பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. காவல்துறைக் கட்டளைச் சொற்கள், ஊடகத்துறைப் பதிவுகள், அறமன்றத் தீர்ப்புகள், அரசு அறிக்கைகள், அரசாணைகள் போன்றவை தூய தமிழில் பயன்படுத்துவதற்கு வழிவகையை ஏற்படுத்தலாம். 10. தமிழ்நாடு அரசு தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பல ஆக்கத் திட்டங்களை அறிவித்து அவற்றை நிறைவேற்றுவதற்குத் தாராளமாக நிதிநல்கையையும் வழங்கிவருகிறது. இத்திட்டங்களெல்லாம் நன்முறையில் நடந்தேறி அவற்றின் பயன்கள் நூறு விழுக்காடு தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் விரைந்து சென்றடைய வேண்டுமெனில், அரசுத்துறைகளில் அதிலும் குறிப்பாகத் தமிழ் தொடர்பான துறைகளில் தமிழ்ப்பற்றும் ஈடுபாடும் மிக்கவர்களைத் தரம் கண்டுப் பணியாளர் களாகவும், உயர் அலுவலர்களாகவும் அரசு பணியமர்த்தம் செய்ய வேண்டும். மொழிக்குச் செய்யும் தொண்டை இறைவனுக்கும், இனத்துக்கும் செய்யும் தொண்டாக மதிக்கும் தமிழ்ப்பற்றுடன் கூடிய அரசுப் பணி மதியாளர்களால்தான் தனித்தமிழ் மீட்பும், மேம்பாடும் முழுமையாக நிறைவுறும். 11. தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் இயல்பான தூய தமிழில் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த வணிக நிறுவனங்களுக்கேற்ற கலைச் சொற்களை வழங்குவதற்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் உறுதுணையாக இருக்க வேண்டும். 12. தமிழர்கள் ஒவ்வொருவருடைய இல்லங் களிலும் கட்டாயம் தமிழ் அகராதி இருக்க வேண்டும். அதற்கு மிகவும் மலிவு விலையில் அகராதிகள் வெளியிடப்பட வேண்டும். 13. தமிழ்நாட்டில் பல ஊர்ப் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் மருவி வழங்கப் பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைப் பெயர்களையே பயன்படுத்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கலாம். 14. மாவட்டங்கள் தோறும் ஆட்சி மொழி சட்டத்தை செயற்படுத்தி வருகின்ற தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், கட்டாயம் மொழி அறிவும் ஆழமான புலமையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட மொழி உணர்வுமிக்க இளம் தமிழாசிரியர்களுள் ஒரு பங்கினரையும், பணிமாறுதல் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்களாக நியமிக்கலாம். 15. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் பணியிலிருக்கும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் அலுவல் நேரத்தில் கட்டாயமாக தமிழில் மட்டுமே உரையாடல் நிகழ்த்த வேண்டும். அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடமும் கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும். பணித்தன்மையில் உயர் நிலையில் இருக்கும் பிற மாநில அலுவலர்கள் கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். 15. தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள் சடங்குகள் அனைத்தும் தமிழ் முறையிலேயே நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழியை வழிபாட்டு மொழியாகவும், சிந்தனை மொழியாகவும் கொள்ள வேண்டும். முதலில் தனித்தமிழை மீட்டெடுக்கும் பணியை ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். கைப்பேசி அழைத்தால் ‘வணக்கம்' சொல்லிப் பேசத்தொடங்கி 'நன்றி' என்று முடித்துத் தனித்தமிழில் பேசப் பழகிப் பாருங்கள். அதன் சுவையே தனிதான். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அகராதி ஆய்வு மலர் - 2019 65