பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அகநானூறு -களிற்றியானை நிரை



          பெருநீர் அழுவத்து எந்தை தந்த
          கொழுமீன் உணங்கற் படுபுள் ஒப்பி,
          எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ
          செக்கர் ஞெண்டின் குண்டுஅளை கெண்டி,
          ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் 5

          தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக்,
          கொண்டல் இடுமணல் குரவை முனையின்
          வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
          மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
          பல்பூங் கானல் அல்கினம் வருதல் 10

          கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்,
          கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
          கடிகொண் டனளே-தோழி; பெருந்துறை,
          எல்லையும் இரவும் என்னாது கல்லென
          வலவன் ஆய்ந்த வண்பரி,
          நிலவுமணல் கொட்கும்ஒர் தேர் உண்டு எனவே! 15

தோழி! கட்ற்கரை மணல்மேட்டிலேயுள்ள புன்னை மரத்தின் இனிமையான நிழலிலே தங்கியிருப்போம். கடற் பரப்பினின்றும் நம் தந்தை கொணர்ந்து தந்த, கொழுமையான மீனின் வற்றலைக் கவரவரும் பறவைகளை ஒட்டியிருப்போம். சிவந்த நண்டின் ஆழமான வளைகளைத் தோண்டுவோம். புலி நகக் கொன்றையின் உயர்ந்த கிளையிலே, கயிற்றிலே கட்டித் தொங்கவிடப்பெற்ற ஊசலில் அமர்ந்து ஆடுவோம். கீழ்காற்றுக் கொணர்ந்து குவித்த மணலிலே, ஆயத்தாருடன் கூடிக் குரவையாடுவோம். இவையும் வெறுத்தால், வெண்மையான மேற்பரப்பினையுடைய கடல் நீரிலே நம் தோழியருடன் கூடிக் கடல்நீராடுவோம். அழகிய பூக்களுடன் மேவிய, பசுமையான தழை உடையினை அழகு பொருந்த உடுத்துக் கொள்வோம். பலகானற் பூக்களையும் உடைய கடற்கரைச்சோலைக்கு இப்படி நாம் அடிக்கடி விளையாட வருதலைப்பற்றி, இவ்வூரிலே அலர் கூறுதல் ஒன்றினையே அறிந்தவரான பெண்டிர்களுள் சிலர் கூறும் சொற்களை, நம் அன்னையும் கேட்டனளே!

கேட்டுப் பகலும் இரவும் என்றில்லாது, பாகன் ஆராய்ந்து கொண்ட அழகிய குதிரைகள் பூட்டப்பெற்று, நிலவொளி போன்ற வெண்மணலில் 'கல்' என்னும் ஒலியுடனே சுழன்று வரும் தேர் ஒன்றும் உண்டு எனவும் எண்ணினளே! நம் வீட்டினிடத்தே காவலையும் மிகுதிப் படுத்தினளே! இனி, என் செய்வோம்? எப்படி வந்து நம் காதலனைச் சந்திப்போம்?