பக்கம்:அகமும் புறமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 213

நொந்து போன தோழி பேசுகிறாள். இருவர் சண்டையிடும் பொழுது சமாதானம் செய்து வைக்கப்போன தோழியின் அனுபவம் இதோ பேசப்படுகிறது.

வயல் அருகில் பலா மரம் பெரியதாய் நிற்கிறது. அப்பலாமரத்தில் உள்ள இலைகளைக் கூடுபோலச் செய்து சிவந்த சுளுக்கி எறும்புகள் (முயிறு) முட்டை இட்டுள்ளன. அவ்விலைக் கூடுகளுள் சிவந்த எறும்புகளும் முட்டைகளும் நெருங்கி வாழ்கின்றன. வயலில் மீன் உணவை நாடி வந்த நாரை பலா மரத்தில் உள்ள இக்கூட்டினுள் நீண்ட அலகை வைத்து உறிஞ்சுகிறது. நாரை உறிஞ்சியவுடன் உள்ளே உள்ள சிவந்த எறும்புகளும் அவற்றின் வெண்மையான முட்டைகளும் வயலில் உதிர்ந்துவிடுகின்றன. அவை உதிர்ந்து கிடப்பது செந்நெல்லும் வெள்ளை அரிசியும் கலந்துகொட்டிக் கிடப்பதுபோல இருக்கிறது. அத்தகைய மருத நிலங்களையுடைய தலைவன் பரத்தை மகளிர் பலரை முயங்கும் விருப்பத்தால் நம்முடைய வீட்டினுள்ளே வாராமல் இருக்கிறான். ஒருவேளை அவன் வரினும் அந்த நேரத்தில் மாமை நிறந்தையுடைய தலைவி அவனுடைய பெருந்தன்மையை விரும்பி அவன்மேல் கொண்டுள்ள கோபத்தை விடவும் இல்லை. அன்னி என்பவனும் பெரிய மன்னனாகிய திதியன் என்பவனும் ஒரு புன்னை மரம் காரணமாகச் சண்டை இட்டனர். இறுதியில் புன்னை மரத்தை வெட்டி வீழ்த்திய பிறகே இருவரும் அமைதியடைந்தனர். அதுபோல் இத்தலைவனும் தலைவியுமாகிய இருவரும் இடையில் நிற்கின்ற நான் இறந்தால்தான் தம்முடைய சண்டையை நிறுத்துவார்கள் போல இருக்கிறது!” என்ற கருத்தில் தோழி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

பழனப் பாகல் முயிறூமூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவுவெள் ளரிசியில் தாஅம்ஊரன்