பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 237


ஒக்கூர் மாசாத்தியார் (324, 384)

ஒக்கூர், பாண்டி நாட்டுத் திருக்கோட்டியூருக்கு அருகாமையில் இன்றும் விளங்கும் ஊராதலைக் காணலாம். இதன் கண் பிறந்து தமிழ்ப் புலமையாளராகத் திகழ்ந்த பெண்பாலர் இவர் ஆவார். இவ்வூரினரான மற்றொருவர், ஒக்கூர் மாசாத்தனார் ஆவர். அவர் பெயரை இவர் பெயருடன் ஒப்பிட்டுக் கருதுமிடத்து இவருவரும் உடன் பிறந்தவராதலும் புத்த நெறியினராதலும் புலப்படக் காணலாம். இந்நூலுள் விளங்கும் செய்யுட்கள் இரண்டும் முல்லைத் திணையைச் சார்ந்தவை. 'தளிரியற் கிள்ளை இனிதின் எடுத்த வளராப் பிள்ளைத் துரவியன்ன, வார் பெயல் வளர்த்த பைம்பயிர்; நேமிதண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள், நிரைசெல் பாம்பின் விரைவு நீர் முடுக' என வரும் சிறந்த உவமைகளும், தலைவன் பாகனைப் பாராட்டும் பாங்கும், இவற்றுள் சுவையுறக் கூறப்பெற்றிருத்தலைக் காணலாம். 384 ஆவது பாடலைக் குடவாயிற் கீரத்தனார் பாடியதாகவும் கூறுவர். அவரைப் பற்றிய குறிப்பினைப் பிறிதோரிடத்துக் காண்க.

{{larger|ஓரம்போகியார் (316)

ஐங்குறு நூற்றின் மருதத்தைப்பற்றிய நூறு செய்யுட்களைச் செய்தவர் இவர். பிற சங்கத் தொகை நூற்களுள் இவர் பாடியவாகக் காணப்படுவன எட்டுச் செய்யுட்கள் ஆகும். ஆதன் அவினி, இருப்பையூர் விராஅன், பாண்டியன் சோழன், மத்தி முதலானோரைப் பாடியவர். இந்நூலில் வரும் செய்யுளும் மருதத்திணைச் செய்யுளே யாகும். இச்செய்யுளுள், தலைமகன் பரத்தைமை கண்டு ஊடியிருக்கும் தலைவிக்கு, அவனுக்கு இசைய வேண்டிய கடமையை நயமாகத் தோழி எடுத்துக் கூறுவதனைக் காணலாம். தலைவனோடு நெடுக ஊடினவர், 'செய்யோள் நீங்கச் சில்பதங்கொழித்துத், தாமட்டுண்டு தமியராகித், தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப, வைகுநர் ஆவர்' எனக்கூறும் துயர நிலையினை அறிதல் வேண்டும்.


{{larger|ஒளவையார் (303)

பாணர் மரபினரான இவர், அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நெருங்கிய அன்புடைய தமிழ்ச் சான்றோராகத் திகழ்ந்தவர். அஞ்சாமையும் அறிவுத்திறனும் கொண்ட தமிழ்ச் செவ்வியராகி, அந்நாளிற் புலவரும் புரவலரும் போற்றிப் பாராட்டப் புகழுடன் விளங்கியவர். நாஞ்சில் வள்ளுவன், தொண்டைமான், சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய பலரையும்