பக்கம்:அகமும் புறமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 • அகமும் புறமும்

மலையமானின் மாட்சிமிகு சேனை புகுந்துவிட்டது. புதிய நாட்டைப் போர் செய்து வெல்லுகிற வரை அது படைகளின் வேலை. படைகள் போரிட்டு வென்று தந்த பின்னர் அரசியலாரின் வேலை தொடங்குகிது. முதல் வேலையைவிட இவ்வேலை கடினமானது. பாரியின் மாட்டுக் கழிபெருங்காதல் கொண்டு அவன் அவையில் நீண்டகாலம் வாழ்ந்த கபிலருக்கு இந்த அரசியல் துணுக்கங்கள் நன்கு பிடிபட்டிருக்கும் அல்லவா? எனவே, அவர் தகுந்த சமயத்தில் இதனைப் பயன்படுத்துகிறார்.

ஒரு தலைவியைத் தலைவன் ஒரு நாள் சந்தித்தான். அதற்கு முன்னர் அவனும் அவளும் சந்தித்ததுகூட இல்லை. ஆனால், இன்று இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது: ‘பால்வரை தெய்வம்’ என்று கூறப்படும் ‘விதி’ தான் அவர்களைக் கூட்டுவித்தது. இதற்கு முன்னர் அத் தலைவனும் பல பெண்களைக் கண்டதுண்டு; அத்தலைவியும் பல ஆடவர்களைக் கண்டதுண்டு. ஆனாலும், இருவரும் தம் உறுதிப்பாட்டை இழந்ததில்லை, இன்று அத்தலைவனும் தலைவியும் சந்தித்தவுடன் ஒரு பெரிய போராட்டமே தொடங்கிவிட்டது. அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் ‘நோக்கிய நோக்கு எதிர் சென்று’, ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்’. ஆனால், இவ்வளவு விரைவில் இந்நிகழ்ச்சி நடந்துவிட்ட போதிலும், நடைபெற்ற போராட்டம் எளிதானதன்று. புதிய ஆடவன் தன் மனத்துள் இடம்பெற அவள் விரும்பவில்லை. அவள் பிறப்புடன் பிறந்த நாணமும் நிறையும் அப்புதிய ஆடவன் அவள் மனத்துள் இடம் பெறுவதைத் தடுத்து நிற்கின்றன. எனவே, அவை இரண்டும் ஒருபுறம் நின்று போரிடுகின்றன. ஆனால், அவள் மனமும் அன்பும் அவனை வரவேற்று நிற்கின்றன. ஆனால், இப் போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. தலைவ-