலவு - மூட்டுவாய். முடை ஆகுபெயர். மராஅ - ஆச்சாமரம்: மராஅம் எனப் பிரித்து வெண்கடம்பு எனலுமாம். நெஞ்சம்: அண்மைவிளி. 'நின்வாய்' என்றது நெஞ்சினை உறுப்புடையது போலவும், வாய்போற் பொய்ம்மொழி என்றதனால் முன்மறுத்தமை கூறுதலின், மறுத்துரைப்பது போலவும் கூறினார்; இது 2'நோயு மின்பமும்' என்னுஞ் சூத்திரத்து 'உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல் - மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு


1. அகம். ௨௧. 2. தொல். பொருளியல். ௨.