பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அகநானூறு - மணிமிடை பவளம்



(தலைமகன், தான் தலைவியைப் பிரிந்துசெல்ல நினைத்திருப்பது பற்றிய செய்தியைத் தோழி மூலமாகத் தலைவிக்குத் தெரிவிக்க, அவள் தலைமகளின் மனநிலையினை அறிந்துவந்து அவனிடம் கூறி அவனைப் போகாதிருக்கச் செய்கிறாள்.)

        ‘விலங்கிருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
        வேறுபன் மொழிய தேஎம் முன்னி,
        வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
        புனைமாண் எஃகம் வல்வயின், ஏந்தி,
        செலல்மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5

        வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல
        கடுத்தது பிழைக்குவது ஆயின், தொடுத்த
        கைவிரல் கவ்வும் கல்லாக் காட்சிக்,
        கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
        வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர், 1O

        ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்,
        கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
        படுபிணப் பைந்தலை தொடுவன இழிஇ,
        மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணிகொண்டு,
        வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15

        கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
        ஒழிந்திவண் உறைதல் ஆற்று வோர்க்கே.

தாம் குறித்த இலக்குத் தவறிவிட்டதனால், அம்பினைத் தொடுத்த தம்முடைய கைவிரலினையே வாயாற் கெளவிக் கொண்டு வருந்துபவர். வில்லின் தொழிலை முறையே கல்லாத அறிவினையும், வில்லைக் கையிலே பிடித்திருக்கும் மாறாத் கொடுமையினையும் உடைய, வடித்தல் செய்த அம்பினைச் செலுத்துவோராகிய, மறவர்கள்.

வழியே போகும் ஆட்களை அழித்து, அவர்கள் உயர்த்துள்ள அச்சம் வரும் கற்குவியல்களிலே, கூர்மையான அலகினைக் கொண்ட சிவந்த வாயினவான எருவைச்சேவல்கள், இறந்துபட்ட பிணங்களின் பசிய தலையினைத் தோண்டி உண்பதற்காக வந்துகூடித், தம்முடைய வலிமையான நெருங்கிய விரல்களால் தோண்டி, அத்தலைகளின் கண்மணிகளைப் பெயர்த்துக்கொண்டு போய், வலிய வாயினையுடைய தம் பேடைகட்குச் சொரிந்து கொண்டிருக்கும்.