பக்கம்:அகமும் புறமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 • அகமும் புறமும்


இத்தகைய பிள்ளைகளைப் பெறுவதாலேதான் மனித மனம் விரிவடைகின்றது. தன்னலம் குடிகொண்டிருந்த மனத்தில் மனைவி இடம் பெற்று ஓரளவு விரிவடையச் செய்யினும், புதல்வர்ப் பேற்றின் பின்னரே மனிதன் முழுத்தன்மை அடைய முடிகிறது. அதன் பின்னரே சமுதாயத்தின் முழு உறுப்பாக ஒருவன் வாழ முடிகிறது. வாழை இருந்து பயன் உதவிய பின்னர் அதன் கீழ்க்கன்று தோன்றி அதே பயனை நல்குதல் போல, அவன் பிள்ளைகளும் ஏற்கெனவே பெற்றுள்ள அறிவு, பண்பு, கல்வி நலன் இவற்றால் சமுதாயத்திற்கு உதவும் சான்றோர்கள் ஆகின்றார்கள்.

வாழ்வாங்கு வாழ்தல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலின் அடிப்படை எங்கு உளது? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறுவர். ஆனால், எல்லா விடைகளையும் சேர்த்து ஒரு முடிபு காண முற்படல் வேண்டும். எத்தகைய வாழ்க்கையில், தனக்கும் பிறருக்கும் மிகுதியான பயன் உண்டாகிறதோ, அத்தகைய வாழ்க்கையே 'வாழ்வாங்கு' வாழும் வாழ்க்கை என்ற முடிபுக்கு வருதல் கூடும். இந்த நிலையையும் சுருக்கிக் கண்டால், பிறர் பொருட்டு வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற உண்மை தெற்றெனப் புலனாகும். மேலாகப் பார்க்கும் பொழுது அனைவரும் கடைப்பிடிக்க முடியாத ஒரு கொள்கை போலத் தோன்றும் இது. ஆழ்ந்து சிந்தித்தால், நாம் அனைவருமே வாழ்க்கையின் பெரும் பகுதியை பிறருக்காகவே வாழ்கிறோம் என்று அறிதல் கூடும். இது எவ்வாறு என்பதைக் காண்போம்.

தன்னலப்பிண்டம்

சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது ஒவ்வொரு வரும் தன்னலப் பிண்டமாகவே இருக்கிறோம் என்பதில்