பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



260

அகநானூறு - நித்திலக் கோவை


உண்மை நிலையை அறிந்ததும் செங்கோல் அம்பினராகக் கைநொடித்துப் பெயரும் கடுங்கண்மை உடையவர் இவர் என்ற செய்தியும் (337) இச்செய்யுட்களால் அறியப் பெறுகின்றோம்.

மிஞிலி (396)

இவன், பாழியிடத்தே ஆய் எயினனை வெற்றிகொண்ட சிறப்பினன். நன்னனுக்கு நண்பன் எனச் சிலரும், பகைவன் எனச் சிலரும் கருதுவர். கோசர் குலத்தவன் எனவும் உரைப்பர். இச்செய்யுள் இவனுடைய இந்தப் பாழிப் பறந்தலைப் போரையே குறிக்கின்றது.

வடுகர் (375)

தமிழகத்துக்கு வடபகுதியில் வடுகு பேசுவோராக வாழ்ந்தவர் இவராவர். மோரியர்க்கும் ஆரியர்க்கும் துணையாகத் தமிழரை அழிக்கக் கருதிப் பன்முறை வந்தவர்கள். இச்செய்யுள் இளம் பெருஞ்சென்னி வடுகரை அழித்து வெற்றி கொண்டதனைக் குறிப்பிடுகின்றது.

வானவரம்பன் (309, 359, 389)

இவள் சேரமன்னன் ஆவான். இவனுக்குரியது வெளியம் என்கிறது 359 ஆவது செய்யுள். வெளியன் வேண்மான் ஆய் எயினனாதல் பிற செய்யுட்களாற் புலனாகும். இதனால், வெளியம் சேரரது மேலாட்சிக்கு உட்பட்டது என்று கருதலாம். ‘வானவரம்பனின் நல்ல நாட்டிற்கு அப்பாலுள்ள காடு’ என நக்கீரனார். 389 ஆவது செய்யுளில் குறிப்பிடுகின்றனர். 309 ஆவது செய்யுள் இவனை வானவன் எனக் குறிப்பிடும்.

வேளிர் (331)

வேளிர்கள் தமிழகத்துப் புகழ்மிகு குடியினருள் ஒருவர். பதிணென்குடி வேளிர்களும் அகத்தியனாருடன் தென்னாட்டிற்குத் துவாரகையினின்று வந்தனரென ஒரு செய்தி கூறப் பெறும். இச்செய்யுளுள் வேளிர் குலத்தவரோடு திதியன் போருக்கு எழுந்த செய்தியை மாமூலனார் குறிப்பிடுகின்றனர். அந்நாளைய தமிழகத்தின்கண் மூவேந்தர்களுக்குப் பெண் கொடுக்கும் சிறப்புடன் திகழ்ந்த தொல்குடியினர் இவர்கள் ஆவர்.

****