பக்கம்:அகமும் புறமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 • அகமும் புறமும்

மரத்தின் கிளைதோறும் நல்ல பலாப் பழம் தொங்குகிறது. அப் பலா மரமும் வீட்டின் முன்றிலில் தழைத்து நிற்கிறது. அம்மரத்தின் அருகே வெண்மையான அருவி ஒலி செய்து கொண்டு வீழ்கிறது. அவ்வொலியே பின்னணி இசையாய் இருக்க, அக்கலைஞன் மனைவி உறங்குகிறாள். அவள் உறங்கிக் கொண்டு இருக்கையில், அவ்வினைஞன் பக்கத்தில் அமர்ந்து வளையல்களைச் செய்கிறான். வளையல் அறுப்பவனுடைய காதல் வாழ்வின் படப் பிடிப்பாகும் இவ்வடிகள். அமைதி நிறைந்த வாழ்வு வாழ்பவனாகலின், அவன் கடமையைக்கூடக் கலை போலச் செய்கிறான். வளை அறுப்பது அவன் தொழிலேயாயினும், இன்று அதனை மகிழ்வுடன் செய்கிறான். ஆகலின், அது கலைபோலப் பரிணமிக்கிறது. உணவு நிறைந்த ஊரில் காதல் வாழ்வு வாழ்பவன் வளை செய்பவன்; அவன் அறுக்கும் வளைகள் கலையாகச் செய்யப் பெற்றவை. இத்தகைய வளையல்கள் தலைவியின் கையை அலங்கரிக்கின்ற காரணத்தால் தலைவியின் பிற்கால வாழ்க்கை வளம் நிறைந்ததாய், காதல் வாழ்வுடைய தாய், செம்மை பொருந்தி இருக்கும் என்பதும் குறிப்பால் பெற வைத்தார் கவிஞர் திலகராகிய கபிலர்.

தலைவி தன் கண்களின் உதவியால் தலைவனை வென்று விட்டாள். தலைவனும் ஆண்மையின் உதவியால் தலைவியின் நாணம், நிறை முதலியவற்றை வெற்றி கொண்டுவிட்டான். சில வினாடிகளில் இப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டாலும் இந்நிகழ்ச்சிகள் ஆழ்ந்த பொருளாழம் உடையன. கபிலர் மலையமானின் போர் முறையையும், வெற்றியையும் பின்னர் அமைதியை நிலை நிறுத்தினதையும் நேரே கண்டிருக்கிறார். பின்னர், எங்கோ ஒரு முறை இக்காதலர் போராட்டத்தையும் அவர் கண்டிருத்தல் வேண்டும். தலைவன் வெற்றிகண்ட பிறகு தோழியின் உதவியை நாடுகிறான். அந்தத் தோழி மனம் இரங்கித் தலைவியை அவனிடம் சேர்த்துவைத்தால் ஒழிய