பக்கம்:அகமும் புறமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 145


அத்தகைய நிலையில் அவனுக்குக் கடமை என்று கூறத் தக்கது ஒன்றும் இருத்தற்கில்லை. மனிதன் தன்னொத்த பிற மனிதருடன் கூடி வாழத் தொடங்கிய பின்னரே அவனுக்கென்று சில கடமைகள் தோன்றுகின்றன. இதுவரைத் தன் உரிமையை அன்றிப் பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாது இருந்த அவனுக்கு இப்பொழுது புதிய அனுபவம் தோன்றுகிறது. சமுதாயமாகக் கூடி வாழத் தொடங்கியவுடன் தன் உரிமை, பிறர் உரிமை என்ற இரண்டும் மோதத் தொடங்குகின்றன. தன் உரிமையில் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்ஒழிய நன்முறையில் பிறருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை மனிதன் உணரத் தொடங்குகிறான்.

சமுதாய வாழ்வில் தோன்றும் இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்கக் குடும்பம் என்று அவன் ஏற்படுத்திக் கொண்டு வாழும் வாழ்விலும் புதிய பல சிக்கல்கள் தோன்றுகின்றன. தலைவியினிடம் பெரும் காதல் கொண்டுதான் தலைவன் குடும்பம் தொடங்குகிறான்; அவளிடம் நிலைத்த இன்பம் காண ஒரே வழி குடும்பம் வைத்தலே என்று கருதித்தான் அதில் ஈடுபடுகிறான். ஆனால், குடும்பம் தொடங்கியவுடன் புதிய பொறுப்புக்கள் அவனை வந்து அடைகின்றன. குடும்பம் என்பது தானும் அவளும் கேவலம் இன்ப வேட்டை ஆட ஏற்பட்டது அன்று என்ற உண்மை அவனுக்குப் புலனாகிறது. அக்குடும்பம் காரணமாகத் தன்னை வந்தடைந்த பலரையும் காக்கும் பொறுப்பும் அவனை வந்தடைகிறது. தமது வறுமை காரணமாகவும், இயலாமை காரணமாகவும், பலதிறப்பட்டவர் அவனை வந்தடைகின்றனர்.

அத்தனை பேரையும் உணவு கொடுத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது. இன்மை காரணமாக வந்தவருக்கு அவர் வேண்டும் பொருளைத் தருதலும், இயலாமை காரணமாக வந்தவருக்கு அவர்