பக்கம்:அகமும் புறமும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 263

நெடுநல்வாடை அதனைக் குறிக்கிறது. அவனுடைய அரண்மனை அமைப்பே பழந்தமிழ் மன்னர்களின் கோயில்கள் இருந்த நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பாண்டியனின் அரண்மனைக்குக் கால்கோள் விழாச் செய்தனர். சித்திரை மாதத்தின் நடுவில் ஒரு நாளில் பகல் பதினைந்து நாழிகை அளவில் சிற்ப நூலை நன்கறிந்த தச்சர்கள் கூடினார்கள்; நூல் பிடித்து அளவிட்டுப் பல பகுதிகளையும் வரையறுத்துக் கூறுபடுத்தினார்கள்; பிறகு மிகப் பெரிய கற்களினால் மதில் முதலியவற்றை அமைத்தார்கள்; அடுத்து உள்ளிடம் கட்டி முடித்தார்கள்.

ஓங்கு நிலை வாயில்

அரண்மனைக்கு நுழையும் பொழுது தெரியும் இது வாயிலாகும். இது ஏன் இவ்வளவு பெரிதாகவும் உயரமாகவும் அமைந்திருக்கிறது? யானை போர்க்களத்திலிருந்து வெற்றிக் கொடியுடன் வருகிறது அன்றோ? அவ்யானை அப்படியே உள்ளே நுழைவதற்காக இவ்வாயிலின் உயரம் அமைக்கப்பெற்றுள்ளது.

‘வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுக’

(நெடுநல்வாடை–87)

என்ற அடியால் வாயிலின் உயரத்தைக் கூறுகிறார் ஆசிரியர் நக்கீரர். பார்வைக்கு மதிலும் வாயிலும் எவ்வாறு உள்ளன? மலையைக் குடைந்து வழிசெய்தது போல உள்ளது அவ்வாயில்,

‘குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்’

(நெடுநல்வாடை–88)

இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றும் நாம் கற்பனைக் கண்முன் அதனைக் கொண்டுவர முடிகிறது. வாயிலே இவ்வளவு உயரமாய் உள்ளது; அதன்மேல் கோபுரமும் அமைந்துள்ளதாம். ‘நெடுநிலை’ என்பதற்குக் கோபுரம் என்பது பொருள். இவ்வாயிலை அடைத்து