பக்கம்:அகமும் புறமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 • அகமும் புறமும்

விட்டதைக் கண்டாள். அவளும் தலைவன் பிரிவைப் பற்றித்தான் நினைந்து வருந்துகிறாள் என்று நினைத்த தோழி, தலைவிக்கு ஆறுதலாக ஏதோ கூறத் தொடங்குகிறாள். ஆனால், தலைவி அவளைப் பேசவிட்டால் தானே! இல்லை. ‘தோழி, அவர் என்னுடைய நெற்றி அழகு கெட்டு ஒளி இழந்து போகும்படியாக ஒரு நாளும் நம்மை விட்டு நீங்க மாட்டார்’. என்று ஒரேயடியாகக் கூறி விடுகிறாள்.

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறி யலரே!
தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்
சாந்தின் தொடுத்த திம்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறி யலரே?
                                                         (நற்றிணை—1)

(நின்ற சொல்—தவறாத சொல்; நீடு தோன்று இனியர்—நெடுங்காலம் பழகினும் இனிமையுடையவர்; மீமிசை—மேலே; சாந்தின் தொடுத்த—சந்தன மரத்தில் கட்டிய; புரைய—உயர்ச்சியை உடையன; நறு நுதல்—மணம் பொருந்திய நெற்றி; பசத்தல்—ஒளி கெட்டு விளர்த்துப் போதல்; சிறுமை உறுபவோ—சிறுமை செய்வாரா?)

இப்பாடலில் தலைவி, தலைவன்மாட்டுக் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைக் ‘கபிலர்’ என்ற புலவர் பெருமான் குறிக்கிறார். பெரியோர்கள் நட்பு (தலைவன் காதல்) தாமரைத் தேன், சந்தன மரத்தில் தேன் அடையானது போல உயர்ந்ததாகும். தலைவிக்குத் தலைவன் எவ்வளவு இன்றியமையாதவன் என்பதை 6,7