பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

அகநானூறு - களிற்றியானை நிரை


நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆகியோராவார். தொல்காப்பியத்துக்கு இவரோர் உரை செய்தனர் என்பர். பன்னிரு பாட்டியலுள் இவர் செய்தனவாகச் சில சூத்திரங்கள் உள்ளன. கல்லாடம் என்ற நூலைச் செய்தவர் பிற்பட்ட ஒரு கல்லாடர்.இவர் மாமூலனாருடன் நட்புக் கொண்டு, கபிலபரணர் என்றார்போலக் கல்லாட மாமூலனார்’ என்றும் சான்றோரால் அழைக்கப்பெற்றனர்.இந்நூலுள் வரும் இம்மூன்று பாடல்களும் பாலைத்திணைப் பாடல்களாகும். பதினோராம் திருமுறையுள் வரும் பாடல்களைச் செய்தவர் வேறு ஒரு கல்லாடர் ஆகலாம்.

காட்டுர்க்கிழார் மகனார் கண்ணனார் (85)

கண்ணனார் என்ற பெயருடன் விளங்கியவர் பலராதலால், இவர் தந்தையாரான காட்டுர்க்கிழாரின் பெயரடையிட்டு வழங்கப் பெற்றனர். இவர் வேளாளர். ‘வென் வேற்றிரையனின் வேங்கட நெடுவரை இவரால் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தத் திரையன் தொண்டைமான் இளந்திரையன் ஆவன். காட்டுர்’ என்ற பெயருடன் தமிழகத்திற் பல ஊர்கள் வழங்குவனவாம். அவற்றுள் யாதாயினும் ஒன்றினைச் சேர்ந்தவர் இவர் என்க.

காவல்முல்லைப் பூதனார் (21)

அகத்துள் 5, குறுந்தொகையுள் 2, நற்றிணையுள் 1, ஆக 8 பாடல்கள் இவர் பாடியவை. இவருடைய இயற்பெயர் பூதனார். 'காவன் முல்லை’ புறத்திணைத் துறைகளுள் ஒன்று. அதனைப் பாடுவதில் வல்லவராதல் பற்றி இவ் வடைமொழி பெற்றனர். ஆனால், இவர் பாடிய புறப்பாட்டுக்கள் எவையுமே நமக்குக் கிடைத்தில. காவல் குறிச்சி, காவல்பட்டி, காவல்காடு என்பனபோலக், காவல் முல்லையும் ஒர் ஊராயிருத்தல் பொருந்தும். நற்றிணை 29ஆவது பாடலைப் பாடிய பூதனார் என்பவரும் இவரே என்பர் சிலர். இப்பாடலுள் (அக21) இவர் கோவலர் முல்லை நிலங்களிலே கிணறு தோண்டுவதையும், அவர்கள் கூழுணவு உண்பதையும் குறிப்பிடுகிறார். யானைக்குக் குழியிட்டுப் பிடிக்கும் வழக்கமும் உணர்த்தப் பெறுகின்றது.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (107)

இவர் வாணிக மரபினராவர். இவர் திருமால் அடியவர் எனவும் சிலர் கூறுவர். இவராற் பாடப்பட்டோர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்றன் ஆகியோர். இவரியற்றிய பாடல்கள் 8. (அக 2, புறம். 5. குறு. 1)