பக்கம்:அகமும் புறமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 227


வழிகளின் நிலை

நாகரிகம் மிகுந்துள்ள இந்நாளில் கொலையும் கொள்ளையும் எல்லையற்று நடைபெறுகின்றன. ஆனால், அந்நாளில் அவ்வாறில்லை என அறிகிறோம். போக்குவரவு சாதனம் குறைந்திருந்த அப்பொழுதுகூட மன்னர் ஆனை மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வந்தது. அரசன் எங்கிருப்பினும் அவன் ஆணை எங்கும் சென்று உலகைக் காப்பதாக இன்றும் ஏட்டில் எழுதியிருக்கக் காண்கிறோம். அரசனைத் தம் வாழ்நாளில் கண்டிராத பலரும், அவன் ஆணை நன்கு நடைபெறுமாறு உதவி செய்கின்றனர். இக்கருத்தைப் பிற்காலத்து வந்த சிந்தாமணி ஆசிரியர் நன்கு எடுத்துக் கூறுகிறார்:

உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்திரை வையகம் காக்குமால்

(சிந்தாமணி. 248)

அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும் என்பதே இதன் பொருள். இது போலவே பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நிலவியதெனச் சங்க நூல்கள் முழங்குகின்றன.

தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்ட நாட்டைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் பின்வருமாறு கூறப்படுகிறது;

அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றுஅவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உரறாது; அரவுந் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா

(பெரும்பாணாற்றுப்படை 370–374)

[வழியிடைச் செல்வோர் வருந்தப் புடைத்து அவர் கைப்பொருளைத் திருடும் மக்கள் அவன் நாட்டில்