பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 19


சொற்பொருள் : 1. சிறுத்த நுதலும் பெருத்த தோள்களும் பெண்மைக்குப் பொலிவு தருவன; அவை பசந்தும் சாஅயும் பொலிவிழக்கும் என்றனள். 3. கங்குல்தான் மயங்குவள் - பகலெனில் பலரோடும் கலந்து உரையாடலால் மறந்திருப்பவள் எனலாமோ எனில், அதுவும் இல்லை; அவள் இரவைப்போன்று பகலிலும் மயங்கியே இருப்பள் என்பார் 'பகலும் கங்குலும் மயங்கி என்றனர்.4 பெயலுறு மலர் - பெயலைப் பெற்ற குவளை மலரும் ஆம். கண் பனி வார - கண் துளிகளைச் சொரிய. 7. தொலைத்த - போக்கி வென்ற, 9. எய் - முள்ளம் பன்றி. 10. எண்கு கரடி குரும்பி - புற்றாஞ் சோறு. 13. கந்தம் - தெய்வ வழிபாட்டிடம் 15. மலைமுதல் ஆறு - மலையடிவாரத்தேயாகச் செல்லும் வழி.

விளக்கம் : 'ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து நீங்குதல் ஒல்லுமோ? என்ற கேள்வியினை நன்கு கவனிக்க, 'இவள் வாடி அழிவதனைக் கருதாயாய்ப், பொருட்குப் பிரிவதனை நினைக்கின்றனையே?' இவள் நலத்தினும் மேலானதாக விளங்குவதோ அப்பொருள்?’ என்று, பொருளார்வத்தினும் உடனுறை வாழ்வினையே மேற்கொள்ளத் தூண்டும் சொல்லாற்றலை நினைந்து இன்புறுக. இவள்தான் அழிந்தனள் எனினும், நின் வினை சிறந்து, நீயாயினும் அந்த இன்பத்தை உறுதியாக அடைதல் கூடுமோ? எனில், அதுவும் சொல்லுவதற்கில்லையே? யானை மதஞ்சிறந்து இயங்குநரைச் செருக்கும் நனந்தலைப்பட்டதும், பாழ்பட்ட ஊர்களையுடையதுமான வழியூடன்றோ நீ செல்லுதல் வேண்டும்?' என்று. தோழிகற்றாக வருவனவற்றின் வாதத்திறனைக் காண்க. 'யானையை வெல்வேன்’ என்றனையாயின், அதுவும் நின்னால் இயலாது என்பவள்போன்று, 'வேங்கை அடுமுறண் தொலைத்த மையலங் கடாஅம் செருக்கி மதம் சிறந்து இயக்குநர்ச் செருக்கும் யானை' என்றனள். பாழ்பட்ட பொதியிலாயினும், அதனை விட்டகலாது 'இரும்புறாப் பெடையொடு பயிர்தலைக் காணும் நீ நின் உள்ளத்தே இவள் நினைவு எழுந்துவிடத் திரும்புதலன்றி, மேலும் செல்வாயோ?' எனவும் உரைத்தனள். புறவின் பயிர் தலைக் கூறியது, பிரிந்து வினைசெயலால் வரும் இன்பமிக்க வாழ்வினும், வறுமைக் காலத்தும் பிரிந்தகலாது உடனிருந்து வாழும் வாழ்வே தலைவிக்கு இன்பம் தருவதாகும் என்றதாம்.

308. பகலில் வருக!

பாடியவர் : பிசிர்ந்தையார் தினை : குறிஞ்சி, துறை : இரவு வருவானைப் பகல் வருகென்றது.