பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அகநானூறு - மணிமிடை பவளம்


கூடியதனால் எல்லாத் தோஷமும் நீங்கிய சுபநாட் சேர்க்கையிலே, திருமண வீட்டை அலங்கரித்துக், கடவுளைப் பேணி, மணத்தைத் தோற்றுவிக்கும் மணமுழவோடு பெரிய முரசமும் ஒலிக்கத், தலைவியை மங்கல நீராட்டிய மகளிர், தங்கள் கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கிவிட்டு விரைந்து மறைய;

மெல்லிய பூவையும் புல்லிய புறத்தையுமுடைய வாகையின் கவடுபொருந்திய இலையை, பழங்கன்று கடித்த குழியிலே நெருங்கி வளர்ந்த, ஒலிக்கின்ற குரலையுடைய மழையின் முதற்பெயலால் அறுகுஈன்றதும், கழுவிய நீலமணி போலும் கரிய இதழையுடையதும், பாவைபோலும் கிழங்கினிடத் துள்ளதுமான குளிர்ந்த நறிய மொட்டுடன், சேரக்கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூய ஆடையாற் பொலியச் செய்து, விருப்பம்வர ஒன்றுகூடி, மழையொலி உண்டானாற் போல மணவொலி மிக்க பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினொடு எழுந்த வியர்வையை ஆற்றித், தமர்கள் நமக்கு இற்கிழத்தியாகத் தந்த, தலைநாள் இரவின்கண்;

“புதுத்தன்மை கெடாத புடவையால் உடம்பு முழுவதும் போர்த்தலினால், மிகப் புழுக்கத்தையடைந்த, நின்பிறை போன்ற நுதலிடத்துத் தெளிர்த்த வியர்வையை, மிக்க காற்று வீசி ஆற்றும் வண்ணம் சிறிதுபோது திற” வென்று சொல்லி யாம் அன்புடைய நெஞ்சமொடு அப்போர்வையை வவ்வினதனாலே, வடிவமானது உறையினின்றும் கழித்த வாள்போல வெளிப் பட்டு விளங்க, அவ்வடிவத்தை மறைக்கும் வகையை அறியாளாகிச் சடக்கென்று நாணினளாய்;

இதழ் பகுத்த பெரிய ஆம்பல் மலரின் நிறமழகிய மாலையை அணிந்து, வண்டுகள் ஒலிக்கும் ஆய்ந்தெடுத்த மலர் சூடிய பெரிய பலவாகிய கூந்தலின் இருளிடத்தே, மறைத்தற்குரிய உறுப்பினை மறைத்து, வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய, எம் உயிருக்கு உடம்பாக அடுப்பவள், யாம் செய்த இக்குறும்பினை விரும்பிக் கைதொழுது வணங்கினளாயிருந்தாள்.

அத் தகையாள், இன்று யான் பலபல சொல்லி உணர்த்தவும், உணராளாய் ஊடுகின்றனளே! இவள்யாரோ நமக்கு? என்று, தலைமகன் தன் நெஞ்சினுக்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. மைப்பு - குற்றம். புழுக்கு - குறைச்சி. 2. புரையோர் - உயர்ந்தோர். 3. புள்’ என்றது புள் நிமித்தத்தை,