பக்கம்:அகமும் புறமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 95

சுற்றல்; பிறகு அமைதியாய் இருந்து தேனை உண்ணல், இவையே அங்கும் நடைபெறுகின்றன!

இன்னுங்கொஞ்சம் தன் பார்வையை உயர்த்தினாள் தலைவி. என்ன வியப்பு! எவ்வளவு பெரிய தேன் கூடு? இந்த ஈக்களா இத்துணைப் பெரிய தேன் கூட்டைக் கட்டின! ஆம். இவையேதாம்! எத்தனையோ இடங்கள் இருக்க, ஏன் இவ்வளவு உயர்ந்த சந்தனமரத்தைப் பிடித்தன? ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்ற முதுமொழிப்படி ‘பெருக’ என்ற சொல்லுக்கு ‘உயர’ என்ற பொருளை நினைத்து விட்டனவோ இந்த ஈக்கள்! காரணம் திடீரெனத் தலைவிக்கு விளங்குகிறது. ஆம்! என்னதான் தாமரை சிறந்ததாய் இருந்தாலும், அதில் கிடைக்கும் தேனுக்குத் தனி மணம் கிடையாதல்லவா? ஆகவே, தாமரைத் தேனின் பெருமை வெளிப்பட வேண்டுமானால், அது சந்தன மரத்துடனும், சந்தனப் பூவில் உள்ள தேனுடனும் சம்பந்தப்படல் வேண்டும். ஆகவேதான் தாமரைத் தேனுடன் சந்தன மரத்தைச் சம்பந்தப்படுத்தின போலும் ஈக்கள்!

இக்காட்சியில் ஈடுபட்டிருந்த தலைவிக்குத் திடீரெனத் தோழி முதல் நாள் கூறியது நினைவுக்கு வந்தது. தோழி மிகவும் அறிவாளி; குறிப்பு அறிபவள்; நேற்றுத் தலைவியிடம் பேச்சுவாக்கில் ஒரு காரியத்தையும் கூறிவிட்டாள். சில நாளாகவே தலைவன் ஒரு மாதிரியாய் இருக்கிறான்; திடீரென்று தலைவியின் நெற்றியை உற்றுப் பார்க்கிறான்; ஏன் என்று கேட்டால், ‘ஒன்றுமில்லை உன் நெற்றியில் உள்ள ஒளியைக் கண்டு. மகிழ்ந்தேன்!’ என்று கூறிவிடுகிறான். இதனைத் தலைவி பெரிதாகப் பாராட்டவில்லை. மேலும், எப்போழுதுமே அவனுக்கு அவளுடைய அழகில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவளுடைய உறுப்புக்களின் அழகை விரித்து விரித்துப் பேசுவதிலும், அதை அனுபவிப்பதிலும் அவனுக்கு விருப்பம் அதிகம். ஆனால்,