பக்கம்:அகமும் புறமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 • அகமும் புறமும்

கிராமத்துக் குடும்பங்களில் இன்றும் இந்தப் பண்பாட்டைக் காணலாம்.

மேலே கூறிய முறையில் உள்ளத்து உணர்ச்சியை ஓரளவு வெளிப்படையாகவே காட்டப் பழகிய தலைவி ஒருத்தி; அவள் இல்லறம் நடத்தத் தொடங்கியது கருத்தொத்த கணவனுடனேதான். அந்தக் கணவனும் அவளும் தமிழர் முறைப்படி முதலில் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர்க் கற்புநெறி கடைப் பிடித்தவர்தாம். அந்த நாளில் அவன் அவள்மாட்டுக் கொண்டிருந்த காதலுக்கு எல்லையே இல்லை என்றும் கூறலாம். தன் காதலைப் பலபடியாக எடுத்து அவளிடம் அவன் கூறியது உண்டு. அந்த நாட்களில் அவளைத் தவிர அவன் வேறு பெண்களை கண் எடுத்துக்கூடக் கண்டதில்லை. அவனைப் பொறுத்தமட்டில் உலகில் வேறு பெண்களே இல்லை என்றுகூடக் கூறிவிடும் நிலையில் இருந்தான். ஒரு நாள் அவன் இந்தத் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான். இதனை ‘உடன் போக்கு’ (Elopement) என்று கூறும் இலக்கியங்கள். அவ்வாறு இத் தலைவன் இத்தலைவியைக் கூட்டி வரப் பேருதவி புரிந்தவள் இத்தலைவியினுடைய தோழிதான். எங்கோ சென்ற இவர்கள் இறுதியில் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணம் முடிந்து குடும்பம் வைத்த பிறகு தலைவி தன்னுடைய உயிர்த் தோழியை வரவழைத்துத் துணையாக வைத்துக் கொண்டாள். இவர்களுடைய இல்லறம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது.

நாட்கள் சென்றன; தலைவன் முன் போல இல்லை என்பதைத் தலைவி மெள்ள உணரலானாள். அவளைவிட்டுச் சிறிது நேரம் பிரிந்திருக்கவும் விரும்பாத தலைவன் இப்பொழுது ஏதாவது ஒரு சிறு காரணத்திற்காகவும் பிரிந்து இருக்க முற்பட்டான்; நாளாவட்டத்தில் இரவு நேரங்களிற்கூட வீட்டில் தங்காமல் வெளியே இருக்க