பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அகநானூறு - மணிமிடை பவளம்


விரைவிலே மணந்து கொள்ளாது, அவன் அதன்பாலே மனஞ்செலுத்தி வருதலைக் கண்ட தோழி, இரவின்கண் கானத்தைக் கடந்துவருகின்ற ஏதத்திற்கு அஞ்சித் தலைவி நடுங்குகின்றான் என்று சொல்வதன் மூலம், தலைவனின் மனத்திலே வரைந்து வருதல் வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்ப முயல்கிறாள்.)

        யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,
        பணிவார் கண்ணேம் வைகுதும், இனியே;
        ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப
        பல்ஆன் குன்றில் படுநிழல் சேர்ந்த
        நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்- 5

        கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
        உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து,
        அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
        ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறு தன்
        தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப, 10

        ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண்
        வாள்வரி வயப்புலி நன்முழை உரற,
        கானவர் மடிந்த கங்குல்,
        மான் அதர்ச் சிறுநெறி வருதல், நீயே?

வானத்தைச் சென்று தடவிக்கொண்டிருப்பது போல உயர்ந்து விளங்கும் மலையுச்சிகளையுடைய வெற்பனே!

இரவு வேளையிலே, யாமப்பொழுதெல்லாம் நூம்மோடு கூடி இன்பமுடன் கழிக்கின்றோம். நீர் சென்ற பின்னர், நோய் மிகுதியாகின்றது. நீர் ஒழுகும் கண்களை உடையேமாய் வருந்தி வாடியபடியே இருக்கின்றோம்.

‘பல்லான் குன்றம்’ என்னும் மலையின் சாரலிடத்து, மிகுதியான நிழலினையுடைய இடங்களிலே சேர்ந்திருக்கும், நல்ல பசுமந்தைகளின் பரப்பினையுடையதாக விளங்குவது குழுமூர். அவ்வூரினிடத்தே, பெருஞ்சோற்றுக் கொடையாகிய கடமையை மேற்கொண்டான், ஈகையினின்றும் கோணுதல் இல்லாத உள்ளத்தினனாகிய சேரமான் உதியன் சேரலாதன். அது காலையிலே, அவனுடைய சமையல் செய்யும் இடத்திலே எழுகின்ற ஆரவாரத்தைப் போல, பெருவரையின் பக்கமலைகளில் எல்லாம் எழுகின்ற பேரொலியுடனே அருவிகள் வீழ்ந்து கொண்டிருக்கும்.