பக்கம்:அகமும் புறமும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362 • அகமும் புறமும்

அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்.

உலகம் ஏன் வாழ்கிறது என்ற வினாவிற்கு இப்பொழுது விடை கிடைக்கிறதன்றோ?

பொய் கூறார்

சரித்திரம் எட்டிப் பார்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாத காலத்தில் இத்தமிழர் யாது நினைந்தனர்? எவ்வாறு வாழ்ந்தனர்? எதனைச் சிறந்தது என்று கருதினர்? எதனை இழிந்தது என்று கருதினர்? இவற்றை நாம் அறிவது இன்றும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். அவ்வாறாயின், இத்தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவர் அனைவரும் பொய் கூறாமல் மெய்யே கூறினரா என்று எண்ணத் தோன்றுகிறதா? இதோ பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் விடை கூறுகிறார். வன்பரணர் என்ற தமிழ்க் கவிஞர் சங்கப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். அவர் தமக்கு மட்டும் அல்லாமல் தம் இனத்தவராய தமிழ்ப் புலவர் அனைவருக்குமே சேர்த்து ஓர் உண்மையை வெளியிடுகிறார். தமிழ்ப் புலவர்கள் பொய் கூறமாட்டார்களாம்! பெரிய அரசர்களிடத்து அவர்கள் தரும் பரிசிலைக் கருதியே அப்புலவர்கள் சென்றாலும், அவ்வரசர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழுதல் அப்புலவர்கட்கு மரபு அன்றாம்!

பீடுஇல் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே

(புறம்-148)


[பிறருக்கு வாரி வழங்கும் பெருமை (பீடு) இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவர் குணங்களைக் கூறுதலை (கிளத்தல்)