பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 91


உடையதாயிருக்கின்ற, இளைய முலைகள் நனையுமாறு, பல இதழ்களையுடைய குவளைப் பூப்போன்று மையுண்ட அவள் கண்கள், நீர் பரந்து ஒழுகிக் கொண்டிந்தனவே!

அதனால், நீர், வினையின் பொருட்டாக அவளைப் பிரிந்து செல்லுதல் எங்ஙனம் இயலும்? என்று, பிரிவுணர்த்திய தோழி தலைமகளது வேறுபாடு, கண்டு, முன்னமே உணர்ந்தாள் நம் பெருமாட்டியென்று தலைமகனைச் செலவு விலக்கினாள் என்க.

சொற்பொருள்: 1. வணர் சுரி - வளைந்து சுருண்ட 2 வடியா - ஒப்பனை செய்யாத 3 அடியமை பகழி - குதையமைந்த அம்பு. ஆர முழுவதும்.6.ஈண்டு கிளை - நெருங்கிய சுற்றம்.10.இரும்பல் - கரிய பலவான, 12. அணங்கென - மார்பகத்து முலைகளிலே அணங்கு குடிகொண்டிருக்கும் என்பதனாற் கூறினர்; அல்லது தன் தோற்றத்தாலே ஆடவரை வருத்துதலால் அணங்கென்றார் எனினும் ஆம்

உள்ளுறை: வன்கண் ஆடவர் வம்பலர்ச் செகுத்த படு முடை நசைஇன் எருவைச்சேவல் ஈண்டுகிளை பயிரும் வெரு வரும் கானத்தைப்போல, நும் பிரிவால் வாடி நலிந்திருக்கும் தலைவியையும், அலருரைக்கும் பெண்டிர்கள், அவள் அழியும்ாறு பழிச்சொல்லாற் பெரிதும் வருத்துவர் என்க.

பாடபேதங்கள்: 5. நசைஇய வாழ்கட் 8. எண்ணினர் - 14 பல்லிதழ் மழைக்கண்.

162. பெறுதற்கு அரியவள்!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிக்கண் தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: அதிகனின் நாட்டு வளம்; பசும்பூண் பாண்டியனின் சிறப்பான தன்மை.

(இரவுக் குறியிடத்தே வந்ததன் காதலியைக் கூடிப் பிரிந்து செல்லுகின்ற தலைமகனின் நெஞ்சம், அவளுடைய பேரழகின் பெருக்கிலேயே நிலைபெற்று நிற்கிறது. அவளையே நினைந்து நினைந்து அவன் இப்படித் தன் நெஞ்சிற்குச் சொல்லுகிறான்)

        கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
        அளப்பு அரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
        கடல்கண் டன்ன மாக விளம்பின்
        அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்கக்
        கடிதுஇடி உருமொடு கதழுறை சிதறி, 5